சில கிறித்தவப்பாடல்கள்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

நான் ஒருமுறை நண்பர் ராமச்சந்திர ஷர்மாவிடம் பேசிக்கோண்டிருந்தபோது என் பிடித்தமான திரைப்பாடல்களைச்  சொன்னேன். அவையெல்லாமே மேற்கத்திய இசைச்சாயல் கொண்டவை என்ற அவர்  ‘சின்னவயசிலே சர்ச்சு பாட்டு ரொம்ப கேட்பீங்களோ?’ என்றார்.

உண்மைதான் இளமையின் அடையாளமாக என்னுடைய நினைவில் நிற்கும் பாடல்களில் பல கிறித்தவப்பாடல்கள் தான். அவை என் இசைரசனையை தீர்மானித்திருக்கலாமென நினைக்கிறேன். அது சாதகமா பாதகமா என்று தெரியவில்லை, ஆனால் அது என் ரசனை. அவ்வளவுதான்.

கர்நாடக சங்கீத பாடல்கள் சிற்பங்கள் மண்டி விரிந்திருக்கும் பிராகாரங்கள் போல. சர்ச் பாடல்கள் சன்னல்கண்ணாடி ஒளி உள்ளே விழ உயர்ந்த கூரைக்குவையுடன் அமைதி கவிந்து அகன்று கிடக்கும் மாபெரும் தேவாலயங்கள் போல. மனக்குருவி பிராகாரங்களில் தொட்டுத்தொட்டுச் சிறகடிக்கிறது.  தத்திக் களிக்கிறது.  தேவாலயங்களில் சிறகசையாமல் காற்றில் மிதந்து சுழல்கிறது. இரண்டுமே பேரனுபவங்கள்தான்.

பழைய கிறித்தவப்பாடல்களின் விசித்திரமான மொழியும் என்னை பலசமயம் ஒருவகைக் கனவில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் நாசரேத், உவரி , டோனாவூர் வழியாகப் பயணம் செய்தபோது அந்த நிலமும் அந்த மொழியும் ஒன்றே என்றுபட்டது

தந்தானைத் துதிப்போமே
தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே, கவி – பாடிப்பாடி.
விந்தையாய் நமக்கானந்தனந்தமான,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் -[ தந்]

ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் – தந்

என்றெல்லாம் ஒலிக்கும் சொற்சேர்க்கைகள் இன்று பழங்காலத்துப்  பேனா போல மைக்கூடு போல விசித்திரமான கவர்ச்சியுடன் உள்ளன.

ஒர் இரவில் சில பழைய கிறித்தவப்பாடல்களைத் தரவிறக்கம் செய்துகேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கமாக பாடல்வரிகளை அவ்வளவாகக் கவனிப்பதில்லை. இப்போது வரிகளுடன் தரவிறக்கம் செய்து கவனித்தபோது கணிசமான பாடல்களை அப்படியே கிருஷ்ணனுக்க்காகவும் பாடலாம் என்று தோன்றியது. ஏசு ஆயர்குல மணாளனாக பெரும்பாலான பாடல்களில் ஒலிக்கிறார்


எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே
தொல்லை மிகு இவ்வுலகில் சுகமில்லையே….

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் (2)
நாயனும் எனக்கன்பான ஞான மணவாளனும் — (எல்லாம் ஏசுவே)

பாட்டைக்கேட்க

சிங்காரக் கன்னிமாரே, – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் – தந்தானை துதிப்போமே

என்பது போன்ற வரிகளை ஒரு ஆய்ச்சியர் குரவை என்றே சொல்லிவிடமுடியும். ஆச்சரியமாக இருந்தது. இந்த பொதுத்தளம் எப்படி இயல்பாக நம்மிடையே புழங்கிக்கொண்டிருக்கிறது!

என் ரசனையில் பல கிறித்தவப்பாடல்கள் சட் சட்டென்று மின்னிச்செல்கின்றன. அவை எல்லாமே கடந்தகால ஏக்கத்துடன் தொடர்புள்ளவை

1. அய்யய்யா நான் வந்தேன், தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்

2. என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்

3. கதிரவன் தோன்றும் காலையிலே

4 கர்த்தரை துதியுங்கள்

4 ஏசுவை நேசிக்கிறேன் மனமே ஏசுவை நேசிக்கிறேன்

என்ன காரணம் என்றே தெரியவில்லை. இணையத்தில் மிக மிகக் குறைவாகவே கிறித்தவப்பாடல்கள் கிடைக்கின்றன. அல்லது கூகிளில் சிக்குகின்றன. மாறாக பாடல்களுக்க்காக தேடினால் கிறித்தவ இணையதளங்கள் இஸ்லாம் மீதும் இஸ்லாமிய இணையதளங்கள் கிறித்தவர்கள் மீதும் கொட்டும் ஆபத்தான வெறுப்பும் வசையும்தான் அதிகமும் கிடைக்கின்றன

இப்பாடல்களின் இணைப்புகளை யாராவது அனுப்பிவைத்தால் நல்லது.

இணையதளங்கள்

http://christavapadalgal.netne.net
http://www.tamilchristians.info/song-lyrics/search-song-by-composers.php?composer_id=CO4

முந்தைய கட்டுரைநாவல் உரை
அடுத்த கட்டுரைகே.வி.மகாதேவன்