அன்பு ஜெயன்
நீங்கள் என்ன வேணுமென்றாலும் சொல்லுங்கள்.. இந்தப் பழம்பொரி மாணப் பெரிய அராஜகம் இல்லையோ. அதென்ன பழத்தை எடுத்து அப்படியே எண்ணெயில் பொறித்தெடுக்கிறது! :-) :-)
அன்புடன்
இரா முருகன்
அன்புள்ள முருகன்,
பழம்பொரியைப் பழித்தவரை பாட்டி தடுத்தாலும் விடேல் என ஒரு சொலவடை உண்டு
அப்படிச் சொல்பவர்களுக்கு உடுப்பி பக்கம் இதேபோல இன்னொரு பலகாரம் உண்டு, அதைப் பரிந்துரைப்பேன். நல்ல தளிர்ச்சேம்பிலையை பறித்துக்கொள்ளவேண்டும். உளுந்து மாவை கெட்டியாகப் பசைபோல அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் உப்பும் கொஞ்சம் மஞ்சளும் வேண்டுமென்றால் குருமிளகும் தோதுபோல.
அந்த மாவை சேம்பிலையின் இருபக்கமும் மெல்ல பூசி பூப்போல சுருட்டி அப்படியே எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும். அதை நல்லெண்ணையில் குழப்பிய பச்சைமிளகாய் பசையில் தொட்டுக்கொண்டு பித்தா பிறைசூடி பெம்மானே அருளாளா என கூவியபடி அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். இதற்கு முழுப்பெயர் அல்வா பண்ண கொஜ்ஜு. அல்வா பண்ண என்றுதான் பெயர், அதன் அன்னையான பத்ரோடு அதை கொஜ்ஜும்மா கொஜ்ஜுக்குட்டி என்று அழைக்க அப்படியே பெயர் நிலைத்துவிட்டது
பத்ரோடு என்பது வேறுவகை. கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்து பொரித்துச் சுருட்டப்பட்ட அதே சேம்பிலை. அந்தக்காலத்தில் உணவின்மீதான புலனடக்கத்தை பயிற்றுவிப்பதற்கு இதை உண்ணும்படி மத்வாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மாத்வ பட்டர்கள் இதை தின்று இதற்கே பழகி இப்படி ஆகிவிட்டிருக்கிறார்கள்.
குமரிமாவட்டத்தில் போற்றிகள் இதை குலவழக்கமாக உடுப்பியில் இருந்துகொண்டுவந்து இங்கே செய்து சாப்பிடுகிறார்கள். நெருக்கமான பகைவர்களுக்கு கொடுத்து உபசரிப்பதும் உண்டு
ஜெ