2008 வாக்கில் தனசேகர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவருடைய சொந்த ஊர் சின்னமனூர். சென்னையில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். வேண்டாவெறுப்பான வேலை – அதாவது இணையத்தில் விளையாடுவது, வம்பளப்பது தவிர வேலையென ஒன்றுமில்லை. தன் ஊரின் அருகே மேகமலை மிக அழகான ஊர், அங்கே செல்ல விருப்பமிருப்பின் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். நாங்கள் உபசரிப்பாளர்களை விடுவதில்லை. கிருஷ்ணன் அவரைச் சிக்கெனப் பிடித்தார்.
டிசம்பர் 3 2009 அன்று நண்பர்களுடன் மேகமலைக்குச் சென்றோம். திரும்பி வந்து தனா இல்லத்தில் கடாவிருந்து கொண்டாடினோம் [இருபதிவுகள் மேகமலை மற்றும் சின்னமனூர்,தாடிக்கொம்பு] உற்சாகமான நாட்கள் அவை. தனா எனக்கு மிக அணுக்கமானவராக ஆனார். இலக்கியவாசகர், நாடக நடிகர். ஞாநியின் பரீக்ஷா குழுவில் இருந்தார். சினிமா மீது தீரா ஆர்வத்துடன் இருந்தார். சினிமாவில் ‘இறங்குவதற்காக’ மணிரத்னம் அலுவலக வாயிலில் நாட்கணக்கில் காத்திருந்ததை வேடிக்கையாகச் சொன்னார். சிரித்து உருண்டோம்.
அவருக்கு காட்சி ஊடகம் மீதிருந்த ஆர்வத்தை உணர்ந்து நான் தொடர்புகொண்டிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தேன். ஆனால் அவருடைய அழகிய முகம் திரையில் மொழுங்கலாகத் தெரிந்தது. வேலைக்காகவில்லை. அப்போதுதான் நான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்காக ஒப்பந்தம் ஆகியிருந்தேன். தனாவைச் சேர்த்துக் கொள்ளும்படி மணியிடம் கோரினேன். அவ்வாறாக தனா அவருடைய இளமைக்கால கனவுநாயகனின் அணுக்க மாணவனாக ஆனார். ஒரு கட்டத்தில் அது கிட்டத்தட்ட பெருமாள் -அனுமார் உறவுபோல பக்திமிக்கதாக ஆகியது.
பொன்னியின் செல்வனுக்காக நான் எலமஞ்சிலி லங்காவில் தங்கி எழுதிக்கொண்டிருந்தபோது உடனிருந்த உதவியாளர் தனா. தோரணையாக அரைக்கால் சட்டையுடன் இருந்தமையாலும் வேலை என ஏதும் செய்யாமல் 24×7 ஓய்வு எடுத்தமையாலும் காவலர் அவரை ‘பெத்தராயுடு’ என எண்ணிவிட்டார். ‘பெத்தராயிடு எழுந்ததும் காபி ஊற்றிக் கொடுங்கள்’ என என்னிடம் சொல்வார்.
தனா கடல் படத்தில் பணியாற்றினார். பின்னர் ஓக்கே கண்மணியில் முதன்மை உதவியாளர். அஜிதனுக்கு உடனடி குரு தனாதான், மண்டையில் அடித்து சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு. விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒருவர். ஆனால் அவரிடம் டிக்கெட் போடும் பொறுப்பை மட்டும் அளிப்பதில்லை. ஏன் என்று சொன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் வருத்தப்படுவார்.
இப்போது தன் முதல்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். படைவீரன் படத்தின் முதற்தோற்றம் அரவிந்தசாமியால் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ஜேசுதாஸ் கதாநாயகன். பாரதிராஜா இன்னொரு நாயகன். இசை கார்த்திக் ராஜா. படம் விரைவில் வெளிவருமென தெரிகிறது. தனாவுக்கு வாழ்த்துக்கள்.
தனசேகர்
உறவு புதியவர்களின் கதைகள் – தனசேகர்
மாசாவின் கரங்கள் கதை 0 தனசேகர்