அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
முகம்சூடுதல் படித்தேன். முகம்சூடுதல் என்ற தலைப்பே ஒரு கவிதை. தத்துவம். அழகியல். தங்களின் பெரும்பான்மையான கட்டுரைகளின் தலைப்பு பாதி விஷயத்தை சொல்லிவிடுகிறது. கட்டுரையை வாசித்த பின் மீண்டும் தலைப்புக்கு வரும் பொழுது ஒரு பரிபூரண வட்டம் நிறைவடைகிறது. பூச்சூடுதல், முடிசூடுதல், பிறைசூடுதல் என்பதையெல்லாம் தாண்டி முகம்சூடுதல் எனும் வார்த்தையை முதல் முறையாக படிக்கிறேன். கடந்த சில நாட்களாக முகம்சூடுதல் என்ற வார்த்தையை ஆசை தீர பல முறை உச்சரித்து மகிழ்கிறேன்.
“முடி” சிறுகதை எழுதிய மாதவனால் மட்டுமே இப்படியொரு முடி சார்ந்த வினாவை கேட்க முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு திருக்குறள் மேற்கோளுடன் நீங்கள் தந்த சுவாரசியமான பதிலும் அந்த குறளும் எளிதாக மனதில் பதிந்து விட்டது. “ஆரோக்ய நிகேதன்” வழியாக பார்த்தால் “நீட்டல்” என்பதை ஆயுர்வேதம் என்று சொல்லலாமா? இயற்கையின் வழியே சென்று இயற்கையை அரவணைத்து வாழ்வது. “மழித்தல்” என்பது அல்லோபதி போல் தெரிகிறது. புதுமை, மாற்றம் என்று தற்காலிக விடுதலை கொடுத்தாலும் , ஒரு முறை மழிக்க தொடங்கிவிட்டால் கடைசி வரை மழித்து போராடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த நீட்டல், மழித்தல் தவிர சமணர்கள் வேறு முடியை பிடுங்கி எறிகிறார்கள். துறவு என்ற இலக்கு என்னவோ ஒன்றுதான், ஆனால் செல்லும் வழிகள்தான் எத்தனை எத்தனை?
மழித்தல் , பிடுங்கி எறிதல் இரண்டும் பிரச்சனையின் ஒரு பகுதியை (அதாவது தலை பகுதியில்) மட்டும் தீர்க்கிறது. மற்றபடி ஆண் பெண் இரு பாலரின் இதர பிற உறுப்புகளுக்கெல்லாம் சென்றால் கொஞ்சம் சிக்கல்தான். இன்றைய காலத்தில் தெருவுக்கு தெரு அழகு நிலையங்களும் , தொழில்நுட்பமும் வந்துவிட்டது. அந்த காலத்தில் துறவிகள் என்ன செய்தார்களோ?
முடி தவிர, முடியின் நிறமும் ஒரு பிரச்னை. தும்பை , மல்லிகை, வெண்ணிலா , வெண்புறா, என்று எதிலும் வெண்மையை கொண்டாடும் சமூகம், முடியில் வெண்மை வந்துவிட்டால் பதறுகிறது. சாயம் பூசி மறைக்க முயல்கிறது. நாற்பது வயதுக்கு மேல் மனிதர்கள் வித விதமான தலைச்சாயங்கள் முயற்சித்தபடி, வண்ண வண்ண கோமாளிகளாய் திரிகிறார்கள்.
மைக்கேல் ஜாக்சனின் “MAN IN THE MIRROR” என்றொரு பாடல். அவரது மரணத்துக்கு பின் மிக அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட பாடல். கருப்பராக பிறந்து தன் திறமையால் பணம் மற்றும் உலகப்புகழின் உச்சிக்கு சென்ற பின், மைக்கேல் ஜாக்சன் சூட விரும்பிய முகம் ஒரு வெண்முகம். ஆனால் ஒவொவொரு முறையும் தன முகத்தை கண்ணாடியில் பார்க்கும்பொழுது அவர் மனம் அமைதியடைந்ததா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
மகாபாரதத்தில் அபிமன்யுவின் திருமண வைபோகத்தில் ஒரு மாயக்கண்ணாடி கிடைக்கிறது. நாம் எப்பொழுதும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை அந்த கண்ணாடி காண்பிக்கும் என்று கேள்விப்பட்டு , அனைவரும் அதை பார்த்து மகிழ்ந்து விளையாடுகிறார்கள். கிருஷ்ணர் கண்ணாடியை பார்த்தால் யார் தெரிவார் என்று அனைவருக்கும் ஆவல். பாமா, ருக்மிணி என்று ஊகிக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணர் கண்ணாடியை காணும் பொழுது தெரிவதென்னவோ சகுனியின் முகம். தர்மமும் அதர்மமும் மோதும் பொழுதெல்லாம், இன்றும் இந்த முகம்சூடுதல் விளையாட்டு தொடர்கிறது.
காலத்தின் கோலத்தால் அகம் என்னும் கண்ணாடியில், கறைகளும் கசடுகளும் படிந்து, முகம் என்பது ஒரு கலங்கிய சித்திரமாகவே தெரிகிறது. முறையான பயிற்சிகள், முயற்சிகள் மூலமாக அழுக்குகளை துடைத்து அகக்கண்ணாடியை பார்த்தால், பளிச்சென்று முகம் தெரியுமோ? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகம்சூடுதல் என்பது ஒரு வகையில் அகம்சூடுதல் தானோ?
அன்புடன்,
ராஜா.