அங்காடித்தெரு படம் வெளியான அரங்குகளில் மிஷ்கின் இயக்கி, ஐங்கரன் வெளியீடாக வரவிருக்கும் நந்தலாலாவின் முன்னோட்டங்களை கண்டேன். என்னை முதலில் கவர்ந்தது இளையராஜாவின் அற்புதமான இசை. அங்காடித்தெரு என்ற மொத்தபடத்தையும் மீறி நான் எழுந்துசெல்லும்போது அந்த இசையே என் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அத்துடன் இணையும் அகன்ற மௌனமான காட்சிகளும்.
பின்னர் நண்பர் பவா செல்லத்துரை என்னை அழைத்து மிஷ்கின் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார். மிஷ்கின் பின் என்னிடம் பேசினார். அவர் கார் அனுப்ப நான் அவரது அலுவலகம் சென்றேன். அலுவலக முன்னறையில் உதவி இயக்குநர்கலுடன் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருந்தார். என்னை உபசரித்துப்பேசிய பின் நந்தலாலாவை நான் பார்க்கவேண்டுமென்று கோரினார்
அவரது அறையில் தனிமையில் இருந்து மிஷ்கின்நந்தலாலாவை பார்த்தேன். மிக தனிமையான ஓர் அனுபவம் அது. துன்பம் கொண்ட இரு ஆன்மாக்கள். தனிமையை உணவாகவும் மூச்சாகவும் கொள்ள விதிக்கப்பட்டவர்கள். ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு, ஒரு கனவு மட்டுமே அவர்களுக்கு ஆறுதல். அதை அன்னை என்று வகுத்துக்கொள்கிறார்கள். அதை தேடிச்செல்கிறார்கள் அந்தப் பயணத்தின் கதை நந்தலாலா.
மெதுவாகச்செல்லும் காட்சியமைப்பு. பெரும்பாலும் அகலமான படச்சட்டங்கள். நாம் முற்றிலும் எதிர்பாராதபடி ஆரம்பிக்கும் முற்றிலும் வேறுவகையில் முடியும் காட்சித்துணுக்குகள். யதார்த்தத்தை விட குறியீட்டுத்தளத்தில் நிகழ்வதாக தோன்றும் நிகழ்ச்சிகள். கூடவே இழைந்துவழியும் அற்புதமான இசை. தாயை தேடிச்செல்பவர்கள் வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் பேரன்பை கண்டுகொண்டே செல்கிறார்கள். தாங்களே தாய் ஆகிறார்கள்.
1970களில் மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘சுயம்வரம்’ வந்தபோது ஒரு திரை விமர்சகர் எழுதினார் ‘மலையாளத்தின் முதல் திரைப்படம்’ என. ஓர் அலங்காரச் சொல்லாட்சி அது. ஆனால் அது ஒரு வரலாற்று உண்மையும்கூட . முற்றிலும் புதிய ஒரு திரை அலையை அது உருவாக்கியது. மலையாளா சினிமாவை சர்வதேச தளத்துக்கு கொண்டு சென்றது.
என் நோக்கில் நந்தலாலா அத்தகைய ஒரு முதல் படம். ஒரு முதல் காலடி.