அன்புடன் ஆசிரியருக்கு,
முதலில் இது போன்றதோர் சந்திப்பை ஒருங்கிணைத்து, இளைய வாசகர்கள் பங்குபெற வாய்ப்பளித்தமைக்காக தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். இத்தனை இளம் வயதில், தமிழிலக்கியத்தின் உச்ச ஆளுமையுடன் இரு நாட்களை கழிப்பது என்பது எத்தனை பெரிய வாய்ப்பு. இது என்னுள் ஏற்படுத்திய தாக்கம் எளிதானதல்ல.
சந்திப்புக்கு முதல் நாள், தேர்வுக்கு தயாராவதை போல ஒருவித தவிப்பில் இருந்தேன். சந்திப்பன்று, உள்நுழையும்போதே நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த தாங்கள் ஒரு புன்னகையுடன் என்னை வரவேற்றீர்கள். அப்போது என்னுள் நிரம்பிய உற்சாகம் இரு நாட்களுக்கு வடியவில்லை. மீசையற்ற முகத்தில் உங்களை பார்த்து பழகிய எங்களுக்கு, மீசையுடன் கூடிய உங்கள் முகம் ஒரு புது அனுபவம்.
இரண்டு நாட்களில் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, அரசியல், அறிவியல் மற்றும் சூழியல் என ஒட்டுமொத்த அறிவுலகத்தின் சுருக்க வடிவத்தையும் அளித்துவிட்டீர்கள். தொடர்ச்சியாய், சோர்வின்றி உரையாடிய உங்கள் தீவிரம் ஆதர்சமாய் அமைந்தது. இலக்கிய வாசிப்பிலும், பொது அறிவுத் தளத்திலும் என்னுடைய நிலை குறித்த தெளிவையும் அடைய முடிந்தது. இலக்கியத்திற்கு புதிய என்னை போன்றவர்களின் தயக்கத்தையும், முதிர்ச்சியற்ற தன்மையையும், அறியாமையும், சில நேரங்களில் அபத்தங்களையும் தாங்கள் பெருந்தன்மையுடனும், பெருங்கனிவுடனும் பொறுத்து நாங்கள் சௌகரியமாய் உணரும்படி விவாதங்களை நடத்திச் சென்றீர்கள்.
மாலையில், தங்கள் உரையாடலுடன் கூடிய இனிய நடைப் பயணமும், இரவில், தமிழின் மாபெரும் கதைசொல்லி ஒருவரிடம் இருந்து நேரடியாய் பேய்க் கதை கேட்டதும், கிடைப்பதற்கரிய கொண்டாட்ட அனுபவங்கள். விஷ்ணுபுரம் விழா மற்றும் இச்சந்திப்பு நிகழ்வுகளின் இன்னொரு முக்கியமான பயன் ஒத்த இயல்புடைய நண்பர்களின் அறிமுகம். சுரேஷ் பிரதீப், ஷாகுல் ஹமீது, கணபதி மற்றும் விஷால் ராஜா போன்ற நாளைய எழுத்தாளர்களின் அறிமுகமும், நட்பும், அன்பும் தரும் மகிழ்ச்சி ஈடில்லாதது.உங்கள் புத்தகக் கட்டிலிருந்து வெங்கட் சாமிநாதனின் கையெழுத்துடன் கூடிய அவரது இரு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.
இச்சந்திப்பை ஒருங்கிணைத்து சிறு அசௌகரியம் கூட நிகழா வண்ணம் நிகழ்த்திக் காட்டி நல்லுணவு அளித்து, அன்புடன் உபசரித்த திரு.கிருஷ்ணன், திரு.செந்தில் ஆகியோருக்கு நன்றி. கலந்துகொண்ட நண்பர்களுக்கு எனது அன்பு.
இறுதியாய் கனிவுடன் கட்டித் தழுவி தாங்கள் விடை கொடுத்தது, நெகிழச் செய்த உச்ச கணம் . அப்பேறுக்காய் மீண்டும் உங்கள் பாதங்களை சென்னி சூடிக்கொள்கிறேன்.
அன்புடன்,
பிரபு சாய் பிரசாந்த் .