என் பெயர் கிஷோர்(உதவி படத்தொகுப்பாளர்) இருந்து வருகிறேன். நந்தலாலா பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் என்னை பொறுத்தவரை கிக்குஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் ஒரு அப்பட்டமான
copy தான் நந்தலாலா . தயவு செய்து நீங்கள் kikujiro படம் பார்க்க வேண்டும். அந்த அருமையான படத்திலிருந்து including range of shots வரை அப்படியே பேஸ்ட் பண்ணிருக்கிறார் . இப்படி copy பண்ணுவது சரியான முறையா, சொல்லுங்கள்?
இந்த படத்தை சர்வதேச விழாவிற்கு எடுத்து செல்ல முடியுமா? இந்த படத்தை இப்படி
“மெதுவாகச்செல்லும் காட்சியமைப்பு. பெரும்பாலும் அகலமான படச்சட்டங்கள். நாம் முற்றிலும் எதிர்பாராதபடி ஆரம்பிக்கும் முற்றிலும் வேறுவகையில் முடியும் காட்சித்துணுக்குகள். யதார்த்தத்தை விட குறியீட்டுத்தளத்தில் நிகழ்வதாக தோன்றும் நிகழ்ச்சிகள். கூடவே இழைந்துவழியும் அற்புதமான இசை. தாயை தேடிச்செல்பவர்கள் வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் பேரன்பை கண்டுகொண்டே செல்கிறார்கள். தாங்களே தாய் ஆகிறார்கள்” எழுதுவது சரியா?
இதை பற்றி நாம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்.என்னை மிகவும் கவர்ந்த படம் kikujiro அதை நகல் எடுத்த நந்தலாலா இல்லை.
விவாதிக்கலாம்
kishore(asst.editor).
அன்புள்ள கிஷோர்,
நேற்றுமுன்தினம் நான் சென்னையில் இருந்தேன். என் அறைக்கு பாஸ்டன் பாலா, அவரது நண்பர் ரோசா வசந்த் உட்பட பலர் வந்திருந்தார்கள். அப்போது பார்த்திபன் என்ற நண்பர் நந்தலாலாவுக்கும் கிக்குஜிரோ படத்துக்குமான பொதுத்தன்மைகளைச் சொன்னார். நான் அபோதுதான் இந்த விஷயத்தைக் கேள்விப்படுகிறேன். பொதுவாக நான் படம் பார்ப்பது குறைவு.
பின்னர் என் நண்பரான கடலூர் சீனுவிடம் இப்படத்தைப்பற்றி பேசினேன். அவர் இரு படங்களையும் பார்த்தவர். கிக்குஜிரோவில் இருந்து உருவான படம் என்றுதான் அவரும் சொன்னார். ஆனால் நந்தலாலா மேலும் செல்கிறது என்றார். நந்தலாலா முக்கியமான ஒரு திரைச்சாதனை என்றே அவர் சொன்னார். எனக்கு அவரது ரசனை மற்றும் மதிப்பீடுகளில் அபாரமான நம்பிக்கை உண்டு. தனிப்பட்டமுறையில் நான் கிக்குஜிரோ படத்தைப்பார்த்தபின் தான் அதைப்பற்றிச் சொல்ல முடியும்
அப்படியே அது அப்படத்தின் தழுவல் என்றாலும்கூட அதை தமிழில் முன்வைத்துப்பேசுவது ஒன்றும் பிழையல்ல என்றே நான் நினைக்கிறேன். பொதுவாக உலகப்படங்களை தழுவி எடுக்கையில் அவற்றை வணிகசினிமாவுக்குள் கொண்டுவரவே தமிழில் முயல்கிறார்கள். காசாக்கவே முயல்கிறார்கள். அதேபோன்ற ஒரு கலைப்படமாக எடுக்க முனைவதில்லை.
மிஷ்கினின் இந்தப்படம் முழுக்கமுழுக்க ஒரு கலைப்படமாகவே உத்தேசிக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது. கலைப்படம் என்ற கிளையே இல்லாத தமிழில் இது ஒரு முக்கியமான தொடக்கம் என்றே நான் நினைக்கிறேன்.
நான் அறிந்தவரை இதை எடுப்பதற்காகவும் வெளியிடுவதற்காகவும் ஐந்துவருடங்கள் மிஷ்கின் போராடியிருக்கிறார். தன் முக்கியமான படைப்புவருடங்களை செலவிட்டிருக்கிறார், வணிகரீதியான பலத்த இழப்புகளைச் சந்தித்திருக்கிறார். இன்று இந்தப்படத்தை தன் கைப்பொருளை பெருமளவுக்கு செலவிட்டே வெளியிட முற்பட்டிருக்கிறார்.அது ஒரு பெரிய சோதனை. அதில் அவருக்கு எந்தவகையான வணிக லாபமும் கிடைக்கப்போவதில்லை.
கேளிக்கையம்சமே இல்லாத ஒரு கலைப்படம் ஆகையால் இதை பொதுவான ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்றே நான் நினைத்தேன். மாறக திரையரங்குகளில் இந்தப்படம் கணிசமானவர்களால் ரசிக்கப்படுகிறது என்கிறார்கள். இளையராஜாவின் இசை அதற்கு பெரிதும் உதவுகிறது என்று திரைச்சூழலில் சொன்னார்கள்.
இந்தப்படம் வணிக ரீதியாக தப்பித்துக்கொள்ளும் என்றால் வருடத்துக்கு இரண்டு படங்கள் இவ்வகையில் வரக்கூடும். அப்படி வந்தாலே தமிழில் வேறு ஒரு திரைமரபு உருவாகிவிடும். நமக்கும் அடூர்கோபாலகிருஷ்ணன்களும் அரவிந்தன்களும் இருப்பார்கள்.
ஆகவே எந்தவகையிலும் இப்படம் ஒரு முக்கியமான முயற்சியே. அது பெற்று வரும் வரவேற்பு முக்கியமான தொடக்கமே.
ஜெ