ஈரோடு சந்திப்பு 2017, கடிதம்-1

 

4
முன்வரிசையில் சிவப்புச்சட்டையுடன் கணபதி

 

அன்புள்ள ஜெ,

புதிய நண்பர்கள் அறிமுகம் சனிக்கிழமை காலை ஏழு மணிக்கே தொடங்கி விட்டது. ஒரு வித அச்சம் கலந்த தயக்கத்துடன் தான் இந்தச் சந்திப்பை எதிர்நோக்கியிருந்தேன். கவுந்தப்பாடியில் இருந்து விஷால் ராஜா, பிரசன்னா, சின்னச்சாமி மற்றும் நவீனுடன் காரில் வந்து சேர்ந்தோம். அப்போது ஏற்கனவே சில நண்பர்கள் அங்கிருந்தனர். உற்சாகமான முதலறிமுக உரையாடல்கள். ஒவ்வொருவரிடமும் இரண்டு மூன்று முறை பெயரையும் ஊரையும் கேட்டு நன்கு நினைவில் வைத்துக் கொண்டேன். நீங்கள் உள்அறையில் ஓய்வெடுப்பதாகச் சொன்னார்கள்.

 

வீட்டின் பின்புறமிருந்த சிறுநெல்லிமரத்தில் கொத்துக் கொத்தாய் நிறைந்திருந்த நெல்லிக்காய்களை உலுக்கிப் பொறுக்கி கொரித்துக் கொண்டே அங்கு உலாவினோம். சிறிது நேரத்தில் நீங்கள் வெளிப்பட்டீர்கள். அப்போது தொடங்கிய உங்கள் பேச்சு, நாங்கள் விடைபெற்றுக் கிளம்பும் வரை இடைவிடாது எங்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.

 

செவ்வியல் படைப்புகள். ஜக்கி. தீவிர இலக்கியம். அரசியல். சிறுகதை விமர்சனம். இசை. தமிழர்களின் அறியாமை. விஷ்ணுபுரம். ஈடுபாட்டுடன் கவனித்தல். பயணம். அறிவியல். ஆச்சரியமான உணவுப்பழக்கங்கள் தொடர்பான ஒவ்வொரு அமர்வுகளும் மிகப் பெரிய திறப்பை அளித்தன.

a

முதல் நாள் மாலை நடை, அதற்குப் பின் நடந்த விவாதம், ஞாயிறு காலை அமர்வு மற்றும் உங்கள் புத்தகக்கட்டிலிருந்து தேடி எடுத்த புத்தகங்கள்; இவை இந்தச் சந்திப்பின் உச்சங்கள்.

 

ஜே. ஜே சில குறிப்புகளின் நாயகன் ஜே. ஜே வை ஒரு நிஜ எழுத்தாளனாகவே நான் நினைத்திருந்தேன். இன்னும் சில பக்கங்கள் படிக்க மீதமிருக்கின்றன. ஜே. ஜே எழுதிய மலையாளப் புத்தகங்களை நீங்கள் ஏன் மொழிப்பெயர்க்கவில்லை என்ற அசட்டுக் கேள்வியின் மூலம் ஜே. ஜே ஒரு புனைவுப் பாத்திரம் என அறிந்தேன். அங்கிருந்த பல நண்பர்களிடம் “பத்தகம் படிக்கும் போது நீங்கள் எந்த இடத்தில் ஜே. ஜே நிஜப் பாத்திரமில்லை என்று உணர்ந்தீர்கள்” என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஜே.ஜே வைப் பற்றிய எனது கற்பனை கொஞ்சம் அசைவு கண்டது எனக்கு மிக முக்கியமான நிகழ்வு.

 

எங்களில் பெரும்பாலானவர்கள் கேள்வி கேட்காததால் தூர்தர்ஷன் நண்பரின் கேள்விகள் அதிகமாகிக் கொண்டேயிருந்தன. மாலை நடையின் போது நான், பிரபு சாய் பிரசாத், ராஜேஷ் மூவரும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டு, ஆளுக்கொரு கேள்வி கேட்க முடிவடுத்துக் கொண்டோம்.

 

காசிப்பயணம் பற்றிய என் கேள்விக்கு இடைவிடாது வந்த கலாய்ப்புகள் நான் கிளம்பும் வரை தொடந்தன. இயல்பான உரையாடலின் போது செந்திலும் கிருஷ்ணனும் பல பயணத் தகவல்களைக் கொடுத்தனர். சேகர் நான் கிளம்பும் போது கூட வெளியே வந்து கலாய்த்து விட்டுச் சென்றார். இடையில் நீங்கள் சொன்ன “திருநாளை போவார்” மற்றும் “பையனுக்குக் கல்யாணம் பண்ணிட்டு, பேரனுக்கும் கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் பொறுமையாப் போங்க” போன்ற ஒவ்வொரு சீண்டல்களும் எனக்கு மிக முக்கியமான குறிப்புகளை உணர்த்தின. இவை என்றும் என் தூக்கத்தை கலைத்துக் கொண்டேயிருக்கும். பயணத்தின் மிதான எனது தீவிரத்தை உண்மையாகவே அதிகப்படுத்த விரும்பிய உங்கள் அனைவரின் பாசத்திற்கும் எனது வணக்கங்கள்.

 

கிருஷ்ணன், செந்தில், சேகர் மற்றும் அவர்களின் நண்பர்கள் செய்த அறிவுத் திருப்பணிக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். பலவகையிலும் எனக்கு இது மிகப்பெரும் அடித்தளம். அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகள்.

கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் எனது அன்புகள்.

 

உங்களை ஜெ என்றே அனைவரும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நானும் அவ்வாறே அழைக்க விரும்பினேன். சார் என்று அழைத்துப் பழகிச் சமாதானமாகி விட்டேன்.

 

உங்களுக்கான நன்றியை, அறிவுலகிற்குள் உங்களுடன் தீவிரமாக நிலைத்திருந்து காட்டவே விழைகிறேன்.

 

அன்புடன்,

கணபதி.

 

ஈரோடு இளையவாசகர் சந்திப்பு 2017

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–22
அடுத்த கட்டுரைசுவாமி வியாசப்பிரசாத் – காணொளி வகுப்புக்கள்