சு.வேணுகோபால் -இருகடிதங்கள்

சு.வேணுகோபால் (1)

சு.வேணுகோபால் தமிழ் விக்கி 

இனிய ஜெயம்,

இளம் வாசகர் சுரேஷ் பிரதீப் பதிவுகளின் தொடர் வாசகன் நான். என்னை தொகுத்துக் கொள்ளவும், புதிய கோணங்களை விவாதிக்கவும் அவை எனக்கு அணுக்கமாக இருக்கின்றன.

சு.வேணுகோபால் படிப்புகளில் தீமையின் சித்திரம் குறித்த அவரது மதிப்பீட்டு கட்டுரை தனித்துவமானது. முதல் தளத்தில் தான் வகுத்துக்கொண்ட கேள்வியின் பரிமாணங்களை தான் வாசித்த பிற இலக்கிய ஆக்கங்களுடன் உரசி விவாதித்து விரிக்கிறார்.

இரண்டாவதாக காலத்தின் முன் உறவுகளை நிறுத்தி சுரா விவாதிக்க எடுத்துக்கொண்ட கலைக்களத்தை அதன் சாரத்தை சுரேஷ் பிரதீப் சரியாக அடிக்கோடிடும் அதே சமயம், அந்த விவாதம் மீது படைப்பாளியின் எல்லையையும் கச்சிதமாகவே வகுத்து வைக்கிறார்.

பரந்த வாசிப்பு, வாசித்தவற்றுடன் உரையாடி அவற்றை திட்டவட்டப்படுத்துதல் நேர்மை. [எழுத்தாளர்கள் இருண்மையை இவ்வளவு எழுதுகிறார்கள் என இப்போது தான் எனக்கும் தெரிகிறது என அவர் எழுதும் வரி] இந்த ஆளுமை கொண்டு எந்த தயக்கமும் இன்றி அனாயாசமாக சு.வே உலகுக்குள் முயங்கி பல கதவுகளை திறக்கிறார்.

தனி மனிதனுக்குள் உறையும் தீங்கு, அமைப்புக்குள் உறையும் தீங்கு என சு.வே பின்னும் உலகை சரியாக பற்றுகிறார்.

கட்டுரையை வாசிக்க வாசிக்க இணையாக மனம் அவருடன் விவாதித்துக் கொண்டிருக்க அனுபவத்தை இதோ இதை எழுதுகையில் தித்திப்பாக நினைத்துப் பார்க்கிறேன். பால்கனிகள் நாவலின் இறுதியில் கிருஷ்ணன் சொல்வான்.

துரோகம் பண்ணா ஆம்பளைய விரும்ப கூடாதுனு இருக்கா? அப்படி இருக்க முடியுமாக்கா? அவங்க வெறுத்தா நாம வெறுக்கணும்னு கட்டாயம் ஏதாவது இருக்கா? எல்லோரும் என்னை வெறுக்க வெறுக்க தான் இதைத் தூக்கி முத்தம் வச்சேன். இவன் என்னை ஒருபோதும் வெறுக்க மாட்டாங்கா! ஏமாத்தமாட்டாங்கா! என்னை புரிஞ்சிப்பான். என்னை கண்கலங்காம காப்பாத்துவான். யாரையும் ஏமாத்தறது மாதிரி வளக்கமாட்டேங்கா. நல்லா படிக்க வெச்சிருவேன். யாரும் யாரையும் வெறுத்துட்டு வாழ முடியுமாக்கா? அது வாழ்க்கையா? வெறுக்கறதுல என்ன இருக்கு? நேசிக்கறதுலதான் அழகிருக்கு. என்ன நான் சொல்றது?

இந்த உரையாடல் நடைபெறும் முன்பு அவன் கடந்து வந்த ஊர்வலம் ஒன்றினை இணைத்து சிந்தித்தால் சு.வே உள்ளே உருவாகி நின்றெரியும் கனிவின் அனல் புரியும்.

ஒரு சிறு குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டு அக்குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் ஊரே திரண்டு பின் செல்லும். அந்த ஊர்வலத்தை கடந்து வந்தவன் சொல்லும் சொல் இது.

சூரியன் முதல் மின்மினி வரை பற்பல ஒளிகள். ஒன்றேயானது இருள். காமம் குரோதம் மோகம் என மும்முகம் காட்டும் ஒன்றே ஆன அது. அந்த அந்தகாரம் முன் சூரியன் முதல் மின்மினி வரை சாத்தியப்படும் அத்தனை ஒளிகளையும் சுட்டி நிற்கிறது சு.வே-இன் உலகம்.

கருப்பு நகைச்சுவை எனும் எல்லையில் கூட மிக தனித்துவமான சித்திரம் ஒன்றினை சு.வே யின் ஆட்டம் நெடுங்கதையில் காண முடிகிறது. நாயகன் மூன்று கிலோமீட்டர் வரை தண்டவாளக் கம்பி மீது சைக்கிள் சவாரி செய்து காட்டுவதாக அறிவிக்கிறான். எல்லா சாதனைகளும் அழகிகளை கவரத்தானே. பயிற்சியில் இறங்குகிறான். பெண்களின் இயற்கை உபாதை தணிக்கும் வெளி அவனால் பறி போகிறது. சாகச நாள் வருகிறது. தண்டவாளத்தில் சவாரி செய்கிறான். விபத்து. எவளோ மிக சரியாக தண்டவாள கம்பியில் இயற்கை உபாதையை வெளியேறி வைத்திருக்கிறாள். [எண்ணெயை கொட்டி வைத்தால் போதாதா? மாறாக இது அவளது விமர்சனமும் கூட இல்லையா].

கட்டுரை தொட்டு சு.வே உலகின் ஏதேதோ சித்திரங்கள் உள்ளே எழுந்தது. இங்கே முக்கியமான மற்றொரு அம்சம் இருக்கிறது. சுரேஷ் பிரதீப், பிரபு இருவருமே சு.வே உலகுடன் இணையாக அமி, ஜி.நாகராஜன், ஆ.மாதவன் இவர்களைத்தான் கொள்கிறார்களேயன்றி தஞ்சை பிரகாஷ் உலகை அல்ல. எந்த அகத்தூண்டலும், படைப்புக் கொந்தளிப்பும் இன்றி, எழுதித் தள்ளப்பட்ட ஆன்மா அற்ற வெற்று கதைகள் அவை. [தஞ்சை பிரகாஷ் ரசிகர்கள் அவருக்கு இணையான வெற்றான கிம் டு கிக் குக்கும் ரசிகர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன்] காணாமல் போய் கிடந்த அவற்றை திடீர் என கண்டு பிடித்து [என்னே தமிழ் இலக்கிய சூழல் எனும் பிலாக்கணத்தோடுதான்] உலவ விட மட்டுமே முடியும். உரையாட வைக்க முடியாது. என்பதற்கு இக் கட்டுரைகள் சான்று.

சுரேஷ் பிரதீப்புக்கு என் கைகுலுக்கல்கள்.

கடலூர் சீனு

***

சுரேஷ் பிரதீப்

 

அன்புள்ள ஜெ

வணக்கம்

சு வேணுகோபால் குறித்த இரு கட்டுரைகளுமே அரியவை. பொதுவாக இங்கே விமர்சனங்களே மிகமிகக்குறைவு. இணையத்தில் மட்டுமே விமர்சனங்கள் வெளிவருகின்றன. மற்ற இதழ்களில் விமர்சனங்களையே எதிர்பார்க்கமுடியாத நிலை. விமர்சனங்கள் ஏன் தேவை என்றால் நாமே ஓர் இலக்கியவாதியை வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாது. அவற்றை நன்றாக வாசித்த மற்றவர்களின் கருத்துக்கள் நம் வாசிப்பை மேம்படுத்துகின்றன. இரு கட்டுரைகளும் நான் வாசித்த சு.வேணுவின் கதைகளை வேறுவகையிலே வாசிக்க வைக்கின்றன.

இங்கே வழக்கமாக மதிப்புரைகள்தான் வருகின்றன. அவையும் தொச்சை பற்றிய கருத்தைச் சொல்வது போல நல்லாருக்கு நல்லால்லை என்ற அளவிலேயே உள்ளன. வேணுகோபாலின் கதைகளிலிருந்து அடிப்படைகளை விவாதிக்கும் கட்டுரைகளை அதனால்தான் முக்கியமாகக் கருதுகிறேன்.

ரவிச்சந்திரன்

 

சு வேணுகோபால் தீமையின் அழகியல்  பிரபு

சு வேணுகோபால் தீமையும் மானுடமும் சுரேஷ் பிரதீப்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15
அடுத்த கட்டுரைகந்து -கடிதம்