வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

IMG_2288
வே.அலெக்ஸ்

 

அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம்

நானும் மனைவி மற்றும் குழந்தையும் நலம். உங்கள் குடும்பம், நண்பர்களின்  நலன் விரும்புகிறேன்.

உங்களிடம் வெண்முரசுக்கு மட்டும் ஒலி வடிவமாக மாற்ற அனுமதி கேட்டேன். முதல் புத்தகம் முடித்த  பின் அறம் சிறுகதைகளை  கேட்க்காமல் நானே ஒலி வடிவாக மாற்றிவிட்டேன்.  அது என் ஆசிரியருடையது என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

ஆனால் வெள்ளை யானை நாவலை ஒலியாக மாற்றி வெளியிட்ட பின் கொஞ்சம் மீறி விட்டோமோ என்று தோன்றியது.

https://www.youtube.com/watch?v=AK_svgnG3Xw

நேற்று எழுத்து பதிப்பகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதிப்பக உரிமை பிரச்சனை இருந்தால் தளத்திலிருந்து அதை நீக்கி விடுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

வெள்ளை யானை ஒலி புத்தகத்தின் மேல் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.

நன்றி

சிவகுமார்

சவூதி

 

 

 

அன்புள்ள சிவக்குமார்,

 

என் நண்பரும் எழுத்து பிரசுரத்தின் உரிமையாளரும் நெடுங்கால தலித்தியக்கக் களப்பணியாளருமான வே.அலெக்ஸ் நோயுற்று சிகிழ்ச்சையில் இருக்கிறார். சிறுநீரகப்பிரச்சினை. வாரமிருமுறை டயாலிஸிஸ் செய்யவேண்டியிருக்கிறது. நண்பர்களின் உதவியுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார். உங்கள் மின்னஞ்சல்களை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

 

ஒலிவடிவமாக வருவதில் பிழையில்லை என நினைக்கிறேன். அதை வாசகர்கள் பெரும்பாலும் கேட்பதில்லை. அதைக்கேட்பவர்கள் நூல்வாங்குபவர்கள் அல்ல. பொதுவாக நூல்களை கேட்க முடியுமா என்பதே எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. தோராயமாக கதை புரியுமே ஒழிய மொழிநுட்பங்களும் அவதானிப்புகளின் கூர்மைகளும் தவறிப்போய்விடவே வாய்ப்பதிகம்.

 

ஆனால் சிலர் செவிப்புலன் கூர் கொண்டவர்கள். அவர்களுக்குக் கேட்டால் புரிவதைப்போல வாசித்தால் புரிவதில்லை. இளையராஜா உதாரணம், அவருக்கு ஒருமுறை கேட்டாலே நினைவில் என்றுமென நின்றிருக்கும். கேட்டலே நன்று என அவர் சொல்வதுண்டு

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–20
அடுத்த கட்டுரைவான் வருவான்