3. நன்னீராட்டு
தருமன் தன் அறைக்குள் சென்றமர்ந்து சுவடிக்கட்டை கையில் எடுத்தபோது குரங்குகளின் ஓசை படைவருகைபோல கேட்டது. ஒருகணம் திகைத்தாலும் உடனே முகம் மலர்ந்து அவர் வெளியே ஓடி குடில்விளிம்பில் நின்று எட்டிப் பார்த்தார். மரக்கிளைகளில் சுழற்காற்று வீசுவதுபோலிருந்தது. நூற்றுக்கணக்கான குட்டிக்குரங்குகள் ஹூஹூஹூஹூ என கூச்சலிட்டபடி கிளைகளில் தொங்கி ஊசலாடி, பாய்ந்து கிளை பற்றி, தாவி காற்றில் பறந்து, கிளைகளில் தொற்றி பெருங்காற்று கொண்டுவரும் சருகுகள்போல வந்தன. குடிலின் கூரைமேல் அவை காய் உதிர்வதுபோல விழுந்தன.
இறைவாணத்திலும் கழுக்கோல்முனைகளிலும் தொங்கி ஆடி உள்ளே வந்து விழுந்து அவ்விரைவில் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து தன்னைத்தான் சுற்றிக்கொண்டு வால் சொடுக்கி அங்குமிங்கும் தாவின. ஒரு குட்டி தருமனின் ஆடையைப்பற்றி இழுத்தது. இன்னொன்று சுவடிக்கட்டை ஆவலாக எடுக்கப்போக தருமன் “ஆ… போ போ போ” என கூவியபடி அதை விரட்டி சுவடிகளை எடுத்து பெட்டிக்குள் வைத்தார். சற்றுநேரத்தில் குடில்முழுக்க குரங்குகளின் உடல்கள் நிறைந்து சாம்பல்நிறம் எங்கும் நெளிந்தது. முந்தையநாளின் மழைக்குப்பின் அவையனைத்தும் நீராடி புதிய உடலுடன் இருந்தன.
அவை ஒன்றுடன் ஒன்று தழுவி ஒன்றன் மேல் ஒன்று ஏறி விழுந்து பல்காட்டி சீறின. வாலைப்பற்றி இழுத்து பூசலிட்டன. கூரைமூங்கிலில் உறிகள் போலத் தொங்கி ஆடின. தாளாத ஆர்வத்துடன் ஒன்று ஒரு தாலத்தை எடுக்க ஐந்து குரங்குகள் பாய்ந்து அதைப்பற்றி இழுத்து பிடுங்க முயன்றன. தாலம் பேரோசையுடன் தரையில் விழ தூசுப்பரப்பு காற்றில் விலகுவதுபோல குரங்குத்தொகை நாலாபக்கமும் சிதறி அகன்றது. வெளியே இருந்து ஒரு பெருங்குரங்கு கையூன்றி அரசநடையுடன் உள்ளே வந்தபோது அத்தனை குரங்குகளும் உடல் வணங்கி விலகின.
பெருங்குரங்கு மெல்ல நடந்துசென்று தாலத்தை தொட்டுப்பார்த்து ‘அஞ்சும்படி ஒன்றுமில்லை’ என்று முகம் காட்டிவிட்டு திரும்ப ஒரு குட்டி தாலத்தின் விளிம்பை மிதித்தது. எழுந்த தாலத்தைக் கண்டு அஞ்சி விலக தாலம் மீண்டும் ஓசையெழுப்பியபடி விழுந்து அதிர்ந்தது. அறியாது மெய்விதிர்த்து விலகி ஓடிய பெருங்குரங்கு சினம்கொண்டு குட்டியை கடிக்க ஓடியது. அது பாய்ந்து கூரைக்கழுக்கோலைப் பற்றி கூரையின் நடுமடிப்பு வரை சென்றது. பெருங்குரங்கால் அதை தொடரமுடியவில்லை. அங்குமிங்கும் நோக்கியபடி உறுமிவிட்டு தருமனை நோக்கி ‘ஒன்றுமில்லை, சின்னப்பிள்ளைகள்’ என்று முகம் வலித்தது. இன்னொரு குட்டி வேண்டுமென்றே தாலத்தில் குதிக்க பெருங்குரங்கு துள்ளி விழுந்து சீறியபடி அதை பிடிக்க ஓடியது. பிறிதொன்று தாலத்தின் மேல் குதித்தது. பெருங்குரங்கு திகைத்து பக்கத்து அறைநோக்கி நடக்க குட்டிகள் ஹூஹூஹூ என கூவியபடி அதை தலைக்குமேல் தொடர்ந்து சென்றன.
அடுமனையில் திரௌபதியின் சிரிப்பும் கூச்சலும் கேட்டது. நகுலன் தோள்களிலும் தலையிலும் மூன்று குரங்குக்குட்டிகள் தொற்றி அமர்ந்திருக்க வெளியே வந்து நடைபாலத்தில் நின்றபடி “மூத்தவர் வருகிறார்” என்றான். “எங்கே?” என்றார் தருமன். “தொலைவில்… அவர் வரும்போதுதான் குரங்குகளின் இந்த வகையான ஒலி கேட்கும்.” தருமன் செவிகூர்ந்து “அதே ஒலிதானே? காட்டையே கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் வாலர்கள்” என்றார். “இல்லை, இது வேறுவகை ஒலி… இது அலையலையாக எழும்” என்றான் மேலும் சில குரங்குகள் தலைமேல் அமர்ந்திருக்க வந்த சகதேவன்.
பீமனின் மஞ்சள்நிற உடல் இலைப்பசுமைக்குள் இருந்து எழுந்தது. அவன் தாவி வந்து கூரைமேல் குடிலே அதிரும்படி இறங்கி அதன் ஈச்சையோலைப்பரப்பைக் கிழித்து ஊடுருவி உள்ளே இறங்கி தருமனைக் கண்டு “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். தருமன் முதலில் அறியாமல் சற்று சிரித்து உடனே சினந்திரட்டி “வீட்டுக்குள் நுழைய வாயில் என ஒன்று உள்ளது, மூடா” என்றார். குழப்பமாக வாயிலை நோக்கிய பீமன் “ஆம்” என்றபின் வாயில்வழியாக வெளியே சென்று உடனே அவ்வழியே உள்ளே நுழைந்து “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். “ஒழிந்து போ… உன்னைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. அஸ்தினபுரியின் பாண்டுவின் மைந்தனா நீ? இல்லை குரங்கா?” என்றார் தருமன்.
“நானா?” என்ற பீமன் “மூத்தவரே, நான் அஸ்தினபுரியின் இளவரசனாகிய குரங்கு… அல்லது…” என்றபின் திரும்பி சகதேவனிடம் “இளையோனே, பசிக்கிறது!” என்றான். “அடுமனையில் உனக்காகத்தான் சமையல் நிகழ்கிறது. போ! அண்டாவோடு உண்டுவிட்டுச் செல்” என்றார் தருமன். பீமன் “நான் இங்கே உணவிருக்காதென எண்ணினேன். நல்ல பன்றி ஒன்றை பிடித்துக்கொண்டுவர நாசிகனையும் சூசிகனையும் செப்பனையும் அனுப்பினேன். நாகபுச்சனும் சூசிமுகனும் உடன் சென்றனர்” என்றான். “இங்கே எல்லாமே சித்தமாகிக்கொண்டிருக்கிறது. தங்களுக்குப் பிடித்த ஊன்சோறு” என்று நகுலன் சொன்னான்.
கையில் அகப்பையுடன் பின்னால் வந்து நின்ற திரௌபதி “சென்று எத்தனை நாளாகின்றன என்று தெரியுமா?” என்றாள். “நாட்கணக்கெல்லாம் காட்டில் இல்லை, தேவி” என்றான் பீமன். “நீராடும் வழக்கம் உண்டா, அல்லது இனிமேல்தானா?” என்று அவள் கேட்டாள். “நீராடவேண்டும்” என்றான் பீமன். அவள் விழிகள் கனிந்த நகையுடனிருந்தன. இதழ்கள் சிரிப்பில் நீண்டிருந்தன. பீமன் அவளருகே சென்றதும் அவள் அவன் தலையில் கைவைத்து “முடியெல்லாம் நார்போலிருக்கிறது… முதலில் சற்று எண்ணை பூசவேண்டும்… வருக!” என்றாள். அவன் கையைப் பற்றியபடி “வரவர கையா காலா என்றே தெரியவில்லை” என அழைத்துச்சென்றாள்.
“அன்னை போலிருக்கிறாள்” என்றார் தருமன். “அன்னையர்தான் இப்படி சலித்துக்கொள்வார்கள். வேறு எவரும் எக்குறையும் சொல்வதற்கு முன்னரே தாங்கள் அதை சொல்லிவிடுவார்கள்.” சகதேவன் “நீங்களும் தந்தைபோலத்தான் இருக்கிறீர்கள், மூத்தவரே” என்றான். தருமன் சினத்துடன் “பின் இல்லாமல்? இவனை இப்படியே விட்டால் இங்கிருந்து அஸ்தினபுரியின் இளவரசனை நாம் அழைத்துச்செல்லமுடியாது. கழுத்தில் சரடுகட்டி குரங்கு ஒன்றை இழுத்துச் செல்வோம். கண்டிப்பதற்கு தயங்கியமையால்தான் இப்படி ஆகிவிட்டிருக்கிறான். மூடன்…” என்றார். “முற்றிலும் உண்மை” என்றான் நகுலன். “இவனை இப்படியே விடமுடியாது” என்றபடி தருமன் தன் பீடத்தை நோக்கி செல்ல அங்கே உடல் ஒன்றாக அமர்ந்திருந்த மூன்று குரங்குகள் “உர்ர்” என்றன.
“இதில் மூன்று தலைவேறு” என்று சலித்துக்கொண்ட தருமன் “நான் இங்கே எங்கே அமர்வது?” என்றார். “அமர்வது நல்ல எண்ணம் அல்ல, மூத்தவரே. நாம் அமர்ந்தால் நம்மை இவை பீடமாக கொள்கின்றன” என்றான் நகுலன். மீண்டும் சிரிப்பு எழ முகத்தை திருப்பிக்கொண்டு “இலங்கையரசன் எப்படி வீழ்ந்தான் என இப்போது புரிகிறது. இவற்றை பார்ப்பதற்கு பத்துமுகமும் இருபது கண்ணும் போதாது” என்றபடி தருமன் “என்ன உண்கிறானா இல்லையா?” என்றார். “நீராடுகிறார் என நினைக்கிறேன்” என்றான் நகுலன். “இளையவன் எங்கே?” என்றார் தருமன். “அவர் நீராடுவதைப் பார்ப்பது இளையவனுக்கு மிக விருப்பமானது” என்ற நகுலன் “எனக்கும்…” என்றபடி அங்கிருந்து அகன்றான்.
நகுலன் செல்வதை ஒருகணம் நோக்கியபின் தருமன் “நானும் வருகிறேன். வேறு எப்போது அந்தக் குரங்கிடம் பேசுவது? நீராடி உணவுண்டால் உடனே கிளம்பவும் வாய்ப்புண்டு” என்றபடி உடன் நடந்தார். கீழே தோட்டத்தில் சிறிய மரப்பீடத்தில் இடையில் தோல் கோவணத்துடன் அமர்ந்திருந்த பீமன் உடலில் சகதேவன் இளஞ்சூடான எண்ணையை கொப்பரையில் இருந்து அள்ளித் தேய்த்துக்கொண்டிருந்தான். அருகே திரௌபதி ஈஞ்சைப்பட்டையை உரித்து சுருட்டிக்கொண்டிருந்தாள். நிறைய குரங்குகள் திகைத்தவைபோலவும் வியந்தவைபோலவும் அவர்களைச் சூழ்ந்து நின்றிருந்தன. ஒரு பெருங்குரங்கு எண்ணையைத் தொட்டு நோக்கியபின் திரும்பி ‘ஒன்றுமில்லை, கெடுமணம் மட்டுமே’ என்றது.
“அவன் பெயர் சக்ரநாபன்…” என்றான் நகுலன். ஏணியில் அவன் இறங்க தருமன் மேலேயே நின்றபடி “நீ சென்று குளிப்பாட்டு உன் தமையனை. நான் இங்கேயே நின்றுகொள்கிறேன்” என்றார். நகுலன் புன்னகையுடன் கீழிறங்கிச் சென்றான். இரு குரங்குகள் ஓடிவந்து அவனிடம் கைசுட்டி பீமனைக் காட்டி ஏதோ சொல்லின. குட்டி ஒன்று ‘என்னைத் தூக்கு’ என்று கையைக் காட்டியது. அவன் அதை கைபிடித்துச் சுழற்றி எடுத்துக்கொண்டு அணுகினான். சகதேவன் எண்ணை பூசும்படி சொல்ல நகுலன் கொப்பரையை வாங்கிக்கொண்டான்.
எண்ணைப்பூச்சில் பீமனின் உடல் வெண்கலம்போல ஒளிவிட்டது. ஒவ்வொரு தசையும் இறுகி முழுமையடைந்திருந்தன. தோள்தசை அவ்வளவு பொங்கி எழமுடியுமா, முதுகுப்பள்ளம் அப்படி ஆழ இறங்கமுடியுமா? நரம்போடிய பெரும்புயங்கள். இரு பலகை விரிந்த நெஞ்சு. வயிற்றில் நரம்புகள் பின்னியிருப்பதை வேறெங்காவது பார்த்திருக்கிறோமா? அவர் கண்ட செஞ்சிலை உடல்களெல்லாம் சிறியவை. பேருடல்கள் எங்கேனும் ஏதேனும் பெருத்தவை. அனைத்தும் அமைந்த உடல். ஏன் அன்னை இவனை ஒருகணமும் விழிநிறுத்தி நோக்க மறுக்கிறாள் என இப்போது புரிகிறது.
திடுக்கிட்டு தருமன் மீண்டார். கண்ணேறு தொட்டிருக்குமோ? தந்தைகண்போல் தீயதில்லை என்பார்கள். என்ன செய்வது அதற்கு? ஒரு துளிக் குருதி அளித்தால் போதுமென்பார்கள் என எண்ணம் வந்தது. இடையைத் தொட்டபோது கத்தியில்லை என தெரிந்தது. மூங்கில் முனை ஒன்று நீட்டி நின்றது. அதில் தன் புறங்கையை வைத்து அழுத்தி இழுத்தார். கிழிந்து குருதி வழிந்தது. கையை நீட்டி “ஸ்வாஹா… விழியில் வாழ்பவளே, மூத்தவளே, இருண்டவளே, ஸ்வாஹா” என மூன்று சொட்டுகள் உதிர்த்து விழிமூடி வேண்டிக்கொண்டார்.
ஆனால் அவனை நோக்காமலிருக்கவும் முடியவில்லை. இனி நோக்கலாம், குருதி அளிக்கப்பட்டுவிட்டதே என எண்ணியபடி மீண்டும் பார்த்தார். நகுலன் குதிரையை தோலுருமிவிட்டுத் தேர்ந்த கைகளால் பீமனின் உடலை அழுத்தி தேய்த்தான். எப்போதும் எதனையும் மேலிருந்து கீழ்நோக்கியே இழுபடும்படி அவன் கையசைவுகள் அமைந்திருந்தன. சகதேவன் கீழே அமர்ந்து கால்களை கைபொத்தி இழுத்து வழித்திறக்கினான். திரௌபதி அவன் குழலில் எண்ணை பூசி விரல்களை உள்ளே செலுத்தி நீவிச் சுழற்றி கொண்டைபோல சுற்றிக்கட்டினாள்.
குரங்குகள் குறையா ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன. ஒரு குரங்கு தானும் பீமனை தடவ வந்தபோது நகுலன் அதை விலக்கினான். அது திரும்ப மற்ற குரங்குகள் ஹோஹோஹோ என ஓசையிட்டன. எண்ணை பூசிமுடித்ததும் நகுலன் அருகே இருந்த பெரிய மரக்குடைவுத் தொட்டியில் நிறைந்திருந்த நீரில் அப்பாலிருந்த அடுப்பில் எரியும் கனலில் சுட்டுப்பழுத்துக் கிடந்த பெரிய உருளைக்கற்களை எடுத்து போடத்தொடங்கினான். பின்னர் அவற்றை எடுத்து மீண்டும் அடுப்பிலிட்டான். மெல்ல நீர் வெம்மைகொண்டு ஆவியெழத் தொடங்கியது. கைவிட்டுப் பார்த்து அதன் வெம்மையை மதிப்பிட்ட திரௌபதி தன் ஆடையை இடையில் செருகிக்கொண்டு பெரிய சுரைக்குடுவையில் நீரை அள்ளி பீமனின் தலையில் விட்டாள்.
குரங்குகள் கூச்சலிட்டுக்கொண்டு பாய்ந்து பின்வாங்கின. பெருங்குரங்குகள் கைகளைத் தூக்கியபடி போருக்கெழுந்தன. பீமன் மெல்லிய உறுமலால் அவற்றிடம் பேச அவை திரும்பி பிற குரங்குகளிடம் ‘ஒன்றுமில்லை’ என விளக்கின. ஒவ்வொரு குரங்காக அணுகி அச்சத்துடன் நோக்கிநின்றது. ஒவ்வொரு குடுவையசைவுக்கும் அவற்றின் உடல்களும் உடனசைந்தன. ஒரு குரங்கு பீமனைச் சுட்டிய கையை அப்படியே வைத்திருந்தது. ஒன்று சுற்றிவளைத்துச் சென்று நீர்த்தொட்டியைத் தொட்டு நோக்கி ஹீஹீஹீ என ஓசையிட்டது.
பீமனின் உடலில் இருந்து ஆவியெழுந்தது. நகுலன் மேலும் நீர் கொண்டுவிட்டு சுடுகற்களை போட்டுக்கொண்டிருந்தான். சகதேவனும் திரௌபதியும் அள்ளி அள்ளி நீரூற்றினர். திரௌபதி அவன் குழலை விரல் செலுத்திக் கழுவினாள். சகதேவன் உருளைக்கல்லால் அவன் தோளையும் மார்பையும் தேய்த்தான். திரௌபதி ஈஞ்சைப்பட்டையால் அவன் காதுமடல்களையும் கன்னங்களையும் கழுத்தையும் தேய்த்தாள். யானை நீராட்டு என தருமன் எண்ணிக்கொண்டு உடனே அது கண்ணேறாகுமா என அஞ்சி தலையை அசைத்தார். நீராட்டுவதில் அவர்கள் மேலும் மேலுமென ஆழ்ந்து சென்றனர். அவன் உடலின் ஒவ்வொரு பகுதியையும் தேய்த்து உரசிக் கழுவினர்.
பின்னர் திரௌபதி மேலேறிச்சென்று மரவுரிகளை எடுத்துவந்தாள். அதைக் கொண்டு அவன் தலையை அவள் துவட்ட நகுலனும் சகதேவனும் அவன் உடலை துடைத்தனர். புதிய தோலாடையை இடைசுற்றியபடி பீமன் எழுந்தபோது குரங்குகள் மெல்ல உளம் எளிதாகின. ஒரு குரங்கு அஹஹஹாஹ் என ஓசையிட மற்ற குரங்குகளும் சேர்ந்துகொண்டன. அவர்கள் மேலேறிவரும்போது முந்தியபடி குரங்குகள் தொற்றி மேலே வந்தன. பல குரங்குகள் ஒரேநேரத்தில் அடுமனைக்குள் செல்ல பேரோசை கேட்டது. உணவுக்கலம் கவிழ்ந்துவிட்டது என்று தருமன் எண்ணினார்.
அடுமனைக்குள் எட்டிப் பார்த்தபோது அது உண்மை எனத் தெரிந்தது. பெருங்கலத்தின் விளிம்பிலேறிய குரங்குகள் அதைக் கவிழ்த்து ஊன்சோறு ஆவியுடன் அடுமனைத்தரையில் குவியச் செய்திருந்தன. கவிழ்த்த குரங்குகள் அஞ்சி மேலேறி கூரையில் தொற்றி குற்றவுணர்வுடன் தலைதிருப்பி சுவரை நோக்கிக்கொண்டிருந்தன. மேலேறிவந்த திரௌபதி “என்ன செய்திருக்கிறார்கள்? இதோ, அத்தனை பேரையும்…” என சொல்லவர பீமன் “ஒன்றும் நிகழவில்லை… நான் அங்கே காட்டில் வெறும்பாறையிலிட்டு உணவுண்பவன். மண்கலக்கா உணவு எனக்கு சுவைப்பதில்லை” என்றபடி அங்கேயே அமர்ந்துகொண்டான்.
அவன் ஊன்சோற்றை அள்ளி உண்ணத்தொடங்க நகுலன் திரும்பி தருமனை பார்த்தான். “சேர்ந்துண்ணலாம் என எண்ணினேன், மூத்தவரே” என்றான். தருமன் “அதற்கென்ன? அவன் உண்பதை நாம் உண்ணலாகாதா?” என்றபடி அருகே வந்து அமர்ந்தார். நகுலன் முகம் மலர்ந்து “ஆம், இன்றைய உணவு இப்படியாகுக!” என்றபடி உணவுக்குவையின் அப்பால் அமர்ந்தான். சகதேவனும் அமர்ந்தான். தருமன் ஒரு கவளம் உருட்டி திரௌபதிக்கு நீட்ட அவள் சிரித்தபடி அதை பெற்றுக்கொண்டாள். “இனிது” என்றார் தருமன். “இத்தனை சுவையாக அரசி சமைப்பாள் என நான் எண்ணவே இல்லை.”
நகுலன் “மூத்தவருக்காக சமைக்கையில் மட்டுமே இச்சுவை அமைகிறது” என்றான். “இவன் உண்பதைப் பார்த்தால் சுவைதேர்பவன் போலவே தெரியவில்லையே” என்றார் தருமன் ஊனுணவை உண்டபடி. “மூத்தவரே, பேருணவுண்ணும் யானையே நுண்சுவை அறிவதிலும் கூர்ந்தது. நோக்குக!” என்றபின் முற்றிலும் உணவிலாழ்ந்திருந்த பீமனிடம் “மூத்தவரே, இப்பன்றி எத்தனை அகவை கொண்டது?” என்றான். பீமன் “இதில் இரு பன்றிகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று வயது இன்னொன்றுக்கு ஐந்து வயது” என்றான். பார்த்தீர்களா என்பதுபோல திரும்பிநோக்கி நகுலன் புன்னகைத்தான்.
“இளையவனே, எதைக்கொண்டு அறிகிறாய்?” என்றார் தருமன். “ஒரு பன்றி தசைமூப்பு கொண்டு கொழுப்புசேரத் தொடங்கிவிட்டிருக்கிறது. இன்னொன்று இன்னமும் கன்று. இளந்தசை” என்றான் பீமன். “இதிலிட்ட காய்கறிகள் ஒவ்வொன்றும் என்ன வகை எவ்வளவு மூப்பு என்றுகூட சொல்லிவிடுவான்போல” என்று தருமன் சிரித்தார். பீமன் “இதில் இடப்பட்ட வழுதுணைகள் கீழே கோமதியின் சேற்றுக்கரையில் விளைந்தவை. சற்று கறைமிகுந்துள்ளன” என்றான். தருமன் “இதற்குமேல் நான் எதையுமே கேட்க விரும்பவில்லை” என்று சிரித்தார்.
குரங்குகள் அவர்கள் உண்பதை சூழ்ந்து அமர்ந்து நோக்கின. “அவை அட்ட உணவை உண்பதில்லையா?” என்றார் தருமன். “அவற்றுக்கு உப்பு உவப்பதில்லை” என்றாள் திரௌபதி. “இவனுடன் உண்ணவேண்டுமென்றால் பருக்கைகளாக உண்ணவேண்டும் போலுள்ளது” என்றார் தருமன். “மூத்தவரே, தாங்கள் இங்கு அடிக்கடி வருவதில்லை என மூத்தவர் வருந்தினார்” என்றான் சகதேவன். “வந்து மீள்கிறாரே?” என்றாள் திரௌபதி. தருமன் “நான் இவன் உடல் தேய்ந்திருப்பான் என அஞ்சினேன். நன்று, காடுதான் இவனுக்குரிய இடம்” என்றார். நகுலன் “மொழியே மறந்தவர் போலிருக்கிறார்” என்றான்.
அவர்கள் உண்டு எழுந்தபின்னரும் பீமன் உண்டான். அவர்கள் கடித்துப்போட்ட எலும்புகளை எடுத்து வாயிலிட்டு நொறுக்கி விழுங்கினான். “சீ, என்ன செய்கிறாய்?” என்றார் தருமன். “அவர் எப்போதும் செய்வதுதானே?” என்றாள் திரௌபதி. தருமன் எழுந்து கைகழுவிவிட்டு கைகளை மார்பில் கட்டியபடி நின்று அவன் உண்பதை நோக்கினார். நகுலன் “தங்களுக்கு உணவு போதுமானதாக உள்ளதா, மூத்தவரே?” என்றான். “எஞ்சியதை வெளியே சென்று உண்பேன்… என் நண்பர்களிடம் நல்ல பெரும்பன்றி ஒன்றை கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன்” என்றான் பீமன்.
“இதற்கு மேலுமா?” என்ற தருமன் “நன்று, உண்க இளையோனே! இப்புவியில் ஐம்பெரும் பருக்களும் உன்னை வாழ்த்தி மண்ணுக்கு அனுப்பியிருக்கின்றன” என்றார். பீமன் உண்பதை அவர்கள் நோக்கிநின்றனர். கை துலாபோல எழுந்தமைந்தது. தாடை இறுக வாய் அசைந்தது. முகம் ஊழ்கநிலைகொண்டிருந்தது. ஒரு சோறு சிந்தவில்லை. ஒரு துளி சிதறவில்லை. உருட்டி அள்ளப்பட்ட அத்தனை கவளங்களிலும் ஊனும் சோறும் ஒரே அளவில் இருந்தன. நெடுங்காலம் கற்றுத்தேர்ந்த கலைஞனின் அசைவுகள். பழுதற்றவை, பிறிதற்றவை.
ஒரு பருக்கைகூட எஞ்சாமல் அவன் உண்டுமுடித்தான். கலத்தை உருட்டி அதில் ஒட்டியிருந்தவற்றையும் சுரண்டி உண்டான். பெருத்த ஏப்பத்துடன் அவன் எழுந்தபோது அப்பகுதியில் உணவுண்ணப்பட்டதற்கான தடமே எஞ்சவில்லை. இதுவே வேள்வி என தருமன் எண்ணிக்கொண்டார். மேலுமொரு ஏப்பம் விட்டபின் பீமன் கலத்தை எடுக்கப்போக நகுலன் “அதை அங்கேயே விடுங்கள், மூத்தவரே. நாங்கள் கழுவிக்கொள்கிறோம்” என்றான். பீமன் கைகழுவ திரௌபதி நீர் வார்த்தாள். அவன் கையைப் பற்றி அவளே தேய்த்து கழுவிவிட்டாள். அவன் வாயை தன் மேலாடையால் துடைத்துவிட்டு “நிறைந்ததா?” என்றாள். “சுவையில் நிறைவென்பதில்லை” என்றான் பீமன்.
வெளியே குரங்குகளின் ஓசை கேட்டது. மரக்கிளைகளில் இருந்த குரங்குகள் கூச்சலிட குடிலை நிரப்பியிருந்த குரங்குகள் எதிர்க்கூச்சலிட்டன. செவிநிறைந்த கூச்சலைக் கேட்டு “ராகவராமன் தெய்வக்கூறுள்ளவன். இல்லையேல் கிஷ்கிந்தையரை அவன் தாங்கிக்கொண்டிருக்கமாட்டான்” என்றார் தருமன். பீமன் எழுந்துசென்று நோக்கினான். எட்டு பெருங்குரங்குகள் ஒரு கரிய குள்ளமனிதனை தூக்கிக்கொண்டு வந்தன. ஆடையற்ற அவன் உடல் சிறுவனளவுக்கே இருந்தாலும் கொழுத்து உருண்டிருந்தது. பெரிய வெண்ணிறப் பற்கள் மட்டும் காற்றிலென மின்னி மின்னித் தெரிந்து அணுகின.
“யார் இவன்?” என்றான் நகுலன். “அறியேன், நான் இவர்களிடம் பன்றியை கொண்டுவரும்படிதான் சொன்னேன்” என்றான் பீமன். அவனை குரங்குகள் கொண்டுவந்து உள்ளே போட்டன. பலகைப்பரப்பில் ஓசையுடன் விழுந்த அவனைச் சூழ்ந்து இருகால்களில் எழுந்து நின்றபடி நெஞ்சை அறைந்து ஓசையிட்டன. “இவனை உண்ணப்போகிறாயா, மந்தா?” என்றார் தருமன். பீமன் “உண்ணுதற்குரிய ஊன் கொண்டவனே. வாலோர் எண்ணியது பிழையல்ல” என்றபின் “வேறேதும் கிடைக்காத காலத்திற்காக உடன்வைத்திருக்க ஏற்றவன்” என்றான்.
பீமனின் குரல்கேட்டு “என்ன?” என்று குழறியபடி குள்ளன் எழுந்து அமர்ந்து சூழ்ந்து நின்றிருந்த குரங்குகளைப் பார்த்ததும் அலறியபடி வலிப்புகொண்டு மீண்டும் மயங்கினான். அவன் கால்கள் இழுபட்டன. வாயிலிருந்து எச்சில் குமிழியாக வெடித்து வழிந்தது. “எளிய ஆன்மா… அதை உன் தோழர்கள் வதைத்திருக்கிறார்கள்” என்றார் தருமன். “இல்லை மூத்தவரே, அவர்கள் அவனை ஒன்றும் செய்யவில்லை” என பீமன் குனிந்து அவனை நோக்க அவன் உடல் எம்பி விழுந்தது. “ராமன்! ராமனிடம்!” என்று அவன் குழறினான். இமைகளுக்குள் விழிக்குமிழிகள் ஆடின.
சகதேவன் “விலகுங்கள் மூத்தவரே, உங்களைப் பார்த்தால் அவர் நெஞ்சடைத்து செத்தே போய்விடுவார்” என்றபின் அமர்ந்து அவன் தலையைப் பிடித்து உலுக்கினான். அவன் மெல்ல இமையதிர்ந்து வாய்நெளிய முனகினான். விழிதிறந்து சகதேவனைப் பார்த்ததும் அலறியபடி எழுந்து கைகளால் தோளை வளைத்துப் பற்றிக்கொண்டான். உடல் அதிர அவன்மேல் தொற்றி ஏற விழைபவன்போல கைகளாலும் கால்களாலும் பின்னி இறுக்கியபடி வெறிகொண்டு அலறினான். “குரங்குகள்… குரங்குகள்” என்றான்.
“அமைக! அமைக!” என்றான் சகதேவன். “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்றான் அவன். “நீ பாதுகாப்பாக இருக்கிறாய்… நோக்குக! இது இந்திரப்பிரஸ்தத்தின் முன்னரசர் யுதிஷ்டிரரின் இல்லம்…” என்றான் சகதேவன். அவன் அதைக் கேட்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சொன்னபோது அகம் தெளிந்து சொல்கொண்டு பெருமூச்சுவிட்டு பிடி தளர்ந்தான். வாய்திறந்து தருமனையும் சகதேவனையும் மாறிமாறி நோக்கினான். பெரிய இமைகள் இருமுறை மூடித்திறந்தன. “அவருக்கு இங்கு குரங்குகள்தான் குடிகளா?” என்றான்.
தருமன் வாய்விட்டு சிரித்துவிட்டார். சகதேவன் புன்னகையுடன் “இல்லை, அவை இரண்டாமவரின் நண்பர்கள்” என்றான். அவன் எழுந்து தலையால் நிலம்தொட்டு வணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வணங்குகிறேன். என் பெயர் குஸ்மிதன். அறிவைப் பெருக்கும்பொருட்டு நான் உடல்வளர்ச்சியை முன்னரே நிறுத்திக்கொண்டவன். எனவே என்னை முண்டன் என்று அழைப்பார்கள்” என்றான். முகத்தில் வெண்பற்கள் தோன்றி மறைய சூழ நின்றிருந்த குரங்குகளை நோக்கியபின் “உங்கள் இளையவர் மீது கொண்டுள்ள அதே கட்டுப்பாட்டை குரங்குகள் மீதும் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்” என்றான்.
தருமன் சிரித்தபடி “வாழ்க! நீங்கள் பகடிக்கலைஞர் என எண்ணுகிறேன்” என்றார். “ஆம், கழைக்கூத்தும் கயிற்றாட்டமும் விழிமாயமும் செவிமாயமும் செய்வேன். இங்கு காட்டுச்சந்தை ஒன்றில் திறன்காட்டி பொன் பெற வந்தேன்” என்றான். “இங்கா?” என்றார் தருமன். “ஆம், நகர்களில் முனிவர்களே அனைத்தையும் காட்டிவிடுகிறார்கள்” என்று அவன் சொல்ல தருமன் சிரித்து உடனே சினம்காட்டி “மிகைபகடி வேண்டாம்” என்றார். “ஆணை” என அவன் வணங்கி “பொன் கிடைத்தது. அதைக் கண்டு ஒரு மலையழகி என்மேல் காதல்கொண்டாள். அவளும் என்னைப்போலவே குள்ளம். ஆகவே நான் அவளை மணந்துகொண்டு அவள் குடிலிலேயே தங்கினேன்” என்றான்.
“பிறகு?” என்றாள் அப்பால் வந்து நின்றிருந்த திரௌபதி. “அரசியை வணங்குகிறேன். அவள் கற்புடையவள் அல்ல. என் பொன்னையெல்லாம் பெற்றுக்கொண்டபின் மைந்தனைப் பெற பிறிதொருவனை சேர்த்துக்கொண்டாள். என்னிடம் சொல்லியிருந்தால் இருவருமே அவளுக்கு கணவர்களாக இருந்திருக்கலாம். கற்பில்லாதவளுக்கு அது புரியவில்லை.” தருமன் முகம் சிவந்து ஏதோ சொல்ல நாவெடுக்க திரௌபதி சிரித்தபடி “எளிய பெண்போலும்” என்றாள்.
“ஆம் அரசி, மிக எளியவள். அவளும் அவள் காதலனும் சேர்ந்து எனக்கு மது அளித்து மயங்கச்செய்து தூக்கிக்கொண்டுவந்து காட்டுக்குள் போட்டுவிட்டார்கள். என் ஆடைகளையும் கொண்டுசென்றுவிட்டனர். ஆடையில்லாதவனாக காட்டுக்குள் வந்த நான் குரங்குகள் வரும் ஒலி கேட்டு மக்கள் என எண்ணி புதருக்குள் பதுங்கினேன். என்னை அவை தூக்கிக்கொண்டு வந்துவிட்டன.” நகுலன் “பன்றி என எண்ணிவிட்டிருக்கின்றன” என்றான். “நான் முன்பு ஹனுமான் சஞ்சீவி மலையை கொண்டு சென்றதுபோல என்றல்லவா எண்ணினேன்” என்றான் முண்டன். “இப்போது என்ன? என்னை சமைக்கப்போகிறீர்களா? எனக்கு புளி பிடிக்காது.”
“இப்போது உண்பதாக இல்லை” என்றான் பீமன். “வணங்குகிறேன் பேருடலரே, நீங்கள்தான் காற்றின்மைந்தர் போலும். நேற்று முன்னாள்கூட உங்களைப்பற்றி பேச்சு வந்தது. நீங்கள் காற்றிறைவனின் மைந்தர் என்று ஒருவன் சொன்னன். இல்லை, பேருணவு கொள்பவர் என்பதனால் கீழ்க்காற்று வெளியேற்றம் மிகையாகி அப்பெயர் கொண்டீர்கள் என நான் சொன்னேன். முதியசூதர் எல்லா கதைகளுமே மெய் என்றார். நாங்கள் நான்கு குவளை கள்ளை முன்வைத்து ஆம் என்றோம்” என்றான். எழுந்து திரௌபதியை வணங்கி “நான் பசித்திருக்கிறேன். அரசியிடம் உணவிரக்கலாகாதென்பதனால் ஒரு செய்தியாக இதை சொல்கிறேன்” என்றான்.
திரௌபதி புன்னகையுடன் “வருக… உடனே உணவிட்டு அளிக்கிறேன்” என்றாள். அவன் சிறுவன்போல துள்ளி எழுந்து அவளுடன் சென்றான். தருமன் “இவன் இங்கிருக்கட்டும். எல்லாச் சொல்லிலும் நம்மை புன்னகைக்கச் செய்யமுடிகிறது இவனால்” என்றார். பீமன் “ஆம், உண்மையை சொல்லக் கற்றிருக்கிறான்” என்றான்.