அன்பு ஜெமோ,
நலன்தானே? நானே வருகிறேன் பாடலைப்பற்றி நீங்கள் எழுதியத்தைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினேன்!
பின்னே, எங்குமே ஒலிக்காமல் எத்தனை முறை அந்தப் பாடலைக் கேட்டிருப்பேன்! இரண்டு வருடம் முன்பு அந்தப் பாடலின்மேல் பித்தாய் இருந்தபோது உங்களுக்கு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன்!
*
ஒரு அபாரமான இசை மரபை, வெவ்வேறு உணர்ச்சிகளையும் நுட்பமாய் சொல்லத்தெரிந்த மரபை வெறும் 200 பக்திப் பாடல்களாக மாற்றி வைத்திருக்கிறோம். அதனால்தான் கர்நாடக இசையை காதலுக்கும் காமத்துக்கும் ரஹ்மான் பயன்படுத்தும் போது, சிலிர்க்கிறது, கிறங்கவைக்கிறது என்று நினைக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=AhyORM6li7E
பாரம்பர்யத்தின் இடம் என்ன என்று அலசும் படத்துக்கு வெறுமனே இசையைத் தராமல், “இன்றைக்கு பாரம்பர்ய இசையின் இடம் என்ன?” என்று ரஹ்மான் முற்றிலும் புதிய திறப்பை உருவாக்கிக் கொள்கிறார்.
இந்தக் கேள்வியின் உச்சம் ‘நானே வருகிறேன்’ என்கிற உணர்ச்சிகரமான பாடல் என்று தோன்றுகிறது. சொல்லப்படும் விஷயத்தின் மேன்மை, குழப்பம், சிக்கல், புனிதம், சிலிர்ப்பு எல்லாவற்றுக்கும் மேல், திகைப்பு, தொலைந்து போதல் என அற்புதமான கலவை. பல ஆண்டுகளில் பல மொழிகளில் வந்த பாடல்களில் இந்த அளவுக்கு என்னைத் தூண்டிய வேறொரு பாடல் இல்லை.
தாளம் பிடிபடவே நான்கு முறை கேட்கவேண்டியதாயிற்று. இதுவரை 25 முறை கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே, சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே” என்று ஒரு கர்நாடக கஸல் போல ஆரம்பிக்கும் போது மனம் தளும்புவதை நிறுத்த முடியவில்லை. நன்றி சொல்லி தீரும் விஷயமும் இல்லை.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
***
அன்புள்ள ஜெயமோகன்,
ரஹ்மானின் இரண்டு பாடல்களையும் பற்றிய சிலாகிப்பினை அடுத்து நாளுக்கு இருபது முறையாவது நானே வருவேன் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன் ஓகே கண்மனி பாடல்கள் வெளிவந்த போது எண்ணிறந்த முறைகள் அப்பாடலைக் கேட்டிருந்தேன். இந்த ரசனையைப் பதிவிட்டதற்கு முதலில் நன்றி.
பெண் மனதின் உள்ளே காதல் வைக்கும் வெடிகுண்டுகளின் சத்தம் இசையாக மாறும் விதம் இந்த பாடல். என்னைப் பொறுத்தவரை, ரஹ்மானின் ஒவ்வொரு பாடலும், மெல்ல விரிந்து, பலமுறைக் கேட்ட பின் உருமாறிக் கொண்டே இருக்கும் திறன் பெற்றவைதான்.
தாங்கள் முன்பே குறிப்பிட்டிருந்தது போல, திரை இசை பற்றி யாரிடம் பேசினாலும், இளையராஜாவா ரஹ்மானா என்ற கேள்வி வந்துவிடுகிறது. ரஹ்மானுக்கு எதிராகப் பேசுபவர்களிடம் ஒரு பிரச்சனையைத் தொடர்ந்து காண்கிறேன். அவர்கள் ரஹ்மானின் மிகச் சிறந்த பாடல்களைக் கேட்பதே இல்லை.
தொலைக்காட்சி அலைவரிசைகளில் காண்பிக்கப்படும் வெகு சில பாடல்களை மட்டுமே அவர்கள் கேட்டிருக்கிறார்கள். தமிழிலேயே பல பாடல்களை பெரும்பாலும் கேட்கத் தவறிவிடுகிறார்கள்.
தமிழில் சில பாடல்களில் மலிந்திருக்கும் வார்த்தைகள் ஆபாசங்களாய் நல்ல இசையைக் கெடுத்து விடுகிறது, உதாரணமாக அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் மர்லின் மன்றோ பாடலைச் சொல்ல விரும்புகிறேன். இரண்டாவது பிரச்சனை, காட்சியாக்கத்தில் சில பாடல்கள் வீண்டிக்கப்பட்டு விடுகின்றன. மணிரத்னம் அவர்கள் மட்டுமே இதைக் கடக்கும் சிறந்த பாடல்களைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தருகிறார்.
ஹிந்தி பாடல்களில், ரஹ்மானது இசைக்கு அதிக வாய்ப்பு தரப்படுவதாகவே தெரிகிறது. சில ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் கூட, முழுமையாக மொழி புரியாததால் ஹிந்தியில் வருகையில் சிறப்பாகத்தான் தோன்றுகிறது.
ரஹ்மானின் ஹிந்தி பங்களிப்பில், பல பாடல்கள் இருந்தாலும், இந்த இரண்டு பாடல்களை சாதனைப் பாடல்களாக குறிப்பிட நினைத்து நிறைகிறேன். கேட்டிருப்பீர்கள் முன்னரே… இருந்தாலும் ஒரு சின்ன நினைவூட்டுதல்…
- குன் ஃபாயா குன் https://www.youtube.com/watch?v=T94PHkuydcw
- தூ குஜாhttps://www.youtube.com/watch?v=lJdeU9VUFDE
இரண்டிலும் சுழன்றடிக்கும் விசும்பின் ஓசை நம் அகத்தைச் சிதறடிக்கும் அனுபவம்.
இரண்டும் இம் தியாஸ் அலியின் படங்கள் என்பது சிறப்பு.
அன்புடன்
கமலக்கண்ணன்.
***
அன்புள்ள ஜெ
அதிகம் கேட்கப்பட்டாலும் சரியாக கேட்கப்படாத பாடல்களில் ஒன்று ரஹ்மானின் நானே வருவேன். அற்புதமான பாடல். நீங்கள் சொன்னதுபோல அடுக்கடுக்காக விரிவது. அதை நீங்கள் சுட்டிக்காட்டி எழுதியிருப்பதை மிகவும் விரும்பினேன். நன்றி
ஜெயபாஸ்கரன்