மாமங்கலையின் மலை -5

mmm

 

குடஜாத்ரியில் அந்த கூடத்திற்கு வெளியே ஒரும் முற்றம் இருந்தது. அதனருகே ஒரு சிறிய குளம். மீன்கள் திளைக்கும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. மேலே விண்மீன்கள் மலைநிலங்களுக்கு உரிய அண்மை கொண்டிருந்தன. இரவில் ராஜமாணிக்கம் மீண்டும் பேய்க்கதைகளைச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். வழக்கம்போல மயிர்கூச்செறியவைப்பவை. வழுக்கையரான கிருஷ்ணன் மட்டும் அதை பொருட்படுத்துவதில்லை.

 

டிசம்பர், ஜனவரி மாதங்கள் இப்பகுதியில் மேற்குக் கடல்பகுதியிலிருந்து காற்று உச்சகட்ட விசையுடன் வீசும் காலம். ஏனென்றால் மேற்கே விரிந்துகிடக்கிறது அரேபிய பாலைவனம். பெரிய நதிகள் எதும் வந்து கலக்காத அரபிக்கடல் கடும் வெப்பத்தை அடைகிறது. விரிவடைந்த காற்று ஒப்புநோக்கக் குளிர்ந்து காற்று சுருங்கியிருக்கும்இந்திய மையநிலம் நோக்கி வீசி நிரப்புகிறது. ஆனால் கடலோரமாகவே அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அதைத் தடுத்து கீழே செலுத்துகிறது.

எட்டு மணிக்கெல்லாம் மரங்கள் அனைத்தும் வெறி கொண்டு கூத்தாடத்தொடங்கிவிட்டன. நல்ல குளிர். கிருஷ்ணன் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரமில்லை என்பதனால் குடஜாத்ரியில் குளிராது என்ற செய்தியை அனுப்பியிருந்தார். இதே கிருஷ்ணன் காஷ்மீர் செல்லும்போது அனைவரிடமும் குளிராடைகளை எடுத்துவரச் சொல்லி பலமுறை மின்னஞ்சல் விட்டதனால் ஒவ்வொருவரும் மூன்று நான்கு கம்பளி ஆடைக்ளை எடுத்துவந்தனர். நாங்கள் சென்ற போது காஷ்மீரில் ஓரிரு இடங்களைத் தவிர அனைத்துப்பகுதிகளிலும் சென்னையைப்போல வெயிலடித்தது.

 

ஆனால் குடஜாத்ரியில் குளிர ஆரம்பித்தது. படுப்பதற்கு ஜமக்காளங்கள் மட்டுமே கிடைத்தன. தரையிலிருந்து குளிர் வந்து உடலை நடுங்கச் செய்ததாக பலர் சொன்னார்கள். அதை முன்னரே ஊகித்து நான் ஒரு பெஞ்சில் என் படுக்கையை அமைத்துக் கொண்டேன். இருபக்கமும் புரண்டு விழுவதற்கு வாய்ப்பிருந்த அந்த படுக்கையில் தூக்கத்திற்குள்ளும் அதைப்பற்றிய பிரக்ஞை இருந்து கொண்டிருந்தது. ஒரு கட்டுமரத்தில் படுத்து கடலில் செல்வதாக பலமுறை குறுங்கனவுகள் கண்டேன். முந்திய நாள் இரவில் குறைவாகத் தூங்கியதும் பயணக்களைப்புமில்லாமல் இருந்தால் தூங்கியிருக்க முடியாது.

 

வெளியே அமர்ந்து விண்மீன்களைப் பார்த்தபடி பேய்க்கதைகளைக் கேட்ட கூட்டம் நடுங்கியபடி வந்து படுத்து தூங்கியது. நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சென்ற செல்வேந்திரன் திரும்பிவரும்வழியில் முட்டாக்கு போட்டுக் கொண்டு அரையிருளில் வந்த கதிர்முருகனைக் கண்டு மீண்டும் சிறுநீர் கழித்ததாக மறுநாள் கேள்விப்பட்டேன்.

 

காலை எழுந்தவுடனேயே மூகாம்பிகைக்குக் கிளம்பிச் செல்வது எங்கள் திட்டம். குடஜாத்ரி மலையின் அலைகளுக்கு அப்பால் கலங்கிய மழைநீர் போல வானம் தெரிந்தது. அதில் மூழ்கி நீரினூடாக வெளியே மேலே ஒளிரும் சூரியனைப் பார்ப்பதுபோலிருந்தது உதயம். எங்கள் ஜீப்புகள் மேலும் தூசை எழுப்பி அனைத்தையும் ஒரு செந்நிற படலத்தால் போர்த்தின.  இனிய தும்மல்கள் இப்பயணத்தின் சிறப்பம்சம்.

குடஜாத்ரியில் நீராடிவிட்டுக் கிளம்பலாம் என்று திட்டமிருந்தது. ஆனால் குளிக்கத் தொடங்கினால் கிளம்புவது தாமதமாகும் என்பதனால் பல் கூடத் தேய்க்காமல் நேராக வந்து வண்டியில் ஏறிக்கொண்டோம். கீழே வந்து எங்கள் கார்களை அடைந்தோம். எங்கு நீராடுவது என்ற கேள்வி எழுந்தது. செல்லும் வழியில் ஏதாவது ஆற்றில் குளித்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ணன் சொன்னார். ஆறு எங்கிருக்கிறது என்று கேட்டபோது இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதாகச் சொன்னார் ஓட்டுநர்.

 

ஓட்டுநர் இல்லத்தில் ஒருநாய்க்குட்டி அன்பாக இருந்தது. நாய்கள் பொதுவாக சுற்றுலாநிலையங்கள் அன்புடனிருக்கின்றன. ஏனென்றால் அங்கே அன்னியர் என எவருமில்லை, எல்லாருமே விருந்தினர்தான். அதிலும் குட்டிநாய்கள் கொஞ்சப்படுகின்றன. வளர்ந்தபின்னரும் அவை மானுடவிழைவுடன் வாழ்கின்றன. எந்தத்தெருநாயையும் கொஞ்சினால் அடிமையாகிவிடும். சிலநாய்கள் கொஞ்ச ஆரம்பித்ததுமே உளமுருகி அழ ஆரம்பித்துவிடுவதைப்பார்க்கலாம்.

 

சாலையிலேயே ஆற்றைக் கண்டுவிட்டோம். ஆனால் மிகக்குறைவாகவே நீர் இருந்தது. இப்பகுதியில் ஓடும் ஆற்றின் பெயர் சௌபர்ணிகா. [என் செல்பேசியின் வரவேற்புப்பாடல் சௌபர்ணிகாவையும் மூகாம்பிகையையும் பற்றியது ‘சௌபர்ணிகாமிருத வீசிகள் பாடுந்நு நின்றெ சகஸ்ரநாமங்கள். ஜகதம்பிகே மூகாம்பிகே’] மழைபொய்த்து ஓடையாக ஆகிவிட்டிருந்தது. அதில் அணைகட்டி சலவைக்காரர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள். முந்தைய நாள் அவர்கள் துவைத்த நீர் தான் அது. நீர் முழுக்க சலவை சோடாக் குமிழிகள் நிறைந்திருந்தன.

 

இருந்தாலும் துணிந்து நீராடிவிடலாம் என்றார் கிருஷ்ணன். செல்வேந்திரனுக்கு நம்பிக்கை வரவில்லை. கொல்லூரில் எப்படியும் நீராடுவதற்கு இடமிருக்கும் நாம் அங்கு செல்வோம் என்று அடம் பிடித்தார். அதுவும் நல்ல எண்ணம் தான் என்று எங்களுக்குத் தோன்றியது. வழக்கறிஞர்கள் துணியுமிடங்களில் நாம் கொஞ்சம் தயங்குவது நல்லது.

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு காலை எட்டுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். அங்கேயே ஒரு விடுதியில் உணவருந்தினோம். அதன் முன் இருந்த விடுதி இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா பேரில் அவரது குடும்பத்தால் உருவாக்கப்பட்டது. பராமரிப்பில்லாமல் பாழடைந்துகிடந்தது அது. குளித்து உடைமாற்றி செல்வதற்கு விடுதி இருந்தது. குழாயில் நீர் கொட்டவும் செய்தது.

 

கொல்லூர் இன்று ஒரு பெரிய வழிபாட்டு நிலையமாக மாறியிருக்கிறது. ஏராளமான கடைகள் அத்தனை கோயில்களுக்கு முன்னாலும் இவ்வளவு பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகள் ஏன் இருக்கின்றன என்று நான் தத்துவார்த்தமாக யோசித்தேன். ஒரு கடைமுன் நின்று பார்த்தால் உலகியல் வாழ்க்கை அனைத்தையுமே குறியீடுகளாக மாற்றிக் கட்டித் தொங்கவிட்டிருந்தது போல் தோன்றியது. பல்வேறுவிதமான டப்பாக்கள், வீட்டுப்பொருட்கள், சவுரிகள், அலங்காரப்பொருட்கள், இசைக்கருவிகள், துப்பாக்கிகள், போர்த்தளவாடங்கள் கூட!  கடவுளுக்கு முன் வாழ்க்கையைக் கொண்டு படைத்து வைப்பது போல !

மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அன்று அதிக கூட்டம் இல்லை. பத்து மணிக்கு மேல் கூட்டம் நெரிபடத் தொடங்கிவிடும் என்றார்கள். சிறப்புத் தரிசனத்திற்காக கட்டணம் எதுவுமில்லாமலேயே உள்ளே சென்று இருபது நிமிடத்தில் தேவியை வணங்கி வெளியே வந்தோம். கேரளபாணிக் கோயில். தொன்மையான கேரளப் பண்பாடு கோயிலின் எல்லா பகுதிகளிலும் காண கிடைத்தது. பக்தர்களும் பெரும்பாலனவர்கள் மலையாளிகள் என்பதை பேச்சிலும் பார்வையிலும் கண்டடைய முடிந்தது.

 

ஆலயத்திற்குள் ஓரிடத்தில் அமர்ந்து இயல்பாகவே எதையோ பேசத் தொடங்கி நம் தொல் மரபில் கற்றலும் கற்பித்தலும் எப்படி நிகழ்ந்தது, ஓர் ஆசிரியடமிருந்து எப்படி சிந்தனைகளை அல்ல சிந்திப்பதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைப்பற்றி தீவிரமாக உரையாடத்தொடங்கினோம்.

கொல்லூரிலிருந்து கிளம்புகையில் முன்மதிய வெயில் கொளுத்தத் தொடங்கியது. கிருஷ்ணனின் திட்டப்படி யானா என்ற குகை பகுதியைச் சென்று பார்த்துவிட்டு அப்படியே கோகர்ணம் சென்று கடலோரத்தில் கால்நனைத்துவிட்டு இரவில் அங்கெங்காவது தங்கவேண்டும். ஆனால் கிளம்பும்போதே அது நிகழாது என்று தெரிந்துவிட்டது. யானா குகைகள் கொல்லூரிலிருந்து ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. மூன்று மணி நேரம் பயணம் செய்தால் தான் யானா குகையை அடைய முடியும்.

 

நாங்கள் சென்று சேர நான்கு மணி ஆகிவிட்டிருந்தது. பெரிய கூட்டம் என ஏதுமில்லை. அரிய சுற்றுலா ஒன்றுக்கு உகந்த பகுதியாயினும் கூட பயணிகள் மத்தியில் யானா அவ்வளவு புகழ் பெற்றது அல்ல. சென்ற குகைப்பயணத்திலேயே இங்கு வந்து சென்று விடலாமென்று கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்காக ஏறத்தாழ முன்னூறு கிலோமீட்டர் பாதையை மாற்றியமைக்கவேண்டியிருந்ததால் கைவிடப்பட்டது.

கார் நிறுத்துமிடத்தில் இரண்டு கடைகள். தேநீர் கிடைக்கும். மற்றபடி சுற்றுலா வசதிகள் எதுவுமிலை. மேலேறிச் செல்ல படிகள் அமைந்த பாதை. வந்து இறங்கியதுமே செறிந்த காட்டுக்குள் இலைத்தழைப்புகள் மீதாக எழுந்து நின்ற விசித்திரமான பாறைக்கட்டுமானத்தை பார்த்து வியந்தோம். ஏதோ தொன்மையான கோட்டை மழையில் அரித்து நின்றிருப்பது போலவே தோன்றியது.

அது சுண்ணாம்புக்கல் பாறையாக இருக்குமென்று தான் நான்முதலில் நினைத்தேன். நீரில் அந்த அளவுக்கு அரித்து வழிவுகள் கரவுகள் சரிவுகள் கூர்களுடன் உருகிய மெழுகுபோல் தோற்றமளிப்பது சுண்ணாம்புப்பாறையாக இருப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம். கருங்கல் பாறைகளுக்கு வேறு வகையான அமைப்புகள் உண்டு. அவை பெரும்பாலும் பெரிய உருளைகளாக அமைந்துள்ளன. நான் மலேசியாவில் இதைப்போன்று உருகி வழிந்த வடிவம் கொண்ட சுண்ணப்பாறைகளை பார்த்திருக்கிறேன். மேகாலயாவிலும் சட்டீஸ்கரிலும்  இத்தகைய மலைகள் உண்டு.

அல்லது எரிமலைக்குழம்புப்பாறையாக இருக்குமென்று தோன்றியது. இப்பகுதியின் பாறைகள் உலகிலேயே தொன்மையானவை என்பது நிலவியல் கூற்று. எரிமலைகள் இருந்தனவா?  இந்த மினுமினுப்பும் கருமையும் விழிகளை அசையவிடாத அளவுக்கு கவர்ச்சி கொண்டவை. படிகளிலேறி நெருங்க நெருங்க மலைகள் அணுகி வந்தன. தார் உருகி வழிந்ததுபோல. மடிப்புகள் உலையும் கன்னங்கரிய திரைச்சீலை வானிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தது போல. எவரோ களைந்திட்டுப்போன கரிய பட்டாடை போல.

 

செங்குத்தான மலையின் மிக அருகே சென்று நிற்பது மனம் பதைக்கச்செய்யும் அனுபவம். அத்தனை உயரத்திற்கு செங்குத்தாக ஒரு பாறையை அத்தனை அணுகி பார்ப்பது இந்தியாவில் மிகக்குறைவாகவே இயலும். ஏனெனில் இங்குள்ள பாறைகள் அனைத்தும் கூம்பு வடிவமானவை. நான் அமெரிக்காவில் யோசிமிட்டி தேசியப்பூங்காவில் தான் இவ்வாறு செங்குத்தாக எழுந்து சென்ற பெரும்பாறையைப்பார்த்தேன் அது பெரும்பனிக்காலத்தில் மாபெரும் பனிக்கட்டிகள் உருகி இறங்கிய எடையால் வெடித்து உருவானது என்று அங்கு எழுதப்பட்டிருந்தது.

இங்கு இத்தகைய  மலைப்பாறைகள் இரண்டு உள்ளன. அண்ணாந்து விழிதூக்கி அவற்றின் உச்சி முனைகளைப்பார்ப்பது போல் மனம் பேதலிக்க வைக்கும் அனுபவம். மலைஉச்சி வளைந்திருப்பதே தென்னக வழக்கம். ஆகவே மலைக்கு கோடு என்று பெயர்- கோடுதல் என்றால் வளைதல். இங்கே ஊசி முனைகளின் தொகுப்பாக அவை தெரிந்தன. அல்லது இலைத் தளிர்களின் வான்விளிம்பு போல.

 

வடிவமற்ற ஒன்று நம் கண்முன் எழும்போது உள்ளம் பரிதவிக்கும். அவற்றை அறிந்த வடிவங்களுக்குள் திணித்து செலுத்திவிட முயல்கிறோம். அதுவே அவ்வடிவம் அளிக்கும் அனுபவமாகும். ஏதேனும் ஒரு வடிவத்திற்கு அதை திணிக்க முடிந்தால் மட்டுமே பின்னர் அதை நினைவுகொள்ள முடியும்.

 

இவ்வாறு வடிவத்திற்குள் திணிப்பதிலும் அந்தந்த பண்பாட்டுக்கென தனிஇயல்பு உள்ளது. அமெரிக்காவில் அங்குள்ள விசித்திரமான இயற்கையிடங்கள் அனைத்துமே சாத்தானுடன் அடையாளப்பட்டிருப்பதைப்பார்த்தேன். பெரும்பாறைகளால் ஆன நாற்காலி போன்ற வடிவம் ஒன்றுக்கு டெவில்ஸ் சேர் என்றும் கந்தகக்குழம்பு கொந்தளிக்கும் ஓர் இடத்திற்கு டெவில்ஸ் கிச்சன் என்றும் பெயர். மாறாக இந்தியாவில் அனைத்தும் புராணங்களுடனும் தெய்வத்துடனும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யானா குகையில் உள்ள இரண்டு பெரும் மலைகளில் ஒன்று பஸ்மாசுரன் இன்னொன்று மோகினி என்று சொல்லப்படுகிறது. யார் தலையில் கை வைத்தாலும் அவரை பொசுக்கும் வல்லமை பெற்ற பஸ்மாசுரன் வரமளித்த சிவன் தலையிலேயே கைவைப்பதற்காக அவரைத் துரத்தி வந்தான். அப்போது மோகினி வடிவில் எதிர்கொண்ட விஷ்ணு நடனமாடி அவனைக் கவர்கிறார். அவள் நடனமாடும்போது உடன் அவனும் ஆடுகிறான் ஆட்டத்தின் போதையில் ஒரு முறை அவள் தன் கையை தன் தலையில் வைக்க அவ்வாறே தன் கையைத் தன் தலையில் வைத்து அவனும் ஆடினான். மோகினிகளை நம்பிச்செல்லும் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் தன் தலையில் தானே கைவைத்து தன்னைப்பொசுக்கிக் கொள்வது தான் நிகழும் என்பதற்கான உதாரணமாக எப்போதும் சொல்லப்படுவது இக்கதை.

 

அவ்வாறு நடனம் ஆடியபோது ஒரு கணத்தில் பஸ்மாசுரனும் மோகினும் இரண்டு கல்சிலைகளாக அங்கே சமைந்து நிற்கிறார்கள் என்பது உள்ளூர் தொன்மம் ஆனால் அதற்கு காட்சி ரீதியாக ஒற்றுமை ஏதும் இல்லை. மோகினிமலை பஸ்மாசுரன் மலையைவிட மும்மடங்கு பெரிதாக இருக்கிறது. அதற்குக் கீழே சிவனுக்கு ஒரு கோயில் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் ஓட்டுக் கூரையுடன் அந்த அற்புதமான மலையை இழிவு படுத்தும்விதமான  கட்டுமானத்துடன் உள்ளது

முன்பு அங்கிருந்த சிறு குகைக்குள் நீர் சொட்டும் வடிவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டிருந்தது .பின்னர் உள்ளூர்க்காரர்கள் ஆண்டுக்கொரு முறை நடக்கும் பூசனைக்கு வந்து தங்கும் பொருட்டு விடுதியாகவும் ஆலயமாகவும் ஒரே சமயம் அமையும் விதமாக இதை கட்டியிருக்கிறார்கள். இன்று இக்கட்டுமானம் இடிந்து பாழடைந்து மனச்சோர்வளிக்கும் விதமாக அந்த அரிய இயற்கைஎழுச்சியின் காலடியில் மனிதச் சிறுமையின் வெளிப்பாடாகக் தெரிகிறது. அரசு நடவடிக்கை எடுத்து இதை அகற்றி முன்பிருந்த அதே சிறு ஆலயம் மட்டும் அங்கு நீடிக்கும்படி செய்ய வேண்டும்

 

யானாவில் உள்ள குகை என்பது சுண்ணப்பாறைகளில் நீர் ஓடி உருவாகும் குகைவழி அல்ல. பிலம் குகைகள் போல மண்ணுக்கடியிலுள்ள விரிசலும் அல்ல. அது உண்மையில் ஒரு மிகப்பெரிய பாறையிடைவெளிதான். பெரிய கூடம் போலவும் கைவிடப்பட்ட அரண்மனை ஒன்றின் வௌவால்நாறும் உட்பக்கம் போலவும் தோன்றவைத்தது. பெரிய பாறைகள் மேலே பாறையிடுக்கில் விழுந்து சிக்கியிருந்தன. இடக்கல் குகையை நினைவுறுத்தியது இது.

யானா மலைகளை நோக்கியபடி அங்கு சுற்றிவந்தோம். தொடர்ச்சியாக மலைகளைப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தோற்றத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறது. வெண்முரசு எழுதும்போதுதான் எத்தனை வகையான மலைப்பாறைகளை அதில் எழுதி இருக்கிறேன் என்று எனக்கே தோன்றுகிறது. இவை அனைத்தையும் எங்கெங்கோ சென்று கண்டிருக்கிறேன். இந்தியாவில் எங்கும் நான் சென்று கண்ட சிற்பங்களை விட அதிகமாக இவ்வடிவின்மேல் எனக்கு பொருளளித்தது. செதுக்கப்பட்ட எந்த வடிவத்தையும் விட இந்த மாபெரும் வடிவமின்மையில் தான் முடிவிலி குடிகொள்ள முடியும் என்று தோன்றுகிறது.

 

யானாவிலிருந்து வெளியே வந்து மீண்டும் டீக்கடையை அணுகும்போது இருள் சூழ்ந்துவிட்டது. கடற்கரைக்கு செல்லும் திட்டம் முன்னரே கைவிடப்பட்டிருந்தது. அப்போதே கிளம்பினால் கூட நள்ளிரவில் தான் ஷிமோகாவை சென்றடைய முடியும் என்று தெரிந்தது. ”இன்றும் அஞ்சு மணி நேரத்தூக்கம்தான்” என்றார் கிருஷ்ணன். ”நாளைக்காலை எவ்வளவுமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பினால்தான் ஈரோட்டை சென்றடைய முடியும்” என்றார்.

மீண்டும் ஒரு இரவு பயணம் எங்கள் பயணங்களில் இரவுப்பயணங்களை பொதுவாக தவிர்த்துவிடுவது வழக்கம். களைப்பூட்டும் நீண்ட பயணங்களும் செய்வதில்லை. இந்தியச் சாலைச்சூழல் மிக அபாயகரமானது. ஆப்ரிக்க காடுகளைவிடவும் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் மிகுந்தது. நான் திட்டமிட்ட  சமணப்பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏழு மணிக்குள் பயணத்தை முடித்துவிடுவோம். ஒரு நாளில் அருகருகே இருக்கும் இரண்டு இடங்களை மட்டுமே பார்ப்ப்போம். ஆனால் எப்போதும் அது சாத்தியமல்ல.

 

இன்று ஒரு நாளில் குடஜாத்ரியில் கிளம்பி கொல்லூர் வழியாக யானா வரைக்கும் வந்து திரும்பவும் ஷிமோகாவுக்கு சென்று தங்குவது என்பது மிகக் கடினமான ஒரு பயணம். நான்கு நாள் பயணத்திற்கு இது ஒத்துவரும். முப்பது நாட்கள் செய்யும் பெரும் இந்தியப்பயணங்களை இப்படி பயணம் செய்தால் ஓரிரு நாட்களுக்குள்ளே  ‘என்ன பயணம்? போதும் வீடு திரும்பி திண்ணையில் படுத்திருப்பதே மெய்ஞானத்தை அளிக்கும்’ என்று இடுப்பு சொல்ல ஆரம்பித்துவிடும்

முந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6