இனிய ஜெயம்,
கவிதை.
நீர்நடுவே
தன்னை அழித்துக்கொண்டு;
சுட்டும்விரல்போல் நிற்கும்
ஒரு பட்டமரம்.
புரிந்துணர்வின் பொன்முத்தமாய்
அதில் வந்து அமர்ந்திருக்கும்
ஒரு புள்.
தேவதேவன்.
ஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை.
கவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது.
கவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் அல்ல. சூழச்சூழ நீர் நடுவே ”அது” ”அது” என சுட்டும் சுட்டு விரல் போல, பிரிந்து தனித்து நிற்கும் ஒரு பட்டமரம். தனியன். பித்தன்.
அவனைப் புரிந்து கொண்டு, அவனில் வந்தமர்ந்து, அவனுக்கு பொன்முத்தம் இடும் புள் கவிதை.
தன்னை அழித்தேனும் அதற்காக காத்திருக்கும் ஒருவனே கவிஞன். அவனில் வந்து கூடுவதே கவிதை.
இரு உலகப்போர் நடுவே திரண்டு வந்த வடிவும், கசப்பும் உள்ளுறையுமே, இங்கே தமிழில் துவங்கிய நவீன கவிதை வரலாற்றின் தோற்றுவாய். விதவிதமான சரிவுகள், அழிவுகள்,இருள்.
தேவதேவனும் தன்னை அழித்துக் கொள்ளும் நவீன கவிஞர்தான். பாரிய வேறுபாடு. தேவதேவன் தன்னை ஒளியின் முன் வைத்து அழித்துக் கொள்கிறார். மெய்ப்பொருளில் கரைத்துக் கொள்கிறார்.
ஒரு காரணமும் இல்லாமல்
தளிர்பொங்கிச் சிரித்துக்கொண்டிருந்தது
கொன்றை.
காரணமற்ற இந்த சிரிப்பின் முன் தன்னைக் கரைத்துக் கொள்ளும் கவிஞன்.
மீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை
தன் சுற்றமமைத்துக்கும் குரல்கொடுத்து
குழுமி நின்று
தாங்கித் தாங்கித் தாங்கித்
அப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்
மெல்ல மெல்ல மெல்ல
பூமியில் கொண்டு சேர்த்தது.
எத்தனை பெரிய லீலை. அந்த லீலை முன் வியந்து நிற்கும் கவிஞன். தொடர்ச்சியாக வீரியம் கொண்டு உள்ளே எழுகிறது ஆனத்தின் இக் கவிதை.
அகாலம் .
ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை,
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை,
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை,
ஒரு பிரபஞ்சம் போவதால்
எனக்கு ஒன்றுமில்லை.
உதிர்சருகின் முழுமை முன் வியந்து நிற்கும் ஒரு உள்ளம். வியப்பின் அக் கணம் கடவுளின் உள்ளத்தை அடையும் நிலை. பிரபஞ்சமே போனாலும் எனக்கொன்றும்மில்லை என்று சொல்லும் அகாலத்தின் உள்ளம். அகாலத்தின் பாவனை கொண்டு கடவுளின் உள்ளத்தை எய்தும் ஒரு மனம்.
உதிர் சருகில் பிரபஞ்ச நடனத்தை காட்டும் ஒரு கவிதை. பிரபஞ்ச நடனம் என்பதை உதிர் சருகாக்கிக் காட்டும் ஒரு கவிதை.
சங்கத் கவிதை அழகியல், பக்திக்கவிதைகள் உணர்வு கொண்டு முயங்கும் தேவதேவனின் கவிதை வரிகளைத்தான் இந்த உணர்வுக்கு இணை சொல்ல அழைக்க முடியும்.
ஆம்.. எல்லாம் எவ்வளவு அருமை.