அரவிந்தன் பதில்

aravindan

இல்லாத கறையான்களும் இலக்கிய நச்சுப் பொய்கையும்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம்.

தி இந்து தமிழ் நாளிதழின் இலக்கியப் பக்கங்கள் பற்றிச் சில விமர்சனங்களை (?) முன்வைத்திருக்கிறீகள். உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள், அவதூறுகள், வெறுப்பைத் தாங்கிய சொற்கள் ஆகியவற்றுக்குப் பதில் சொல்வதில் எனக்கு நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. என்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு என்னைப் பற்றிய உங்கள் கருத்துக்களின் பெறுமானம் என்ன என்பது நன்கு தெரியும். எனவே உங்கள் கருத்துக்கள் அனைத்திற்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. எனினும் தகவல் சார்ந்த தவறான பதிவுகளை நேர்செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஏனென்றால் இந்தப் பதிவுகளில் உள்ள தவறுகள் என்னை மட்டுமின்றி, நான் சார்ந்துள்ள நிறுவனத்தையும் என் சக ஊழியர்களையும் பாதிக்கக்கூடியவை.

முதலில் ஒரு விஷயம். தி இந்துவில் எந்தப் பக்கமும் யாருடைய தனிப் பொறுப்பும் அல்ல. அது ஒரு குழுவாலேயே ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது.

என்னுடைய பொறுப்பில் உள்ள இலக்கியப் பக்கத்தில் உங்களை எழுதும்படி கேட்பதில்லை எனச் சொல்லியிருக்கிறீர்கள். அது பொய் என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேலே நான் குறிப்பிட்டுள்ளபடி அது என் பொறுப்பில் இல்லை. அதைக் கவனித்துக்கொள்ளும் அணியின் தலைமைப் பொறுப்பில் நான் இருக்கிறேன். என்னுடைய அணியினரின் பொறுப்பில் வரும் தி இந்துவின் இலக்கியப் பக்கங்களில் நீங்கள் பல முறை எழுதியிருக்கிறீர்கள். அசோகமித்திரனின் பிறந்த நாளை ஒட்டி நாங்கள் உங்களிடமே கட்டுரை வாங்கி வெளியிட்டோம். பெண் எழுத்து குறித்த விவாதத்தில் அம்பை முன்வைத்த கருத்துக்களுக்கு நீங்கள் எழுதிய பதிலை உரிய முக்கியத்துவத்துடன் பிரசுரித்தோம். ஜெயகாந்தனின் மறைவின்போது அவரைப் பற்றி உங்களிடம் கட்டுரை வாங்கிப் பிரசுரித்தோம்.

வெண்முரசு பற்றி ஒரு குறிப்புக்கூட வரவில்லை என்பது தவறான தகவல். வெண்முரசுவை மையப்படுத்தி உங்களுடைய விரிவான நேர்காணலை தீபாவளி மலரில் 12 பக்கங்களுக்குச் சிறப்பான முறையில் வெளியிட்டோம். அதன் சுருக்கமான வடிவத்தை நாளிதழின் இலக்கியப் பக்கத்தில் கிட்டத்தட்ட முக்கால் பக்க அளவுக்கு வெளியிட்டோம். தற்போதைய புத்தகக் காட்சிக்கான சிறப்புப் பக்கங்களிலும் நீங்கள் பங்களித்திருக்கிறீர்கள். தி இந்துவின் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறீர்கள். என்னுடைய அணியினரின் பொறுப்பில் வரும் ஆன்மிக இணைப்பிதழிலும் எழுதியிருக்கிறீர்கள். எங்கள் அணியின் பொறுப்பில் வெளிவந்த முதல் மலர் 2013 தீபாவளியை ஒட்டி வந்தது. அதில் உங்கள் கட்டுரை இடம்பெற்றது.

நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், கண்மணி குணசேகரன் முதலான பலரை இலக்கியப் பக்கங்களில் எழுதும்படி கேட்பதில்லை எனச் சொல்லியிருக்கிறீகள். யுவனின் கதைகள் என்னுடைய அணியின் பொறுப்பில் வரும் சிறப்பு மலர்களில் மூன்று, நான்கு முறை இடம்பெற்றிருக்கின்றன. அண்மையில் வெளியான பொங்கல் மலரிலும் எழுதியிருக்கிறார். இலக்கியம் குறித்தும் இந்துஸ்தானி இசை குறித்தும் கலை இலக்கியப் பக்கங்களில் எழுதும்படி அவரைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நேரமின்மையால் பங்களிக்க இயலவில்லை என்று அவர் சொல்லிவருகிறார்.

நாஞ்சில் நாடனின் கட்டுரையும் பொங்கல் மலரொன்றில் இடம்பெற்றிருக்கிறது. அதன் பிறகும் பல முறை அவரைத் தொடர்புகொண்டு கேட்டுவருகிறோம். நண்பர் நெய்தல் கிருஷ்ணன் இல்லத் திருமணத்தில் அவரைச் சந்தித்தபோது நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் கோர்க்கை விடுத்தேன். பல்வேறு காரணங்களால் நேர நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொன்ன அவர், கூடுமானவரை முயற்சிசெய்து எழுதுகிறேன் என்று சொன்னார். அவரிடமே கேட்டு இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

கண்மணி குணசேகரனின் படைப்பு குறித்த கட்டுரை இலக்கியப் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. மனுஷ்யபுத்திரனின் கட்டுரை, நேர்காணல் ஆகியவை இலக்கியப் பக்கங்களில் வந்திருக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா ஆகியோரும் தொடர்ந்து புத்தகம், இலக்கியம், திரைப்படம் ஆகியவை குறித்துப் பங்களித்துவருகிறார்கள். மலர்களிலும் எழுதிவருகிறார்கள்.

யுவன் சந்திரசேகரும் நாஞ்சில் நாடனும் என் கதைகள் குறித்து ஏதேனும் எழுதியிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அப்படியே அவர்கள் என் கதைகளை எதிர்மறையாக விமர்சித்திருந்தாலும் நான் அதை முக்கியமானதாகவே கருதுவேன். காரணம் அவர்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதை.

2016ஆம் ஆண்டின் முக்கியமான முகங்கள் பட்டியலில் இலக்கிய ஆளுமையாக தேவிபாரதி பெயர் இடம்பெற்றது. அது இலக்கியப் பக்கம் அல்ல. நடுப்பக்கம். அது என் பொறுப்பில் வரும் பக்கமல்ல. ஆனால், உரிய காரணத்தை முன்வைத்தே தேவிபாரதி 2016ஆம் ஆண்டின் முகங்களில் ஒருவராக முன்னிறுத்தப்பட்டார். அந்தப் பட்டியல் ஒரு தனி நபரின் தேர்வாக இருக்க முடியாது என்பது வெளிப்படை.

இதேபோன்றதொரு பட்டியலில் 2014இல் நீங்கள் இடம்பெற்றிருந்தீர்கள்.

அதற்கான சுட்டி:

https://goo.gl/oVnHjp  

கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் பற்றிய செறிவான பதிவுகள் இலக்கியப் பக்கங்களில் வந்துகொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், இமையம், மனுஷ்யபுத்திரன், எஸ்.ரா., சாரு நிவேதிதா, தேவதச்சன், வண்ணநிலவன், ஞானக்கூத்தன், வண்ணதாசன், பிரபஞ்சன், இரா. முருகவேள், முதலான பலரது ஆக்கங்களைப் பற்றியும் கவனப்படுத்தும் குறிப்புகள் / கட்டுரைகள் / நேர்காணல்கள் தி இந்துவில் வந்துள்ளன. போகன் சங்கர், சரவணன் சந்திரன் முதலான இளம் எழுத்தாளர்கள் குறித்தும் தொடர்ந்து எழுதிவருகிறோம்.

முன்னோடிகளான பாரதியார், ந.பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, சார்வாகன், சி.மணி, ஜி.நாகராஜன், லா.ச.ராமாமிர்தம், பூமணி, சோ.தர்மன் பிரமிள் முதலான படைப்பாளிகளைப் பற்றியும் சிறப்பான முறையில் கட்டுரைகள் / நேர்காணல்கள் வெளியிட்டிருக்கிறோம். இவர்களில் யாருடைய பெயரையும் ‘தி இந்து’ என்னும் சொற்களுடன் சேர்த்து கூகிளில் தேடினால் வந்து விழும் இணைப்புகளே இவற்றுக்குச் சான்று. சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை மட்டுமின்றி, விஷ்ணுபுரம் விருது, விளக்கு விருது, இயல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றியும் செறிவான பதிவுகளை வெளியிடும் ஒரே வெகுஜன இதழ் தி இந்துதான். ஜெயகாந்தன், வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் ஆகியோரின் மரணத்திற்கு மிகச் சிறப்பான அஞ்சலிகளை வெளியிட்டிருக்கிறோம். லா.ச.ரா.வின் நூற்றாண்டைச் சிறந்த முறையில் கொண்டாடினோம். இலக்கியத்தைப் பற்றி மட்டுமல்லாமல், நவீன நாடகம், நவீன ஓவியம், நாட்டார் கலை ஆகியவை குறித்தும் காத்திரமான பதிவுகள் வருகின்றன. கலை, இலக்கியம் சார்ந்த உள்ளடக்கம் எந்தப் பகுதியில் வந்தாலும் நாங்கள் அனைவரும் இணைந்தே அதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறோம். இவை அனைத்திலும் என்னுடைய பங்கு கணிசமானது.

எத்தனையோ படைப்பாளிகளைப் பற்றியும் கலை இலக்கியத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் நாங்கள் எழுதியும் தேவிபாரதி என்னும் ஒரே ஒரு பெயர் மட்டுமே ஒருவரது கண்களுக்குத் தெரிகிறது என்றால் அது எங்கள் குற்றம் அல்ல.

எத்தகைய முயற்சிகளிலும் போதாமைகளும் விடுபடல்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். ஆனால், உள்நோக்கம் கற்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

இலக்கியம், நூல் மதிப்புரை பக்கங்களில் பதிப்பகங்களுக்கான இடம் பற்றிச் சொல்கிறீர்கள். நாங்கள் நூல்களின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியே இந்தப் பக்கங்களுக்கான உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கிறோம். படைப்பு, படைப்பாளி ஆகியவற்றுக்குப் பிறகே பதிப்பகம். இதன்படி நற்றிணை உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்களின் பல்வேறு நூல்களுக்கும் உரிய கவனம் கிடைத்துவருகிறது. நற்றிணை பதிப்பகத்தின் நூல் ஒன்றுக்கு (பிரபஞ்சனின் மகாபாரதம்) நானே மதிப்புரை எழுதியிருக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன். வெறுப்பும் கசப்பும் நிறைந்த அபிப்பிராயங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்பதால் தகவல் சார்ந்த பதில்களுடன் நிறுத்திக்கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக்கொள்ளக்கூடிய தகவல்கள் இவை. தகவல் சார்ந்த இந்த மறுப்பை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

*

என்னுடைய எழுத்து, பத்திரிகையாளராக என் செயல்பாடு ஆகியவை பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். வெறும் அட்டைக்குள் சுருங்கிவிடக்கூடிய என் நாவல்களைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் விரிவான மதிப்புரைகளை எழுதியிருக்கிறார்கள். நீங்கள் சொல்லியிருப்பது எதுவுமே விமர்சனம் அல்ல, வெறும் கசப்பு என்பது உங்களுக்கே தெரியும். எனவே அவற்றை நான் பொருட்படுத்த வேண்டியதில்லை.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக உங்களை அறிவேன். உங்கள் இலக்கிய அபிப்பிராயங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் ஆகியவை பற்றியெல்லாம் நான் நன்கு அறிவேன். என்னைப் பற்றி நீங்கள் கூறியிருக்கும் இந்தச் சமயத்தில் அவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவேன். இந்தக் கட்டுரையில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள ‘பொறுப்புணர்’வை விளக்க என்னுடைய படைப்புகள் பற்றி நீங்கள் எழுதியுள்ள ஒரே ஒரு வரி போதும். சில நாட்களுக்கு முன்பு உங்கள் வெறுப்புப் பிரச்சாரத்துக்கு இலக்கானவர் வண்ண நிலவன். இன்று கௌதம சித்தார்த்தனும் நானும்.

சூழலின் விவாதத்தின் மையமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. ஆனால், அதற்கு இதுபோன்ற கட்டுரைகளை எழுதாதீர்கள். மெய்யான விவாதங்களை உண்மையான தகவல்களின் அடிப்படையில் முன்னெடுப்பதே சூழலுக்கு நல்லது. இதுபோன்ற விவாதங்கள் சூழலை மாசுபடுத்தவே உதவும். அவசரப்பட்டுக் கருத்து சொல்வதன் எதிர்மறை விளைவுகளை நீங்களே அனுபவித்திருக்கிறீர்கள். கறையான்களை இல்லாத இடத்தில் தேடி வெறுப்பை உமிழ்ந்து உங்கள் தளத்தை நச்சுப் பொய்கையாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்

அரவிந்தன்

***

அரவிந்தன்,

எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் உண்டு. நீங்கள் சொல்லக்கூடும் ஒரே விளக்கம் என்பது நீங்கள் செய்வது கூட்டுப்பணி என்பதும் உங்களுடன் பணியாற்றும் பிறர் செய்வதும் உங்களுடைய பணிதான் என்பதுதான். அதைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று. இதற்குமேல் ஒரு நிறுவனத்தின் உள்விவகாரங்களை விளக்க முடியாது.

உங்கள்  ‘மனச்சான்றை’ப்பற்றி நான் அறிவேன். குறைந்தபட்சம் இனி ஒரு  அலுவலகக் கட்டாயமாவது தொடரும் என்றால் அது நல்லதுதான்.

ஜெ.

முந்தைய கட்டுரைஒரு மலைக்கிராமம்
அடுத்த கட்டுரைமதுரை நிகழ்ச்சி ரத்து