அன்புள்ள ஆசிரியருக்கு,
ஆரோக்கிய நிகேதனம் வாசிப்பவர் அமைதியாக மரணிக்கலாம். நான் இதன் ஜீவநாடியான ஜீவன்தத்தருடன் பிறந்து அவர்கூடவே இன்பதுன்பங்களில் வாழ்ந்து அவரோடவே அமைதியாக மரணித்தேன். மரணந்தான் எத்துணை சுகந்தம்! மஞ்சரி சொன்னதைப்போலத்தான். எனக்கு இதுநாள் வரை இப்படி ஒரு தெளிவை யாரும் எதுவும் கொடுக்கவில்லை. தாராசங்கர் பானர்ஜி ஜீவன்தத்தாய் வாழ்ந்து எனக்கு காட்டிவிட்டார்.
அபயையிடம் அவர் சொல்லியபோதுதான் நானே என்னைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டுக்கொண்டேன். “அட ஆமால்ல கிறிஸ்டி….அன்னைக்கி எப்பிடி இந்த கடன்பிரச்சனைலேர்ந்து விடுபடபோறேன்னு தெரியலயேன்னு அவங்க அழுதப்ப…சரி எதுக்கு இவ்ளோ அவமானங்களைத் தாங்கிகிட்டு நாம உயிரோட இருக்கணும்…சரி செத்துருவோம்னு சாவைப்பற்றி இருவரும் நினைத்தீர்களே….இருவரும் சந்தோஷமாக இருந்தபோது….பையனைப் பற்றி பெருமையாகக் கேள்விப்படும்போது…உன்னையோ அவங்களையோ யாராவது பாராட்டும்போது….அப்படியே நிலைகொள்ளா சந்தோஷத்தில் திளைத்துப் போகும்போது….ஏன் அவ்வளவு தூரம்…அன்றைக்கு முதன்முதலாய் புத்தகக் கண்காட்சியைப் பார்த்து பரவசத்தில் புத்தகங்களை அள்ளும்போது ஏன் சாவைப்பற்றிய நினைவெழவில்லை? என. சந்தோஷமாயிருப்பது மட்டும் வாழ்க்கையல்ல. எவ்வளவுக்கெவ்வளவு இன்பமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பத்தையும் அனுபவிப்பதே வாழ்க்கை என்பதை அபயையுடனான ஜீவன்தத்தின் அற்புத உரையாடல் தெளிவாக விளங்கவைத்துவிட்டது.
“மனிதன் எப்போதும் உதவியைத் தேடும் ஒரு பிராணி”. இவ்வாக்கு முற்றிலும் உண்மை. ஒரு சஞ்சலம் நிறைந்த குழம்பியிருக்கும் மனிதனின் மனம் அமைதியடைந்து தெளிய அடுத்த மனிதனின் உதவி தேவைப்படுகிறது. அது எவ்வகையிலாவது இருக்கலாம்…நோயாளிக்கு வைத்தியனாக மாணவனுக்கு ஆசிரியனாக பக்தனுக்கு தெய்வமாக தொழிலாளிக்கு முதலாளியாக கணவனுக்கு மனைவியாக பிள்ளைக்கு தாயாக….. இங்கு ஜீவன்தத்துக்கு சாபமிட்டவள் சாபவிமோச்சனம் தருகிறாள். அந்த சாபவிமோச்சனம் அவருக்கு மரணத்தை தரும் என அவர் அறிந்திருந்தும் அதுதான் அவருக்கு அமைதியான மரணம். மரணத்தை ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார். இன்னொரு குடைச்சலாக மஞ்சரி இருக்கிறாள் அவருக்கு. ஆனால் அவர்தான் தன் வாழ்நாள் முழுவதும் அப்படி நினைத்தாரே ஒழிய அதற்கு சற்றும் ஈடில்லை அவள். அது பெருத்த ஏமாற்றமாகிறது. இனி வாழ்வில் என்ன என்று ஒரு சலிப்பு.
இப்படித்தான் நானும் அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்களோ இப்படி நினைத்துக் கொள்வார்களோ என பயந்து பயந்து செத்துக்கொண்டிருப்பேன். கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்ஸென்று போய்விடும். அது தெரியாமல் வாழ்நாள் முழுக்க வலியும் வேதனையும் நாமாகவே வலிய வரவழைத்துக் கொண்டிருப்போம். மஞ்சரி முன்னாலும் பூபிபோஸ் முன்னாலும் எப்படியெல்லாம் போய் நிற்கவேண்டும் என கண்ட கனவுகளெல்லாம் இப்படி ஒன்றுமேயில்லாமல் போய்விட்டால் பிறகு வாழ்வதில் என்ன சுவாரஸ்யம்? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைப்பதுபோல்.. எந்த மீன் சாப்பாட்டால் அபயை சாபமிட்டாளோ எதனால் ஜீவன் மனமுடைந்து போனாரோ அவளே மீன்கேட்கையில் ஜீவனால் எப்படி தராமல் இருக்கமுடியும்? தன் உயிரையும் சேர்த்தல்லவா தந்துவிட்டார்! தன் மனம் எதையாவது விரும்பி ஏங்கும்போது அது கிடைக்கும்வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்குமா? சாப்பிடச்செல்லும்போதே அவருக்கு நிம்மதியான மரணம் சம்பவித்துவிட்டது. அதே நிம்மதியான மரணத்தை கிழ மஞ்சரியிடம் அவர் தேடியது கிடைக்காதபோதும் அடைந்துவிட்டார்.
இதில் நிம்மதியாக மரணத்தை ஏற்றுக்கொண்ட ரானாவின் மனமும் அற்புதமான ஒன்று. இந்நாவல் சாவுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தைப் பற்றிச் சொல்லும் நாவலா அல்லது நாடிவைத்தியத்துக்கும் நவீன வைத்தியத்துக்குமான போட்டியைப் பற்றிச் சொல்லும் நாவலா என ஒற்றைப்பார்வையில் சொல்லமுடியவில்லை. வைத்தியத்தினூடே வாழ்க்கை வருகிறது. வாழ்க்கையினூடே வைத்தியம் வருகிறது. இறுதியில் எந்த வைத்தியமாகட்டும் நாடிடாக்டர் ஜீவன் நவீனடாக்டர் பிரத்யோகின் உள்ளத்தில் தம் திறமையாலும் அன்பாலும் இடம்பிடித்துக்கொள்கிறார். அதேபோல பிரத்யோக் தம் திறமையாலும் தைரியத்தாலும் ஜீவனின் மனதில் இடம்பிடித்துக்கொள்கிறார். இருவைத்தியங்களும் மனிதனுக்கு உதவி செய்கின்றன. மனிதன் எப்போதும் உதவி தேவைப்படும் ஒரு பிராணிதான் என பதியவைக்கின்றன.
இறுதிவரை அடுத்தவருக்கு உதவிசெய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியபடியே இருக்கிறது. முக்கியமாக அடுத்த மனிதன்…மனிதன் என்ன மனிதன் ….மரண தேவதையாகிய தெய்வத்திற்கே நான் உதவி செய்யவேண்டும் என்ற மனவெழுச்சி வந்தபோது என்னைமீறி வந்த கண்ணீரை அடக்கமுடியவில்லை.
அன்புடன்
கிறிஸ்டி.
ஆரோக்கிய நிகேதனம் பாண்டியன் ராமையா
அரோக்கிய நிகேதனம் பற்றி கடிதம்
ஆரோக்கிய நிகேதனம் பற்றி ஜெயமோகன்