ஈரோடு இளம்வாசகர் சந்திப்பு -2017

4

 

புதிய வாசகர் என்னைச் சந்திக்கும்படியான நிகழ்ச்சிகள் நடத்தவேண்டுமென்ற எண்ணம் 2015 விஷ்ணுபுரம் விழா முடிந்ததுமே எழுந்தது. அவ்விழாவில் பெரும்பாலும் நான் நன்கு அறிந்த நண்பர்கள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள் என்றும், நெருங்கி உரையாடுவதற்கான தடை இருந்தது என்றும் சொன்னார்கள். ஆகவே முற்றிலும் பழைய வாசகர்களை விலக்கி புதுவாசகர்களுடன் மட்டுமே அமர்ந்து இரண்டு நாட்களைச் செலவழிக்கும் எண்ணம் ஏற்பட்டது. புதியவாசகர்களுக்காக மட்டும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை அமைக்கலாமென எண்ணினேன்

 

இருபது பேர் வரைக்கும் ஊட்டியில் தங்கி பேசலாமென முடிவெடுத்தோம். அவ்வளவுபேர் மட்டும் இருந்தால்தான் ஓரளவு விவாதம் நிகழமுடியும் என தோன்றியது. அறிவிப்பை தளத்தில் வெளியிட்டபோது இருபது பேருக்குள் தான் வருவார்கள் என்றே நினைத்தோம். ஆனால் நூறு பேருக்கும் மேல் விண்ணப்பித்திருந்தமையால் பிறிதொரு சந்திப்பை  ஈரோட்டில் காஞ்சிக்கோயில் அருகே என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் அவர்களின் பண்ணையில் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 6 மற்றும் ஏழாம் தேதிகளில் ஏற்பாடு செய்தேன் . அச்சந்திப்பு முதலில் நடந்தது. அதன்பின்புதான் ஊட்டி, 13 14 ஆம்தேதிகளில்.பின்னர் கொல்லிமலையிலும் மீண்டுமொரு சந்திப்பை கோவையிலும் செய்தோம்.

 

ஏறத்தாழ நூற்றியிருபது பேர் அந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டனர். அவர்களில் எண்பது பேருக்கு மேல் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிற்கு வந்தனர். அவர்களுக்கிடையே ஒரு மிகச்சிறந்த உரையாடலும் நட்புப்பரிமாறலும் நிகழ்ந்துவிட்டிருப்பதை அப்போது உணர்ந்தேன். விவாதித்தும் படைப்புகளை பரிமாறிக் கொண்டும் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதை விஷ்ணுபுரம் விழாவில் கண்டபோது, நினைத்ததற்கும் மேலாக இந்தச் சந்திப்புகள் பயன் தருவதை உணர்ந்தேன். ஆகவே இம்முறை மீண்டும் ஒரு புதிய வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமா என்று தோன்றியது.

 

சென்ற முறை வராதவர்கள் மட்டுமே அடங்கிய ஒரு சந்திப்பு இது. மீண்டும் இத்தகைய சந்திப்புகளை திட்டமிட்டபோது  செய்யும் போது எத்தனை பேர் எஞ்சியிருப்பார்கள் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் தளத்தில் அறிவித்தபோது ஏறத்தாழ அறுபது பேர் வரை வருவதாக சொன்னார்கள். இருபது பேருக்கு மட்டுமே இடம் என்பதனால் அவர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஈரோடு காஞ்சிக்கோயில் செந்தில்குமார் பண்ணையிலேயே மீண்டும் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது

b

இத்தகைய சந்திப்புகளின் நோக்கமென்பது ஒரு திறந்த உரையாடல் மட்டுமே. பல ஆண்டுகளுக்குமுன்பே நான் சுந்தரராமசாமியைச் சந்திக்கும்போது இருந்த மனநிலையை என்னால் இன்று உணர முடிகிறது, குழப்பமும் ஆர்வமும் தயக்கமும் சொல்திரளாமையின் திணறலும். சுந்தர ராமசாமி எப்படி எனக்கும் க.நா.சுவுக்கும் நடுவில் இருந்தாரோ அதே போல அசோகமித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் இன்று வரும் இளைய வாசகர்களுக்கு நடுவே நானிருக்கவேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. ஆகவே தான் இந்தச் சந்திப்புகள்.

 

இச்சந்திப்புகளில் சில கறாரான விதிகளை நாங்கள் கொண்டிருப்பதுண்டு. அதற்கு முக்கியமான காரணம்  நமது குடும்பச்சூழலிலும் கல்விச்சூழலிலும் ஒருவகையான தீவிரமின்மையே பயிற்றுவிக்கப்படுகிறது என்பதே. வேலையில் கூட அந்த தீவிரத்தை நாம் கொள்வதில்லை. கட்டாயமின்றி எதையும் நாம் விரும்பிச்செய்வதில்லை. ஆனால் இலக்கியம் என்பது தீவிரம் இருந்தால் மட்டுமே எவ்வகையேனும் பயன்தரக்கூடிய துறை. சற்றே தீவிரம் இழந்தாலும் முற்றிலுமாக கைவிட்டுப்போகக்கூடிய ஒன்று. உண்மையான தீவிரம் இல்லையேல் இலக்கியம்பக்கம் வராமலிருப்பதே மேல்.

 

சென்றகாலங்களில் மிகச்சிலர் தங்கள் இயல்பான தீவிரத்தால் இலக்கியம்பக்கமாக வந்தனர். அவர்களிலேயே பலர் வெறும்குடிகாரர்களாக, சில்லறை வம்பாளர்களாக மிகவிரைவிலேயே பொருளிழந்தனர். இன்றோ இணையம் அனைத்துத்தளங்களுக்கும் சென்று அனைவரையும் அழைக்கிறது. ஆகவே தன்னியல்பிலேயே தீவிரத்துடன் இலக்கியத்திற்கு வரக்கூடியவர்கள் பலர் இருந்தாலும்   தீவிரமாக இருக்கவேண்டும் என்ற தகவலே தெரியாத ஒரு பின்புலத்திலிருந்து வருபவர்களும் கணிசமான பேர் உள்ளனர். தீவிரமானவர்களை தெரிவுசெய்யவும், வருபவர்களுக்குத் தீவிரத்தைக் கற்பிக்கவும் வேண்டியிருக்கிறது இன்று.

 

உதாரணமாக இருபது பேர் அல்லது இருபத்தைந்து பேருக்கான இடம் தான் இச்சந்திப்புகளில் இருக்கிறது. ஆகவே இருபது பேரை நாம் தேர்வுசெய்து அழைக்கிறோம். வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு மிகச்சாதாரணமான காரணங்களுக்காக பத்து பேர் வராமல் இருந்தால் வருவதற்கு தயாராக இருக்கும் பத்துபேருடைய இடத்தை அவர்கள் பறிக்கிறார்கள் என்பதே உண்மை. அதோடு அனைத்து ஏற்பாடுகளும் வீணாகவும் வழிவகுக்கிறார்கள்

 

ஆர்வமில்லாமல் வந்துவிட்டு மறுநாளே கிளம்பிச்செல்லும் ஒருவரும் தீவிரமான பிறிதொருவரின் இடத்தை வீணடிக்கிறார்.இச்சந்திப்புக்கு புனேயிலிருந்துகூட வந்திருக்கிறார்கள் என்னும்போது  உண்மையான ஆர்வத்துடன் கலந்துகொள்பவர்கள் இதற்கு அளிக்கும் முக்கியத்துவம் புரிகிறது. இந்த மொண்ணைகள் அவர்களின் இடத்தை வீணடிக்கிறார்கள்.

e

இது மிகச்சங்கடமூட்டக்கூடிய விஷயம். இது மொண்ணைகளுக்கு புரிவதும் இல்லை. ஆகவே தான்  வருவேன் என்று சொல்லிவிட்டு உரிய காரணத்தை முன்னரே தெரிவிக்காமல் வராமல் இருப்பவரை  என்னுடைய நட்பு வட்டாரத்திலிருந்து முற்றிலும் விலக்கி வைப்பது என்னுடைய இயல்பு. இன்னும் சொல்லப்போனால் என் வாழ்நாள் முழுக்க எந்த தருணத்திலும் அவரை நான் நெருங்கவிடமாட்டேன். ஒரு சம்பிரதாயமான ஹலோவுக்கு அப்பால் செல்லமாட்டேன்.ஏனென்றால் எனது தீவிரத்தை அவர் குறைத்துவிடக்கூடும் என்று அச்சப்படுகிறேன். தீவிரமின்மை என்பது நம் சூழலின் மிகப்பெரிய தொற்றுநோய். நம்மை ஒருவகை அறிவுச்சோம்பல் சமூகமாக நிலைநிறுத்துவது. ஆகவே நோய்த்தொற்று கொண்டவரை முழுமையாக விலக்குவதே உகந்தவழி, இருபத்தைந்து ஆண்டுகளாக என் நிலை இதுவே,பிறருக்கும் இதையே பரிந்துரைப்பேன்.

 

ஒவ்வொருமுறையும் அப்படிச் சிலர் வருவதுண்டு. இந்த முறையும் அறுவர் எக்காரணமும் சொல்லாமல்  வராமலிருந்தார்கள். கடைசிநேரத்தில் சிலரைச் சேர்க்கவேண்டியிருந்தது. அவர்கள் முன்பதிவுசெய்யாமல் வரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள். ஈரோட்டைச் சேர்ந்த  ஹேமானந்தன் என்பவர்   வந்து ஒருநாள் சந்திப்பில் கலந்துகொண்டு வேறு ஏதோ சாதாரண காரணத்தை பிறரிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். வந்த அன்றே அவர் மறுநாள் நண்பரைச் சந்திக்கச்செல்வதாகவும் ஒருநாள் மட்டுமே கலந்துகொள்ளும் எண்ணம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

 

செல்வன் என்னும் சேலத்தைச் சேர்ந்த   நடுத்தரவயதானவரும் அவ்வாறு முதல்நாள் வரும்போதே வேறு ஒரு வேலை இருப்பதனால் முதல்நாளே கிளம்பிவிடப்போவதாகச் சொல்லியிருக்கிறார். எந்த அறிவுத்தகுதியும் இல்லாத இவர்கள் ஏன் முண்டியடித்து கிளம்பி வருகிறார்கள் என்பதைப்போல புதிர் ஏதுமில்லை. ஒதுங்கியிருப்பதே இந்த ஆட்கள் இலக்கியத்திற்குச் செய்யும் நன்மை,

 

பொதுவாக நடுத்தரவயதானவர்களை சந்திப்பதில் எனக்கு ஆர்வமில்லை. எந்தத் தீவிரமும் அற்றவர்களாகவும், வெற்றுப்பேச்சில் ஆர்வம் கொண்டவர்களாகவுமே அவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் அளிக்கும் ஏமாற்றத்தை கடந்துசெல்லலாம். ஆனால் இளைஞர்களின் மொந்தன்வாழைப்பழத்தன்மை சோர்வை அளிப்பது. எனது நண்பர் வட்டாரத்தில் எந்த நிலையிலும் இந்த ஹேமானந்தனைப்போன்ற ஆசாமிகள் நாளை உள்ளே வரக்கூடாது என்பது என்னுடைய கருத்து. [நண்பர்களால் இத்தகையோரின் பட்டியல் உருவாக்கப்பட்டு அதில் அடிக்கடி ஆட்கள் சேர்ந்தவண்ணமே இருப்பார்கள்]

 

ஏனெனில் இலக்கியம் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய சிற்றகலின் வெளிச்சத்திற்குள் நிற்கக்கூடிய தகுதி கொண்ட மனிதர்கள் அல்ல அவர்கள். எப்படி தகுதியானவர்களை உள்ளே கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறோமோ அவ்வளவு தகுதியற்றவர்களை வெளியே தள்ள வேண்டுமென்பதும் முக்கியமானது. அந்த வெளியே தள்ளல் சரியான முறையில் நிகழாவிட்டால் இந்நிகழ்ச்சிகளில் இத்தகைய முன்னேற்பாடுகள் அனைத்தும் வீணாகப்போகும். இதுவும் ஒரு முகநூல் அரட்டை கும்பல் போல ஆகிவிடக்கூடும்.

 

இந்த கறாரான முன்விதிகள் காரணமாக இதுவரை நடந்த அனைத்து நிகழ்ச்சிகளிலுமே  ஒருசில விதிவிலக்குகள் தவிர தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாசகர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே எல்லாச்சந்திப்புக்ளும் மிகுந்த உற்சாகத்துடனும் வேடிக்கையுடனும் அதே சமயம் மிகத் தீவிரமான விவாதங்களுடனும் நிகழ்ந்தன. சற்றும் வீண் ஆகாத பொழுதுகள் எஞ்சின.

a

 

17 ஆம் தேதி மாலை நான் நாகர்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு கிளம்பி சென்ற போது நெடுங்காலத்திற்குப்பின் ஒரு ரயில்பயணம் எத்தகைய துயர் மிக்கது என்பதை அறிந்தேன். சொந்தச் செலவில் ரயிலுக்கு டிக்கெட் போட்டமையால் ஸ்லீப்பர் கோச் போதும் என்று முடிவு செய்து செல்வதற்கும் வருவதற்கும் அதிலேயே முன்பதிவு செய்தேன்.

 

என் வீட்டில் உள்ள நூலகத்தில் பிறிதொருமுறை நான் படிக்க வாய்ப்பற்றவை என்று எனக்குத் தோன்றிய நூல்கள் சிலவற்றை படிக்க வாய்ப்புள்ள நண்பர்களுக்கு வழங்குவதை இப்போது செய்து வருகிறேன். ஏனென்றால் இன்னும் சில ஆண்டுகளிலேயே காகிதநூல் என்னும் வடிவம் பொருளிழக்கக்கூடும். நூல்கள் வெறுமே தேங்கிக்கிடப்பதில் பொருளில்லை.  சென்ற ஆண்டின் இளைஞர்சந்திப்புகள் முதலேயே ஒவ்வொரு முறையும் என்னால் சுமக்கக்கூடிய அளவுக்கு நூல்களுடன் சென்று அவற்றை அங்கு வருபவர்களுக்கு இலவசமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். [ஆனால் அனைத்துமே என்னால் பிறருக்குப் பரிந்துரைக்கப்படும் குறைந்தபட்சத் தகுதிகொண்ட நூல்களே. பொருட்படுத்தப்படத் தேவையற்ற நூல்களை இங்கு ஒரு நூலகம் நடத்துபவர் வந்து வாங்கிச்செல்வார்]

 

இம்முறையும் சுமார் முப்பது கிலோ அளவுக்கு புத்தகங்களை கட்டி எடுத்துக் கொண்டேன். ஆட்டோவில் சென்று ரயில் நிலையத்தில் இறங்கினேன். நாகர்கோயில் நிலையத்தில் மாலையில் போர்ட்டர்கள் கிடையாது. வழக்கமாக நான் ஏறும் ஏசி பெட்டி வரைக்கும் அந்த பொட்டலத்தை தரையிலேயே இழுத்துக்கொண்டு ஒருவழியாக சென்று சேர்ந்த போதுதான் மறுஎல்லையில் ஸ்லீப்பர் கோச்சின் ஒன்பதாவது பெட்டியில்தான் இடம் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அங்கிருந்து திரும்ப சுமையை கொண்டு சேர்ப்பதற்குள் கைகள் இற்றுவிட்டிருந்தன.

c

ஏ.சி பெட்டியில் போகும் நினைவில் போர்வை தலையணை எதுவுமே எடுத்துச் செல்லவில்லை. பிப்ரவரி மாத இறுதியில் ரயில்பெட்டியே குளிர்ந்து வெடவெடத்தது.உடலை சுருட்டி ஒடுக்கிக் கொண்டு ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக போட்டுக்கொண்டு அரைமயக்கத்தில்தான் ஈரோடு சென்று சேர்ந்தேன். அலாரம் வைத்து எழவேண்டியிருக்கவில்லை, தூங்கவே இல்லை. நான்குமணிக்கு நானே கிருஷ்ணனை எழுப்பினேன்

 

கிருஷ்ணன், சந்திரசேகர், அந்தியூர் மணி முதலிய நண்பர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். வெளியே வந்து டீக்கடை ஒன்றில் டீ குடித்தபடி காத்திருந்தோம். சிவா வந்துசேர்ந்தார். பாரி சற்றுகழித்துவந்தார்.வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்துகொண்டிருந்தனர். செந்தில்குமார் சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் வரவேண்டும். சைதன்யாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சொன்னாள். அவளுடைய தோழி இன்னொரு சைதன்யா கோவையிலிருந்து வருவதாக சொல்லியிருந்தாள். சைதன்யாவுக்கு நான் ரயிலில் டிக்கெட் போட்டேன். ஆனால் கடைசி நிமிடத்தில் பார்த்தால் அது இரவு பதினொன்று மணி அல்ல, காலை பதினொரு மணி, ஆகவே நள்ளிரவில் மீண்டும் கேபிஎன் பேருந்துக்கு முன்பதிவு செய்து இரவில் சென்னையில் பஸ் ஏறி காலை ஆறுமணிக்குத்தான் அவள் வந்து சேர்ந்தாள்

அனைவரையும் திரட்டிக் கொண்டு காஞ்சிக் கோயில் பண்ணைக்கு சென்று சேர்ந்தோம். சென்ற உடனே ஒருமணி நேரம் படுத்து தூங்கினேன் அது எனக்கு சற்று புத்துணர்ச்சி வருவதற்கும் வந்து சேர்ந்த நண்பர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடலை ஆரம்பிப்பதற்கும் உதவியாக இருந்தது. விழித்து வெளியே வந்ததும் நேரடியாகவே அறிமுகத்திற்கும் விவாதத்திற்கும் சிரிப்புக்கும் கிண்டலுக்கும் சென்றுவிட்டோம்.

 

இச்சந்திப்புகளின் வழக்கம்போல எந்த விதமான திட்டங்களும் இன்றி, கறாரான அமர்வுகளோ பேசுபொருள் நெறி முறைகளோ இல்லாமல் இந்த உரையாடல் அமைந்திருந்தது. சுற்றி அமர்ந்து நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது, விவாதிப்பது என்பது தான் இந்த அமர்வுகளின் நோக்கம். இயல்பாகவே , கேள்விகளுடன் இருப்பவர்கள், அதைக் கேட்கும் துடிப்பு இருப்பவர்கள் சற்று அதிகமாக பேச பிறர் சற்று அமைதியாக இருப்பார்கள். அமைதியாக இருப்பவர்களிடம் எதையாவது கேட்டு அவர்களிடம் பேசி அவர்களிடமிருந்து ஒரு உரையாடலைத் தொடங்குவது என்னுடைய வழக்கம். அப்போது கூட அவ்வப்போது சிலர் விடுபட்டுவிடுவதுண்டு. ,

 

இந்த அவைகளில் எதைப்பேசவேண்டும் என்பது இப்போது ஒருமாதிரியாக தெரிந்துவிட்டிருக்கிறது. ஒன்று, கேள்விகளை எப்படிக் கேட்கவேண்டும் , அதற்கான சொற்றொடர்களை எப்படி அமைக்கவேண்டும் என்பது. இரண்டு, ஒரு விவாதத்தில் தர்க்கத்தை எப்படிக் கட்டமைக்கவேண்டும் என்பது. மூன்று, விவாதத்தை கூர்மையாக திசைதிரும்பாமல் எப்படிக் கொண்டுசெல்லவேண்டும் என்பது. பிற சமூகங்களில் கல்விநிலையங்களிலேயே கற்பிக்கப்படுபவை இவை. இங்கே இவற்றை நாம்  இத்தகைய சந்திப்புகளில் தன்னியல்பாகக் கற்கவேண்டியிருக்கிறது

l

 

இளம் வாசகர்கள் பெரும்பாலானவர்களுக்கு ஒர் அவையில் பேசுவதற்கான பழக்கம் இருப்பதில்லை. உள்ளத்தில் இருக்கும் எண்ணங்களைச் சொற்களாகக் கோர்க்க முடியாது. சொற்களாக அமைக்க ஆரம்பிக்கும்போதே அவற்றின் போதாமையை உணர்ந்து இன்னும் தடுமாற ஆரம்பிப்பார்கள். உண்மையில் நான் நினைப்பதை ஓரளவுக்காவது சொல்லும் பயிற்சியை இலக்கிய வாசிப்புக்கு வந்து, சுந்தர ராமசாமி முதலியவர்களிடம் பேசத்தொடங்கியபிறகு தான் அடைந்தேன். இன்றைய  இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் பயிற்சிகளும் சற்று அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இளைஞர்கள் ஒப்புநோக்க  பலமடங்கு அதிகமாக தெளிவாக உரைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

 

நம் சூழலில் உள்ள முக்கியமான சிக்கல்கள் சில மீண்டும் மீண்டும் இத்தகைய சந்திப்புகளில் எழுந்து வரும். கலைச்சொற்களுக்கு சற்றே மாறிய தனிப்பட்ட அர்த்தங்களை புரிந்துவைத்து அதனடிப்படையில் பேசுவது, கலைச்சொற்களை வேறுவகைச் சொற்களால் இடமாற்றம் செய்துவைத்திருப்பது, ஒரு பேசுபொருளுடன் சம்பந்தமற்றவற்றை கலந்துகொள்வது, ஒரு விவாதப்போக்கில் ஊடாக நினைவில்  எழும் தகவல்களைச் சொல்ல ஆரம்பிப்பது, விவாதங்களை முடிவுவரை கொண்டுசெல்லாமலிருப்பது, ஒரு பொருள் கூறப்பட்ட தர்க்கமுறையிலேயே பதில்சொல்லாமல் குட்டிக்கதை அனுபவக்கதை வழியாகப் பேசுவது என. இவற்றைப்பற்றிய மிகக் கறாரான பயிற்சிகளை, மிகமிக வலித்து, நான் ஊட்டி குருகுலத்தில் கற்றுக்கொண்டேன். அவற்றை கூர்மையாக ஆனால் கூடுமானவரை புண்படுத்தாமல் சொல்லமுயல்கிறேன்.

 

இலக்கிய அழகியல்முறைகள் பற்றி, சிறுகதையின் வடிவம் பற்றி ,நாவல் என்னும் கட்டுமானம் உருமாறி வந்திருப்பது பற்றி, மதத்திற்கும் சமகால அரசியலுக்கும் உள்ள உறவு பற்றி ,யோகமுறைகள்  நவீன இந்தியாவில் எப்படியெல்லாம் வடிவ மாற்றம் அடைந்தன என்பதைப்பற்றி, தமிழக இந்திய வரலாற்று தொடர்ச்சிகளை பற்றி வெவ்வேறு வினாக்களுக்கு விடையாக பேசினேன்.

a

விஷால் ராஜா எழுதிய சிறுகதைகளை விவாதித்தோம் கணபதி எழுதிய ஒரு பயணக்கட்டுரையை விவாதித்தோம். சென்ற முறையைப்போலன்றி இந்த முறை விவாதிப்பதற்கான படைப்பு இலக்கியங்கள் குறைவாகவே வந்தன என்று தோன்றியது. விஷால்ராஜாவின் கதைகளைப்பற்றிய விவாதத்தில் ஏறத்தாழ அத்தனைநண்பர்களுமே மிகக்கூர்மையாகவும் பொருத்தமாகவும் கருத்துக்களைத் தெரிவித்ததும், விவாதத்தில் திட்டவட்டமான கலைச்சொற்களுடன் பேசியதும் மிகுந்த மனநிறைவை அளித்தன.

 

அத்துடன் இந்தமுறை நான் சற்று அதிகமாக பேசியது போலவும் எனக்கொரு எண்ணம் ஏனெனில் பல வினாக்கள் வந்து ஒரு பெரிய வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கும் தன்மையுடன் எழுந்தன. ஆகவே அவற்றை பேச ஆரம்பிக்கும் போது நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மறுமுறை இன்னும் சுருக்கமாகவும் இன்னும் அதிக நண்பர்கள் அவர்களே பேசும் வாய்ப்பை அளிக்கும் விதமாக சந்திப்பை அமைக்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது.

 

இத்தகைய சந்திப்புகளில் உள்ள சிறுசிக்கல் என்னவென்றால்  பொத்தாம் பொதுவான வினாக்கள் .   இந்திய அரசியலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழக வரலாற்றைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? – என்பது போன்ற கேள்விகள் உதாரணம். இம்முறை பிரசன்னா மிகக்கூர்மையாக இசை கேட்பது எவ்வகையிலேனும் புனைவிலக்கிய உருவாக்கத்திற்கு ஊக்கமோ அல்லது தடையோ அளிக்கிறதா என்று எழுப்பிய கேள்வியும் அது சார்ந்தவிவாதமும் மிகக்கூர்மையாகவும் அழகாகவும் அமைந்திருந்தது.

b

ஒரு உண்மையான பிரச்சினையை ஒட்டி வினாவை அமைப்பது மிக முக்கியமானது. ஏற்கனவே தளத்தில் விரிவாக விவாதிக்கப்பட்ட கேள்வியை மீண்டும் கேட்காமல் இருப்பது அதைவிட முக்கியமானது. அந்த வினாவை ஒட்டி தாங்களே சிறிது பேசுவதும் தங்களுடைய தரப்பை ஓரளவுக்குச் சொன்ன பிறகு அதிலிருந்து ஒரு விவாதத்தை எதிர்பார்ப்பது இன்னமும் முக்கியமானது. இத்தகைய அரங்குகளை கூடுமானவரைக்கும் கச்சிதமாகவும் கூர்மையாகவும் தாங்கள் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இளைய நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

 

இரு நாள் நிகழ்ச்சிக்குப்பிறகு ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டனர். இளம்நண்பர்கள் கட்டித்தழுவி விடைபெறும்போது ஏற்படும் நம்பிக்கையும் பெருமிதமும் சாதராணமானதல்ல இவர்களில் பலபேர் எனது மைந்தனின் வயதுள்ளவர்கள். எதிர்கால தமிழ்இலக்கியத்தின் முகங்கள்.பலர் இன்னும் அரைநூற்றாண்டுக்காலம் இலக்கிய உலகத்தில் இருக்கப்போகிறார்கள், முக்கியமான எழுதப் போகிறார்கள். விஷால்ராஜா தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவராக வருவார் என்றே நினைக்கிறேன். என்வரைக்கும் வந்து சேர்ந்த ஒரு தொடர்ச்சியை அவர்களுக்கு செலுத்திவிடுவதென்பது எனது கடமை. அதை செய்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நான் கொண்டுவந்த புத்தகங்களை அங்கு வந்திருந்தவர்கள் பகிர்ந்து எடுத்துக் கொண்டார்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் நூல்களை வைத்து அவர்களின் இயல்புகளை கணித்தபடியே சற்றுத் தள்ளி நான் அமர்ந்துகொண்டேன். முக்கியமான மார்க்சிய நூல்கள், அரசியல்கோட்பாட்டுநூல்கள் பல இருந்தன. புனைகதைகள் இலக்கிய கோட்பாடுகள் வரலாற்று நூல்கள் .

.

இச்சந்திப்புக்கு வரவிரும்பி விண்ணப்பித்திருப்பவர்களுக்காக இன்னொரு சந்திப்பை மார்ச் மாதம் தொடக்கத்தில் தஞ்சை விவேகானந்தா கல்லூரியில் ஏற்பாடு செய்யலாமென்று நண்பர் சக்தி கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அதற்கான அறிவிப்பை சில நாட்களில் வெளியிடுகிறேன்.

சந்திப்புகள்

 

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு 2016

ஊட்டி புதியவாச்கர் சந்திப்பு 2016


ஈரோடு வாச்கர் சந்திப்பு கடிதம் 1

ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம் 2

ஈரோடுவாசகர் சந்திப்பு கடிதம்3

 

 

 

 

 

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 1

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 2

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம்3

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 4

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 5

கொல்லிமலைச் சந்திப்பு கடிதம் 6

 

முந்தைய கட்டுரைநெடுஞ்சாலை புத்தர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு அறிவிப்புகள்