சூழியல்,கடிதங்கள்

அன்பின் ஜெ.எம்.,.
‘மென்னடை மரையா துஞ்சும்’எனக் கபிலனின் குறுந்தொகைப்பாடல் வரியில் சுட்டப்படும் ‘மரை ஆ’ என்பது எந்த விலங்கைக் குறிப்பிடுகிறது என்பது தெரியவில்லை.
உரையாசிரியர்கள் வெறுமே -மரையா என்பது ஒரு காட்டு விலங்கு என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆ- பசு,
மரை-மான்
எனவே அது பெண்மானைக் குறிக்கிறதோ என நினைக்கிறேன்.காடு பற்றிய அரிய விஷயங்களை அறிந்து வைத்திருக்கும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்ல முடிந்தால் நல்லது.
நன்றி,
எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)
www.masusila.com
http://www.google.com/profiles/susila27

அன்புள்ள சுசீலா

மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லபப்டும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப் படுகிறது. நீலகிரி டார் என்று அதற்கு பெயர். உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடிஅய் அபூர்வமான இந்த விலங்கை ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால் தூரத்து மலைகளில் காணமுடியும். பேன் ஊர்வதுபoோல மலைவிளிம்பு பாறைகளில் வரிசையாகச் செல்லும்.

இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது. இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான். ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு

ஃரைபிள் கண்டுபிடிக்கப்பட்டபோது தூரத்து மலையில் ஏறும் இந்த ஆட்டை தொலைவில் இருந்து குறிபார்த்து சுட்டுத்தள்ளும் விளையாட்டு காலனியாதிக்கவதிகளுக்கு பிரியமானதாக இருந்தது இதன் எண்ணிக்கை கணிசமாக குறைய அது வழிவகுத்தது

கேரளத்தில் பீர்மேடு பகுதி மலைகளிலும் உள்ளது

ஜெ

அன்புள்ள ஜெ,

பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தை நிச்சயமாக வெகுவாகக் குறைக்க முடியும், முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும் கூட. நான் பணி புரிவது எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தின் தொழில் நுட்பப் பிரிவில். ஆகவே, ‘பாதுகாப்பு’ முறைகள் மற்றும் முக்கியத்துவம் பற்றி அவ்வப்போது வலியுறுத்தப்படும். என்னுடைய முறை வந்த போது நான் உணர்த்த முற்பட்டது சூழலியல் பாதுகாப்பு பற்றி; குறிப்பாக பிளாஸ்டிக் உபயோகம் பற்றி. பிளாஸ்டிக் சரும பைகள் மலிவாக கிடைக்கிறது என்பதாலேயே அதை நிறையவே வீணாக்குகிறோம். கடைகளில் ஒரு பைக்கு இரண்டு பைகள் கொடுக்கிறார்கள், மலிவு என்பதால். அதனால் சூழலுக்கு உருவாகும் கேடு பற்றி உணர்வதில்லை. இதற்கான மாற்று துணிப் பைகளாகவே இருக்க வேண்டும். காகித பைகள் ‘சூழலுக்கு நண்பன்’ என்கிற அடையாளம் பற்றி யோசிக்க வேண்டும். மரங்களை அழித்தே காகிதப் பைகளை உருவாக்குகிறோம். இன்றைய சூழலில் மரங்களே நமக்கு மிக இன்றியமையாதவை. மேலும், கிரீன் ஹவுஸ் (நல்ல தமிழ்ப் பெயர் உண்டு, நினைவிற்கு வர மறுக்கிறது) வாயுக்களை உறிஞ்சிக் கொண்டு, நமக்கு பிராண வாயுவைத் தருவதும் மரங்களே. ஒருபுறம் காகிதப் பைகளுக்காக அழிக்கப்படும் மரங்கள், மறுபுறம் இப்பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் வெளிவிடும் கரியமில வாயு முதலான கிரீன் ஹவுஸ் வாயுக்கள். இவ்வாறாக விளைவுகள் இரட்டிப்பாகிறது. இதையெல்லாம் நம் கருத்தில் ஏற்றி, இப்பொருட்களின் தேவையை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

Valliappan

முந்தைய கட்டுரைராஜாவின் இசை
அடுத்த கட்டுரைஅ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப் பயணம்