குறளுரை- கடிதங்கள் 7

maxresdefault

 

அன்புள்ள ஜெ,

குறளுறை சிறப்பாகவும் செறிவாகவும் இருந்தது. குறள் வாசிப்பின் புதிய சாத்தியங்களை திறந்தது.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

என்ற குறளை பள்ளி மனப்பாடப்பகுதியில் படித்தபோதே, அதெப்படி ஒருத்தன் நன்னயம் செய்ய முடியும் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். கடுமையாக அக்குறளை பின்பற்றியிருக்கிறேன், கிண்டல் கேலி செய்யப்பட்டிருக்கிறேன். ஒருவேளை ‘அவர் நாணும்’ அளவுக்கு பண்ணவில்லையென்று நினைக்கிறேன்.

கிருஷ்ணனின் வரலாற்றுப் பங்களிப்பும், அவதாரமாக ஆனது பற்றி நீங்கள் எழுதியதை வாசித்திருக்கிறேன்.

இதேபோல ராமர் எப்படி அவதாரமானார் என்று நினைத்ததுண்டு.

ஏகபத்தினிவிரதனாக இருந்ததே போதுமா என்று ஆச்சர்யமாக இருந்தது.

குறளுறையில் குலஅறம் பேரறமாக மாறுவது குறித்து பேசும்போது பொறி தட்டியது. பேரறத்தை உருவாக்கி நிலைநிறுத்தும் காலகட்டத்தில் ராமர் பிம்பம் முன்நிறுத்தப்பட்டிருக்கலாமா? அல்லது ராம வழிபாடு அதற்கும் முந்தயதா?

அன்புடன்

கிரி

***

அன்புள்ள கிரி

ராமனின் கதாபாத்திரத்தில் ஒரு முன்னுதாரண ஆளுமை மட்டுமே உள்ளது. அரசியல் சூழ்ச்சிகள் இல்லை. கிருஷ்ணன் அரசியல் உருவானபின் எழுந்து வந்த ஆளுமை. ராமனுடையது குல அறம். தனிமனித அறம். கிருஷ்ணனுடையது அரசியல் அறம்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

குறளுரைகளைக் கேட்டேன். ஆழமான பேச்சு. முதலில் குறளை நாம் எதிர்கொள்வதைப்பற்றிப் பேசுகிறீர்கள். குறளின் சரித்திரம் என்பதெல்லாம் கூட குறளை நாம் எதிர்கொள்ளும்போது உருவாக்கப்பட்டவைதான் என்பது முக்கியமான திறப்பு. குறளின் அர்த்தம் என்ன என்பது அல்ல கேள்வி. குறளை எப்படி நாம் அர்த்தப்படுத்திக்கொள்வது என்பதுதான். உங்கள் உரை முழுக்கமுழுக்க அதை நோக்கியே சென்றது. நீங்கள் இரண்டுவகையில் அதைச் சொன்னீர்கள். மரபான முறையில் எப்படி குறளை கூர்ந்து வாசித்து அர்த்தம் கொண்டார்கள் என்பது முதலில். தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்க்கையின் அனுபவம் சார்ந்து அதை எப்படி அர்த்தம் கொள்ளவேண்டும் என்று அடுத்ததாக. மிகச்சிறப்பான உரை

பாரதி முருகேசன்

***

அன்பின் ஜெ

திருக்குறள் உரை முழுக்க அதை இன்று எப்படி அர்த்தம் கொள்வது என்பதாகவே இருந்தது. அதில் இரண்டு விஷயங்களை நீங்கள் செய்கிறீர்கள். முதல்நாள் உரையின் முக்கால்பங்கு இன்று அதை அரசியல் இனம் மொழி எல்லாவற்றையும் வைத்து அர்த்தம் கொள்வது மாதிரியோ அல்லது பொதுவான அர்த்தம் கொள்வது மாதிரியோ அர்த்தம் கொள்ளக்கூடாது என்றீர்கள். எப்படி அர்த்தம் கொள்ளவேண்டும் என்று அடுத்ததாகச் சொன்னீர்கள். அதற்கு ஒரு கல்விமுறை உள்ளது. அதில் அதை அடக்கி அறியவேண்டும். அதோடு நம் மனம் வாழ்க்கை ஆகியவற்றின் வைத்து அதை அறியவேண்டும். இந்த உரைக்கு குறளறிதல் என தலைப்பு வைத்திருக்கலாம்

மீனாட்சிசுந்தரம்

ஒரே சுட்டியில் அனைத்து காணொளிகளை காண

குறளினிது – ஜெயமோகன் உரை – Playlist

https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7GrmSRChXKy42VT9RKiRG0M

முந்தைய கட்டுரைஅறியாமைப்பெருக்கு..
அடுத்த கட்டுரைவெண்முரசு கூட்டம் – அரசன் பதிவு