அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
அராத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் உரை மற்றும் ‘Rapid Fire’ சுற்றை தாங்கள் எதிர் கொண்ட விதம் ஆகியவற்றை ரசித்தேன்.
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா முடிந்த கையோடு தாங்கள் பங்கெடுத்த அடுத்த விழா இது. முற்றுமாக ஒரு இலக்கிய நிகழ்வு தந்த மயக்கத்தில் அதில் பங்கெடுத்தவர்கள் இன்னும் திளைத்துக் கொண்டிருக்க அதை உதறவே தாங்கள் இந்த விழாவைப் பயன்படுத்தியிருப்பதாக பார்க்கிறேன். இது போன்ற பிம்ப உடைப்புகளை நிகழ்த்த ஒரு துணிச்சல் வேண்டியிருக்கிறது.
ஹோலிப் பண்டிகையோ அல்லது திருமண நிகழ்வோ எதிலும் வட இந்தியர்கள் நடனமிடுவதைப் போன்று தென்னிந்தியர்கள் தங்களை நடனமிட அனுமதித்துக்கொள்வதில்லை. ‘பர்சானா’வில் உள்ள ராதையின் கோவிலில் ஐம்பது வயதைக் கடந்த பெண்மனி ஒருவர் ஆடிய நடனத்தை நான் என்றும் ஞாபகம் வைத்திருப்பேன். இந்த நடனங்களெல்லாம் ஒருவருக்குள் இருக்கும் கிறுக்குத்தனத்தை அப்பட்டமாக மற்றவருக்கு காட்டிக்கொடுத்துவிடும்.
ஒருவரின் அறிவால் அவருக்குள் உண்டான தன்னகங்காரம், கூச்சமெனும் உடையணிந்து எப்பொழுதும் தன்னை கண்ணியமாக காட்டிக் கொள்ளவே விரும்புகிறது, அல்லது அந்த அறிவைக் கொண்டதனால் சமூகம் அவருக்கு கட்டமைத்த பிம்பம் ஒரு எல்லையை நிர்ணயித்து இது போன்ற நடனங்கள் நிகழாமலிருக்க செய்துவிடுகிறது.
இப்படி சமூகம் கட்டமைத்த பிம்பத்தில் சிக்கி தங்களை இறுக்கிக் கொண்டவர்களே இங்கே அதிகம். என் பார்வையில் அராத்து விழாவில் தாங்கள் நிகழ்த்தியது ஒரு வகை நடனமே. இது தன்னகங்கார பிம்ப கட்டுடைப்பு செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்தது.
நன்றியுடன்,
ஜெ. விஜய்.
ஜெய்சல்மர், ராஜஸ்தான்.
***
அன்புள்ள ஜெ
அராத்து விழாவில் உங்களுடைய இன்னொரு முகத்தைப்பார்க்க முடிந்தது. ஈஸியாக இருந்தீர்கள். இதேபோலத்தான் குமரகுருபரன் கவிதைவெளியீட்டு நிகழ்ச்சியிலும் கானப்பட்டீர்கள். பொதுவாக பேச்சுக்களில் தீவிரமாக இருக்கிறீர்கள். நிறைய தயாரித்துக்கொண்டுவந்து பேசுகிறீர்கள். ஆகவே எப்போதுமே ஓர் இறுக்கம் தெரிகிறது. அந்திமழை இதழில் ராஜகோபாலன் எழுதிய கட்டுரையில் நீங்கள் மிக மிக உற்சாகமான விளையாட்டுத்தோழர் போன்றவர் என எழுதியிருந்தார். அதை வாசித்தபோது அது எப்படி என்று தெரியவில்லை. அராத்துவிழா வீடியோக்களில்தான் அது தெரிந்தது. மிக நெருக்கமாக உணரமுடிந்தது. உங்கலை நேரில் அறியாதவர்களுக்கு அது ஒரு பெரியவாய்ப்பு
சரவணன் குமரவேல்