கந்து

1

ஜெ,

வலைத்தளத்தில் இந்த யூடியூப் பதிவைப்பார்த்தேன். இந்தச் சொல்லாராய்ச்சி சரியா? சரியாக இருக்காது என எனக்கு ஒரு சந்தேகம் . அதனால்தான் கேட்டேன்

சந்திரகுமார்

 

 

அன்புள்ள சந்திரகுமார்,

இந்த நாட்டில் எந்த வேலியில் போகிற ஓணானும் செய்யக்கூடிய அறிவுலகச் செயல்பாடு சொல்லாராய்ச்சி. தோன்றுவதைச் சொல்லவேண்டியதுதான். புத்தகமோ அகராதியோ ஒரு பொருட்டு இல்லை. டிவி பார்க்கிறவன் எங்கேபோய் புத்தகம் பார்க்கப்போகிறான்?

என்ன வேடிக்கை என்றால் இந்த டிவி அறிஞர்கள் இந்த மெய்ஞானத்தை ஏதோ வலைத்தளத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அதில் எவரும் எதையும் எப்படியும் எழுதலாமென்பது அறிவுலகநீதி. எவரும் வாசிப்பதில்லை என்பதனால் தீங்கில்லை.

கந்து என்ற சொல் பலவகையில் இன்றும் பயன்பாட்டில் இருப்பது. நேரடியாக அதற்கு சிறிய தூண் என்று பொருள். பொதுவாக ஊர்மன்றில் நாட்டப்பட்டிருக்கும் கல்தறி கந்து எனப்படும். விலங்குகளைக் கட்டிவைக்கும் தறியும் பொதுவாக கந்து என்று சொல்லப்படுகிறது.வைக்கோல் போர் நடுவே உள்ள தூணும் கந்துதான் [அகராதி ]

[ஆனால் வையாபுரிப்பிள்ளை அகராதியே நாட்டார்ச்சொல்லான இதை குத்துமதிப்பாக கேட்டுத்தான் பொருள் அளித்திருக்கிறது. பொதுவாக அவ்வகராதியின் பல சொற்பொருட்கள் அவரது மாணவர்களால் சேகரிக்கப்பட்டவை. இலக்கியப்பொருள் சரியாக இருக்கும். நாட்டாரியல்சொற்களில் பொருள்திரிபுகள் உண்டு]

நம் பாலியல் நூல்களில் பெண்களின் கிளிடோரிஸ் கந்து எனப்படும். அந்தப்பொருளே இன்று அதிகமும் பயன்படுத்தப்படுகிறது.

சென்ற நூறாண்டுகளுக்கு முன்புகூட வரிகொடாதவர்கள், கடனைக் கட்டாதவர்களை ஊர்மையத்தில் கல்தறியில் கட்டி வைத்து அடிக்கும் வழக்கம் இங்கே திருவிதாங்கூரில் இருந்தது, அதற்கு கந்து அடி என்றுதான் பெயர். கடன் திருப்பியளிக்க மறுப்பவர்களை கந்தில் கட்டி வைப்பது வழக்கமாக இருந்தது. கந்துவட்டி என்பது அதிலிருந்து வந்த சொல் என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை

பெயர்ச்சொற்களைப் பொருள் கொள்கையில் சில அடிப்படைப் புரிதல்களை மேற்கொள்வது நல்லது. என் அண்டை வீட்டாராக இருந்த கேரளப்பேரறிஞர் திரிவிக்ரமன் தம்பி [அ.கா.பெருமாள் அவர்களின் ஆசிரியரும்கூட] ஊர்பெயர் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் மூன்று விதிகளை ஒருமுறை சொன்னார்

  1. பொதுவாக பெயர்ச்சொற்கள் கவித்துவக் கற்பனை, உருவகம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதில்லை. அவை நடைமுறைப் பயன்பாட்டில் இருந்தே உருவாகும். ஆகவே அபூர்வமான அர்த்தங்களைத் தேடிச் சென்றாலோ இலக்கிய நுட்பங்களை கண்டடைந்தாலோ முட்டாளாகவே ஆவோம்.

2 ஒரு பெயர்ச்சொல்லின் பயன்பாடு அதே சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் நுட்பமான வேறுபாடுகளுடன் இருந்து கொண்டிருக்கும். அவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும்

3 ஒரு பெயர்ச்சொல் அவ்வாறு பயன்படுத்தப்படும் அந்த முறைக்கு, அந்தப் பார்வைக் கோணத்திற்கு அதற்கு முன் ஒரு மரபு இருக்கும். ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட முன்னுதாரணங்கள் தேவை

இந்த நெறிகளேதும் இல்லாமல் ‘எனக்கு இன்னா தோண்றதுன்னாக்கா’ என சொல்லாய்வு செய்யும் ஆசாமிகள் தமிழில் வளரும் ஆகாயத்தாமரைகள் என்றே சொல்லலாம்.

கந்து என சிவலிங்கமும் சொல்லப்படுவதுண்டு. ஏனென்றால் அது சிறிய கல்தூண் அல்லது கல்முழையாகவே வழிபடப்பட்டது. சிலப்பதிகாரத்தில் அருகர் கந்தன் எனப்படுகிறான் என வையாபுரிப்பிள்ளை அகராதி சொல்கிறது. ஏனென்றால் அவர் கல்தூணில் புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கலாம். ஊர்மன்றுகளில் நாட்டப்பட்டு வழிபடப்பட்டிருக்கலாம்.

கந்தன் என்னும் சொல் ஸ்கந்த என்னும் சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கவே வரலாற்று வாய்ப்பு. ஏனென்றால் பழந்தமிழில் முருகன் கந்தன் என்று சொல்லப்பட்டதில்லை. முருகன் என்பதே தமிழ்ப்பெயர்

ஆனால் ஸ்கந்தன் என்னும் சொல் கந்து என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கலாமா எனக்கேட்டால் அது ஆய்வாளர்களால் பரிசீலிக்கத்தக்கது என்றே என்னைப்போன்ற ஒருவன் சொல்லமுடியும். ஏனென்றால் ஸ்கந்தா என்ற சொல்லுக்கு மண்ணில் முகிழ்த்தது, அனல்வடிவாக எழுந்தது என்னும் பொருள்களே சம்ஸ்கிருதத்தில் காணப்படுகின்றன. ஆனால் அதற்கு சம்ஸ்கிருத வேர்ச்சொல் அடித்தளம் இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவியாசப்பிரசாத் வகுப்புகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–15