தீ:கடிதங்கள்

பெரியநாயகி பாலு 

தீ http://jeyamohan.in/?p=808

to me
show details
 Dec 5 (4 days ago) 
ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் தீ பதிவு படித்தேன். ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதைகள் இருக்கத்தான் செய்கின்றது. ஆயினும் அதை விவரிக்கும் நுட்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தங்களின் எழுத்தில் அந்த  குடும்பத்தை எதிரெதிர் திசைகளில் கட்டியிழுக்கும் வறுமையையும், ஒன்றுக்கும் உதவாத பழம்பெருமையும்  கண்முன் விரிகிறது.

ஆனால் நான் முக்கியமாய் சொல்ல வந்தது வேறொரு விஷயத்தை – மனம் கனக்கச் செய்த அந்தப் பதிவில் அநேகமாய் முக்கால் வாசி கட்டுரை வரையில் அப்பெண் லீலாவின் தம்பியை மந்த புத்தி என்றே தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். சம்பவத்தை எழுதுகையில் அதன் தீவிரத்தில் நீங்கள் அவ்வார்த்தையை பெரிதாக எண்ணாதிருந்திருக்கலாம். ஆனால் அவ்வளவு குரூரமான ஒரு வார்த்தைப் பிரயோகம் அப்பதிவில் ரொம்பவே உறுத்துகிறது.  அப்பேற்பட்ட நெகிழச் செய்யும் விவரிப்புகளின் நடுவே சோற்றுக்குள் விழுந்த கல்லாய் இந்த வார்த்தை உறுத்துகிறது.

கற்றுத் தேர்ந்த உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் பொழுது வார்த்தைப் பிரயோகங்களைச் சற்று கவனித்து எழுதினால் வளரும் எழுத்தாளர்களுக்கு(குறிப்பாய் உங்களை ஆதர்சமாகக் கொண்டிருப்போருக்கு) பயன்படும் விதமாயிருக்கும்.

 நன்றி.


அன்புடன்,
பெரியநாயகி.

அன்புள்ள பாலு

நன்றி. மந்தபுத்தி என்பது மலையாளத்தில் ஒரு ‘பொலிடிகலெ கரெக்ட்’ சொல் தான். ‘பொட்டன்’ என்ற சொல்லுக்கு மாற்று. குமரிமாவட்டத்தில் சாதாரணமாக பாவிக்கிறோம். தமிழில் அது வேறு தொனியில் ஒலிக்கிறதுபோலும். மாற்றிவிடுகிறேன், நன்றி
ஜெ

 

**

நண்பருக்கு,
 
தீ என்று எழுதி நெஞ்சில் தீ மூட்டிப் போய்விட்டீர்கள். இன்னும் என்னுள் கனன்றுகொண்டிருக்கின்றது. மலையாள தேசம் சென்றதில்லை. ஆனாலும் நல்லதொரு மலையாளத் திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தூவிட்டீர்கள். நல்ல விபரிப்பு. 
வாழ்த்துக்கள்.
 
இலங்கையிலிருந்து எஸ்.எழில்வேந்தன் 
88
 
அன்புள்ள ஜெ,
 
நீங்கள் சமீபத்தில் எழுதியதில் ‘தீ’ யின் சோகம் மனதை மிகவும் அழுத்தியது. 60-70 களில் சிலர் வறுமையின் எல்லையில் வாழ்ந்து இருந்ததை கண்டுள்ளேன். அதை நினைவு கூர்நதது.
 
வாழ்வில் சில சமயம் எடுத்த சுமாரான முடிவுகள் ஆன்மாவை துரத்தி கொண்டே இருக்கும். கடவுள் இருப்பது போல் பேசி விட்டு, கடவுள் இல்லாதது போல் நடந்து கொண்ட நிகழ்வுகள், ஏன் அப்படி நடந்தது என்பதற்கு நம்மிடம் உள்ள எந்த பதிலும் போரமலேயே இருக்கும். நம்மை சுற்றி உள்ளவர்கள் சமாதானமாக எது சொன்னாலும் அது கனலை கிளறித்தான் விடும்.
 
மனம் மிகவும் வெப்பமாகி விட்டது. (உங்களது எழுத்தினை பற்றி வியந்து கொண்டே..)
 
அன்புடன் முரளி
M.Murali
Technology Consultant
88
தீ கட்டுரை வாசித்தேன்,
நிஜமும் ,யதார்த்தமும் இப்படித்தான் சுடக்கூடும் என்று புரிந்து கொள்ள முடிந்தது,யட்சி கதைகள் கற்பனையா…நிஜமா என்று ஒரு சந்தேகம் எப்போதும் எனக்கு வந்து கொண்டே இருந்திருக்கிறது,இன்று இதை வாசித்தபின் உங்களிடம் கேட்கத் தோன்றியதால் கேட்கிறேன்…யட்சிகள் நிஜமா ? அல்லது நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போன கம்பீரமும் …செருக்கும் நிறைந்த அக்காலப் பெண்கள் குறித்து சாமான்ய மக்களிடையே உலவிய மாய பிம்பங்களா?யட்சி…யட்சிணி எல்லாம் ஒன்றே தானா?யட்சிகள் இன்று இல்லையா?எனக்குத் தெரிந்து நாகர்கோயில் வட்டார மக்களின் சொல்லாட்சியில் மட்டுமே யட்சியைக் காண முடிந்தது,இதற்க்கு தனிப் பட்ட காரணம் ஏதும் உண்டா?யட்சிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள எந்த நூல் சரியானது என்று நீங்கள் பரிந்துரைக்க முடியுமா?
 
தங்கள் பதிலை எதிர்பார்த்து …
 
பரணி
அன்புள்ள பரணி
யட்சி என்பது சமண மதத்தில் உள்ள தெய்வம். தீர்த்தங்காரர்களுக்கு யட்சிகள் காவல். அந்த உருவகம் நாட்டார் தாய்த்தெய்வங்களுடன் பிணைந்து உருவானதே குமரிமாவட்டத்து யட்சிகள். யட்சி என்பவள் பேரழகும் பழிவாங்கும் கொடூரமும் தாய்மையும் கலந்த ஒரு பிம்பம். பெண்ணுக்குள் உள்ள சினத்தின் குறியீடாக அந்த படிமம் வளர்ச்சிஅ டைந்தது பின்பு
ஜெ
அன்புள்ள ஜெ
தீ வாசித்து மனம் அதிர்ந்தேன். அந்தப்பெண் உங்களைத்தேடிவந்த இடம் மிகத்தேர்ந்த புனைவுக்கு நிகராக எழுதபப்ட்டிருந்தது. மீண்டும் படித்தால் உண்மையில் அப்படி பெரிதாக ஒன்றும் நிகழவும் இல்லை. எல்லாருக்கும் இதைப்போன்ற சில அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும். எனக்கே ஓர் அனுபவம் உண்டு. நான் மும்பையில் எஞ்சீனியரிங் டிரெயினியாக பணியாற்றியபோது கூட்டிபெப்ருக்க வரக்கூடிய ஒரு மஹார் பெண் என்னிடம்  முந்நூறு ரூபாய் கேட்டாள். குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். நான் தயங்கினேன். எனக்கு அப்போது பணம் மிக குறைவாக இருந்தது. அவள் உடனே தன் முந்தானையை விலக்கி மார்பகங்களைக் காட்டினாள். நான் அதிர்ச்சி அடைந்து அவளை திட்டினேன் அவள் சத்தம்போடாதே சத்தம் போடாதே என்று சொல்லிக்கொண்டே வெளியே போனாள். நான் மறுநாள் அவளுடைய வீட்டுக்குஅ ருகே உள்ள கிழவியிடம் அவளுடைய குழந்தைக்கு உடம்பு நன்றாக ஆகிவிட்டதா என்று கேட்டேன். ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது என்று சொன்னாள். எனக்கு மிகவும் குற்றவுணர்ச்சியாக இருந்தது. நீங்கள் அந்த சரியான இடத்தை சரியான சொற்களில் சொல்லியிருக்கிறீர்ககள். அதுதான் அந்த இடம் வாசிக்கும்போது மனம் படபடவென்று அடிக்கிறதுநான் மிகவும் ஈடுபட்டு வாசித்த கட்டுரைகளில் ஒன்று இது
ஜெயராமன்
[தமிழாக்கம்]
முந்தைய கட்டுரைதமிழியம்,ஞானி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமாற்றங்கள்