இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -மிஷேல் டானினோ

 Michel-Danino

 

பகுதி 1:

 

தனது நான்காயிரம்ஆண்டு பழமையான மரபு, பண்பாடு மற்றும் இணையிலா ஞானத்தின் மீது, இருநூறாண்டுகள்வருத்தப்பட்டு தான் சுமந்த பிரித்தானிய ஆக்கிரமிப்பு செலுத்திய எதிர்மறைதாக்கத்தை கசப்போடு என்றாலும்ஏற்றுக் கொள்ள இந்தியா அது சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இருந்தே முயன்று வந்திருக்கிறது. இந்த காலனியக் கறை இந்திய அறிவுப்புலத்திலும், ஆன்மாவிலும் எவ்வளவு ஆழமாகப் படிந்துள்ளது என்பதைப் பற்றிய சமரசமில்லா பார்வைஅதன்பாதிப்புகளைப் பற்றியும், அதை நீக்குவதன் அவசியத்தைப் பற்றியும், அந்நீக்கம் எந்த அளவுக்குத் தேவை என்பதைப் பற்றியும் நமக்கொரு தெளிவை நல்கக் கூடும்.மேற்கத்திய நாகரீகம் (அவ்வாறு அழைக்கப்படக் கூடிய அளவு அது தகுதியுடையதா என்பதே விவாதத்துக்குரிய ஒன்று என்றாலும்!!) வெகுவேகமாக இப்பூவுலகை விழுங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் மேற்கூறியதைப் போன்றதொரு சுய பரிசோதனை மேலும்முக்கியத்துவம்பெறுகிறது.

 

வரலாற்றுப் பின்புலம்:

 

ஒரு நிமிடம். நான் ஆங்கிலேய ஆக்கிரமிப்பை மட்டுமே சொல்கிறேன், அதற்கு முன் பாரத நாகரீகத்தோடு மூர்க்கமாக மோதிய, பல்லாண்டுகள் நீடித்த இஸ்லாமியப் படையெடுப்புகளைச் சொல்லவில்லை. ஆச்சரியகரமாக, தங்களின்இரக்கமற்ற, தொடர்ந்த வன்முறைகள்நிறைந்த நிர்ப்பந்தங்கள் மற்றும் மத மாற்றங்களைக் குறித்த பெருமிதம் கொண்ட இந்தியாவின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இந்திய அறிவுப் புலத்தைக் கைப்பற்ற ஒரு போதும் முயலவில்லை. குரான் கூறும் மாறா நெறிமுறைகளில் அசைக்கவியலாத அர்ப்பணிப்பு கொண்ட அவர்கள், அதை நசுக்கித் தள்ளவே முயன்றனர். அதில் வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.

 

பிரிட்டிஷாரும் அதை நசுக்கவே விரும்பினர், ஆயினும் முரட்டுத்தனமாக அல்ல. மாறாக இந்த காட்டுமிராண்டி தேசத்துக்கு‘நாகரீகம்’ கற்றுத் தர ‘இறையருளால் நியமிக்கப்பட்ட’வர்களாகவே தம்மைக் கருதிக்கொண்டு அதைச் செய்ய முயன்றனர். அவ்வாறேஅவர்களின்முதன்மை நோக்கமான நிறுவனமாக்கப்பட்ட கொள்ளையைநியாயப்படுத்திக் கொண்டனர். மேலும் அவர்கள் தங்கள் தேசத்தை மிக முற்போக்கான, நவீனத்துவத்தை எட்டிவிட்ட, அயலார் நலன் நாடும் பெருந்தன்மையான ஒன்றாகவும்[1], தாங்கள் கொள்ளும் மேட்டிமை மிடுக்கை,உலகின்தலைசிறந்த கலாச்சாரத்தைப் பரப்பும்புனிதப் பணியில்,பெரு முனைப்புடன் பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் தேசத்தின், அப்பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருந்தும்கூட அந்த அன்னிய நிலத்தில் பெருந்தன்மையோடு நிர்வகிக்கப்படும் ஆட்சியதிகாரத்தை வழங்கும் ஓர் நாகரீகமான சமூகத்தின் நாற்றங்காலாக விளங்குபவர்கள் கொள்ளும் இயல்பான ஒன்றாகவும்[2]அவர்கள் கட்டமைத்தனர். இந்தியாவின் மீதும், அதன் மக்கள் மீதும் ஏவிவிடப்பட்டஅத்துமீறிய ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை பிரட்டனின் பொது சமூகத்தின் முன் மறைக்கவும், அந்நாட்டினர்கடல் கடந்து சென்று இந்தியாவிற்குச் சென்றாக வேண்டியதன் அவசியத்தையும், அது குறித்த நல்லெண்ணங்களையும்அதன் மனதில் விதைக்கவும் இத்தகைய மொழி விளையாட்டுகள் பயன்பட்டன.

 

தங்கள்இலக்கை அடைய அவர்கள் இரு வழிகளைப் பின்பற்றினர். ஒரு புறம் ஐரோப்பாவை நவீன, அறிவுப்பூர்வமான, ஜனநாயகப் பாதையில் ஒளியை நோக்கி முன்னேறிச் செல்லும் சொர்க்கமாக முன்னிறுத்திய, மெக்காலேயின் கோட்பாடுகளை பின்பற்றிய ஆங்கிலம் மற்றும் கிருத்துவத்தை கற்பிக்கும் கல்விமுறை; மறுபுறம்இந்திய கலாச்சாரம், புனித நூல்கள், சடங்குகள், அதன் உற்பத்தி முறை, அது உற்பத்தி செய்த பொருட்கள், சமூகக் கட்டமைப்புகள், கல்வி முறை போன்ற அனைத்தின் மீதான திட்டமிட்ட, படிப்படியாகமுன்வைக்கப்பட்ட, உச்சகட்ட காழ்ப்புடன் கூடிய எதிர்மறை விமர்சனங்கள். இதற்குஅக்காலத்தின் தேங்கிய, பிற்போக்குத்தனமான இந்து சமய பழக்கங்களும், சமூகமும் வலு சேர்த்தன என்பதையும் மறுக்கவியலாது. வில்லியம் ஜோன்ஸ், சகோதரி நிவேதிதா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருந்தாலும், ஆளும் வர்க்கத்தில் இந்தியாவின் மெய்யான மதிப்பு அறிந்தோர் ஒருவர் கூட இல்லை. “முக்கியமானதுறைகளில் எல்லாம் மிகப் பிழையானதகவல்களை விதைக்கக் கூடிய, பகுத்தறிவு, ஒழுக்கம் போன்றவற்றுடன் முற்றிலும்முரண்படும், காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகளைக் கொண்ட புனித நூல்களை அடித்தளமாகக் கொண்டிருப்பதேஇந்தியபண்பாடு” எனதாமஸ்பி. மெக்காலே தனது பிரபலமான 1835 ஆம் வருடத்திய உரையில் பதிவு செய்கிறார். ‘பிழையான வரலாறு, பிழையான வானியல், பிழையான மருத்துவம் இவற்றுடன் கூடிய ஒரு பிழையான மதம், இவற்றைத் தவிர ஹிந்துக்களுக்கு உலகுக்குத் தர ஒன்றுமே இல்லை[3] எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் அவர்.

 

துரதிர்ஷ்டவசமாக தங்கள் காலனிய முதலாளிகளின் இந்த நரித்தனத்தைச் சந்தேகிக்ககூடத் தோன்றாத அப்பாவிகளாகவே அன்றைய– இன்றும் கூட பெரும்பாலான– இந்தியர்கள் இருந்திருக்கின்றனர். 1857 ஆம் வருடத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியின் போது கவர்னர் ஜெனரல் கன்னிங் பிரபு ஒரு பிரிட்டிஷ் அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘ஏற்கனவே மதத்தாலும், தத்தமது சமஸ்தானங்களின் பால்பட்ட குறுகிய தேசிய உணர்வாலும் பிரிந்து நிற்கும் இவர்களை மேலும் தனித்தனியாகத் துண்டாடத் தேவையானவற்றைக் கண்டைந்து பிரிப்பதும், நமதுஅபரிமிதமானசக்தியைக் கண்டு அவர்களை நம்மைத் தொழ வைப்பதும், அவர்களுக்கு நம் உண்மையான நோக்கங்களைக் குறித்த சிறு சந்தேகம் கூட எழாதிருக்கச் செய்வதுமே நம்மிடமிருக்கும்கையளவு ஆங்கிலேயர்களைக் கொண்டு 15 கோடி இந்தியர்களை ஆள ஒரே வழி.[4]

 

சற்றே பரந்த மனப்பான்மை கொண்டவராக அறியப்பட்ட கவர்னர் எல்பின்ஸ்டன் கூட“பிரித்தாளுதல்பண்டைய ரோமானியர்வழி. அதுவே நமதும்[5]”, என்றே எழுதுகிறார், 1859 ல்.

 

இளமையான, துடிப்பான, வளங்களுக்கும், புதிய நிலங்களுக்குமான பெரும்பசியோடு இருந்த ஐரோப்பிய சமூகமா, பல நூற்றாண்டுகள் நீண்ட தொடர்ச்சியான தாக்குதல்கள், உள்நாட்டுக் குழப்பங்களின் விளைவாக முற்றிலும் செயலற்றுப் போயிருந்த, தளர்வுற்ற இந்திய சமூகமா என்ற மோதலில் ஐரோப்பிய சமூகமே முந்தியிருந்தது. இவ்விரு சமூகங்களுக்கிடையேயான இந்த துல்லியமான வேறுபாட்டின் விளைவே இந்திய அறிவுப்புலம் மற்றும் வாழ்வியல் மீதான அதன் வெற்றி என்பதில் ஐயமில்லை. மீண்டும் மெகாலேயைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது. தன் தந்தைக்கு 1836 ல், மிகுந்த பெருமையோடு இவ்வாறு எழுதுகிறார்:

‘நமதுஆங்கில வழி பள்ளிகள் மிகச் சிறப்பாக பெருகிக் கொண்டிருக்கின்றன. இதே நிலையில் இக்கல்விமுறை தொடர்ந்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் மதிப்புமிக்க வங்கத்தின் உயர்குடியினரிடம் உருவ வழிபாடுகள் செய்யும் ஒருவர் கூட எஞ்சமாட்டார்.’[6]

 

ஆனால் ஆங்கிலேயர்கள் உணராது போன ஒன்று உண்டு. இந்தியர்கள்தங்கள் அறிவால் அல்ல உணர்வால் வழிநடத்தப்படுபவர்கள், வாழ்பவர்கள். அவர்களின் இந்த ஆழத்தை ஆங்கில ஆட்சியாளர்களால் தொடவோ, தூண்டவோ ஒருகாலத்திலும் இயன்றதில்லை; அதுவும் அவர்களின் உள்ளீடற்ற மதத்தையும், அறிவியலையும் வைத்துக் கொண்டு. ஆயினும் அவர்கள் இந்திய அறிவுப்புலத்தைக் கைப்பற்றி ஓரளவு கணிசமானஆங்கிலப்படுத்தப்பட்ட, பாதிகிருத்தவனாக்கப்பட்ட, எதற்கெடுத்தாலும் ஐரோப்பிய மாதிரிகளைநகலெடுக்கும், அவர்களுக்கு ஏற்றாற்போன்ற ‘படித்த’ வர்க்கத்தை உருவாக்குவதில் வெற்றியே பெற்றார்கள். இந்த கூட்டம் தான் அவர்களின் இந்திய சாம்ராஜ்யத்திற்கு அடித்தளமானது.

 

வந்தது சுதந்திரம். இந்தியா தன் அரசியல் விடுதலையை பெரு விலை கொடுத்தும், தன் உடலைத் துண்டாடியும் பெற்றதென்றாலும், தன் எண்ணங்களின் விடுதலையைப் பெறவே இல்லை. அதைப் பெற முயலவும் இல்லை. இத்தேசத்தின் அறிவார்ந்த கனவான்கள் தங்களை உருவாக்கிய காலனி முதலாளிகள் அளித்தமேற்கத்திய சிந்தனைகளின் மீதிருந்த மதிமயக்கத்தால் அத்திசையிலிருந்து வந்த எதுவுமே மேன்மையானது என்றே கருதினர். எனவே இந்தியா முழுமையான தன்னிறைவு எய்த ஐரோப்பிய எண்ணங்களையும், அறிவியலையும், அரசியல்முறைகளையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றினாலே போதும் என்றனர். சுவாமி விவேகானந்தரே இதைக் குறித்த முதல் எச்சரிக்கை மணியை அடித்தார் : “ஓ… நவீன இந்துக்களே, உங்கள் மதிமயக்கத்தில் இருந்து வெளிவாருங்கள்”[7]

 

அறிகுறிகள்:

 

நூறுவருடங்களுக்குப் பிறகு, இன்று அக்கருதுகோள்களின்அற்பத்தனங்கள் நம்மை அறைகின்றன. இருப்பினும் அந்த காலனிய முத்திரைகள் அகலவில்லை. பல தளங்களிலும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன. புனே, ‘கிழக்கின் ஆக்ஸ்ஃபோர்டாம்’.அகமதாபாத்‘இந்தியாவின் மான்செஸ்டர்’. ஐயோ கோவை நண்பர்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. கோவை – ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’அன்றோ? இங்கிலாந்தில் கூட ஒன்று தான்!! நாம் விஞ்சிவிட்டோம். கூச்சமே இல்லாமல் நீலகிரியை ஸ்காட்லாந்துடன் ஒப்பிட்டோம். (நான் வாழும் கோத்தகிரி ‘இரண்டாம் சுவிட்சர்லாந்து’ என்பதை மறந்து விட்டேன்!!). சுற்றுலா வழிகாட்டிகள் ஆலப்புழாவை ‘கிழக்கின் வெனிஸ்’ என்கிறார்கள். பாண்டிச்சேரி‘இந்தியாவின்குட்டி பிரான்ஸ்’ என்றும் ‘கிழக்கின் பிரெஞ்சு கடலோரம்’ என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்கிறது. இந்தியத் தோலில் ஐரோப்பிய புள்ளிகள்!! ஒன்று புரியவில்லை, எதன் கிழக்கு? இந்தியாவின்அறிவார்ந்த‘கிழக்கைப்’ பற்றிய படிப்புகளை நல்கும் ஓரியன்டல் கல்வி நிறுவனங்களில் இருப்பதோ? கிழக்கு என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? ஒருவேளை ஜப்பான் அல்லது தாய்லாந்தாக இருக்குமோ?

 

காளிதாசனை‘இந்தியாவின் ஷேக்ஸ்பியர்’ என்றும் பக்கிம் சட்டர்ஜியை வால்டர் ஸ்காட் என்றும், தாகூரை ஷெல்லி என்றும் சொல்கையில் தான் இதன் முழு விபரீதமும் புரிகிறது. பிறகு, சாணக்கியன் மாக்கியவெல்லியோடல்லவா ஒப்பிடப்படுகிறார்?! நமது காந்தமானிகள் மேற்கை மட்டுமே காட்டுகின்றன. ஆங்கிலேயர்கள் ஷேக்ஸ்பியரை ‘இங்கிலாந்தின் காளிதாசன்’ என்றோ மான்செஸ்டரை ‘வடமேற்கு இங்கிலாந்தின் கோயம்புத்தூர்’ என்றோ சொல்வார்களா?

 

என்னளவில் இந்திய மனதின் மீதான காலனியாக்கத்தின் அபாயகரமான பாதிப்புகள் இந்திய கல்வித் துறையில் தான் காணக் கிடைக்கின்றன. நமது மழலைகள் இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே ‘ஹம்ப்டி டம்ப்டியையும்’, ‘ராணியைச் சந்திக்க லண்டன் சென்ற ஆட்டையும்’ தெரிந்து கொண்டாக வேண்டியிருக்கிறது. வளர்ந்ததும்அவர்களில் ஒரு சிலர் மேற்கத்திய உளவியலைப் படிக்கிறார்கள், இந்தியயோகவியல்கண்டடைந்த உளவியல் ஞானத்தைப் பற்றிய எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல். மற்றும் சிலர் மருத்துவத்தையோ, இயற்பியலையோ அல்லது பரிணாமவாதத்தையோ படிக்கப்போகிறார்கள், பண்டையஇந்தியாஇத்துறைகளில் செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் சாதனைகளைப் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல். ஒரு உதாரணத்துக்கு தசாவதாரத்தின் படிநிலைகள் டார்வீனிய பரிணாமத்தின் முன்னோடி என்றோ, சயனரின் ரிக் வேத விவரணத்தில் தரப்பட்டிருக்கும் வியப்பூட்டுமளவு துல்லியம் கொண்ட ஒளியின் வேகத்தைக் குறித்தோஎந்த வாத்தியார் தனது மாணவர்களுக்குச் சொல்லித்தருவார்?[8] அல்லதுபிரம்மாவின் ஆயுட்காலமான4,320,000,000வருடங்கள் என்பதும் பூமியின் வயதும் ஒன்றாக இருப்பது தற்செயலா? கணிதவியல், வானியல், நுண்ணணுத்துகள் இயற்பியல் துவங்கி மொழியியல், உலோகவியல், நகர்மயமாக்கல் வரை பல துறைகளிலும் நம்மால் மேற்கூறியவை போன்ற பல உதாரணங்களைத் தர இயலும்[9]. நம்முடைய ஆசிரியர்களுக்கு நமது மரபில் பயிற்சியிருந்தால், மிகப் பிரபலமான நேருவின் ‘பகுத்தாயும் மனநிலை’ என்ற கருதுகோள் ஒன்றும் இந்தியாவிற்கு புதிதில்லை என்பதை விளக்க கடினமாயிருக்காது. ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற நிலைக்கு நவீன மருத்துவம் ஒன்றே வழி என்ற மாயை ஆயுர்வேத, சித்த மருத்துவங்களை எவ்வாறு பின்வரிசைக்குத் தள்ளியது என்பதை நாமெல்லாரும் அறிவோம்.

 

நமது கல்விக் கொள்கைகள் முறைப்படி சமஸ்கிருதம் கற்பிப்பதை ஊக்குவிக்காமலிருக்கும் பொருட்டே வடிவமைக்கப்பட்டவை. இதுவும்மெக்காலேயின் மீதான நமது ‘கல்வியாளர்களின்’ விசுவாசமோ? ஏனென்றால் அவர் தான், தனக்கு சமஸ்கிருதத்தைப் பற்றிய ஒன்றுமே தெரியாது என்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே, அம்மொழியை ‘அறிவின்மையின் பாழ்நிலம்’ என வர்ணித்தவர். நமது இதிகாசங்கள், வேதங்கள், உபநிஷதங்களுக்கும் இதே கதி தான். நமது மாணவர்கள் பள்ளியில் இவற்றைப் பற்றியெல்லாம் கேள்வியே படப்போவதில்லை. மறைமுகமாக அல்லது வெளிப்படையாகவே பிற இந்திய மொழிகள் ஆங்கிலத்தோடு ஒப்பிடுகையில் இரண்டாந்தரமாக்கப்பட்டுவிட்டன. இதனால் தத்தமது தாய்மொழியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்அவரவர் மாநில எல்லைகளைத் தாண்டி வெளியே அறியப்படுவதில்லை. N. V. கிருஷ்ண வாரியாரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆங்கிலத்தில் எழுதும் ஒரே காரணத்தால் நமது பாடப்புத்தகங்கள் இரண்டாந்தர எழுத்தாளர்களால் நிரம்பி வழிகின்றன.

 

வரலாற்று படிப்புகளின் நிலை இன்னும் மோசம். இந்திய பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படும் வரலாறு என்பது பெரும்பாலும் மேற்கத்திய அறிஞர்களால் எழுதப்பட்டவை.மனிடோபா கனேடிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் க்லாஸ்டர்மியர் வார்த்தைகளில் சொல்வதானால் “தங்கள் காலனிய முன்னோடிகளின் பார்வைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட இந்திய வரலாற்றியலாளர்களால்”[1௦] எழுதப்பட்டவை.மேற்கின் முடிபான “இந்தியர்களுக்கு வரலாற்றுணர்வு என்பதே கிடையாது” என்பதை வலுப்படுத்துவதற்காகவே இந்தியாவின் புராதனமானசம்பிரதாயங்கள், அதன் புராணங்கள் அனைத்தும் மிகு கற்பனை என இடங்கையால் புறந்தள்ளப்பட்டன. இந்திய புராணங்கள், நாட்டாரியல் கதைகள், இலக்கியங்கள் என எவையும் வடமேற்கில் இருந்து வந்த ‘மர்ம’ ஆரியர்களின் படையெடுப்பைப் பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை. பெரும்பாலான தொல்லியலாளர்கள் இக்கருதுகோளை நிராகரித்த பின்பும் கூட, ஏதோ சில 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய அறிஞர்கள் முடிவு செய்த காரணத்தால் இன்றும் கூட நமது குழந்தைகள் இப்படையெடுப்பை உருப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்திய இலக்கியங்களும் இந்த படுபாவி ஆரியர்களால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கித் துரத்தப்பட்ட அபாக்கியவான்களாக திராவிடர்களைக் காட்டுவதில்லை. இருந்தும் இவை நம் இள மனங்களில் திணிக்கப்படுகின்றன. எந்த இந்திய அறிஞரும், இந்திய மொழிகளின் இலக்கணங்களோ, மரபோ சமஸ்கிரதமும், தமிழும் வெவ்வேறு மொழிக்குடும்பங்களைச் சேர்ந்த தனித் தனி மொழிகள் என்றோ, ஒன்றையொன்று எதிர்த்தன என்றோ சொல்லவில்லை. இருப்பினும் நமது திரா’விட’ செயல்பாட்டாளர்கள் மற்றும் மேற்கத்திய மொழியியலாளர்களின் இக்கண்டடைதலுக்கு இசைவாக இந்த மொழிகளுக்கிடையேயான பிளவு இன்றும் நம் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இஸ்லாமியஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் சில கிருத்தவ மிஷனரிகள் கொணர்ந்த அழிவுகள் குறித்த எந்த உண்மைகளும் நமது பாடப்புத்தகங்களிலோ, பாடத் திட்டங்களிலோ காணக் கிடைக்காது. ஏனென்றால் இவை அம்மதங்கள் முன்வைக்கும்‘சகிப்புத் தன்மை’ மற்றும்‘மீட்பின் வழி’களை மறுதலிக்கின்றனவே?![11]நமது சுதந்திர போராட்ட இயக்கமும் விட்டுவைக்கப்படவில்லை. ஆக்கப்பூர்வமான எந்த ஒரு விமர்சனத்தையும் மகாத்மாவின் மீதோ, இந்திய தேசிய காங்கிரசின் மீதோ காணக் கிடைப்பதில்லை. மேலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் பிற முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளும் திட்டமிட்டு இருட்டடிக்கப் படுகின்றன என புகழ்பெற்ற வரலாற்றியலாளரான R. C. மஜும்தார்[12]மற்றும் சிலரும் பதிவு செய்திருக்கின்றனர்.

 

கடந்த ஆண்டுகளில் நமதுபாடத்திட்டத்தில் இந்திய கலாச்சாரத்தைப் பற்றிய மீச்சிறு அறிமுகத்தை அளிப்பதையும், பள்ளிகளில் சரஸ்வதி வந்தனத்தைப் பாடுவதையும் பற்றிய முன்வரைவுக்கு நமது மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் எழுப்பியகூக்குரலை* விட நமது கல்வியின் ஞான சூனியத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய நிகழ்வுவேறுஇருக்கவியலாது. எந்த இந்தியத்துவ கூறும் கல்வியில் சகித்துக்கொள்ளப்படப் படமாட்டாது என்பதும், கடந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஸ்ரீ அரவிந்தர் சொன்னது போன்று ‘ஆன்மாவற்றதும் கூலிக்கொலைத்தனம்’[13]கொண்டதுமாயிருந்து, தற்போது இயந்திரத்தனமாக வரையறுக்கப்பட்டு தன்முனைப்பற்றதாகி, நம் குழந்தைகளின் இயல்பான அறிவையும், திறமைகளையும் மழுங்கடிக்கும் வகையில் மேலும் தரம் தாழ்ந்து போன இந்த கல்வியே அவர்களுக்குப் போதுமானது என்பதுமே இதன் செய்தி.நம் இளைய பாரதத்தின் அறிவையும், உணர்வையும் முடமாக்குவதைப் பற்றிய எந்த சொரணையும் அற்ற இவர்கள், இந்திய பாரம்பரியத்தைப் பற்றிய பேச்சு வந்தால் உடனடியாக முஷ்டி உயர்த்தத் தயாராக இருக்கிறார்கள்.

 

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த புகழ்பெற்ற கலை விமர்சகரும், இந்தியதத்துவம், கலை, நாட்டாரியல்மற்றும் படிமங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவரும், இலங்கையப் பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தவருமானஆனந்தகே.குமாரசாமி பின்வருமாறு எச்சரிக்கிறார்:

‘இந்திய வாழ்வியலின் தொடர்ச்சி எப்படி துண்டாடப்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பார்ப்பதே மிகுந்த வேதனையளிப்பது. மரபின் சரடுகளை அறுக்க; அடையாளமற்ற, மேம்போக்கான, வேர்களில் இருந்து முற்றிலும் அந்நியமாக்கப்பட்ட, மேற்கிலோகிழக்கிலோ சேராத, முற்காலமும் வருங்காலமும் அற்ற ஒரு வகை “அறிவுலக தலித்துகளை” உருவாக்கஒரு தலைமுறைக்கான ஆங்கிலக் கல்வியே போதுமானது. தனது ஆன்மீக ஒருமையை இழந்ததே இந்தியாவுக்கு நேர்ந்த மிகப் பெரிய பாதிப்பு. அதன் கல்விப் புலத்தில் விழுந்த அடியே மிகக் கடினமானதும், மிகத் தூரதிர்ஷ்டவசமானதுமாகும்.[14]

 

சுவாமி விவேகானந்தரும் தனக்கே உரிய நேரடியான பாணியில் இதையே அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்:

‘பள்ளிக்குச் செல்லும் குழந்தை முதலில் அறிந்து கொள்வது தனது தந்தை ஒரு முட்டாள் என்பதைத் தான். இரண்டாவதாக தனது பாட்டன் ஒரு பைத்தியகாரன் என்றும், மூன்றாவதாக தனது ஆசிரியர்கள் அனைவரும் கபட வேடதாரிகள் என்றும், இறுதியாகதனதுபுனித நூல்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள் என்றும் அறிந்து கொள்கிறது. பதினாறு வயதாவதாகும் போது அது உயிர்ப்பற்ற, முதுகெலும்பற்ற, எதிர்மறைகளின் குவியலாக மாறுகிறது.கடந்த ஐம்பது வருடங்களில் இந்த ஆங்கிலக் கல்வி மூன்று மாகாணங்களில்ஒரு முதல் சிந்தனையாளனைக் கூட உருவாக்கவில்லை என்பதே இதன் தோல்வி. நாம் நமது பலவீனங்களை மட்டுமே கற்றிருக்கிறோம்.[15]

 

ஆம் அந்த குழந்தை பொருளற்ற துணுக்குகளை அதிர அதிர திணித்துக் கொள்ளும் உருப்போடும் பதிவு இயந்திரமாகிறது. இந்திய மரபின் ஊற்றுகளோடு எந்த தொடர்பும் அற்ற,  மேல்தட்டு கூடுகைகளில்உளுத்துப் போன ஒழுக்கவியல்களைப் பற்றிய உளறல்களைத் தவிர பண்டைய இந்தியாவின் பிரபஞ்ச தரிசனத்தைக் குறித்த எந்த அறிமுகமும் இல்லாத நவீன, மேற்கத்திய கனவான்களை உருவாக்கியதே இந்தஅன்னியப்படுத்தப்பட்ட கல்வியின் ஒரே சாதனை. உலகெங்கும் வரும் எந்த ஆங்கில தினசரியை அல்லது இதழை புரட்டினாலும் உண்மையான சிந்தனையின் இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய அறிவுஜீவிகளின் காலி டப்பாவின் சத்தத்தைக் கேட்கலாம். மேற்கின் அறிவுலகம் ஏதேனும் ஒரு புதிய ‘இசத்தைக்’ கண்டுபிடித்தால் சில வாரங்களில் அது இந்திய பத்திரிகைகளில் எதிரொலிப்பது நிச்சயம். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘கட்டுடைத்தலின்’ பிதாமகரான பிரெஞ்சு தத்துவஞானியின் வருகை, தங்களுடனேயே வாழும் சக சிந்தனையாளர்களைக் குறித்து அறிந்து கொள்ளவே விரும்பாதஇந்தியஅறிவுஜீவிகளை எப்படி உன்மத்தம் கொள்ள வைத்தது என்பதைக் காண வேடிக்கையாக இருந்தது. அல்லது மேற்கத்திய ஓவியர்களோ, சிற்பிகளோ ஏதேனும் ஒரு புதுவித தீவிர, குறுங்குழுக் கலாச்சாரத்தைக் கொணர்ந்தால், அவர்களின் இந்திய சகஹிருதயர்கள் பின்தங்குவதில்லை.மேற்கத்திய நாடுகள் ஒரு புத்தாயிரத்துக்கான (இருளடைந்த மூன்றாவது புத்தாயிரமாக இருக்காது என நம்புவோம்) பெரும் கொண்டாட்டங்களுக்குத் தயாரானால் நாமும் தயாராகி விடுவோம்– கடந்த வருடத்தோடு கலியுகம் பிறந்து 52 நூற்றாண்டுகள் ஆனதைக் கொண்டாட மறந்துவிட்டாலும்.மனித உரிமையை முன்வைக்கும் ஒரு புது மதத்தை ‘அரசியல் சரியான’ (தேவைப்படின்அதை குண்டுகளால் நிலை நிறுத்தவும் தயங்காத) மேற்கு நாடுகள் முன்னெடுத்தால் கணிசமான இந்தியர்கள் தத்தை போல மீளச்சொல்வதை நீங்கள் கேட்கலாம். இந்தப் பட்டியல் முடிவிலி வரை நீளும். இப்படி பாரத மாதா உணர்வில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தால், அவள் மரித்து விட்டாள் என்றே ஒருவர் முடிவு செய்தாக வேண்டும். அல்லது இந்த முட்டாள்தனமான இந்தியத்துவ அந்நியமாதல் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் நீடித்தால்அது நிச்சயம் நடைபெறும். ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகளில்,

‘ஐரோப்பிய நவீனத்துவத்தால்தாக்கப்பட்டு, பொருளாதார நோக்கில் கட்டுப்படுத்தப்பட்டு, தன் குழந்தைகளாலேயே அலட்சியப்படுத்தப்பட்டபாரத மாதாவின் காலாச்சாரம்அவள் கட்டிக்காத்த ஆன்மாவுடன் என்றென்றும் மட்கிப் போகக்கூடும்[16]

 [மொழியாக்கம் : அருணாச்சலம் மகராஜன்]

பிற்குறிப்புகள்:

 

* In the words of Tavleen Singh (by no means a “Hindutva” journalist):

 

“A country which has education ministers who jeer at a hymn which says of learning (as Saraswati) that she is the goddess before whom even Brahma, Vishnu and Mahesh bow probably deserves to be illiterate.” (India Today, November 9, 1998)

 

[1] Rev. John Wilson, India Three Thousand Years Ago, quoted by Devendra Swarup in “Genesis of the Aryan Race Theory and Its Application to Indian History,” The Aryan Problem, eds. S. B. Deo and S. Kamath (Pune : Bharatiya Itihasa Sankalana Samiti, 1993), p. 33-35.

 

[2] Sidgwick, quoted by Sri Aurobindo in Bande Mataram of 19 June 1907 : see India’s Rebirth (Mysore : Mira Aditi, 2000), p. 24.

 

[3] In British Paramountcy and Indian Renaissance, vol. 10 in The History and Culture of the Indian People (Bombay : Bharatiya Vidya Bhavan, 1991), p. 83-84.

 

[4] Quoted by P. Hardy in The Muslims of British India, p. 72.

 

[5] In British Paramountcy and Indian Renaissance, p. 321.

 

[6] Quoted by N. S. Rajaram in The Politics of History (New Delhi : Voice of India, 1995) p. 105.

 

[7] Swami Vivekananda, Lectures from Colombo to Almora (Calcutta : Advaita Ashram, 1992), p. 105.

 

[8] See for example P. V. Vartak, Scientific Knowledge in the Vedas (Delhi : Nag Publisher, 1995) ; Subhash Kak, “Sayana’s Astronomy” (Indian Journal of History of Science, vol. 33, 1998, p. 31-36).

 

[9]See for example A Concise History of Science in India, eds. D. M. Bose, S. N. Sen & B. V. Subbarayappa (New Delhi : Indian National Science Academy, 1989) ; History of Technology in India, ed. A. K. Bag (New Delhi : Indian National Science Academy, 1997) ; History of Science and Technology in Ancient India, by Debiprased Chattopadhyaya (Calcutta : Firma KLM, 3 vols., 1986, 1991, 1996) ; Computing Science in Ancient India, eds. T. R. N. Rao & Subhash Kak (Louisiana : Center for Advanced Computer Studies, 1998).

 

[10] Klaus Klostermaier, “Questioning the Aryan Invasion Theory and Revising Ancient Indian History,” in Iskcon Communications Journal 1999.

 

[11] See for example Arun Shourie, Eminent Historians (New Delhi : ASA, 1998) and Missionaries in India (New Delhi : ASA, 1994) ; Sita Ram Goel, History of Hindu-Christian Encounters (New Delhi : Voice of India, 1997) and Hindu Temples—What Happened to Them (New Delhi : Voice of India, 2 vols., 1998, 1993).

 

[12] See R. C. Majumdar, History of the Freedom Movement in India (Calcutta : Firmal KLM, 3 volumes, 1988), in particular Appendix to vol. 1 and Preface to vol. 3. See also N. S. Rajaram, Gandhi, Khilafat and the National Movement (Bangalore : Sahitya Sindhu Prakashana, 1999).

 

[13] Sri Aurobindo, “The National Value of Art,” in Karmayogin, 20 November 1909, in India’s Rebirth, p. 65.

 

[14] Ananda Coomaraswamy, The Dance of Shiva (New Delhi : Munshiram Manoharlal, 1997), p. 170.

 

[15] Swami Vivekananda on India and her Problems (Calcutta : Advaita Ashram, 1985), p. 38-39.

 

[16] Sri Aurobindo, India’s Rebirth, p. 139 (emphasis mine).

முந்தைய கட்டுரைவெள்ளிநிலம் நாவல்
அடுத்த கட்டுரைஜல்லிக்கட்டு, விவாதங்கள்