மாமங்கலையின் மலை – 1

வெண்முரசு நாவல் வரிசையில் கிராதம் என்னுள் எப்போதும் இருந்து கொண்டிருந்த குறிப்பிட்ட ஒருமனநிலையை உச்சப்படுத்தியது. உண்மையில் அந்த மனநிலை லோகித் தாஸ் இறந்த போது தொடங்கியது. லோகி திரும்பத் திரும்ப சொல்லிவந்த ஒன்றுண்டு. இதயநோயை எழுத்தாளர்கள் சிகிழ்ச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளக் கூடாது. அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதை முன்னரே மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். அது ஒரு கௌரவமான இறப்பை அளிக்கும். எழுத்தாளன் முதுமை அடைந்தால் அதன் பின் அவன் எழுத்தாளன் அல்ல, வெறும் முதியவன் மட்டும் தான்.

இதை அவர் வேடிக்கையாக பல முறை சொல்லியிருக்கிறார். நான் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. ஐம்பத்துநான்கு வயதில் லோகி இதய அடைப்பு நோயால் இறந்த போது கூட இச்சொற்களையும் அதையும் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் எப்போதோ அவை தொடர்புடன் எழுந்த போது உண்மையல்லவா என்ற ஒரு பெருந்திடுக்கிடல் ஏற்பட்டது அவ்வெண்ணம் எப்போதும் உடனிருந்தது

எனது இல்லத்தருகே வாழ்ந்த மலையாள வரலாற்றாய்வாளர் திரிவிக்ரமன் தம்பி அவர்கள் நீரிழிவுநோய்முற்றி கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட பிறகு மருத்துவ ஓய்வில் இருக்கும்போது நானும் அ.கா பெருமாளும் அவரைச் சென்று பார்த்தோம். கேரள வரலாற்றை ஆழ அகல பயணம் செய்த பேரறிஞருக்கு வரலாற்றின் அடிப்படைத் தகவல் கூட மறந்துவிட்டிருப்பதை அறிந்தோம். பேராசிரியர் திக்கி திடுக்கினார். திருவிதாங்கூரையே வடிவமைத்த டிலனாயின் பெயர் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மார்த்தாண்ட வர்மாவின் மாமன் பெயர் நினைவுக்கு வரவில்லை பத்மநாபபுரம் அருகே இருக்கும் கோட்டை பெயர் நினைவுக்கு வரவில்லை.

வெளியே வந்த போது அ.கா.பெருமாள் முகம் வெளிறியிருந்தது. “என்ன ஆயிற்று?” என்றார். ”சில உயிர் முறி மருந்துகளுக்கு மூளையின் திறனை பெரிதும் குறைக்கும் ஆற்றலுண்டு” என்று நான் சொன்னேன். ”அறுபதாண்டுகாலம் அவர் கற்றதெல்லாம் ஆறு நாட்களில் அழிந்துவிட்டனவா?” என்று அவர் பிரமிப்புடன் கேட்டார். ”உள்ளே இருக்கும் அந்த காலிபிளவரின் திறன் அவ்வளவுதான்” என்று நான் மெல்லிய புன்னகையுடன் சொன்னேன்.

சமீபத்தில் என் ஆசிரியர் ஆற்றூர் ரவிவர்மாவைப்பார்க்கச் சென்றிருந்தேன். தொண்ணூறை நெருங்கிக் கொண்டிருக்கும் அவர் ஒரு மெல்லிய விபத்துக்கு பிறகு சிகிச்சை முடிந்து அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் மொத்த நினைவையும் இழந்து அக்கணத்தில் புதிதாக அவர் தோன்றிக்கொண்டிருந்தார். அவரைப்பார்க்க நான் வந்திருப்பதையே பதினைந்து முறைகளுக்கும் மேலாக புதிதாக எதிர்கொண்டார்.

நான் நகுலனை நினைத்துக் கொண்டேன். இறுதிக் காலத்தில் நகுலனும் அப்படித்தான் இருந்தார். அதை இங்கு சில நவீன எழுத்தாளர்கள் ஒரு மறைஞானநிலை என்று கூட விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆனால் நினைவுத் தொடர்ச்சி அறுபட்டு ஒவ்வொரு கணத்திலும் புதிது புதிதாகப் பிறந்து கைவிடப்பட்ட குழந்தையின் கெஞ்சும் புன்னகையுடன் வாழ்ந்திருந்தார் நகுலன்.

Kollur-0678

முதுமை எழுத்தாளனை பிறர் கைகளில் கொண்டு கொடுத்துவிடுகிறது. ஜெயகாந்தன் இல்லத்திலிருந்தாலும் துறவி என்றிருந்தார். அவரது மடத்திற்கு அப்பெயர் பெரிதும் பொருத்தமே. அங்கு வலக்கையில் சிலும்பியும் இடக்கையில் அதைப்பொத்துவதற்கான சிறிய துணியுமாக அமர்ந்து பிடரியைச் சிலிர்த்தபடி பேசும் சிம்மத்தை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். இறுதியாகச் சந்திக்கும்போது நீண்ட சிகிச்சைக்குப்பிறகு மங்கலான புன்னகையுடன் ,குழந்தையுடன் விளையாடியபடி, வந்திருப்பது யாரென்றே தெரியாமல் பொதுவாக பேசிக் கொண்டிருந்த ஜெயகாந்தனைப்பார்த்துவிட்டு வெளிவந்து உடன் வந்த சுகாவிடம் சொன்னேன். ”இனி நான் ஜெயகாந்தனை பார்க்க வரப்போவதில்லை. ஏனெனில் நானறிந்த ஜெயகாந்தன் இங்கு இல்லை”

ஓர் எழுத்தாளன் முதுமை அடையும்போது என்ன நிகழ்கிறது? அந்தக் காலத்தில்  பழைய  திரைப்பட சுருள்களை வெட்டி விலைக்கு விற்பார்கள். நாங்கள் வாங்கி வெயிலில் காட்டி படம் பார்ப்போம். ஒரு மெல்லிய ப்ளேடால் அதிலிருக்கும் அனைத்து வண்ணஓவியங்களையும் வழித்து எடுத்துவிட முடியும். வெண்ணிறமான தகடுகளாக ஆகிவிடும். அதே போல நினைவுகள் மங்கி ஆளுமை மெலிந்து பிறகு ஒரு வெண்ணிறத் தகடாக எழுத்தாளன் மாறிவிடுவதை பார்க்கிறேன். ஒரு வீரன் , ஒர் அரசியல் , ஒரு விவசாயி அப்படி ஆவதில்  ஒரு இயல்பு இருக்கிறது. எழுத்தாளன் அப்படி ஆவது பெரும் துயர் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவன் விலகிநின்றவன், பிறரைச் சீண்டுவதையே தன் கலையாகக் கொண்டவன். எனவே பிறரது கருணைக்கு ஒருபோதும் அவன் அமரக்கூடாது அது எவரென்றாலும் அவருக்கு திரும்பக்கிடைப்பது சிறப்பானதாக இராது என்று எண்ணிக் கொண்டேன்.

அவ்வெண்ணங்களின் அலைக்கழிப்பை கிராதம் பல மடங்கு பெருக்கியது. கிராதத்தின் இருண்டவண்ணங்களில் நான் பலமுறை இறந்தேன். இளைஞனாக இருந்த நாள் முதல் என் இறப்பு எனும் எண்ணமே என்னைத் துணுக்குற வைக்கக்கூடியதாக இருந்தது. நானற்ற ஒரு உலகம் என்பது போல பதற்றம் கொள்ளச் செய்வது பிறிதொரு எண்ணமில்லை. இறப்பென்ற சொல்லையே பிறருடன் தொடர்பு படுத்தி மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். என் புனைவுகள் அனைத்திலும் இறப்பாக அமைபவை பிறர் இறப்புகளே. அவ்விறப்புகளில் நான் நுழைந்து அதை நடித்து முடித்து வெளிவரும்போது புதிதாகப் பிறக்கும் நிறைவை அடைவேன்.

அந்த இடம் விஷ்ணுபுரத்தில் வரும், ஞானத்தின் உச்சி ஏறிய அஜிதன் பிறர் இறக்கும் செய்திகளை அவன்  இயல்பாக எடுத்துக்கொள்வதையும் தன் இறப்பு பற்றிய ஒரு செய்தி தன் உள்ளே எதையோ ஒன்றை நலுங்க வைப்பதையும் உணர்ந்து அவ்வளவுதானா நான் என எண்ணி வியந்து கொள்கிறான்.

கிராதம் முடிந்த போது உணர்ந்தேன், எனது இறப்பை எந்த வகையான பதட்டமும் துயரமும் இல்லாமல் பெருவிருப்புடன் எதிர்நோக்கக்க்கூடியவனாக நான் மாறியிருக்கிறேன். இன்னும் மிகக்குறைவான காலம் மட்டுமே எஞ்ச வேண்டுமென்று விழைகிறேன். இயல்பாக உதிர்ந்து விட முடிந்தால் அது பெரும் பேறு.

அது அளித்த விடுதலை கொண்டாட்டம் இக்கணம் வரை தொடர்கிறது. உண்மையில் கிராதம் முடிந்த போது அதன் ஆசிரியன் அடைந்த பேறு இதுதான். மீண்டும் ஒரு நாவல் எனும்போது கிராதத்தின் இறுதியிலிருந்து தொடங்கிவிட முடியாது. ஏனெனில் அது ஒரு பெரு நிறைவு. அதிலிருந்து மீண்டும் பல படிகள் பின்னுக்கு சென்று தொடங்க வேண்டும். அடுத்த நாவல் வாழ்வைக் கொண்டாடக்கூடியது என அமைய வேண்டுமென எண்ணினேன்.

பீமனின் பயணம்! பீமன் தத்துவ ஞானி அல்ல. எதையும் தேடிச்செல்பவனும் அல்ல. இருந்த இடத்தில் நிறைபவன் ஏனெனில் அவன் சுவையை அறிபவன். சுவையில் விளையாடும் ஒரு சமையல்காரன். சுவைப்பவனுக்கு அவன் நின்றிருக்கும் இடத்தைச் சூழ்ந்து வாழ்க்கையை அறிவதற்கே நேரம் போதாமலாகும். அவனறியும் உலகம் சுவைகளின் பெருவெளியாக இருக்க முடியும். சுவையின் முதற்சுவையாக அமைந்த தேவியை நோக்கி அவன் செல்லும் பயணத்தைத் தான் மாமலரில் எழுத எண்ணினேன்.

ஆகவே ஒரு பயணம் செல்லலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். இம்முறை மூகாம்பிகைக்கு செல்லலாம் என்று தோன்றியது. காளாமுகர்களின் ஆலயமாகிய கேதார்நாத்துக்குச் சென்று கிராதத்தின் இருளை எனக்குள் ஊறவைத்துக் கொண்டேன். சர்வமங்கலையின் ஆலயம் என்னை மலரொளி நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். மாமலர் என்பது அவளே.

துர்க்கை ஆலயங்கள் இந்தியா முழுக்க அமைந்துள்ளன. மகிஷாசுரமர்த்தினிகள். நரகாசுர வதம் செய்து அமர்ந்திருப்பவர்கள். மூகாம்பிகை சிம்மவாகினி. மகாமங்கலை என்று அவளை சொல்கிறார்கள். அனைத்து மங்கலங்களும் கொண்டவள், எழிலும் நலமும் மட்டுமே ஆனவள். மூகாம்பிகைக்கு கேரளம் முழுக்க நெடுங்காலமாக இருந்த முக்கியத்துவம் இரண்டு காரணங்களால். ஒன்று பரசுராமன் அருகே கோகர்ணம் எனும் மலைமேல் ஏறி நின்று தன் மழுவைச் சுழற்றி வீசியதால் கேரளம் உருவாகியது. அந்த மழு வந்து விழுந்த இடம் குமரி முனை .கோகர்ணம் முதல் குமரி முனை வரை கேரளம் என்பது தொன்மம்.

நான் இளம் பருவத்திலேயே அந்த மழு விழுந்ததை பலநூறு முறை என் கனவுகளில் கண்டிருக்கிறேன். வெவ்வேறு கதைகள் வழியாக அது தொடர்ந்து எனக்குள் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழுவுடன் தொடர்பு படுத்தாமல் குமரியை நான் எண்ணியதே இல்லை. ’’பரசுராமன் மழுவெறிஞ்ஞு நேடியதெல்லாம் திரகள் வந்து திருமுன் காழ்ச்ச நல்கியதெல்லாம்’’ என்று கேரளத்தை வர்ணிக்கிறது ஒரு பாடல்.

இரண்டாவதாக மூகாம்பிகையை கேரளத்தின் முதன்மை தெய்வமாக நிறுத்துவது அவளுடைய மங்கலத்தன்மை தான். கொடுங்கல்லூரில் பகவதி அமர்ந்திருக்கிறாள். ஆற்றுகாலில் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் அனைவருமே வீரியம் கொண்டவர்கள். சினம் நிறைந்தவர்கள். கனிவு ஒன்றே தன் குணமாகக் கொண்டவள் மூகாம்பிகை. மூகம் என்றால் அமைதி. அமைதியின் அன்னை. ஆகவே தான் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் மூகாம்பிகைக்கு பக்தர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். மகாமங்கலையை, பேரன்பின் நிழலை,  வெறும் அன்னை மட்டுமே ஆனவளை ஒருமுறை சென்று கண்டு மீண்டு என்னை மீட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.

குறளுரை முடிந்ததுமே கிளம்பலாம் என்று கிருஷ்ணனிடம் சொன்னேன். உடனடியாகத் திட்டமிட்டார். வழக்கம் போல ஒரு வண்டியில் செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மேலும் ஆள்சேர்ந்து இரண்டு வண்டிகளாக ஆகியது. கோவையிலிருந்து செல்வேந்திரன், தாமரைக்கண்ணன், கதிர்முருகன், திருப்பூர் ராஜமாணிக்கம், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், திருச்சி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கியது குழு.

ஒருகார் இருபத்திஆறாம் தேதி காலை ஈரோட்டிலிருந்து கிளம்பியது. திரைப்பட வேலையாக சென்னை சென்றிருந்த நான் ரயிலில் அன்று காலைதான் வந்திறங்கினேன். விடுதியில் குளித்துவிட்டு நானும் மணிகண்டனும் கிருஷ்ணனும் கதிர்முருகனும் ஈரோட்டிலிருந்து கிளம்பி திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த இன்னொரு காரை சத்தியமங்கலம் அருகே சந்தித்தோம். நேராக ஷிமோகா சென்று ஷிமோகா ரவி வீட்டில் மாலை தங்கி அங்கிருந்து மூகாம்பிகைக்கு செல்வதாக திட்டம்.

கொள்ளேகாலில் இருக்கும் டோண்டென்லிங் திபெத்திய குடியிருப்புக்கு  Dhondenling Tibetan Settlement] காலை பதினொரு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பயணம் முழுக்க இனிமையான குளிர்காற்றும் சாரல் மழையும் இருந்துகொண்டிருந்தது. திபெத்திய குடியிருப்பு சற்று மேடான இடம் என்பதனால் இன்னும் குளிர். லடாக்கிலும் பூடானிலும் ஸ்பிடி சமவெளியிலும் திபெத்திய பௌத்த ஆலயங்களை நிறைய பார்த்திருக்கிறோம். அந்த செவ்வவண்ணச் சுவர்களும் காவியும் வெண்மையும் கலந்த  கொடித்தோரணங்களும் குளிரின் பின்னணி இல்லாமல் அழகுறாது எனத் தோன்றியது

1950 களில் திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. தனித்தன்மைகொண்ட மலைப்பண்பாடும், சிறப்புகள் கொண்ட பௌத்தமதமும் திகழ்ந்த அந்த மண் சீனாவின் மையப்பண்பாட்டுடன் வலுக்கட்டாயமாக பிணைக்கப்பட்டது. திபெத்தின் ஆட்சியாளரும் மதத்தலைவருமான தலாய் லாமா தன் ஆதரவாளர்களுடன் இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அவருடைய தலைமையகம் இமாச்சலப்பிரதேசத்தில் தர்மசாலா என்னும் ஊரில் உள்ளது. [2014 ல் அங்கு சென்றிருக்கிறோம்]

திபெத்திய அகதிகளை இந்திய அரசு இந்தியாவெங்கும் குடியமர்த்தியது. அவர்களின் இயல்புக்கு ஏற்ப உயரமான குளிர்ந்த நிலங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. நாங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இதேபோன்ற ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளோம். அவர்களுக்கு இந்தியக்குடியுரிமையும் வழங்கப்பட்டது. கொள்ளேகால் குடியிருப்பு 1972ல் மத்திய அரசுடன் கர்நாடக அரசு இணைந்து உருவாக்கியது. இதில் 22 கிராமங்கள் அமைந்துள்ளன. மக்களுக்கு வீடுகளும் விளைநிலங்களும் அளிக்கப்பட்டன. அன்று 3200 பேர் குடியேறினர். இன்று 4200 பேர்தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கிருந்து வேறிடங்களுக்கு வாழ்க்கைதேடிச் சென்றுவிட்டனர்

இங்கே நாற்பதாண்டுகளுக்கு முந்தைய ஒரு சூழல் நிலவுகிறது. திபெத்தின் ஒரு பகுதிபோலவும் நாம் கண்டுமறந்த சென்றதலைமுறையின் நம் ஊர் போலவும் ஒரே சமயம் தோன்றும் இடம். ஒரு விசித்திரமான கனவிலென நடந்தோம். இன்று இந்த இடம் திபெத்தியர்களின் மதத்தலைநகர் என்றே அறியப்படுகிறது. திபெத்தியர்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வணிகம் செய்கிறார்கள். இங்கே  ஐந்து மடாலயங்கள் உள்ளன. அவற்றில் மையமாக உள்ளதும் பெரியதுமான ஸோங் ஜென் [Dzongchen] மடாலயத்தைச் சென்று பார்த்தோம்

கான்கிரீட்டால் கட்டப்பட்ட கட்டிடம் திபெத்திய மரக்கட்டிடங்களின் அதே தோற்றம் கொண்டிருந்தது. அடுக்கடுக்கான உத்தரங்களின் முனைகள், கழுக்கோல்கள் எல்லாம் அமைக்கப்பட்டிருந்தன. குருதிச்சிவப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஓவியங்களால் ஆன முகப்பு. பொன்வண்ணம் பூசப்பட்ட மாபெரும் கதவுகள். அருகே இருந்த உண்டு உறைவிடப்பள்ளியில் திபெத்தியச் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ராஜமாணிக்கம் சென்று காவலரை அழைத்துவந்தார். அவர் மடாலயத்தைத் திறந்து காட்டினார்

பொன்னிற உடல்கொண்ட மாபெரும் புத்தர்சிலை பூமியைத் தொட்டு ஞானத்திற்குச் சான்றுரைத்து அமுதலகம் ஏந்தி அமர்ந்திருந்தது. வலப்பக்கம்  வஜ்ராயுதம் ஏந்திய பத்மசம்பவர். இடப்பக்கம் தாராதேவி. மரத்தாலான சிலைகளின் கண்கள் ஊழ்கத்தில் பாதிமூடி இருவாட்சி மலர்கள் போலிருந்தன. கம்பிளி இருக்கைகள். மிகப்பெரிய முழவு. பௌத்த நூல்கள். சுவர்களில் டோங்காக்கள். திபெத் உருவாகி வந்துவிட்டிருந்தது. வெளியே வெள்ளிப்பனிமலைகள்.

 

முந்தைய கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு ஈரோடு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2