நஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்

1

பத்தாண்டுகளுக்கு முன்பு வாமுகோமு விஜயமங்கலத்திலிருந்து வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரு சிற்றிதழைக் குறித்து சில வரிகளில் நான் ஒரு மதிப்புரை எழுதியிருந்தேன். இலக்கியத்தை ஒரு அவச்சுவை விளையாட்டாக ஆக்கும் முயற்சி அவ்வெழுத்துகளில் இருப்பதாக. ஆனால் அவ்வப்போது அசலான நகைச்சுவை உணர்ச்சி அவற்றில் வெளிப்படுவதாகவும் கூறியிருந்தேன். குறிப்பாக அவ்விதழில் “அன்புள்ள கதலா…” என்று ஆரம்பித்து எழுதப்பட்டிருந்த ஒரு படிக்காத கிராமத்துப் பெண்ணின் காதல் கடிதம் போன்ற கவிதை சுவாரசியமாக இருந்தது.

தமிழின் இரண்டு முதன்மையான இலக்கியப்போக்குகளுக்கும் வெளியே சில எழுத்துமுறைகள் உண்டு. வணிகப் பேரிதழ்களில் கேளிக்கையை முதன்மையாகக் கொண்ட எழுத்து, அவற்றுக்கு மாறாக வந்து கொண்டிருந்த சிற்றிதழ்சார் எழுத்து. இவை இரண்டுக்கும் தொடர்பின்றி வந்துகொண்டிருந்த எழுத்துக்கள் முகம், தென்மொழி போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்த தனித்தமிழ் மற்றும் மரபிலக்கிய எழுத்துக்கள் ஒரு வகைமை. பல்வேறு வகையான குழுக்களால் நடத்தப்படும் பசுமை, நமது நம்பிக்கை போன்ற சிற்றிதழ்களில் சுயமுன்னேற்றவகை எழுத்துக்கள் இன்னொரு வகைமை. இவை ஒவ்வொரு வகைமையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இவற்றில் ஒன்று இலக்கியச் சிற்றிதழ்களின் வரிசையில் அடங்காது ஒரு படி கீழே வந்து கொண்டிருந்த குறுஇதழ்கள். முங்காரி, தொடரும், கல்வெட்டு பேசுகிறது போன்றவை உதாரணம். அவ்வகைமையைச் சேர்ந்த சுந்தர சுகன் போன்ற பிரசுரங்களில்தான் வா.மு.கோமு அதிகமும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு எழுத்து மரபாகவே இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். ஷாராஜ், ஹரிணி போன்ற சில பெயர்களை அப்போது பார்த்த நினைவுள்ளது. இவர்களின் எழுத்து இலக்கியப் படைப்பாக ஆவதற்கு ஒரு படி குறைவானது. ஆனால் வார இதழ் படைப்புகளை விடமேலானது. அடிப்படையான அவதானிப்பும், சுவாரசியமும் கொண்டது

பின்பு வா.,மு.கோமுவை நான் அடையாளம் கண்டு கொண்டது உயிர்மையில் அவர் எழுதிய குட்டிப் பிசாசு என்னும் சிறுகதை வழியாக. ஒரு குறிப்பிடத் தகுந்த இலக்கியப் படைப்பு என்ற எண்ணம் ஏற்பட்டது. உயிர்மையில் ஒரு வாசகர் கடிதத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தேன் என்பது என் நினைவு. திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் இருக்கும் ஒரு பெண்ணின் பல்வேறு ஆண் தொடர்புகளை, ஒவ்வொரு தொடர்பிலும் அவள் கொள்ளும் விதவிதமான பாவனைகளை நகைச்சுவையும் சிறிய எரிச்சலும் கலந்து சித்தரித்தது அந்தப் படைப்பு. அதன் பின்னர் வா.மு.கோமுவின் எழுத்துக்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனத்திற்குரிய படைப்பாளி, ஆனால் மேலும் ஏதோ ஒன்றை அவரிடம் எதிர்பார்க்கிறேன் என்னும் இருநிலை தான் எனக்கிருந்தது.

’அழுவாச்சி வருதுங் சாமி’ என இந்த சிறுகதைத் தொகுதியை முன்வைத்து அவரது எழுத்துக்கள் மீதான எனது உளப்பதிவை தொகுத்துக் கொள்கிறேன். வா.மு.கோமுவின் அழகியல் இரண்டு சரடுகளால் ஆனது. ஒன்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் அடித்தளத்தில் செயல்படும் ஒருவனின் கசப்புகளும் நையாண்டிகளும் கலந்த ஒரு படைப்புலகு. இத்தொகுதியிலேயே ’தோழர் பெரியசாமி புதிய தரிசனம்’ ’தோழர் பெரியசாமி சில டைரி குறிப்புகள்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சுட்டலாம். கொஞ்சம் சுயசரிதைத் தன்மை கொண்டவை. இலக்கியக் குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்டவை. பொதுவாக நக்கல், கசப்பு நிறைந்தவை. தொடக்கம் முதலே வா.மு.கோமுவின் எழுத்தில் இவ்வகை படைப்புகள் முக்கியமான அளவு உள்ளன.

தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலை அறிந்த ஒருவரால் தான் எவ்வகையிலேனும் இவற்றை ரசிக்க முடியும். இதில் இருப்பது ஒரு எரிச்சல் என்று சொல்லலாம். தமிழ்க் கருத்தியல் இயக்கம் மீதான ஒவ்வாமை. அதில் உள்ள பாவனைகள் மீதான் எள்ளல். கழிவிரக்கம். அதே சமயம் தமிழ்க் கருத்தியல் சூழலை ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக வெளியிலிருந்து பார்த்து எழுதப்பட்டவை. ஆகவே இவை முன்வைக்கும் விமர்சனத்திற்கு பெரிய மதிப்பேதும் இல்லை. ஆசிரியரின் ஒரு கோணம் என்பதற்கு அப்பால் இவற்றை வாசகன் கருத்திலும் கொள்ளவேண்டியதில்லை

இக்கதைகளில் அவ்வப்போது வரும் மெல்லிய கிண்டல் மட்டுமே சிறுபுன்னகைக்கு உரியது. இக்கதைகள் காட்டும் இதே எரிச்சலை இத்தொகுதிக்கு ’இப்படியே இருந்துவிட்டுப் போகலாமேடா’ என்ற பெயரில் சுகன் எழுதிய முன்னுரையிலும் காண முடிகிறது. சுகன் சௌந்தர சுகன் என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தியவர்.இவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். மிக நேர்மையான தீவிரமான இளைஞர். அர்ப்பணிப்புடன் பொருள் இழப்புடன் சுகன் இதழை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் அறிவியக்கத்தின் வீச்சை வாசித்துப் புரிந்து கொள்ளும் உழைப்பை அவர் அளிக்கவில்லை. ஆகவே அதன் மையப் பெருக்கில் நுழைவதற்கான அறிவார்ந்த தகுதியை அடையவும் இல்லை. விளைவாக அதன் மீது ஒரு ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டு அதேசமயம் விலகவும் முடியாமல் அதன் விளிம்பிலேயே திரிந்து கொண்டிருந்தார்.

இன்று எண்ணுகையில் சுகன் இதழில் பெரும்பாலான படைப்புகள் முதிரா முயற்சிகளாகவும் அவ்வப்போது எளிய சீண்டலாகவும் இருப்பதை நினைவுகூர்கிறேன். ஒரு தீவிர இலக்கிய வாசகன் அவற்றின் உண்மையான தீவிரத்தைப் புரிந்து கொள்ளும் போதே அவற்றின் ஆழமின்மையும் உணர்ந்து கொண்டிருப்பான். இவ்வியல்புகள் அனைத்தும் வா.மு.கோமுவின் படைப்புகளிலும் உள்ளன. அனேகமாக ஒரு சிற்றிதழுடன் தொடர்புடையவர்கள் அச்சிற்றிதழின் அடிப்படை இயல்புகளை தாங்களும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம்.

வா.மு.கோமு குறிப்பிடத்தகுந்த சிறுகதை ஆசிரியராக தெரியத் தொடங்கியது அவர் வழக்கமான சிறுகதை வடிவிற்கு வந்து ஈரோடு, திருப்பூர் வட்டாரத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளை எழுதத் தொடங்கிய பிறகுதான். பின்னலாடைத் தொழில், நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையின் ஒரு கோணம் நம்பகமாக இவரது படைப்புகளில் வெளிப்பட ஆரம்பித்தது. இத்தொகுதியிலும் முதல்வகைக் கதைகள் உள்ளன. இரண்டாம் வகைக்கதைகளே எனக்கு முக்கியமெனப் படுகின்றன

வா.மு.கோமுவின் முக்கியத்துவம் எப்படி வருகிறது? அதுவரைக்கும் அவ்வாழ்க்கையை எழுதிய பெரும்பாலான படைப்பாளிகள் முற்போக்கு அணுகுமுறை கொண்டிருந்தார்கள். உழைப்பவர்களை ஆதரித்து அவர்களுக்காக வாதிட்டு கசிந்து கண்ணீர் மல்கும் தோரணை அவர்களுக்கிருந்தது. கூடவே அம்மக்களுடைய வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டு அணுகுமுறை. இவை சில வாசல்களைத் திறந்தன என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக அடித்தள மக்களின் வாழ்க்கையை ஒரு பெரிய வரலாற்றுப் பின்புலத்திலும் பொருளியல் பின்புலத்திலும் வைத்துப்பார்க்கும் சித்திரத்தை இடது சாரிகளால் தான் அளிக்க முடிந்தது.

uu

ஆனால் அதன் மிகப்பெரிய பலவீனம் என்பது அவ்வெழுத்தாளன் தன்னை அவர்களில் ஒருவனாக இல்லை என்பதே. அவன் அவர்களை விட மேம்பட்டவனாக, அரசியல் மற்றும் தத்துவ பயிற்சி கொண்டவனாக, மனிதாபிமானம் நிறைந்தவனாக கற்பிதம் செய்து கொள்ளும் இடத்தில் இருக்கிறான். ஆகவே குனிந்து பார்த்து அனுதாபத்துடன் எழுதும் ஒரு கோணம் அவற்றில் வந்துவிட்டது. ஏதோ ஒருவகையில் அவன் தன் பார்வைக்காக அவ்வாழ்க்கையைத் திரிக்கிறான். அவ்வாழ்க்கையில் இருந்து அவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை, அவன் அவ்வாழ்க்கையை மறு ஆக்கம் செய்பவனாக இருக்கிறான். சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் பாரதிநாதன் எழுதிய தறியுடன் என்னும் பெருநாவல்.

நேரடியாக முற்போக்கு இயக்கத்துடன் தொடர்பில்லை என்றாலும் கூட இவ்வாழ்க்கையை எழுதிய சுப்ரபாரதி மணியன் எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் கூட இந்த விலகல் அணுகுமுறை அழுத்தமாக உண்டு. அது அவர்களுடைய அறிவுஜீவி சுயத்தில் இருந்தே உருவாகிறது.

மாறாக வா.மு கோமு முற்றிலும் அவர்களில் ஒருவராக இருக்கிறார். ஆகவே அவருக்கு அம்மக்கள் மேல் எந்த அனுதாபமும் இல்லை.இருப்பது தன்னிரக்கமும் கசப்பும்தான். ஆகவே அவர்களுடைய சிறுமைகளை நடிப்புகளை கயமைகளை எந்த தயக்கமும் இன்றி சொல்ல அவரால் முடிகிறது. இக்காரணத்தால் முன்னரே குறிப்பிட்ட எழுத்துக்கள் தொடாத பல இடங்களை இவை சென்று தொட்டு உயிர்பெறச்செய்கிறன.

இரண்டாவதாக சென்ற தலைமுறை வரை எழுத்தாளர்களை கட்டிவைத்திருந்த ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை வா.மு.கோமுவிடம் இல்லை. பாலியல் மீறலை அறக்கண்டனத்துடன் அவர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் நுகர்ந்தும் வெறுத்தும் ஏமாற்றியும் களியாட்டமிடும் இவ்வாழ்க்கைப் பரப்பை ஒருவகையான கொண்டாட்டமாகவே அவர் பார்க்கிறார். அதற்கு வெளியே இருக்கும் வாசகனுக்கு அது கீழ்மையின் களியாட்டமாகத் தெரியலாம். ஆனால் காமம் குரோதம் எனும் அடிப்படை உணர்வுகளின் ததும்பலாகவே அவனால் அவற்றை காண முடியும். வா.மு.கோமுவின் உலகில் அவர் அவர்களுடன் சேர்ந்து அக்களியாட்டத்தை நிகழ்த்துவது தெரிகிறது. இந்த இருகூறுகளால் வா.மு. கோமுவின் கதைகள் தமிழிலக்கியத்தில் ஒரு தனியிடத்தைப் பெறுகின்றன.

வா.மு.கோமுவின் இத்தொகுதியில் அவருடைய தனித்தன்மை வாய்ந்த எழுத்தை அடையாளம் காட்டும் இரு கதைகளை ஒன்று, ‘நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி’. தலைப்பை வாசித்ததும் இக்கதை இன்றைய தமிழ்ச் சூழலில் எந்த நிலைபாடு எடுத்து எழுதப்பட்டிருக்கும் என்று வாசகனுக்கு ஓர் எண்ணம் வரும். அல்லது வேண்டுமென்றே அதற்கு எதிர்நிலைபாடு எடுத்திருக்கக்கூடுமோ என்று கூட அவன் ஐயப்படலாம். அவ்விரண்டுக்குமப்பால் ஒரு மூர்க்கமான நேர்மையுடன் நின்றிருக்கிறது இக்கதை.

டீக்கடை வாசலில் ”சாமி கொஞ்சம் டீத்தண்ணி ஊத்துங்க” என்று தம்ளரை ஏந்திநின்று கேட்கும் நஞ்சனின் சித்தரிப்பில் தொடங்குகிறது கதை. டீக்கடையில் கவுண்டர்கள் வருகிறார்கள், ‘பொறணி’ பேசுகிறார்கள்.நாளிதழ் வாசிக்கிறார்கள். எழுந்து செல்கிறார்கள். பேருந்து வந்து செல்கிறது. நஞ்சனின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இறங்கி கெஞ்சி மன்றாடி ஒரு தருணத்தில் கண்ணாடிக் குவளைகளை உடைத்து வீசி விட்டுச் செல்கிறான். அந்த இடத்தில் கதை இன்னொரு கட்டத்திற்கு திரும்புகிறது.

தங்கள் மேல் சுமத்தப்படும் இந்த இழிவுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நஞ்சனின் தந்தையும் நஞ்சனும் தங்கள் துடுக்குத்தனம் வழியாக மீறல்கள் வழியாக ஆற்றும் எதிர்வினைகள் கதையாக வளர்கின்றன. தன்னை அடித்த கவுண்டரின் கிணற்றுக்குள் இறங்கி ஒன்றுக்கடித்துவிட்டு செல்லும் நஞ்சனின் தந்தையும் சரி, ஊர்க்கவுண்டர் செத்துவிட்டார் என்று பல ஊர்களுக்குச் சென்று செய்தி சொல்லி காசு சம்பாதித்துவிட்டு பல நாள்கள் தலைமறைவாகிவிட்டு திரும்பி வரும் நஞ்சனும் சரி, தங்கள் மீறலை ஆயுதமாகக் கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிர்வினையாற்றுகிறார்கள்.

இது கிராமத்தில் ஒரு வகை விளையாட்டாகவே நடக்கிறது. சமயங்களில் அடிதடி. பெரும்பாலான தருணங்களில் “சரிவிடு அவன் புத்தி அப்டித்தான்” என்று சமரசம். ஏனென்றால் தலித்துக்கள் இல்லையேல் விவசாயவேலைக்கு ஆளில்லை. அதைச் சித்தரித்துச் செல்லும் கதை உயர்ஜாதிப்பெண்ணைக் காதலித்துக்கூட்டிக் கொண்டு போகும் நஞ்சனின் மகனை காட்டுகிறது. நஞ்சன் அதன் பொருட்டு அடிவாங்குகிறான். ஆனால் சில நாள்கள் கழித்து இரவில் வந்து கதவைத் தட்டும் நஞ்சனின் மூத்தமகனிடம் அம்மா பதறிக்கொண்டு கேட்கிறாள். “என்ன ஆச்சு? அந்தப்பிள்ளை என்னவானாள்?”

“அது ஆவாது அம்மோ அவளுக்குச் சோறாக்கத் தெரியலே. ஒரு மண்ணும் தெரியலே. ஆட்டுக்கறி கோழிக்கறி மாட்டுக்கறி ஒரு கறியும் திங்கமாட்டாளாம் .நானும் திங்கப்படாதாம் .அவ சொல்றப்ப தான் தொடணுமாம். ஆவறதில்லேன்னு போட்டுட்டு வந்துட்டேன்” என்கிறான் மகன். நஞ்சன் மனதில் “இப்பதாண்டா நீ எம்பட பையன்” என்று நினைத்துக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்துக்கொள்கிறான்.

இந்தக் கதை நமது கிராமப்புறங்களில் இருக்கும் அசாதாரணமான ஒரு அதிகாரச் சதுரங்க ஆட்டத்தை முன் வைக்கிறது. இதே விஷயத்தை என் இளமைப்பருவ அவதானிப்பிலிருந்து நானும் ஓரிரு இடங்களில் சொல்லியிருக்கிறேன். ஒடுக்கப்படும் தலித்துகள் கேலி கிண்டல் மீறல் வழியாக எதிர்வினையாற்றுவது. சோ.தருமன் இதை வேறுவகையில் எழுதியிருக்கிறார், அவருடைய காடுவெட்டி முத்தையா [தூர்வை] ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

இக்கதை உறையிலிருந்து வாளை உருவும் ஒளியுடன் அமைந்திருக்கிறது. கீழ்மை நிறைந்த ஒடுக்குமூறை ஒரு தட்டு என்றால் இரக்கமற்ற மீறல் மறுமுனையிலிருக்கிறது. அது நஞ்சனின் மகனின் தலைமுறையிடமல்ல, நஞ்சனிடமும் அவன் தந்தையிடமும் இருந்திருக்கிறது எனும்போது மானுடமனம் அளக்கமுடியாதென்று தோன்றுகிறது. அது ஒரு வரலாற்று தொடர்ச்சி கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. எளிமையான முற்போக்கு- மனிதாபிமான- சமூகவியல் ஆய்வுக் கோணங்களுக்கு அப்பாற்பட்டு அத்தனை கருவிகளைக் கொண்டும் விளக்க வேண்டிய ஒரு சமூக உண்மையின் சித்தரிப்பாக நின்றிருக்கிறது இந்தக் கதை. தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளின் வரிசையில் இக்கதையை வைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. நெடுநாட்களுக்கு இக்கதை வினாக்களை எழுப்பிக் கொண்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

இக்கதையின் இன்னொரு முகம் என்று ’திருவிழாவுக்குப்போன மயிலாத்தாள்’ ஐ சொல்லலாம். இங்கு தலித்துக்கு பதில் பெண். கணவனிடம் மயிலாத்தாள் கொண்ட பணிவும் குறுகலும் அவனுடைய துடுக்கும் திமிரும் கதை நெடுகிலும் சித்தரிக்கப்படுகிறது. குடி, சுரண்டல், பாலியல் அத்துமீறல், வன்முறை என்று தான் மனைவியை நடத்துகிறான் கணவன். திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள்ளேயே கணவனெனும் விசித்திரமான மிருகத்தை மயிலாத்தாள் அடையாளம் கண்டுவிடுகிறாள். திடீரென்று சென்னிமலைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் மீண்டும் மீண்டும் மது அருந்துகிறான். சற்று வழி தவறி தொலைந்துவிட்ட மயிலாத்தாளைப் பிடித்து பொது மக்கள் முன்னிலையில் அடிக்கிறான்.

அவளை அப்படியே விட்டுவிட்டு குடிவெறியில் வீடு திரும்பிவிடுகிறான். ஒருவழியாக அங்கே இங்கே அல்லாடி வீட்டுக்கு வந்து கணவனைச் சந்திக்கும் மயிலாத்தாளை ஓங்கி அறைகிறான். சட்டென்று அவள் அவனை அறைந்து வீழ்த்தி ”மாமா இப்படியே சும்மாங்காட்டி முதுகில என்னை மொத்தினேன்னா எங்கூர்ல ராசாத்தி அக்கா செஞ்ச மாதிரி மாமா உனக்கும் நானு செஞ்சு போடுவேன் மாமா. ராசாத்தி அக்கா அவ புருஷனுக்கு சோத்தில வெஷம் வெச்சு கொன்னுபோட்டா. அதுமாதிரி உன்னயக் கொன்னு ரெண்டு நாள் அழுதுபோட்டு நான் எங்கூருக்கு போயிடுவேன் மாமா” என்கிறாள். ஒரு கணத்தில் தராசு மறு தட்டை அடைந்துவிடுகிறது. இத்தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று இது.

”கூட்டப்பனை சாவக்கட்டு” கிராமத்தில் மிக நுட்பமாக நிகழும் அதிகாரச் சுரண்டல்களைக் காட்டுகிறது. ஊர்க்கவுண்டன் எப்படி ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பலியாடுகளை தேடி கண்டுபிடித்து அவர்களை மாட்டிவிட்டு விலகிக் கொள்கிறான் எனும் சித்திரம் கூரியது. தந்திரம் மூலமே கிராமத்தின் மொத்த அதிகாரத்தையும் அவன் கையில் வைத்திருக்கும் சித்திரம் கூர்மையுடன் சொல்லப்படுகிறது. வெறும் தந்திரத்தின் கதை அல்ல இது. செல்வம், அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அடித்தள மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு உயர்சாதியினர் ஆடும் அதிகாரவிளையாட்டுதான் அந்த சேவல்கட்டு.

இத்தொகுதியில் உள்ள இத்தகைய கதைகள் வழியாகவே வாமு கோமு தமிழ் சிறுகதை இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறார் என்று நினைக்கிறேன்.

 

[அழுவாச்சி வருதுங் சாமி. சிறுகதைகள். வா.மு.கோமு. மணல்வீடு வெளியீடு]

வா.மு கோமு இணையப்பக்கம்

முந்தைய கட்டுரைகாடு – பிரசன்னா
அடுத்த கட்டுரைஆரோக்கிய நிகேதனம் – கடிதம்