என் நண்பர்களில் பேலியோ டயட் எனப்படும் இறைச்சித்தீனி இளைப்புமுறையை சிரமேற்கொண்டவர்கள் மூவர். அரங்கசாமி, விஜய் சூரியன், ராஜமாணிக்கம். மூன்றாமர் வீரசைவம். ஆகவே சைவ பேலியோ. புதிதாகத் தழுவிக்கொண்ட மதத்தை நாம் உள்ளூர நம்புவதில்லை. ஆகவே அதை உறுதியாகத் தழுவிக்கொள்ள விழைகிறோம். அதற்குச் சிறந்த வழி அதைப் பரப்புவதுதான். மூவரும் பேலியோவின் பெருமையை அந்தந்த வட்டாரங்களில் தீவிரமாகப் பரப்பினர்
மூவருமே இளைத்தனர் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. குறிப்பாக விஜய் சூரியன் சென்றுதேய்ந்திறுதலாக ஆகிக்கொண்டிருந்தார். பார்க்கவே பயமாக இருந்தது. ராஜமாணிக்கம் மெலிந்தமையால் திருப்பூர் வட்டாரத்தில் பலர் அவரிடமே ராஜமாணிக்கத்தைப்பற்றிய கோள்களைச் சொல்லத் தொடங்கினர். அரங்கா டிரிம் ஆகிவிட்டதாக நம்பி முகவாயில் ஈ அமர்ந்ததுபோன்ற மீசையை வைக்கத்தலைப்பட்டார்
பேலியோவைச் சொல்லிப்புரியவைப்பது கடினம். ராதாகிருஷ்ணனிடம் நாற்பத்தைந்து நிமிடம் அரங்கா ரத்தம்கக்காத குறையாகப் பேசி முடிந்தபின்னர் அவர் “இல்லண்ணா, சின்ன வயசிலேயே போலியோ சொட்டு மருந்து ஊத்திட்டாங்க” என்றதாக செல்வேந்திரன் சொன்னது வதந்தி. “பேலியோவிலே பனங்கிழங்கு சாப்பிடலாமா?” என செல்வேந்திரன் தீவிரமாக கேட்டதை முன்னர் என் நண்பர் ஆர்தர் வில்சன் “பிரதர், மௌனவிரதம் இருக்கிறப்ப பேசலாமா?” என்று கேட்ட தத்துவக்கேள்வியுடன்தான் ஒப்பிட முடியும்
ஆனால் அடுத்தமுறை பார்த்தபோது மூவருமே பழையநிலை மீண்டுவிட்டிருந்தனர். “என்ன இது?” என்றேன். “கொஞ்சம் டெம்பரவரியா விட்டிருக்கேன்… ஆரம்பிக்கணும்” என்றார் விஜய்சூரியன். “பேலியோ இருந்தா கெட்டகனவுகளா வருதுண்ணா” என்றார் ராஜமாணிக்கம். கனவில் அவரை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் ஏவியிருக்கிறார்கள். அரங்காவின் பிரச்சினை வேறு. மெலிந்தால் “என்னது பிஸினஸ்லே பிராப்ளமா?” என்று கேட்கிறார்கள். செட்டிகெட்டால் பட்டு உடுக்கவேண்டும். கெடாதபோதும் பட்டுதான்.
மீண்டும் பார்க்கையில் மூவரும் முன்பிருந்ததை விட பெரிதாகியிருந்தனர். விஜய்சூரியன் ஒரு நல்ல சுவர் போல தெரிந்தார். “என்னாச்சு?” என்றேன். ”கொறைக்கணும்” என்றார் ரத்தினச்சுருக்கமாக. ராஜமாணிக்கம் “இல்லண்ணா, ஆறுமாசம் சோறே திங்கலையா, அதான் சோறுமேலே ஒரு ஆர்வம்” என்றார். புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் “முன்னாடில்லாம் எனக்கு இந்த பாதாம் பிஸ்தா முந்திரீல்லாம் சுத்தமா புடிக்காதுணா. இப்ப அதிலயும் ருசி தெரிஞ்சுபோச்சு” என அவர் வருந்தியது மேலும் தெளிவாகப்புரிந்தது.
முதற்குற்றவாளி நானே. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அமெரிக்கா கிளம்பும்போது எடைகுறைக்க முடிவெடுத்தேன். அப்போது நியாண்டர்செல்வன், [ஹோமோஎரக்டஸ் சீஸர் என்று கூட ஒருவர் இருக்கிறார் இல்லையா? ] போன்றவர்கள் கிளம்பி வந்திருக்கவில்லை. வந்திருக்கலாம் , எனக்குத்தெரியவில்லை. என்னிடம் அந்த டயட்டைச் சொன்னவர் அரவிந்தசாமி. கடல் படத்திற்கு முன் நூற்றிப்பத்து கிலோ எடை இருந்தார். மூன்றே மாதங்களில் எழுபது கிலோவாக ஆகி சின்னப்பையனாக மாறி வந்து நின்றார். மணிரத்னம் பம்பாய் படப்பிடிப்புதான் நடக்கிறது என காலக்குழப்பத்திற்கு உள்ளானார்.
அவர் சொன்னதை அப்படியே கடைப்பிடித்தேன் உச்சகட்ட டயட். அரிசிச்சோறே இல்லை. எந்த மாவுணவும் அண்டவிடவில்லை. காலையில் முட்டை. உச்சிப்பொழுதில் வேகவைத்த மீன். இரவில் சிக்கன் சூப். காய்கறிசூப் அவ்வப்போது இளம்பசியை ஆற்ற.
ஆனால் பேலியோ அடிப்படைவாதி அல்ல நான். ஆகவே கொழுப்புக்கட்டிகளை உள்ளே தள்ளவில்லை. மிதமிஞ்சிய புரோட்டீன் எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டுமாதங்களில் ஒல்லிக்குச்சி ஆனேன். கனடாவில் நான் சென்றிறங்கியபோது நீண்டநேரம் தயங்கியபின்னர்தான் என் உயிர்நண்பர் செல்வம் அருகே வந்தார். “அருண்மொழி புது ஆளுகூட வாறாளே எண்டு பாத்தனான்” என்றார். “சார் யாரு?” என்று என்னைக்காட்டி அ.முத்துலிங்கம் கேட்டார்
ஆனால் அமெரிக்காவில் நான் அரிசி உண்ண ஆரம்பித்துவிட்டேன். எட்டு கிலோ ஏற்றிக்கொண்டு வந்திறங்கினேன் இங்கே வந்தபின் “கொஞ்சம் ஏத்தலாம், இப்ப என்ன?” என சோறு. “சவம் கெடக்குது” என மீன்குழம்பு. மீண்டும் தொப்பை. மீண்டும் இனிய வாழ்க்கை.
இப்போது கொஞ்சம் தொப்பை இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. எடைகுறைப்புக்காக அருண்மொழி காலையுணவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் வைத்துவிட்டுச்செல்கிறாள். மதியத்திற்கு எண்ணி ஒரு டம்ளர் சோறு. இரவுக்குப் பழங்கள். ஆனால் எடை குறையவில்லை. சொல்லப்போனால் கூடிக்கொண்டிருக்கிறது. அருண்மொழி இணையத்தில் எடைக்குறைப்பு ஆலோசனைகளுக்காகத் தேடுகிறாள்.
ஆனால் அவள் அறியாத ஒன்று உண்டு. எனக்கு பத்தரை மணிக்கு கொஞ்சம் முதுகுவலிக்கும். அப்படியே கிருஷ்ணன் ,அரங்கா ,கடலூர் சீனு வகையறாக்களுடன் பேசியபடி கடைத்தெருவுக்குச் சென்று ஒரு சிங்கிள் டீ அடிப்பேன். கூடவே ஒரு இரண்டு பழபஜ்ஜி. வாழைப்பழச்சீவலை கடலைமாவில் போட்டு எண்ணையில் பொரித்து எடுக்கப்படும் பழம்பொரி கேரளத்தின் பழம்பெரும் தின்பண்டங்களில் ஒன்று. கன்னிப்பெண் போல வெளியே பொன்னிறமும் உள்ளே கனிந்த இனிப்பும்.
மாலையிலும் ஒரு நடை உண்டு. மாலையிலும் அங்கே சூடான பழம்பொரி அடுக்கப்பட்டிருக்கும். தாழைமடல்களை அடுக்கி வைத்ததுபோல.ஏழை எழுத்தாளர் என்னதான் செய்யமுடியும்? ஓரளவுக்குமேல் பொறுக்கமுடியாது அல்லவா?
பொதுவாக பழம்பொரியை மல்லுக்கள் மறுக்கக்கூடாது. வரைபடத்தைப்பாருங்கள், கேரளமே ஒரு பெரிய பழம்பொரி போலத்தானே இருக்கிறது? அதிலும் குறிப்பாக என்னைப்போன்ற பூர்ஷ்வா , பிற்போக்கு, தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்திய அடிவருடி, ஆணாதிக்க, இந்துத்துவ, நாயர்கள். பருப்புவடை எனப்படும் மசால்வடை கம்யூனிசப் பண்டம். இனிப்பா இல்லையா என்று இனிய சந்தேகம் கொண்டு உண்ணப்படும் பழம்பொரியே அதற்கு எதிர்க்கட்சி.
முதற்பிரசுரம் Feb 16, 2017