ஜல்லிக்கட்டு, விவாதங்கள்

index

 

ஜெ,

கிருஷ்ணன் கலகக்காரர் என்பதால் போராட்டங்களை ஆதரிக்கிறீர் அதில் வியப்பொன்றும் இல்லை.

 

ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்கு அடிப்படையாக இரண்டு காரணங்களை முன்வைக்கிறீர்கள்.

ஒன்று அங்கு உயிர் வதைக்க படுகிறது. இரண்டு உயிர் பலி கூடாது என்ற பௌத்த, சமண சிந்தனை தான் இருப்பதிலேயே உயரிய சிந்தனை/ தத்துவம் எனவே அதை நடைமுறை படுத்தவேண்டும். இரண்டிலும் முரண்படுகிறேன்.

 

ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு. யுத்தம் அல்லது நேரடி மோதலின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் தான் விளையாட்டு. அதற்கென்று சில தவிர்க்கமுடியாத குணாதிசயங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது மனதில் வெறி, உடலுக்கு வலி அல்லது வதை. இன்று விளையாட்டு நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் அனைவரும் பயிற்சியின் போதும், போட்டியின் போதும் கடும் வலியையும், வேதனைகளையும் உங்கள் மொழியில் வதைகளையும் சந்தித்து தான் வந்துள்ளனர். இதில் இவர்களுக்கு பயன், நிறைவு, மகிழ்வு உண்டு எனலாம் ஆனால் இவையெல்லாம் என்னவென்றே தெரியாத வயதில் இருந்து குழந்தைகளுக்கு பயிற்சி மூலம் வலி/வதைக்க படுகிறது.

 

வதை கூடாது என்றால், காரண காரியங்களை ஒன்றும் அறியாத சிறார்களை விளையாட்டு போட்டிக்கு அனுமதிக்க கூடாது. அப்படியென்றால் உலகில் விளையாட்டே இருக்காது.

 

குழந்தை என்றாலும் ஆறறிவு கொண்ட மனித இனத்தை விலங்குகளுடன் ஒப்பிடக்கூடாது என்றால், உங்கள் குற்றச்சாட்டு போல் போட்டியின் போது காலை பயந்து,மிரண்டு நடுங்கி போகிறது என்பது மிகவும் தவறானது. காளைக்கு அளிக்கும் பயிற்சியை நேரில் கண்டவன் என்ற முறையில் கூறுகிறேன் தன் கொம்பை, திமிலை பிடிக்கும் யாரையும் தூக்கி எறியவேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். ஒன்று தன் அருகில் வருபவனை தூக்கி எறியும் அல்லது அவனிடம் இருந்து தப்பி ஓடி செல்லும் இதற்கான சிறப்பான பயிற்சியை அது பெற்றிருக்கும். மற்றவை உங்கள் கற்பனையே.

 

பிராணிகள் நல சங்கங்களால் மிக உயரிய அளவில் நடத்தப்படும் நாய்கள் கண்காட்சியில் சிறந்த நாயை தேர்ந்தெடுக்க போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் வெற்றி பெறும் நாய் கடும் பயிற்சிக்கு பின் தான் அந்த நிலைக்கு வரமுடியும்.

 

மனிதன் தான் மட்டுமின்றி தன் குழந்தைகளையும், குழந்தையை போல் நேசிக்கும் தன் வளர்ப்பு பிராணிகளையும் விளையாட்டில் ஈடுபடுத்துகிறான். தானும் ஈடுபடுகிறான் தன்னுடன் வாழும் ஆடு, மாடு, கோழி, புறா என்று அனைத்தையுமே விளையாட்டில் ஈடுபடுத்துகிறான். வதைப்பதற்காக அல்ல வாழ்க்கையை மேலும் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்ததாய் ஆக்கிக்கொள்வதற்காவே.

 

இந்த விளையாட்டின் தேவை என்ன, பாரம்பரியம், கலாச்சாரம், அயல் நிதி, தன்னார்வக்குழுக்கள் பற்றி அதிகம் பேசிவிட்டதால் அது இங்கு தேவையில்லை என்று நினைக்கிறன்.

 

குறிப்பு:

 

சீனு கூறுவது போல் போராட்டம் தற்போது தவறான திசையில் செல்வதாக கருதுகிறேன்

 

 

செந்தில்குமார்

 

அன்புள்ள ஐயா

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து இளைஞர்களின் எழுச்சி பற்றிய எனது கருத்துக்கள்

1)        இது காந்தி முன்எடுத்த அறப் போராட்டத்தின் நீட்சி

2)        ஒட்டுமொத்த அரசில்வாதிகளின் மீதான வெறுப்பு

3)        இந்திய அரசியல் சட்ட நடைமுறைன்மீதான நம்பிக்கைஇன்மை

4)        அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையின் வெளிப்பாடு

 

இந்த போராட்டம் ஒரு மனித சமூகத்தின் அரசியல் மாற்றத்திற்கான மிக சிறந்த தருணம்

 

எனது சிந்தனைகள்

 

1)        தற்சமயம் இருக்கும் மறைமுக தேர்தல் முலம் அரசாங்கத்தை தொடர்தல் (எதிர்காலத்தில் இதையும் மாற்றமுடியும்)

2)        பாராளுமன்றதின் மூலம் சட்ட முன்வடிவம் தயாரித்தல்(உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகளின் அடிப்படையில்)

3)        சட்ட முன்வடிவை மக்களின் நேரடி பார்வைக்கு தெரிவித்தல்

4)        மக்கள் சட்டத்திற்கு நேரிடையாக ஒப்புதல் அளித்தல் ( தனது மொபைல் மூலம் அ) வேண்டும் ஆ) வேண்டாம் இ) மேம்படுத்தவேண்டும் என்ற முறையில் வாக்களிக்க வேண்டும். இங்கு ஆதார்கார்டு தான் செக் பாயிண்ட்)

5)        மாநில ஆளுநர் கீழ் இதை  நடைமுறைபடுத்தவேண்டும்

6)        பெரும்பான்மை மூலம் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

7)        நீதிதுறைன் கீழ் சட்டத்தை நடைமுறபடுத்தவேண்டும்

இவை எனது அடிப்படை சிந்தனை இதை தங்களைபோன்ற சிந்தனையாளர்கள் முன்எடுத்து செல்ல முடியும்

 

(ஐயா நான் கடந்த நான்கு வருடங்களாக தங்களின் இணணயத்தில் இருக்கிறேன். நான் ஒரு தத்துவ மாணவன்(வயது  நாற்பத்திஎட்டு). இது எனது முதல் கடிதம் (இணணயத்திலும்). இந்த துறையில்தாங்கள் எனது மானசீக குரு.

தாங்களின் எழுத்தின் அடிப்படை உண்மை (நிகழ்வுகளை தரவுகளின் அடிப்படைன்மூலம் தொகுத்து கூறுதல்) மற்றும் அறம் (அறியாமைல் இருந்து அறிவை நோக்கிய மானுட மாற்றத்திற்கான வாழ்வில் முறைகள்) என்பது எனது புரிதல்.

உங்களை புரிந்துகொண்டவர்களுக்கு  நீங்கள் ஒரு வரம் அல்லது நிகழ்வு ஏனெனில் ஒரு காட்சியை அல்லது ஒரு படைப்பை கருத்தாக மாற்றுவது சிலருக்கு மட்டுமேயான அறிவுத்திறன். இந்த அறிவு வளர்த்துக்கொள்ள முடியாது. இது குழந்தை பருவத்தில் இருந்து ஊட்டபட்டது. இதன் அடிப்படையில் நான் அதிக கட்டுரைகளை உங்களிடம் இருந்து  வர வேண்டும் என்பது எனது பேராசை

 

உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய வளத்தை விரும்பும்

 

த.சுப்பிரமணியன்

ஆவடி, சென்னை

இனிய ஜெயம் ,

 

நேற்று இரவு கடலூரில்  நல்ல மழை . போராட்டக்காரர்களும் பொதுஜனமும்  குறைந்தது  ஒரு மணிநேரம் மழையில் நனைந்து கொண்டே நின்றிருந்தனர்.  எங்கும் கலைந்து  செல்லாமல் மழைக்குள்ளேயே கலந்து பேசி,  தக்க இடத்துக்கு இடம் மாறி, மீண்டும் கோஷங்களை துவங்கினர்.   தமிழ் நிலத்தில் பல இடங்களிலும் இதே மழை .இதே கட்டுக் கோப்பு.  காலையில் களத்தை சென்று பார்த்தேன்.  போராட்டக் காரர்களுக்கு முன்னால் கம்பீரமாக மாலை மரியாதையுடன் கம்பீரமாக நின்றிருந்தது ஒரு  தத்ரூப காளை  சிலை.

 

இன்று போராட்டம் முக்கியமான புள்ளிக்கு வந்திருக்கிறது.  அது  காளையை காட்சிப்படுத்தக் கூடாத மிருகங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்  என்ற அடிப்படை கோரிக்கை.  கருத்து சொல்லிகளின் குரல் கிளம்பத் துவங்கி இருக்கிறது.   கிடைத்தை தக்க வைத்துக் கொள் [காந்தி சொல்ட்டாருல்ல]  பிறகு அடுத்த அடி  வை. என்கிறாள்கள். அதாவது  இந்த அவசர சட்டம் ஆறு மாதம் மட்டுமே. அடுத்த பொங்கலுக்கு இதே பொழுதுபோக்கை ஆரம்பிக்கலாம் . காரணம் ரொம்ப ஆழமானது.  இத்தனை நாள் கட்டியாக நீடித்த இந்தப் போராட்டம் இனி நீர்த்துப் போக வாய்ப்பு அதிகம். ஆகவே கிடைத்தை தக்க வைத்துக் கொள்வதே  புத்திசாலித்தனம்.

 

இவர்கள் எல்லாம் எந்த காந்தியை வாசித்தார்கள் என புரியவில்லை. காந்தி பத்து கோரிக்கை வைத்து பேரத்தில் ஐந்தை வென்றார் எனில், அவர் வைக்கும் பத்தில் எதுவும் எந்த ஒன்றும்  அறபிழை கொண்டதாக இருக்காது.  அவர் வாங்கும் எதையும்  உரிமையாக மட்டுமே வாங்குவார் சலுகையாக அல்ல.

 

இங்கே அவசர சட்டம் என்பது சலுகை. பட்டியலில் முடங்கி நிற்கும் எருது நீக்கம்  நமது உரிமை.  உண்மையில் இந்த இரவு முதல்தான்  உரிமைக்கான  கோரிக்கை வலுவடைய வேண்டும். இதை மழுங்கடிக்க எழும் எக் குரலும் புறம் தள்ளப்பட வேண்டிய வையே .

 

கண்முன் நிகழும் வரலாற்று தருணத்துக்கு முன் எத்தனை எத்தனை சூம்பிய மனங்கள் என பார்த்துக் கொண்டு இருக்கிறேன். முதல் தளம் காருண்யத்தின் சிகரத்தில் ஒற்றைக் காலில் நின்று மறு காலை  எங்கே ஊன்றுவது என தெரியாமல் திகைத்து நிற்கும்  கூடாது குழுவினர். அடுத்த தளம் என் போன்ற  அப்ராணிகள். மூன்றாவது தளம்தான்  பாவம் இவர்கள் ஆனால் வாதிகள்.  எல்லாம் சரிதான்னா ஆனா…

 

ஒரு ஆனால்வாதி குறிப்பிட்டது மிக மிக முக்கியமானது ” பாருங்க போராட்ட களம் பக்கத்துலயே ஒரு மாடு திங்க ஒன்னும் இல்லாம போஸ்டரை மேயுது ”

 

ஒரு கூடாது வாதி குறிப்பிடத்து ” ஜல்லிக்கட்டின் தேவைக்கான கலாச்சார உள்ளுறை காரணிகள் இன்னும் இங்கே இயங்கி கொண்டு இல்லை”  நல்லவேளை  இந்திர விழா நடத்தக்கேட்டு இந்தக் கூட்டம் கூடி இருந்தால் இந்த வாதி வயாக்ரா உண்டு மாரடைப்பில் மயங்கி இருப்பார்.  கூடாது வாதிகளின்  ஆகப் பெரிய சிக்கல்  அவர்கள்  உணர்ச்சிப் பொங்கல்கள் இல்லாமல்  அறிவு சமநிலையோடு இதை அணுகவேண்டிய கடப்பாடு கொண்டவர்களாக இருப்பது. இதை ஆதரித்து தொலைத்து, இது மொத்தமும் நாளை வரலாற்று பிழை என்றாகிப் போனால், வரலாற்றில் முகத்தைக்  எங்கே  கொண்டு வைப்பது என்றொரு சம்சயம்.

 

வெண் முரசில் ஒரு மந்திரி, ஜராசந்தனின் எழுச்சியின் போது , பின்புல காரணங்களை அக்கு வேறு ஆணிவேராக ஆராய்வார். முடிவின் இறுதியில் அவரும் கழுவில் அமர்ந்திருப்பார். அப்படி பல்வேறு சமுக விஞ்ஞானிகள் இந்த எழுச்சியையும் பிராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். வேலை இல்லா திண்ண்டாட்டம் [இவர்கள் வேலை அற்றவர்கள் என்றே குகா குறிப்பிட்டு இருக்கிறார்]  ஆட்சி மீதான அதிருப்ப்தி , பண மதிப்பு இழப்பு  துவங்கி  விந்து முந்துதல் வரை பல நிலைகளில் ஆய்வுகள் நடக்கிறது.

 

மற்றொரு கோரஷ்டை .  இத்தனை தெளிவுடன் ஒரு இளமைப்படை இருக்கிறது எனில் இதை  வழி நடத்தும் ”யாரோ ” எங்கோ  தோசை சுட்டபடி முகநூலில் இதையெல்லாம் .பார்த்துக் கொண்டிருக்கிறார். வென்ற பின்   தொடர்வண்டி நிலைய அண்டர் க்ரோவ்ண்டில் இருந்து அவர் தோன்றுவார்  என்று உண்மையாக உலவும் நம்பிக்கை.

 

முதலமைச்சர் மரணம் என்றாலும் சரி, சுவாதி  வழக்கின் குற்றவாளி ஆனாலும் சரி  உள்ளே என்ன நடந்தது என கண்டு சொல்லும் யோக்கியதை எந்த ஊடகத்துக்கு இல்லை .  கார்டனில் அம்மா  ஆவி, பீதியில் சசிகலா  நக்கீரனின் தலைப்பு செய்தி. நமது இன்வஸ்டிகேஷன் ஜர்னலிசத்தின் கோமாளித்தனங்களின் எல்லை இதுவரைதான். இவர்கள்தான் அந்த தோசை நாயகனை கண்டு பிடிக்கப் போகிறார்கள்.

 

எந்த சேனலை திருப்பினாலும்  மக்கள் போராட்டத்தில் உங்களுடன் நாங்கள் ஸ்டே வித் அஸ்  என எல்லா சேனலும் முழங்குகின்றன.  இந்த ஊடக முதலாளிகள்தான் [ஜனநாயகத்தின் நான்காவது தூண்] பெரும்பான்மை பெற்ற மோடியை மாய்ந்து காய்ச்சியவர்கள், இன்று  சிவில் சமூகத்தின் ஆதரவற்ற அரசியல் கட்சியின் தலைமை முன் எல்லா விழுமியத்தையும் தூக்கிப் போட்டு விட்டு [மரியாதை நிமித்தமாக] கையது கொண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,நின்றிருந்தார்கள்.   அதனால்தான் இவர்களை களத்தினர் ”கூப்டா மட்டும் வா” என்றுவிட்டனர்.

 

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி  ஜோலார்பேட்டையில் நின்றே கிடக்கும் ட்ரைவர் இல்லா கூட்ஸ் வண்டியை மறித்து வரலாற்று புகழை தக்கவைத்துக் கொண்டது.  ஒரு  கட்சித் தலைவர் என் கட்சியில் இருந்து யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்றார் [இப்போது அவர் கட்சியில் அவர் மட்டுமே இருக்கிறார்]  இதனை ஆண்டு அரசியல் சாதிக்காத சகோதரத்துவம் அங்கே களத்தில் . மேல் கீழ் சாதி இல்லை, மொழி பேதம் மத பேதம், பால் பேதம் இல்லை, எல்லோரும் தோளணைத்து ஓர் அணியில்.

 

கள்ளிச் செடியை  மனிதனை நம்ப வைத்து, அதன் அடுத்த தலைமுறையை முள் இல்லா கள்ளி செடியாக உருவாக்கியதை  பிரகாஷ் சங்கரன் ஒரு முறை சொன்னார்.  செடிகளுக்கு உயிர் உணர்வு உண்டு என நிரூபிக்கப்பட்டு விட்டது.  வெண்டைக்காயை வெடுக் என பறிக்க வரும் ஒருவனைக் கண்டு நிச்சயம் வெண்டைச் செடி பீதி அடைகிறது. மாட்டின் பீதியை  நீதி கருத்தில் கொள்ளும் என்றால், வெண்டை செடியின் பீதியும் நீதி கருத்தில் கொள்ளும். மஞ்சளுக்கு பேடண்ட் எடுத்த எவனாவது  தாவரங்களின் பீதியை நிரூபித்து வெண்டை, உருளை முதல் அரிசி கோதுமை வரை அனைத்தின் அறுவடைக்கும் தடை வாங்கும் நாள் அருகில்தான் இருக்கிறது.

 

இது  அவை போன்ற அன்னியக் கைகளின் அயோக்கியத் தனத்துக்கு எதிரான  பலமான குரல்.  விடையேறு படியானாகிய  சிவன் முதல் , பூம்பூம் மாட்டுக்காரன் வாழ்வு வரை ஒன்று கலந்து காளை .  பட்டியலில் இருந்து காளையை நீக்கு இது பாரதம் முழுமைக்குமான தமிழ் நிலத்தில் இருந்து எழும் குரல்.

 

இந்தக் களத்தில்  நிர்வாகிகள் மட்டுமே உண்டு. ஒருங்கிணைப்பாளர் இல்லை. ஆகவே  சலுகையைக் காட்டி பேரம் பேச இங்கே போராட்டத்தின் ”சார்பான’ ஒருவர் இல்லை. இதுவே நமது பலம்.  அவநம்பிக்கையின் குரல்களை  புறம் தள்ளுவோம். ஒன்றுபட்டோம், வெல்லாவிட்டால்  அது இந்த உலகியற்றியோனுக்கே இழுக்கு.

 

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ
அடுத்த கட்டுரைகுறளுரை, கடிதங்கள்- 6