1. காற்றின் களி
இமயத்தின் அடிவாரத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்த கோதவனம் என்னும் காட்டில் கிளைவிரித்துப் பரந்து சிறுபசுஞ்சோலைகளைச் சூடி நின்ற சாலமரங்கள் நான்கை ஒன்றுடன் ஒன்று மூங்கில்களால் கட்டி தளமிட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட ஏழு அறைகள் கொண்ட குடிலில் பாண்டவர்கள் தங்கியிருந்தனர். அடுமனையும் மகளிர்அறையும் தனியாக வேறு இரு சாலமரங்களில் இருந்தன. அவற்றுக்குச் செல்ல மூங்கில்களால் ஆன பாலம் இருந்தது.
சுற்றிலும் இருந்த புதர்க்காட்டைத் திருத்தி அழகிய மலர்த்தோட்டத்தை நகுலனும் சகதேவனும் உருவாக்கியிருந்தனர். கோமதிக்குச் செல்லும் ஓடை ஒன்றை கால்திருத்திக் கொண்டுவந்து பரப்பியிருந்தனர். அதன் ஈரம்படர்ந்த பாத்திகளில் தெச்சியும் அரளியும் குருக்கத்தியும் செங்காந்தளும் தழல்சூடி நின்றன. மும்மூங்கில்நிலைகளில் இருவாட்சியும் முல்லையும் வெண்முத்துக்கள் சூடி படர்ந்தேறியிருந்தன. நந்தியாவட்டையின் நிழல்களில் பேணாமலேயே வளரும் கொடுவேரிகள் செறிந்திருந்தன.
மலர்ச்சோலையைச் சுற்றி யானைகள் தயங்கும்படி இடையளவு ஆழமுள்ள அகழி வெட்டப்பட்டிருந்தது. தாவி கடந்துவிடும் மான்களையும், இறங்கி ஏறமுனையும் இளைய எருதுகளையும் தடுக்கும்பொருட்டு காட்டுமரங்களை பெருந்தடிகளால் இணைத்துக் கட்டி வேலி அமைத்திருந்தான் பீமன். மரக்கிளைகளில் தொற்றி வந்து உள்நுழைய விழையும் கரடிகளை அச்சுறுத்துவதற்கு மரமணிகள் கோக்கப்பட்ட சரடுகளை கிளைகளுக்குள் கரந்து கட்டியிருந்தான்.
பீமனுக்கு உகந்த குரங்குப்படை ஒன்று எப்போதும் அக்குடிலை காவல் காத்தது. உயர்ந்த மரக்கிளை ஒன்றில் திசை நோக்கி அமர்ந்திருந்த நீள்நோக்குக் குரங்கு யானையோ புலியோ நெடுந்தொலைவில் தோன்றும்போதே வயிற்றை கையால் அடித்தபடி கொப்பரைகளை சேர்த்து அறையும் ஒலியில் எச்சரிக்கைக் குரல் எழுப்பியது.
அக்கணமே அங்கு இலைச்செறிவுக்குள் வால்பற்றி இழுத்துச் சீண்டியும் ஒன்றன் மேல் ஒன்று தாவியும் விளையாடிக்கொண்டிருந்த குட்டிக்குரங்குகள் அன்னையை நோக்கி பாய்ந்துசென்று ஒற்றை உடல்தொகையாக ஆயின. கிளைக்கவருக்குள் அமர்ந்திருந்த அன்னையரும், உச்சிக்கிளைகளில் கைகால் தொங்க வால் வளைந்து நெளிய விழிசொக்கிப் படுத்திருந்த ஆடவரும் கூட்டுஒலியெழுப்பியபடி கிளையுலைய வந்து அத்தவச்சாலையை சுற்றிக்கொண்டனர்.
குரங்குகளின் ஒலி கேட்டு தன் அறையில் சுவடி நோக்கிக்கொண்டிருந்த தருமன் எழுந்து வந்து குடில் முகப்பில் நின்று “புலியா?” என்றார். “ஆம், யானை என்றால் அவை நம்மிடம் சொல்லவரா. அங்கு சென்று அதை விரட்டவே முயலும்” என்று உள்ளே அமர்ந்து அம்புகளை கூர்தீட்டிக் கொண்டிருந்த நகுலன் சொன்னான். குரங்குகள் குடிலைச்சூழ்ந்து நின்று கூச்சலிட்டன. தருமன் வெளியே சென்று கையசைத்ததும் அவர் அறிந்துவிட்டதை உணர்ந்து அவை முனகி பற்களைக் காட்டின. பின்னர் வழிநடத்திவந்த பெருங்குரங்கு திரும்பிச் சென்றது. மற்ற குரங்குகள் அதைத் தொடர்ந்து சென்றமை காற்று இலைகளுள் ஊடாடிக் கடப்பதுபோல தெரிந்தது.
“மந்தன் இவ்வேளையில் எங்கு சென்றான்?” என்று தருமன் சலிப்புடன் கேட்டார். “இக்காட்டில் குளிர் குறைவு என்பதனால் இங்கு தங்க முடிவெடுத்தோம். இதுவோ ஊன்விலங்கும் மதவிலங்கும் செறிந்ததாக உள்ளது. நாள்தோறும் ஒன்றேனும் நாடிவருகின்றது. காடு நம் மீது வஞ்சம் கொண்டு தன் தூதர்களை அனுப்பிக்கொண்டே இருப்பதுபோல.”
ஓலையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த சகதேவன் “மூத்தவர் நேற்றிரவு காட்டுக்குள் சென்றார்” என்றான். “எப்போது?” என்றார் தருமன். “அறியேன்” என்றான் சகதேவன். “எங்கு செல்கிறான் எப்போது மீள்வான் ஏதும் தெரியாது நமக்கு. அவன் நம்முடன் இருக்கிறான். நாம் அவனுடன் இல்லை” என்றார் தருமன். வெளிமேடையில் நின்றபடி காற்றில் பறந்த தன் மேலாடையை தோளில் இழுத்துப் போட்டுக்கொண்டு “இக்காட்டில் அவன் என்னதான் செய்கிறான்?” என்றார்.
“காடு அவருக்கு கற்றுத் தீராத காவியம் போல. இங்கு வந்த இவ்விரண்டாண்டுகளில் விழித்திருக்கும் கணமெல்லாம் அதை அறிந்துகொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதியதொரு செய்தியுடன் இங்கு வருகிறார்” என்றான் சகதேவன். நகுலன் புன்னகைத்து “ஆம், ஒவ்வொரு செய்தியைச் சொல்லும்போதும் அவரது பேருடலில் எழுந்து வரும் அச்சிறுவனைப்போல் நம் உளவிருப்புக்குரியது இப்புவியில் பிறிதில்லை. அவருடன் இருக்கும் வரை நமக்கு மூப்பு என்பதே இல்லை” என்றான்.
தருமன் உள்ளே வந்து “இளையோனே, நான் அவனைப் பார்த்தே நெடுநாட்களாகின்றன. அவன் குரல் கேட்டு வருவதற்குள் அகன்றுவிடுகிறான். என் விழிக்குள் இருக்கும் அவன் தோற்றம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்றே நான் அவ்வப்போது வியந்து கொள்வதுண்டு. இரவில் எப்போதோ எவருமறியாமல் வருகிறான். புலரிக்குள் திரும்பிச் செல்கிறான். அவனைப் பார்த்துவிடுவோம் என்று நான்குமுறை அவன் அறைக்குள் சென்றேன். மஞ்சத்தில் அவன் படுத்த சுவடே இல்லை” என்றார்.
நகுலன் சிரித்து “அவர் இரவுகளில் வருவதும் குறைவே” என்றான். “எப்போதுதான் துயில்கிறான்?” என்றார் தருமன். “மூத்தவரே, பெருவிலங்குகள் உச்சிவெயில் எழுந்து சாய்வெயில் அணைவதுவரை புதர்களுக்குள் துயில் கொள்கின்றன” என்றான் நகுலன். “புதர்களுக்குள்ளா? நாகங்கள் நிறைந்த இக்காட்டிலா?” என்றபின் தருமன் பெருமூச்செறிந்து “ஆம், அங்குதான் அவன் நிறைவுடன் இருக்க முடியும் போலும். அவனுக்கு முலையூட்டியது நம் அன்னை அல்ல, புதர்களுக்குள்ளிருந்து இறங்கி வந்த பெருங்குரங்கு ஒன்று. அது அளித்த மெய்மை அவனுக்குள் உண்டு” என்றார்.
“அவர் காற்றின் மைந்தர்” என்றான் நகுலன். “பெருமரங்களை கடைபுழக்கவும் சுவடிலாது ஒழுகவும் அறிந்தது காற்று.” தருமன் திரும்பி குரங்குகளை நோக்கினார். ஒரு பெருங்குரங்கு கிளைநுனியில் குடிலை நோக்கியபடி அமர்ந்திருந்தது. அதன் வால்நுனி கீழே தொங்கி அதன் உள்ளோடும் எண்ணங்களுக்கேற்ப மெல்ல வளைந்து அசைந்துகொண்டிருந்தது. தருமன் “அந்த அன்னையின் குருதியின்பொருட்டே சூழ்ந்தமர்ந்து நம்மைக் காக்கின்றன இக்குரங்குகள். முன்பு ராகவ ராமனுக்கு துணை நின்ற கிஷ்கிந்தையின் படையினர் போல்” என்றார்.
“மூத்தவர் வரும்போது தங்களை சந்திக்கும்படி சொல்கிறேன்” என்றான் நகுலன். தருமன் “நன்று” என வெளியே செல்ல சகதேவன் புன்னகைத்து குரல் தாழ்த்தி “அதற்கு தாங்கள் அவரைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகின்றன, மூத்தவரே” என்றான். நகுலன் தன்னை அறியாது வாய்விட்டு சிரித்து விட்டான். “உண்மைதான். நானும் பார்த்து நெடுநாட்கள் ஆகின்றன” என்றான்.
தருமன் வெளியே குடில்முகப்பில் நின்றபடி “புலி திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன். மரமானுடர் தங்கள் இயல்புக்கு மீண்டுவிட்டார்கள்” என்றார். “இங்கு வந்தபோது இது மண்ணில் ஒரு விண்ணுலகு என்று தோன்றியது. இவ்வாற்றின் கரையின் குளிர்காற்றும் பசுமை மாறா செடிகளும் குடைமரங்களும் மண்ணும் மலரும் கலந்த இன்மணமும் உயர்ந்த எண்ணங்களுக்கென்றே அமைக்கப்பட்டவை என எண்ணினேன். இங்கு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நாளும் தவமென்றே நினைத்தேன்.”
“…இன்று அறிகிறேன், எந்தக் காடும் எந்த மலையும் நம்மைத் தவத்திற்கு கொண்டு செல்வதில்லை. நம் உள்ளிருந்து ஊறுவதே தவமென்றாகும்” என்றார் தருமன். விழிகள் ஒளிநிழலாடிய காட்டுவெளி நோக்கி தாழ்ந்து நின்றிருக்க சற்றுநேரம் சிலைநிலை கொண்டு மீண்டு திரும்பி “இளையோரே, ஒரு முனிவனென்று என்னை எண்ணிக்கொள்ள எப்போதும் விழைந்து வந்திருக்கிறேன். இன்று நான் அடைந்த மெய்யறிதலென்பது ஒன்றே, நான் முனிவனல்ல. என் இளையோர் மீதான அன்பிலிருந்து எனக்கு விடுதலை இல்லை. அது என் தளையல்ல, அணி என உணர்ந்ததே என் வீடுபேறு” என்றார்.
“ஆனால் உலகியலான் காட்டில் வாழ்வதென்பது எளிதல்ல” என அவர் தொடர்ந்தார். “தக்கையை நீர் என உலகியலானை காடு வெளித்தள்ளிக்கொண்டே இருக்கிறது. ஆனால் மந்தன் காட்டில் மகிழ்ந்திருக்கிறான். அவனை நகரங்கள் வெளியே தள்ளிக்கொண்டிருந்தன. அப்படியென்றால் அவன் உலகியலான் அல்லனா? ஒருவகை யோகியா?” அவர்கள் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
“இல்லை, நீங்கள் சொல்வதைப்போல களிமாறா இளமைந்தனேதானா? மைந்தர்களுக்கு நாடென்றும் காடென்றும் வேறுபாடில்லையே! அவர்களை அக்கணம் அள்ளி ஆழ்த்தும் ஒரு சூழல் மட்டுமல்லவா அவர்கள் விழைவது?” அவர் திரும்பி குரங்கை நோக்கினார். “அல்லது இக்குரங்குபோல. இது நகர்களில் வாழ்வதை விரும்பாது. காட்டில் காட்டின் துளியென இருக்கிறது.”
அவர் நோக்கியதை உணர்ந்து அந்தக் குரங்கு கண்சிமிட்டி இடையை சொறிந்தது. பற்களை இளித்தபடி எதையோ விரல்களில் எடுத்து கூர்ந்து நோக்கியது. அதை பல்லில் வைத்துக் கடித்தபின் மீண்டும் தோள் தொய்ந்து இயல்படைந்தது. தருமன் “சலிப்பில்லாது அமர்ந்திருக்கிறது. இன்றும் நாளையும் இவ்வண்ணமே இங்கிருக்க அதனால் முடியும். இளையோனே, சலிப்படைந்த காட்டுவிலங்கை நான் கண்டதே இல்லை. நாட்கணக்கில் காத்திருக்கின்றன பூனைகளும் புலிகளும். பதுங்கி அசையாதிருக்கின்றன முயல்களும் நாகங்களும். அசைபோட்டு விழிசொக்கிக் கிடக்கின்றன காளைகளும் மான்களும்… இருத்தலே அவற்றுக்குப் பேரின்பம். மானுடர் மட்டும் இருத்தலில் சலிப்பு கொள்கிறார்கள். இயைவதும் இயல்வதும் அல்ல, எழுவதும் செல்வதுமே தங்கள் இன்பமென்று எண்ணுகிறார்கள்” என்றார்.
“இங்கிருந்து கிளம்பிச் சென்று திசைகளை வெல்லவேண்டுமென்று தோன்றவில்லை. நான் அடைவதற்கு இதற்கப்பால் ஏதோ ஒன்று உள்ளதென்றும் இப்போது என் உளம் உணரவில்லை. நான் நினைவறிந்த நாள் முதலே அங்கு அங்கு என்று தேடிக்கொண்டிருந்தேன். அப்பயணத்தின் இறுதியில் இங்கு அமைவதெப்படி என்று தெளிந்தேன். இளையோர்களே, இன்று இச்சிறு சோலைக்கு அப்பால் நான் விழைவதெதுவும் இல்லை…”
“…இருந்தும் நாட்கள் சலிப்பூட்டுகின்றன. காலம் இழுபட்டு நீண்டு கிடக்கிறது. இருப்பதன் சலிப்பே மனிதனை காமம் குரோதம் மோகம் மூன்றுக்கும் அழைத்துச் செல்கிறது. சலிப்பின்றி இருக்கத் தெரிந்தவன் யோகி. சித்தமடக்கி சொல்லற சும்மா இருத்தலே யோகம் என்கின்றனர் முனிவர். ஒவ்வொரு ஒலித்துளியாலும் அச்சொற்களை இங்கு நான் முழுதுணர்கிறேன்” என்றார் தருமன். திரும்பி அக்குரங்கை நோக்கி “காட்டுவிலங்குகளெல்லாம் யோகிகள் போலும். விலங்காக மாறும்பொருட்டுதான் இங்கு வருகிறார்களா மெய்யுசாவிகள்?” என்றார்.
“நான் விரும்புவதென்ன என்று சென்ற சில நாட்களாக எண்ணிக்கொண்டே இருந்தேன். இந்திரப்பிரஸ்தமா? பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென மணிமுடி சூடி அமரும் தருணமா? யயாதிக்கு நிகரான மன்னனென சூதர்கள் பாடும் பெரும் புகழா? எது? இரக்கமற்ற எதிரியைப்போல வினாக்களை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இல்லையென்றே அகம் சொல்கிறது. அஸ்தினபுரியில் இருக்கும் என் மைந்தரைக் காண மீண்டு செல்ல வேண்டுமென்றுகூட உள்ளம் எண்ணவில்லை. பிறகென்ன என்னுள் இருப்பது?”
கைகளைக் கட்டியபடி காற்றிலாடும் ஆடையுடன் காட்டிலைகள் ஆடிய ஒளிநிழலாட்டம் முகத்தில் ததும்ப தருமன் நின்றார். பின்பு பெருமூச்சுடன் கலைந்து “சொற்களிலாக்குவதென்றால் இப்படி கோக்கலாம். ஒவ்வொன்றையும் மீளக் கண்டுபிடிப்பதே பொருள்வய உலகின் இன்பம் எனப்படுகிறது. புதுமலர், புதுத்தளிர், புதுநிலம், புதிய எண்ணம், புதிய மனிதர்கள். புதிய எனும் சொல்லில் உள்ளது இப்புவியில் நாம் வாழும் புற வாழ்வு. இங்கெதுவும் புதிதல்ல என்று ஒருகணமும் ஒவ்வொரு கணத்துளியும் புதிதென்று மறுகணமும் மாறிமாறிக் கண்டடையும் உவகையால் நெய்யப்பட்டுள்ளது வாழ்வு” என்றார்.
“இங்கு நான் இழந்திருப்பது புதிது என உளமெழும் தருணத்தை. இதோ, இங்கிருந்து இறங்கிச் சென்றால் நான் பார்க்கும் எந்தக் கிளையில் மலர் மலர்ந்திருக்கும் என்று இப்போதே தெரிகிறது. உற்று நோக்கினால் கோமதியில் எத்தனை அலைகள் எழுகின்றன என்பதைக் கூட என் அகம் முன்னறிந்திருப்பதுபோலப் படுகிறது. இதே வானம், இதே காற்று… என் எண்ணங்கள் கூட ஒன்று மற்றொன்றென மீள நிகழ்கின்றன. இங்கு வந்த சில நாட்களில் என்னுள் எழுந்த அதே எண்ணங்களைத்தான் இப்போதும் அடைகிறேன்.”
“ஏனெனில் இப்போதும் என்னைச் சுற்றியிருக்கும் இப்பொருட்கள் மாறுபடுவதில்லை. அப்படியானால் இப்பொருட்களால் உருவாக்கப்படுவதுதானா என் அகம்? என் எண்ணங்கள் அனைத்தும் இப்பொருள்வயப் புடவியின் நீட்சிகள் மட்டும்தானா? அறியேன்…” தருமன் எதையோ விட்டெறிவதைப்போல் கையை வீசினார்.
“சென்ற சில மாதங்களாகவே நீங்கள் நிலையழிந்திருப்பதைக் கண்டோம், மூத்தவரே” என்றான் நகுலன். “உண்மையில் இளையவர் சென்று இத்தனை நாட்களாகியும் மீளாததே அத்துயருக்குப்பின் என்று எண்ணிக்கொண்டோம்.” தருமன் துயரம் படிந்த புன்னகையுடன் “ஒருவகையில் அது உண்மை. அவனை எண்ணாமல் ஒருநாளும் துயின்றதில்லை. விழித்ததுமே அவன் எண்ணமே என்னுள் நிறைகிறது. ஆனால் அவனைப்பற்றி அச்சமில்லை. அவன் வெல்வதற்கென்று மட்டுமே பிறந்தவன். செல்லும் திசை எதுவும் அவனைப் பணியும். அடைந்து நிறைந்து கனிந்து மீள்வான். அதில் எனக்கு ஒருபோதும் ஐயம் வந்ததில்லை” என்றார்.
“ஆனால் நால்வரில் ஒருவர் என் அருகே இல்லாதபோதுகூட நான் உணரும் பெரும் இடைவெளியைத்தான் நுணுகியும் கூர்ந்தும் எண்ணிக்கொள்கிறேன். நான் முழுமையற்றவன், உங்கள் நால்வரால் நிறைக்கப்படுகையில் மட்டுமே நிலைகொள்பவன். இங்கிருக்கையில் நாம் அவனுக்காக காத்திருக்கிறோமென்ற உணர்வு இருக்கிறது. அதுவே துயர் நிறைக்கிறது. இலக்கு ஒன்று வேண்டும், செல்வதற்கும் அடைவதற்கும். அது இங்கிருக்கும் இருப்பின் பொருளை வெறும் காத்திருப்பென்று ஆக்காமல் இருக்கும் பொருட்டு மட்டுமே.”
மேலும் சொல்ல நாவெடுத்து தலையசைத்து தன்னைக் கலைத்தபின் தருமன் படிகளில் இறங்கி மலர்த்தோட்டம் நோக்கி சென்றார். காட்டுக்கொடிகளை முறுக்கிச் செய்த கயிற்றால் மரக்கிளைகளைக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த படிகளில் அவர் கால்கள் பதிய அவை இறுகி மீளும் முனகலோசை கேட்டு அடங்கியது.
நகுலன் “மிகச்சரியான சொற்களில் துயரையும் சலிப்பையும் தனிமையையும் சொல்வதற்கு பயின்றிருக்கிறார். பிறந்த நாள் முதலே இதில் பயிற்சி செய்துவந்திருக்கிறார் என்பதால் உவகையையும் எழுச்சியையும் மெய்மையையும் தொடும் மொழியை அவர் அடையவே இல்லை” என்றான். சகதேவன் நகைத்து “துயரினூடாகத்தான் அனைத்தையும் அறிய வேண்டுமென்று சிலருக்கு ஊழ் அமைந்துள்ளது. அதற்கு நாம் என்ன செய்ய இயலும்?” என்றான்.
தருமன் தோட்டத்தை அடைந்து சூழ்ந்திருந்த மலர்களை இடையில் கைவைத்து நோக்கிக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தமாக அந்த மலர்ப்பரப்பு பொருளிலாத வண்ணக்குவியலெனத் தோன்றியதும் குனிந்து ஒவ்வொரு மலராக நோக்கினார். அவற்றின் பலவகையான மலர்வுகளும் குவிகைகளும் விரிதல்களும் குமிழ்தல்களும் உள்ளத்தை ஈர்த்தன. மென்மையென்பதும் தண்மை என்பதும் வண்ணமென்றானவை.பின்னர் எப்போதோ அவர் பீமனைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பதை உணர்ந்தபோதுதான் மலர்கள் சலிப்பளித்துவிட்டிருப்பது தெரியவந்தது. அத்தனை வடிவமாறுபாடுகளுக்கும் அப்பால் அவை ஒன்றே. விரித்து தன்னைக்காட்டும் வண்ணக்குவளைகள். அறிவிலா அழகியர் போல வெறும் தேனேந்திகள்.
கிளம்பிவிடவேண்டும் என்ற வெறி எழுந்து உடலை துடிக்கச்செய்தது. பிறிதொரு காடு, பிறிதொரு நதி, புத்தம் புதிய ஒரு மலை.இங்கு இனிமேல் இருக்கமுடியாது. அவையும் இவைபோன்றவையே. எங்கும் புவி ஒன்றே. எழுந்த வான் ஒன்றே. மீளமீள ஒன்றையே மலரென விரிக்கிறது. நதியென உருக்கி இழுத்து நீட்டுகிறது. மலையென அள்ளிக் குவிக்கிறது. பிறிதொன்றறியா பேதைப்பெரும்பரு, ஆனால்இன்னொரு நிலம் மேலும் சிலகாலம் ஆழ்த்தி வைத்திருக்கக்கூடும். இது புதிது என்னும் மாயையை பேணிக்கொண்டு அங்கு மேலும் சற்று வாழ்வை உந்திக்கழிக்கமுடியும்.
திரும்பவும் படிகளினூடாக குடிலை நோக்கி செல்லும்பொருட்டு கால்களைத் தூக்கி வைத்தபோது அவர் காவல்குரங்கை நோக்கினார். அது அவரருகே ஒரு கிளையில் வந்து அமர்ந்து அவரை நோக்காமல் உடல் குறுக்கி அமர்ந்திருந்தது. கால்கள் மட்டும் கிளைகளைப் பற்றியிருக்க கைகள் தொய்ந்துகிடந்தன. தோள் தொய்வால் அது துயில்வதுபோல் தோன்றியது. ஆனால் அவர் அசைவுகளை உடலால் நன்கறிந்தபடி விழிகளை அப்பால் காட்டின் புதர்களுக்குள் நாட்டியிருக்கிறது என்றும் தெரிந்தது.
ஏனென்றறியாமல் ஒரு அகவிரைவு எழ அவர் வேலியை மூடியிருந்த படலை கட்டவிழ்த்து மெல்ல உந்தினார். மறுபக்கம் கட்டப்பட்டிருந்த எடையால் படல்கதவு துலாபோல ஓசையின்றி மேலெழுந்தது. வெளியே சென்று கயிற்றை இழுத்து அதை மூடிவிட்டு காலடிப்பாதையில் நடந்தார். அவர் தலைக்கு மேல் குரங்கு கிளையுலைய இலையுதிர பதறியபடி வந்தது. உப் உப் என்று அது குரலெழுப்பக் கேட்டதும்தான் எங்கு செல்ல எழுந்தோம் என்பதை அவரே உணர்ந்தார். அந்தப் புலி… வெறுங்கையுடன் அதன் முன் சென்று நின்றிருக்கவேண்டும். இந்த நாளை அசைவுறச்செய்ய அதனால் இயலும்.அதுவும் திகைக்கக்கூடும், இன்றைய சலிப்பை அதுவும் கடக்கக்கூடும்.
புன்னகையுடன் அவர் நடக்க அவர் மீது குரங்குகள் பெருகிக்கொண்டிருந்தன. அவை அவரை அழைப்பதுபோலவே குரல்கள் ஒலித்தன. ஓரிரு குரங்குகள் தாவி இறங்கி தாழ்கிளைகளில் ஆடி அவரை நோக்கி மேலுதடு குவித்து கூச்சலிட்டன. கிளைகளில் நின்று ஆடி ஆடி குதித்தன. அவர் மேலும் களிகொண்டார். புலன்கள் கூர்பெற சற்றுநேரத்திலேயே புலியின் காலடிகளை கண்டுவிட்டார். பெரிய புலி. அதன் பின்னங்கால்களுக்கிடையே இருந்த தொலைவை வைத்து ஆண்புலி எனத் தெளிந்தார். பூழிமென்மையில் பதிந்த தடத்தை குனிந்து நோக்கினார். ஊன்துளி இல்லை என்பதைக்கொண்டு அது இரைகொண்டிருக்கவில்லை என்று கணித்தார்.
குரங்குகள் முன்னால் சென்றுவிட்டிருந்தன. அங்கே அவற்றின் பூசலோசை எழுந்தது. அவை அவரைக் காக்கும்பொருட்டு புலியைத் துரத்துவதற்காக சென்றிருக்கின்றன என்று உணர்ந்தார். புலி அஞ்சி விலகிச்சென்றுவிடலாகாது என்று எண்ணி விரைந்து காலடி எடுத்துவைத்தார். சுற்றிலும் நோக்கியபடிச் சென்றபோது அவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதை அவரே அறிந்தார். முகத்தசைகளின் விரிவை உணர்ந்தகணம் புன்னகைத்தே நெடுநாட்களாகிவிட்டிருப்பது தெரிந்தது. கைவீசி கூச்சலிட்டு துள்ளிக்குதித்தார். பின்னர் அறிந்தார், அது அவருக்குள்ளேதான் நிகழ்ந்தது. அவர் அதே கூன்தோளும் தளர்நடையுமாகத்தான் சென்றுகொண்டிருந்தார்.
கோமதியின் இடைவளைவு என அமைந்த சதுப்பு அது என்று தெரிந்தது. மட்கிய சேற்றின் மணம் வரத்தொடங்கியது. குரங்குகளின் ஓசை வலுத்து பின் தொலைவில் அகன்று தேய்ந்தது. பின் இளங்குரங்குகளின் ஓசையை கேட்டார். அவை சிறுவர்கள்போலவே கூச்சலிட்டன. நிறைய இளையவாலோர் இருக்கக்கூடும் அங்கு என தோன்றியது. அவர்களனைவரும் அங்கு எப்படி சென்றனர்? அங்கே சற்றுமுன்னர்தான் பெரும்புலி சென்றிருக்கிறது. அவர் குனிந்து அதன் பாதத்தடங்களை நோக்கி அச்செலவை உறுதிசெய்துகொண்டார். ஈரம் கசியும் மென்கதுப்பில் நால்விரல் பதிவுகள் விரியிலை வடிவில் தெரிந்தன.
கோமதியின் ஒளி இலைகளின் நடுவே அலையலையென தெரியத் தொடங்கியது. இளவாலோர் குரல்கள் அணுகியபோது அவர் தெளிவடைந்து நடை தளர்ந்தார். பீமனின் குரல் ஊடே ஒலித்துக்கொண்டிருந்தது. அது குரங்குமொழியில் பேசுவது எருது உறுமுவதுபோலவும், செம்புக்கலம் முட்டுவதுபோலவும் ,முழவில்கோல் வருடுவதுபோலவும், தோல்வாரில் வாள்தீட்டுவதுபோலவும் ஒலித்தது. அவர் அருகணைந்து ஒரு பெரிய அரசமரத்திற்குப் பின்னால் நின்று நோக்கினார்.
காற்றில் அலையுலைந்த நாணல்பெருக்கினுள் வால்சொடுக்கி வளைந்து நின்றிருக்க புலி தவித்துச் சுழன்று, கோட்டுப்பல் காட்டி உறுமி, எம்பிக்குதித்து கைமடித்து காற்றிலறைந்து நின்றிருக்க அதன் மேல் குட்டிக்குரங்குகள் சிறுசில்லைகளில் தொங்கி ஆடி கும்மாளமிட்டன. வால்எழுந்து வளைந்திருக்க ஒரு சிறுவன் நாணலுக்குள் குதித்து எழுந்து நின்று வயிற்றைப் பிராண்டியபடி ஹூஹூஹூ எனறான். புலி அவனை நோக்கி உறுமியபடி பாய நால்வர் அதன் பின்பக்கம் குதித்து வாலைப்பற்றி இழுத்தனர். அது சீறிச் சுழல பாய்ந்து கிளைச்சில்லையில் தொற்றி ஆடிநின்ற தோழரின் கைபற்றி மேலேறிக்கொண்டனர்.
கிளைகளெங்கும் காய்க்குலைகள்போலச் செறிந்திருந்த குரங்குகள் ஹூஹூஹூஹூ என ஓசையிட்டு எம்பிக்குதித்தன. இலைகள் சுழன்று புலிமேல் விழ அது ஒவ்வொரு இலைக்கும் அஞ்சி உடல்விதிர்த்து முதுகுவளைத்து ஒண்டியது. அதன் விலாவெலும்புகள் வரித்தோல் மடிப்புகளுக்குள் அசைவுகொண்டன. பிடரியும் பின் தொடையும் ஆங்காங்கே தசையதிர்ந்தன.மரங்களின் மேல் பீமன் தலைகீழாக கால்களால் கிளைபற்றி கைவீசி தொங்கிக்கிடந்து ஹூஹூஹூ எனக் குரலெழுப்பினான். புலி பின்னால் காலடி எடுத்துவைத்து நடுநடுங்கியபடி சென்று கோமதியின் சேற்றுவிளிம்பை அடைந்து சரிவில் கால்வழுக்கிச் சென்றது.
கால்களை எடுத்து வைக்கும்தோறும் வழுக்க அது பூனைபோலவே முனகியபடி தலைதாழ்த்தியது. முன்னங்கால்களால் களிமண்ணை அள்ளிப்பற்றி மேலேற முயன்றபோது பின்னங்கால் நீண்டு கீழிறங்க தொங்கவிடப்பட்டதுபோல அதன் உடல் நெடுகியது. குரங்குச்சிறுவர் ஒவ்வொருவராக நாணலில் குதித்தனர். பீமன் இறுதியாக தலைகீழாகக் குதித்து கைகளை ஊன்றி கால்கள் காற்றில் நடக்க ஆணைகளை இட்டபடி பின்னால் நடந்தான். புன்தலை மயிர் சிலிர்த்திருக்க குரங்குக்குட்டிகள் புலியின் அருகே சென்று நின்றன. அதன் உறுமல் கேட்டு மெய்விதிர்க்க பாய்ந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டன. மீண்டும் துணிவுகொண்டு அணுகின.
புலி வயிற்றை எக்கி உறுமியது. மீசைமயிர்முட்கள் விடைக்க தலையைத் தாழ்த்தி குருதிநிற வாய்திறந்து அலறியது. துணிவுகொண்ட குரங்கு ஒன்று மெல்ல அருகே சென்றது. மேலும் நெருங்கி கைநீட்ட புலி துள்ளித் துள்ளி அமறியது. அவ்வசைவில் மேலும் சேற்றில் வழுக்கியது. குட்டி தன் சிறுகை நீட்டி புலியின் மீசையைப்பிடித்து இழுத்து விட்டு ஹூஹூஹூ என ஓசையிட்டபடி பின்னால் பாய்ந்தது. மற்ற குரங்குகளும் கூவியபடி அதனுடன் சேர்ந்துகொண்டன. இன்னொன்று முன்னால் சென்று மீண்டும் புலியின் மீசையைப் பிடித்து இழுத்தது. இன்னொன்று ஒரே பாய்ச்சலில் புலியின் தோள்மேல் தொற்றி ஏறிக்கொண்டு எழுந்து நின்று ஹூஹூஹூ என்றது. அதன் சிறுகுறி பிஞ்சுப்பலாக்காய் என புமயிருடன் விடைத்திருந்தது அத்தனை குரங்குக்குட்டிகளும் பெருங்குரலில் ஓசையிட்டன.
புலி வயிற்றை சேற்றில் அழுத்தி கால்களை நன்றாகப் பரப்பி புலித்தோல் இருக்கைபோலவே ஆகியது. அவ்வாறே காலையும் விரித்தபோது அதனால் நீந்துவதுபோல முன்னகர முடிந்தது. நாணலில் முன்கால் சிக்கியதும் ஒரே பாய்ச்சலில் எழுந்து துள்ளிச் சுழன்றது. குரங்குகள் கூச்சலிட்டபடி சேற்றில் விழுந்து நான்குபக்கமும் சிதறி ஒன்றை ஒன்று கைபற்றியும் வால்தொற்றியும் கிளைகளில் ஏறிக்கொண்டன. சில குரங்குகள் ஓடி பீமன் காலைப்பற்றி கைகளில் தொற்றி இடைமேல் ஏறின. பதைத்து ஓடிய ஒரு குட்டி நீரைநோக்கிச் சென்று திகைத்து திரும்பி எதிரில் புலியைக் கண்டு அஞ்சி மயிர்சிலிர்த்து வாய் இழுபட்டு இளிக்க அசைவற்று நின்றது. புலியும் அஞ்சி முகம்தாழ்த்தி உறுமியபடி நின்றது.
குரங்கு மெல்ல அசைந்தபோது புலியும் திடுக்கிட்டு அசைந்தது. குரங்கின் சிறுசெவி மட்டும் முன்னும் பின்னும் அசைய புலியின் வால் ஐயத்துடன் சுழித்து நெளிந்தது. மேலே குரங்குகள் கூச்சலிட்டு கிளையை உலுக்கின. பீமனின் உடல்மேல் தொற்றியிருந்த குரங்குகள் மேலேறி தலைமேலும் தோள்களிலும் நின்று எம்பி எம்பி கூச்சலிட்டன. புலி ஐயத்துடன் முன்னங்காலைத் தூக்கி காற்றில் மெல்ல வீசியது. மீசை விடைக்க உடலை நிலம்சேர்த்து முன்னகர்ந்து மீண்டும் கைநீட்டியது. குரங்குக்குட்டி ஈஈஈ என ஓசையிட்டு தொழுவதுபோல கைசேர்த்து ஒடுங்கியது.
அக்கணம் ஓடிவந்த பீமன் புலியை வால்பற்றித் தூக்கி அதே விசையில் மும்முறை சுழற்றி நாணல்மேல் வீசினான். உள்ளே விழுந்து, செந்நிற ஆடை அலைவு என துள்ளி எழுந்து, மீண்டும் அமிழ்ந்து, மீன் போல அப்பால் தோன்றி, துள்ளித்துள்ளித் தெறித்து அது விலகி ஓடியது. அதன் வால்சுழல்வது தொலைவில் தெரிந்து மறைந்தது. அஞ்சி நின்றிருந்த குரங்கு கையூன்றி விழுவதுபோல் மண்ணிலமர்ந்தது. பின் ரீச் என ஓசையிட்டு சிறுநீர் பீய்ச்சியபடியே ஓடி வந்து பீமனை அணுகி அவனை அறைந்தது. பல்காட்டிச் சீறி கடித்தும் உதைத்தும் கூச்சலிட்டது. அதன் முகக்குழிகள் பதைத்தன. என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிச்சுற்றி வந்து மண்ணை அள்ளி வீசியது.மண்ணில்படுத்துப் புரண்டு எழுந்தது அதைச் சூழ்ந்து குட்டிகள் குதித்தன. அவை சேர்ந்து ஓசையிட்டபடி எம்பிக்குதித்தன. கிளைகளில் தொற்றி ஏறிக்கொண்டு அங்கிருந்தபடி கூட்டோசையிட்டன.
பீமன் அவர்களிடம் ஏதோ கூச்சலிட்டு பேசியபடி ஓடிவந்தான். அவன் விழிகள் தன் மேல் பதிவதை உணர்ந்தபோது தருமன் அறியாமல் பதுங்க முயன்றார். பீமன் அவரை அறியவே இல்லை எனத் தெரிந்தது. கூவியபடி பாய்ந்து கிளைமுனையைப்பற்றி ஆடி மேலேறி இலைத்தழைப்புக்குள் சென்று அகன்றான். கிளைகள் கலைந்து அலையெழுப்ப அவர்கள் காட்டின் ஆழத்திற்குள் மறைந்தனர். மீன்கூட்டம் மூழ்கியபின் நீர்ப்பரப்பு என பசப்பு அசைவிழந்தது. தருமன் அதை நோக்கியபடி சற்றுநேரம் நின்றபின் தன்னை உணர்ந்து உடல் மீண்டு நீள்மூச்செறிந்தார்.