நண்பர் மதுசூதன் சம்பத் வெண்முரசின் தீவிர வாசகர். தொடர்ந்து வெண்முரசு குறித்து இணையக்குழுமங்களில் உரையாடுபவர். அவர் வெண்முரசுக்கு ஓர் ஆங்கிலப்பக்கத்தை விக்கிப்பீடியாவில் உருவாக்கி தொடர்ந்து தகவல்களைச் சேர்த்து வருகிறார். மூன்றாண்டுகளாக இப்பணி நிகழ்ந்துவருகிறது [பார்க்க வெண்முரசு விக்கி பக்கம்]
சமீபமாக அப்பக்கத்தை நீக்கவேண்டும் என ஒரு முயற்சி தமிழ்நாட்டிலிருந்து முன்னெடுக்கப்படுகிறது. தமிழக விக்கிப்பீடியாப் பொறுப்பாளர்கள் – பெரும்பாலும் இவர்கள் இங்குள்ள தனித்தமிழக ஆர்வலர்கள் – இதற்குப்பின்னால் உள்ளனர் என தெரிகிறது. வெண்முரசு என ஒருநாவலே இருப்பது ஐயத்திற்குரியது என்றும், அப்பக்கத்தில் உள்ளவை பொய்யான தகவல்கள் என்றும் அவர்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவின் ஆங்கில நிர்வாகிகளுக்கு எழுதினார்கள்
அப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு உலகளாவிய இலக்கியப்போக்குகள் குறித்து ஏதும் தெரியாது. தமிழ் ‘ஆர்வலர்களின்’ முறையீட்டை பரிசீலித்தவர் இலக்கியம் என ஏதும் அறியாத ஒர் ஆங்கிலேயர். மைய இலக்கியப்போக்காக எப்போதும் வணிக எழுத்தே இருக்கமுடியும் என்றும், சீரிய இலக்கியத்திற்குச் சிறிய வட்டமே இருக்கமுடியும் என்றும் அவரைச் சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அவர் இணையத்தில் எத்தனைமுறை தேடப்பட்டுள்ளது, எவ்வளவு பிரபலம் என்பதுபோன்ற அளவுகோல்களை மட்டுமே அறிந்தவர்.
அத்துடன் இந்தியா மீதான காழ்ப்பு கொண்டவராகவும் தமிழகம், தமிழ் குறித்து அறியாதவராகவும் இருக்கிறார். அவர் நோக்கில் இது இந்தியர்களின் மிகைவெளிப்பாடு, தமிழ் என்னும் எவருக்கும் தெரியாத இந்திய வட்டார மொழியில் நிகழும் ஏதோ ஒரு முக்கியமற்ற செயல்பாடு. அவரிடம் விவாதிக்க எவராலும் இயலவில்லை. அவர் தமிழ்விக்கிப்பீடியா நிர்வாகிகள் அளிக்கும் தகவல்களை அப்படியே நம்புகிறார். வெண்முரசு என ஒரு நாவல் எழுதப்படவே இல்லை என்பதே அவரது நிலைபாடாக இருந்தது
வெண்முரசு இணையத்தில் வருவதைப்பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் இணையத்தொடுப்புகள் அளிக்கப்பட்டன. அதன்பின் வெண்முரசு என ஒன்று ‘இருப்பதை’ ஒப்புக்கொள்வதாகவும் அது எவ்வகையிலும் முக்கியமான முயற்சி அல்ல என்றும் விக்கி பொறுப்பாளர் வாதிடத் தொடங்கினார். ஏனென்றால் வெண்முரசு என ஆங்கிலத்தில் கூகிளில் தேடினால் பத்தாயிரம் பதிவுகளே சிக்குகின்றன. தமிழில் தேடினால் லட்சம் பதிவுகள் வரை காட்டுகின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. [பார்க்க விக்கி விவாதங்கள் ]
வெண்முரசு முக்கியமான முயற்சி என்றால் அதைக்குறித்து தமிழகத்தில் வெளிவரும் ஆங்கில இதழ்கள், செய்தித்தாள்கள் ஏன் செய்தி ஏதும் வெளியிடவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாளிதழ்களும், பிற வெளியீடுகளும் ஏன் விரிவாக செய்திகளும் கட்டுரைகளும் வெளியிடவில்லை, ஏன் விமர்சகர்கள் அதைப்பற்றி எழுதவில்லை என்று கேட்டார். நண்பர்களால் அதற்குப் பதில் சொல்லமுடியவில்லை.
ஏனென்றால் வெண்முரசு குறித்து தமிழகத்திலிருந்து வெளிவரும் எந்த ஆங்கில நாளிதழும், எந்த இதழும் எளிய ஒற்றைவரிச் செய்தியைக்கூட இதுவரை வெளியிடவில்லை என்பதே உண்மை. இம்முயற்சிக்கு ஆர்வமுள்ள வாசகர்கள் வரட்டுமே என்னும் நோக்கில் தொடர்ந்து செய்திகள் அவற்றுக்கு அனுப்பப் பட்டன. ஆனால் ஆங்கில நாளிதழ்களில் உள்ளவர்கள் அச்செய்திகளை பொருட்படுத்தவில்லை.
ஆங்கிலநாளிதழ்களில் பொதுவாக என்னைப்பற்றி, என்நூல்களைப் பற்றி ஒருவரிகூட வருவதில்லை. என்மேல் காழ்ப்பு கொண்டவர்கள் பலர் அவற்றிலுண்டு. இளையராஜா, கமல்ஹாசன் பங்கெடுத்த வெண்முரசு வெளியீட்டுவிழா நிகழ்ச்சியின் செய்திகூட வெளியிடப்படவில்லை.அந்நிகழ்ச்சி குறித்த செய்திகள் வெளியிடப்பட இருந்தபோது அவை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டன
வாரந்தோறும் பல பக்கங்களை இலக்கியத்திற்காக ஒதுக்குபவை இந்த ஆங்கில இதழ்கள். தமிழில் வெளிவரும் சர்வசாதாரணமான நூல்களுக்குக்கூட விரிவான மதிப்புரைகள் வெளியிடுபவை. குறிப்பாக சல்மா, தேவிபாரதி,பெருமாள் முருகன், ஆ.இரா.வெங்கடாசலபதி போன்றவர்களின் நூல்கள் வெளிவருவதற்கு முன்பிருந்தே செய்திக்கட்டுரைகள் வெளிவரும். வெளிவந்தபின் நாலைந்து மதிப்புரைகள் வெளியிடப்படும். வெண்முரசின் அனைத்து நூல்களும் இவற்றுக்கு மதிப்புரைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மதிப்புரைகள் வெளியானதில்லை.
தமிழ்நாளிதழ்களில் தி ஹிந்து, தினமலர், தினத்தந்தி ஆகிய எந்த நாளிதழும் வெண்முரசு குறித்து எதுவும் வெளியிட்டதில்லை. வெண்முரசு வெளியீட்டுவிழா நிகழ்ந்தபோது நண்பர்கள் முயற்சிசெய்தமையால் தி இந்து தமிழ்நாளிதழின் செய்திப்பக்கத்தில் சங்கர ராமசுப்ரமணியம் என்னை ஒரு சிறிய பேட்டி எடுத்து வெளியிட்டார். அதில் சிலவரிகள் வெண்முரசு குறித்து இருந்தன. அப்பேட்டியும் அதன் பொதுஆசிரியரின் கடுமையான எதிர்ப்பைக் கடந்து வெளிவந்தது. தினகரன் வெண்முரசு வெளியீட்டுவிழாவைச் செய்தியாக்கியது. வேறெந்த செய்தியும் வெளிவந்ததில்லை.
ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பிரபல இதழ்கள் மட்டும் அல்ல தடம், தீராநதி, அமிர்தா போன்ற இலக்கிய இதழ்கள்கூட வெண்முரசு குறித்து எதையுமே வெளியிட்டதில்லை. இதழ்களின் பொங்கல் தீபாவளி மலர்களில் எதுவும் பதிவானதில்லை. காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து போன்று என்மேல் கடும் வன்மம் கொண்ட சிற்றிதழ்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை.
இணையத்திலும் மறைமுகமான நக்கல்கள், படிக்காமலேயே எழுதப்படும் ஒற்றைவரிநிராகரிப்புகள், ஆழமற்ற வெறும்கசப்புகள் மட்டுமே அதிகமும் எழுதப்பட்டன. வெண்முரசு வெளிவரத்தொடங்கியபோது அதை அறிமுகம்செய்து ஜடாயு ஆங்கிலத்தில் எழுதிய ஒருகட்டுரை மட்டுமே உள்ளது, அதை ‘ஐயத்திற்குரியது’ எனா விக்கிப்பீடியா தொகுப்பாளர் கருதுகிறார். தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளை விக்கிப்பீடியா கருத்தில்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டது
ஆகவே விக்கிப்பீடியாவின் தொகுப்பாளரின் தரப்பின்படி வெண்முரசு என ஒன்று இருப்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார், ஆனால் அது எவ்வகையிலும் முக்கியமான முயற்சி அல்ல. தமிழ்ச்சூழலால் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாதது. ஆகவே அது விரைவில் நீக்கப்படும்.
வெண்முரசு பக்கத்தைவிட விரிவான ஆங்கிலப் பக்கங்கள் கபாலி, [பார்க்க கபாலி விக்கி பக்கம்] பைரவா [பார்க்க பைரவா விக்கி பக்கம்] போன்ற தமிழ் சினிமாக்களுக்கு இருப்பதைக் காணலாம். அத்தனை தமிழ் சினிமாக்களுக்கும் அப்படி விக்கி பக்கங்கள் உள்ளன. பொருட்படுத்தவே படாத படங்களுக்குக்கூட.அவற்றிலுள்ள பெரும்பாலான தகவல்கள் [வசூல் இன்னபிற] பிழையானவை என சினிமாவுக்குள் இருப்பவன் என்றமுறையில் என்னால் சொல்லமுடியும். ஆங்கிலத்தில் எழுதிக்குவிக்கப்படும் சினிமாச்செய்திகள் மற்றும் சினிமா செய்தித்தொடர்பாளர்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை அவை.
தமிழக ஆங்கிலநாளிதழ்கள் நாள்தோறும் பல பக்கங்களுக்கு சினிமாச்செய்திகளை வெளியிடுகின்றன. எந்த ஒரு சாதாரண தமிழ் சினிமாவுக்கும் குறைந்தது பதினைந்து செய்திகளை ஆங்கிலநாளிதழ்கள் வெளியிடுகின்றன. என்னிடம் சினிமாச்செய்திகளைக் கேட்க நாளுக்கு இரு செய்தியாளர்கள் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் இன்றையசூழல்
விக்கியில் பொன்னியின்செல்வனுக்கே வெண்முரசை விடப்பெரிய பக்கம் உள்ளது. [பார்க்க பொன்னியின் செல்வன்] ஏன் 2005ல் வெளிவந்த பொன்னியின் செல்வன் என்ற சினிமாவுக்கே விக்கிப்பீடியா பக்கம் உள்ளது [பார்க்க பொன்னியின் செல்வன் விக்கி பக்கம் ]. இங்குள்ள அத்தனை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் வெண்முரசைவிட மிகப்பெரிய பக்கங்கள் அந்த நிர்வாகிகளால் நடத்தப்படுகின்றன. நீயா நானா [பார்க்க நீயா நானா விக்கி பக்கம்] , மானாட மயிலாட [பார்க்க மானாட மயிலாட விக்கி பக்கம்] போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வெண்முரசைவிட பெரிய பக்கங்கள் உள்ளன. இன்றுவரை எந்த முறையீடும் தமிழிலிருந்து சென்றதில்லை.
விக்கிபக்கம் நீக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெண்முரசு அதற்கான வாசகர்களுடன் முன்சென்றுகொண்டுதான் இருக்கிறது. விக்கிப்பக்கம் உருவாக்கப்பட்டது நண்பர்களின் ஆர்வத்தால். ஆர்வமுள்ளவர்கள் வாசிப்புக்கு வரட்டுமே என்பதுதான் நோக்கம்.
வெண்முரசு எழுதப்பட ஆரம்பித்தநாள் முதலே பல்வேறுவகையான காழ்ப்புகளை மட்டுமே சந்தித்துக்கொண்டுள்ளது.பேரிதழ்ச்சூழலில் அறியாமையும் சிற்றிதழ்ச்சூழலில் புறக்கணிப்பும் நீடிக்கிறது. அதை முன்னரே எதிர்பார்த்திருந்தமையால் எனக்கு ஏமாற்றமும் இல்லை. ஆனால் அது வெற்றிகரமாக நிறைவை நோக்கிச் செல்லும் இத்தருணத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையான தாக்குதல்கள் அதன்மேல் நிகழ்கின்றன. இது அதில் ஒன்று.
வெண்முரசு எழுதப்படத் தொடங்கியபின்பு ஒரே ஒரு விழா மட்டுமே அதற்காக நடத்தப்பட்டது. அதற்கே மிகப்பெரிய அளவில் ’எதிர்ப்பு’களும் நக்கல்களும் எழுந்து வந்தன. புத்தகத்தை விற்கும் முயற்சி என குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு நான் விரிவான விளக்கங்கள் அளிக்கவேண்டியிருந்தது. அனைத்தையும் விட அவ்விழா முடிந்ததுமே பதிப்பாளரை அணுகி அவரிடம் கோள்சொல்லி அவரை பதிப்பு முயற்சியில் இருந்தே விலக்கினார்கள் நான்கு எழுத்தாளர்கள்! விழா முடிந்ததுமே நெருக்கடி ஏற்பட்டு பதிப்பாளர் மாறநேர்ந்தது
இப்போது இப்பக்கத்தை நீக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி தமிழகத்தில் இருந்து எடுக்கப்படுவதற்கான காரணம் ஒன்றே, வேறு எவ்வகையில் புறக்கணித்தாலும் இதன் பக்க அளவு காரணமாகவே இது புறக்கணிக்கப்படமுடியாதது. இதன் பெருமுயற்சியாவது அங்கீகரிக்கப்படவேண்டும். ஆகவே அதை ‘இல்லாமலாக்க’ முயல்கிறார்கள். வெண்முரசை நீக்கும் முயற்சியில் பெரும்பாலும் வெற்றிபெற்றுவிட்டதாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். வாழ்க.
என்னைப்பொறுத்தவரை இது பிரச்சினையே அல்ல. வெண்முரசு வெளிவந்தநாட்களில் இங்குள்ள நாளிதழ்கள், வார இதழ்கள், இலக்கிய இதழ்கள், விமர்சகர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதற்கான ஆவணமாகவே, நாளைய வாசகர்களுக்காக, இதைப் பதிவுசெய்கிறேன். வெண்முரசுப் பக்கம் நீக்கப்படுவதையும் தமிழ்ச்சூழலின் அரைகுறைகள் ஒரு வெற்றி எனக் கொண்டாடுவர் என நான் அறிவேன். அதுநிகழட்டும். வெண்முரசின் தளம் வேறு. இதன் கலை, பண்பாட்டு முக்கியத்துவத்தால் மட்டுமே இது நீடிக்குமென்றால் அதுவே முறையானது.