சேலம் பகடால நரசிம்மலு நாயுடு

sp narasimhalu naidu

சுந்தரராமசாமியின் நூலகத்தில் இருந்து சேலம் பகடால நரசிம்மலு நாயிடு எழுதிய’ தென்னாட்டு யாத்திரை என்ற நூலை வாசித்தேன். கன்யாகுமரிக்குச் செல்லவேண்டுமென்றால் நாகர்கோயிலில் இருந்து நடந்து அல்லது மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் , அங்கே சில அர்ச்சகர் வீடுகள் மட்டுமே உள்ளன என்றும், அங்கே அரிசி கொடுத்தால் சமைக்க பாத்திரங்களும் தண்ணீரும் கொடுபபர்கள் என்றும் வாசித்தபோது அதிர்ந்து வருடத்தை பார்த்தேன். 1908 ல் வெளிவந்த நூல் அது. மணல்மேடுகள் நடுவே ஏகாந்தமாக இருக்கும் கன்யாகுமரியின் அழகை அவர் வர்ணித்திருந்த விதம் இன்றும் நினைவில் நிற்கிறது.

கோவையை இன்றைய தொழில்நகரமாக உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் நரசிம்மலுநாயிடு. 1854ல் ஏப்ரல் 12 ஆம் தேதி சேலத்தில் ரங்கசாமிநாயிடுவுக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்.சேலத்திலும் பின்னர் சென்னை ராஜதானி கல்லூரியிலும் கல்விகற்றார். 1868ல் எதிராஜி அம்மாளை மணம்செய்தார். இரு குழந்தைகள் பிறந்தபின் எதிராஜி அம்மாள் மரணமடையவே பாலக்காட்டைச்சேர்ந்த மீனாட்சியம்மாளை 1899ல் மணம்செய்துகொண்டார். 1922 ஜனவர் 22 அன்று நரசிம்மலுநாயிடு மரணமடைந்தார். காங்கிரஸ் செயல்வீரர் என்று நரசிம்மலுநாயிடுவைச் சொல்லலாம். மதநம்பிக்கை சார்ந்து அவர் பிரம்மசமாஜி. அடிமைப்ப்ட்டிருந்த இந்தியா தன்னைக் கண்டடைந்து புத்துயிர் கொண்டு எழுந்த காலத்தில் அந்த ஒளிபட்டெழுந்த பல உயர்மனங்களில் ஒன்று அவருடையது.

சோர்வே இல்லாத உழைப்பும் அதற்கு அடிப்படையாக அமைந்த இலட்சியவாத நம்பிக்கையும் கொண்ட தலைமுறையின் சிறந்த உதாரணங்களில் ஒருவர் அவர். இதழியலாளராகவும் தொழில்முனைவோராகவும் நரசிம்மலுநாயிடுவுக்கு இன்னும் இரு முகங்கள் உண்டு. 1877ல் தன் 23 ஆவது வயதில் Salem Patriot என்ற ஆங்கில செய்தியிதழை ஆரம்பித்து நடத்தினார். அரசியல்நெருக்கடிகள் காரணமாக அந்த இதழ் நின்றதும் கோவைக்குக் குடிபெயர்ந்தார். 1879 முதல் கோயம்புத்தூர் அபிமானி என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து கோயம்புத்தூர் பத்ரிகா என்ற வாரச்செய்தியிதழை வெளியிட்டார். பின்னர் Coimbatore Crescent என்ற செய்தியிதழை வெளியிட ஆரம்பித்தார்.

1881 முதல் கலாநிதி அச்சகம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இவ்விதழ்களில் நரசிம்மலுநாயிடு ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ச்சியாக எழுதினார். அன்றாட அரசியல்செய்திகளின் மொழியாக்கம், செய்தி விமர்சனம், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், மதச்சீர்திருத்த கட்டுரைகள் என அவரது எழுத்து பலதரப்பட்டது. தமிழில் இதழியல் எழுத்து உருவாகி வளரக் காரணமாக அமைந்த முன்னோடிகளில் ஒருவர் என அவரை உறுதியாகச் சொல்லமுடியும். இன்று அவரது பெயர் அவ்வகையில் வரலாற்றில் நினைவுகூரப்படுவதில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இந்த இதழ்களில் நரசிம்மலு நாயுடு தொடர்ச்சியாக பயணக்கட்டுரைகளை எழுதிவந்தார். அக்கால வாசகர்களுக்கு அவை பெரிதும் கிளர்ச்சியளிப்பவையாக இருந்தன. பயணவசதிகள் மிகக்குறைவாக இருந்த அக்காலகட்டத்தில் நரசிம்மலுநாயுடு மிகுந்த சிரமங்களுடன் செய்த பயணங்கள் தமிழகமெங்கும் பெரிதும் விரும்பப்பட்டன. அவரது இதழ்களின் பிரதிகள் தென்னாட்டிலேயே அதிகம் கிடைக்கின்றன என்பதே சான்று.

பொதுவாக இந்திய மொழிகளில் இதழியல் உருவானதுமே பயணக்கட்டுரைகள் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றன. தாகூர், காகா காலேல்கர் போன்றவர்கள் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகள் இந்திய மொழிகளில் எல்லாம் மொழியாக்கம் செய்யப்பட்டன. அவை பெற்ற முக்கியத்துவத்துக்கான காரணம், அவை இந்தியா என்ற யதார்த்த மனச்சித்திரத்தை மக்களிடையே உருவாக்கின என்பதே. இந்தியாவின் நவீன தேசிய உருவாக்கத்தில் அவற்றின் இடம் மிக முக்கியமானது. நரசிம்மலு நாயிடுவுக்கும் அந்தப்பணியில் பெரும் பங்கு உண்டு.

இந்தியா என்ற மனச்சித்திரம் அதுவரை மதத்தாலும் இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. ஆசேது ஹிமாசலம் என்று இந்திய இலக்கியங்கள் சொல்கின்றன. இந்தியப்பெரு நதிகளின் பெயரைச் சொல்லி நம் முன்னோர் தினமும் அவர்களின் ஊர்களில் நீராடி வந்தனர். ஆனால் இந்தியா என்ற நேரடி அனுபவம் தீர்த்தாடனம் செல்ல வாய்ப்பிருந்த மிகமிகச் சிலருக்கே இருந்தது. பயணக்கட்டுரைகள் அந்த கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தன எனலாம். ஆரம்பகட்ட இந்திய பயணக்கட்டுரைகள் எல்லாமே மதத்தலங்களுக்குச் செல்வனவாகவே இருந்தன. பலிஜா சாதியினராகிய நரசிம்மலு நாயிடு விஜயநகர சாம்ராஜ்யத்தில் பலிஜாக்கள் வகித்த பங்கைப்பற்றி முன்னோடியான ஆராய்ச்சிகள் சிலவற்றைச் செய்திருக்கிறார். 1896ல் தெலுங்கில் அவர் எழுதிய பலிஜவாரு புராணம் என்ற நூல் முக்கியமான ஒரு முன்னோடி ஆய்வு எனபப்டுகிறது அரசியல், பொருளியல், வரலாறு, மதம் சார்ந்து கிட்டத்தட்ட 100 நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

நரசிம்மலு நாயடு கோவையை பஞ்சாலைநகரமாக ஆக்கிய முன்னோடிகளில் ஒருவர். நீலகிரியின் புகழ்பெற்ற தோடட உரிமையாளரான ராபர்ட் ஸ்டேன்ஸ் [Robert Stanes] அவர்களின் நிதியுதவியுடன் அவர் 1888 ல் கோவை , CS&W Mills நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று அந்நிறுவனம் ஸ்டேன்ஸ் மில் எனப்படுகிறது. போத்தனூரில் கோவையின் முதல் சர்க்கரை ஆலையையும் நரசிம்மலுநாயுடுதான் அமைத்தார் கோவையின் பல புகழ்பெற்ற பொது அமைப்புகள் நரசிம்மலு நாயுடுவால் அமைக்கப்பட்டவை. இபோது டவுன் ஹால் எனப்படும் விக்டோரியா முனிசிப்பல் ஹால் அவரால் முன்கையெடுத்து உருவாக்கப்பட்டது. கோயம்புத்தூர் காஸ்மாபாலிடன் கிளப், கோயம்புத்தூர் கூட்டுறவு பண்டகசாலை போன்றவை அவரது ஆக்கங்களே. முக்கியமாக சிறுவாணி அணைகட்டி கோவைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டம் அவரால் முன்வைக்கப்பட்டு வாதாடி கொண்டுவரப்பட்டது தான்

நரசிம்மலு நாயிடு சேலம் ,ஈரோடு ,கோவை நகரங்களில் பிரம்மசமாஜ கிளைகளை ஆரம்பித்து நடத்தினார். பிரம்மசமாஜத்தின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக உழைத்த சென்னை மகாஜன சபாவின் செயலாளராக பணியாற்றினார்..1920ல் கோவையில் ஏழைமாணவர்களுக்கான பிரம்மசமாஜ உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பித்தார். நரசிம்மலு நாயிடு முன்னோடியான காங்கிரஸ் தலைவர். 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானபோது கோவையில் அதன் கிளையை அவர்தான் உருவாக்கினார். முதல் காங்கிரஸ் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து சென்ற 21 உறுப்பினர்களில் அவரும் ஒருவர். பிரம்மசமாஜத்தலைவர்களுடன் நரசிம்மலு நாயிடுவுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. அடிப்படையில் வைணவரான அவர் பிரம்மசமாஜ கருத்துக்களுக்கு ஏற்ப தன் பிரம்மசமாஜ கருத்துக்களை மறுஆக்கம்செய்துகொண்டார் என்று சொல்லலாம்.

பொதுவாக பிரம்மசகாஜத்தின் மதச்சீர்திருத்தப்போக்கை இவ்வாறு சொல்லலாம். அவர்கள் அனைவருமே ஆங்கிலக் கல்வி கற்றவர்கள். ஆகவே இந்தியாவை ஆராய்ந்த ஐரோப்பிய இந்தியவியலாளார்களின் பார்வையில் தாங்களும் இந்தியாவையும் இந்து மதத்தையும் அணுகினார்கள். கிறித்தவ மதம் நவீன யுகத்துக்கான நவீன மதத்தின் அமைப்பு கொண்டது என்றும் ஆனால் இந்துமதம் கிறித்தவ மதத்தில் இல்லாத ஆழ்ந்த அகவய ஞானம் கொண்டது என்றும் நினைத்தார்கள். இந்துமதத்தின் அமைப்பில் உள்ள குறைகளை கிறித்தவ மதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு களைந்தால் அதை மிகச்சிறப்பான ஒரு நவீனமதமாக ஆக்கிவிடலாமென்றும் நினைத்தார்கள். அவர்களின் சீர்திருத்தம் அந்த வகையில் அமைந்திருந்தது.

சேலம் பகடால நரசிம்மலு நாயிடு 1898ல் வெளியிட்ட ’இந்து பைபிள் –ஆரியர் சத்தியவேதம்’ என்ற நூலை இந்தப்பின்னணியில்தான் பார்க்கவேண்டும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த பிரம்மாண்டமான நூல் இப்போது 2009ல் மறுபதிப்பாகி வந்துள்ளது. பைபிள் என்றால் மூலநூல், மையநூல் என்றுதான் பொருள் என்று வாதிடுகிறார் நரசிம்மலு நாயுடு. ஒவ்வொரு இந்துவும் பைபிளை கிறித்தவர்கள் வாசிப்பது போல அன்றாடம் வாசிக்கவேண்டிய ஒரு முழுமையான தொகைநூல் இல்லை என்பதனால் இந்நூலை எழுதப்புகுந்ததாகச் சொல்கிறார். இதில் இந்துதர்மம் அல்லது சனாதன தர்மத்தின் சாராம்சமான அறவிழுமியங்களையும், நம்பிக்கைகளையும், தத்துவக்கருத்துக்களையும் பல்வேறு தலைப்புக்களில் சீராக தொகுத்தளிக்கிறார்.

[மேலும்] இந்துபைபிள் இணையதளம் இந்தியப்பயணம்:கடிதங்கள்

மறுபிரசுரம், முதற்பிரசுரம் Dec 1, 2010

முந்தைய கட்டுரைசிலைகள்- ஒரு கேள்வி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13