நாவலைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டுவிட்டதால் எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ஒரு இழையை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன் – சடுதியில் முடிந்துவிடும் வாழ்க்கை, அதன் நிலையாமை, உண்மையில் இந்த அம்சத்தை இப்பொதெல்லாம் நான் காணும், படிக்கும் அத்தனை விஷயங்களிலும் பாம்புத்தொடுகை போல் உடனே பிடித்துவிடுகிறேன் அல்லது அதை மட்டும் அதீதமாக கவனிக்கிறேன்.
‘அவ்வளவேதானா இளமை?’ என்பது போல் அவ்வளவேதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு தினமும் தவிப்படைகிறேன். அப்படி கேட்டுக்கொள்ளாதவர்கள் யார் என கதையில் வருகிறது. இருந்தாலும் முப்பது வயதில் எனக்கு இருக்கும் இந்த தவிப்பு கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிறது. கண்ணெதிரே ஒரு தலைமுறை வயதாகி விட்டதையும், இதோ இப்போதுதான் பார்த்து ரசித்த கலைஞர்கள் எல்லாம் பழைய ஆட்களாக ஆகிப்போனதையும் அதிர்ந்தபடியே தான் நோக்குகிறேன்.
இந்தப் பதட்டத்தை காலங்களை முன்பின்னே கடக்கும் கதையின் அமைப்பு அதிகரிக்கவே செய்கிறது. ஏதோ கனவில் மட்டும் பார்த்துக்கொண்டவர்கள் நேரில் சந்திப்பதைப்போல் இருந்தது கடையில் உட்கார்ந்திருக்கும் குரிசு, குலசேகரத்தில் போத்தி, மலைமேல் அய்யர் போன்ற கிரியின் சந்திப்புகள்.
கிரி, லௌகீக வாழ்க்கையில் தோல்வி அடைவது எதனால் என்ற கேள்வி சில நாட்கள் கழித்து அலைக்கழித்தது. ‘உன் அகங்காரம் தான் காரணம்’ என அய்யர் சொன்னாலும் அது மட்டுமேவா? அவன் சங்கப்பாடல்களில் லயிக்கும் அளவிற்கு நுண்ணறிவு கொண்டவன். ஆனால் கனவுகளில் வாழ்பவன். அதீதங்களை தேடுபவன். பகலில் அடிக்கடி போய் படுத்து தூங்கிவிடுகிறான், இரவில் விழித்திருக்கிறான். அவனது அப்பா தோல்வி அடைந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர் என்பது இங்கு முக்கியம்.. நடைமுறை வாழ்வில் தோல்வி அடைந்தவர்களின் பிள்ளைகள் அது மறுபடி நடக்கக்கூடாது என்பதில் பெரும் பதட்டம் கொண்டவர்கள், ஆனால் அந்த பதட்டம் கிரிக்கு வரவில்லை – அவனது மகனுக்கு வாய்த்தது.
ஆனால்.. அப்படிப்பார்த்தால் எதிர்வீட்டு தமிழ் வாத்தியார் – கம்ப இராமாயண பித்தர். அவர் குடும்பத்துக்கு அனைத்தையும் சரியாக செய்தவர்தான்.. இருந்தும் கடைசியில் அவர் சந்திப்பது வெறுப்பை மட்டுமே. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
காமத்தை முழுமையாக புரிந்து வெல்ல முடியுமா? வெல்லத்தான் வேண்டுமா? குறிஞ்சிப்பூவை பார்ப்பது போல் புறவயமாக காமத்தை செயல்படுத்திப் பார்த்ததுமே ஏன் அவ்வளவு ஏமாற்றம்? மனத்தில் எத்தனை நாட்கள் நிகழ்த்திப் பார்த்தாலும் அலுப்பதில்லையே? காடு என்பது காமமா, இளமையா?
இது ஒரு புறம். மலையன் புரத்தை வெட்டிக்கொண்டு போகப்போகும் சாலை.. பாடம் பண்ணபட்ட கீரக்காதன்….என பதைக்க வைக்கும் காட்டழிவு காட்சிகள்.. . குறிஞ்சியில் உட்காரும் வண்டை பார்த்து ‘இனி எத்தனை தலைமுறை கழித்து வண்டு இனத்திற்கு இந்த தொடுகை வாய்க்குமோ?’ என பரிதாபப்படும் கிரி, மனிதனைப்பார்த்து பரிதாபப்படும் இயற்கை…
காமத்தின் அம்சங்களே இதில் எழுத்து வடிவமாக; நீலி-கிரி சந்திப்பு முதலிலேயே நிகழ்ந்து, எடுத்த எடுப்பிலேயே தழுவி எல்லாம் முடிந்திருந்தால் ஏமாற்றமே மிகுந்திருக்கும். எவ்வளவு ஏக்கத்தை கடந்து எத்தனை பக்கங்கள் தாண்டி எல்லாம் நடக்காமல் நடந்து முடிகிறது? அதுவே அந்த நினைவை துடிப்படங்காமல் இருக்க வைக்கிறது.
மேலே உள்ள பத்திகளே காடு போல் கெச்சலாக இருப்பதும் காரணமாகத்தான் போலும். நாவலில் வரும் காட்டின் மனிதர்கள், மிருகங்கள், பருவங்கள், சம்பவங்கள், ஊர், அன்றாடம் என்று அனைத்தும் ஏற்படுத்திய தாக்கத்தை வார்த்தையில் முறையாக வெளிப்படுத்தினாலே அதன் அணுக்கம் போய் விடும். அப்படியே உணர்வாகவே இருப்பது மேல்.
பிரசன்னா
http://tamilkothu.blogspot.in/