இந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ

maxresdefault

பகுதி 2:

 

மனப் பிணிகள்:

 

இப்பிரச்சனையின் ஆணிவேர் நாம் சுயமாக சிந்திப்பதை நிறுத்தியது தான். நமது கருத்துக்கள் அல்லது கருத்துக்கள் என எண்ணப்படுபவை எல்லாம் விளக்கோ விளக்கென்று விளக்கப்பட்டு நம்முள் ஏற்றப்பட்டவை, பல சமயங்களில் திணிக்கப்பட்டவை. சுய வெளிப்பாடுகள் ஒவ்வொரு படியிலும் குறிப்பாக பள்ளிகளில் சுத்தமாக மதிக்கப் படுவதில்லை.

 

இருந்தும்ஆங்கிலக் கல்வி என்பது கட்டற்ற தீமை என்று சொல்ல வரவில்லை. அது ஒரு தேவையான, தவிர்க்கவியலா தீமை தான். இந்தியாவை அதன் கும்பகர்ணத்தனத்தில் இருந்து வெளிக்கொணர, இவ்வுலகை அதன் சவால்களுடன் எதிர்கொள்ள அந்த ஆங்கிலக் கல்வியே வேகமான வழியாகவும் இருந்தது என்பதை மறுக்க இயலாது. பலமுறை சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, மேற்குலகில் ஊற்றுமுகம் கொண்ட இப்பன்முகசிந்தனையோட்டங்களின் வரவுகள் இந்திய விடுதலைக்கானதேடலில் பெரும்பங்கு வகித்தன என்பதிலும் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை. விஷமே விஷத்தை முறிக்கும் என்ற வகையில் அது சரியானதும் கூட. ஆனால் விஷம் முறிந்த பின்னும் அதையே எடுத்துக்கொள்வதைப் போல மடத்தனம் வேறு இல்லை. விடுதலைக்குப் பின் முழுமையான இந்திய தன்மைகொண்ட கல்வியை வடிவமைத்து, துணிச்சலாக அதைச்செயல்படுத்த முடியாமையாமையேசுதந்திர இந்தியாவின் தோல்விகளில் சோகமானதும், பேரழிவைக் கொணர்ந்ததுமாகும். நாட்டின்முதல்கல்வி அமைச்சர்களே இப்பழியேற்க வேண்டும். இன்னும் குறிப்பாக அதன் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும் இப்பழி ஏற்றாக வேண்டும். அவரும் நுண்ணுணர்வற்ற ஆங்கிலக் கல்வியின் வார்ப்பு தானே. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் மீது வெறுப்பள்ளி வீசத்தயங்காதவரும், நவீனத்துவத்தின் மீதான ஒரு வழிபாட்டுணர்வு கொண்டிருந்தவரும் தானே.

 

இந்திய மனதைத் தரிசாக்கியதும், பிள்ளை பால் குடி மறப்பதைப் போன்று அதைத் தன் காலாச்சாரத் தாண்டிச் செல்ல வைத்ததையும் விட மேற்கின் செல்வாக்குக்கு ஆட்பட்டமையின் விளைவுகள் அதிகம். இந்திய சிந்திக்கும் முறைகளை முற்றிலுமாகச் சிதைத்தது அது. கிருத்தவத்தால் கவிந்த, நூற்றாண்டுகள் நீடித்த இருண்ட காலத்திலிருந்து ஐரோப்பாவை வெளிக்கொணர, பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே தங்கள் தெளிவான, காத்திரமானகருதுகோள்கள் மூலம் பகீரதப் பிரயத்தனம் செய்திருந்தனர் அதன் சிந்தனையாளர்கள். ஆனால் இந்தியாவில் இருந்தது போல பல்லாயிரம் ஆண்டுகளாக முரணியக்கத்துடன்,உரையாடி வளர்த்தெடுக்கப்பட்ட பன்முகம் கொண்ட, முழுமை நோக்கிலான, ஒத்திசைந்த சிந்தனைக் கருவிகளை உருவாக்க அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவர்களுக்குத் தேவையாய் இருந்ததெல்லாம் உடனடி பலன்கள் நல்கும் மிக மிகக் கூர்மையான ஞானாஸ்திரங்களே.அவர்களின் சிந்தனைகள் இருமையை மையப்படுத்தியவை, அனைத்தையும்இரண்டில் ஏதேனும் ஒரு தரப்பில் நிறுத்தியவை. கர்த்தர் ஒரு பக்கம், படைக்கப்பட்டவை மறுபக்கம். உயிரையும், ஆன்மாவையும்பிரித்ததுபெரும்பாழ்.நீங்கள் ஒன்று ஆத்தீகர், இல்லாவிட்டால் நாத்தீகர். கிருத்தவர் இல்லாவிட்டால் நாட்டுப்புறத்தான். பழங்காலத்தவர் அல்லது நவீனத்துவர். சார்வாகர் அல்லதுமீமாம்சகர். அனுபவவாதி அல்லது பகுத்தறிவாளர். வலது சாரி அல்லது இடது சாரி.கருத்துமுதல்வாதம், யதார்த்தவாதம், நிரூபணவாதம், இருத்தலியல்வாதம் என அவர்கள்நிபுணத்துவம் அடைந்த ஆயிரம் இசங்களும்(இவைகள் இல்லையென்றால் மேற்கின் அறிவுஜீவிகளால் வாழவே முடியாது), உண்மையில்தேர்ந்தெடுக்கப்பட்ட, நறுக்கித் தெறித்த, கச்சிதமான வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட ஒற்றை வாக்கியமாகவோ அல்லது தத்துவமாகவோ தெளிவாகபிரிக்கப்பட்டு மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தப்பட்டு,எதிரெதிராக நிறுத்தப்பட்டவையே.

 

மேற்கின் இந்த பிரிவினைவாதத்தின் மீதான தீராக்காதல் இந்தியாவிற்கு பெரும் சோதனையாக வந்து சேர்ந்தது. பாரத மாதாவின் புதல்வர்கள் தங்களை ‘ஆரியர்களா’கவோ, ‘திராவிடர்களா’கவோஒருபோதும் இன ரீதியாக உணர்ந்ததில்லை. இருப்பினும் அவர்கள் இவ்வாறாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு தாங்கள் ‘ஹிந்துக்கள்’ என்றும் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் இப்புதிய அடையாளத்தால் அவர்கள் நிறைவு கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களின் ‘பிரபஞ்ச தரிசனத்தை’ ஒரு மதமென்று அழைத்துக்கொண்டதில்லை. (ஏன், மதம் என்ற பொருள் தரும் சொல்லே சமஸ்கிருதத்தில் இல்லை.) இருப்பினும் அது ‘ஹிந்து’ சமயமாக முத்திரை குத்தப்பட்டது. ஆனால்ஒரு முத்திரை பத்தவில்லை. இந்தியா மெய்மையை அடைய எண்ணற்ற பாதைகள் இருப்பதை ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அவையனைத்தையும் மதிக்கவும் செய்தது. (இது பொதுவாக ‘சகிப்புத்தன்மை’ என அழைக்கப்படுகிறது, தவறாக!!) ஆனால் மேற்கத்திய அறிவொளியில் இவையெல்லாம்ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் ‘உட்பிரிவுகள்’ (கத்தோலிக்கர்களையும், ப்ராட்டஸ்டண்டுகளையும் போல) ஆயின. அவ்வாறாக ஹிந்து சமயம் வேத, பிராமண, வைஷ்ணவ, சைவ, சாக்த, தாந்த்ரீக மார்க்கங்களாக அவர்களின் வசதிக்கேற்ப துண்டாடப்பட்டது. பெரும்பாலானஇந்தியர்கள் எவரும் இத்தகைய பிரிவினைகளை அறிந்திருக்கவில்லை அல்லது அவர்கள் கூறிய அளவு இறுக்கமான, ஈரமற்றமார்க்கங்களாக அறிந்திருக்கவில்லை. புத்த, சமண மற்றும் சீக்கிய மதங்கள்இந்தியாவைப் பொறுத்தவரைபுதிய மார்க்கங்கள், ஆனால் அவை தனியான சமயங்களாக தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டன. அதேபோன்று தான் ஆயிரக்கணக்கான நெகிழ்வான இனக் குழுக்கள் இறுக்கமான, நிலையான சாதிகளாக பிரிட்டானிய ஆட்சியாளர்களால் அட்டவணைப்படுத்தப்பட்டன*.

 

இந்திய ஆழ்மனத்தில் அதன் பாரம்பரியத்தின் மீதான இந்த வகைப்படுத்தலும், அடையாளப்படுத்தலும் விவாதத்துக்கு இடமில்லாத உண்மையாகப் பதிந்துவிட்டது. அவர்கள் தங்கள் காலனிய எஜமானர்களால் துண்டாடப்படுவதையும், வரையறுக்கப்படுவதையும் சத்தமின்றி ஏற்றுக்கொண்டனர். தங்களைமேற்கின் கண்கள் வழியாகக் காணவும் பழகிகொண்டனர். மேற்கத்திய சிந்தனைகளில்கொஞ்சமாக இருந்த நற்கூறுகளை கண்டடையவதற்கும், அதன் அதிக அளவிலான எதிர்கூறுகளை நிராகரிப்பதற்கும் இந்திய மனதிற்கு திராணி இருக்க்கவில்லை:அதால் விழுங்க இயன்றது, செரிக்கத் தான் இயலவில்லை. நவீன சமூக கட்டமைப்பை உருவாக்க முயன்ற ஆரம்பகட்ட முயற்சிகள் கூட, குறிப்பாகபிரம்மசமாஜம் மற்றும் பிற சீர்திருத்தவாத இயக்கங்கள், இந்திய சமூகத்தின் மீதான ஐரோப்பியமதிப்பீடுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம், ஒரு மன்னிப்பு கோரும் பாவனையிலேயே இயங்கின, சிந்தித்தன. உதாரணத்திற்கு, ஹிந்துக்கள்‘பல்கடவுள் கொள்கை கொண்ட உருவ வழிபாட்டினர்’ மட்டுமே என ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால், அக்கூற்றின் போதாமைகளைச் சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, மண்டியிட்டு, ஜூடாய– கிருத்துவ பாணியில் ஓரிறைக் கொள்கை உடைய மதக் கோட்பாடுகளையே அவர்கள் முன்வைத்தனர். 1999 ல் கேரளாவில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது நமது மாண்புமிகு அன்றைய இந்தியாவின் முதல் குடிமகன் உதிர்த்த, “ஆதிசங்கரரின் அத்வைதத்தில் இஸ்லாமின் ஓரிறைக் கொள்கையின்தாக்கம் இருப்பதாக” ஊகிக்கக்கூடும் என்ற முத்து இந்த அணுகுமுறை இன்றும் கூட பெரிதாக மாறிவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. நமது ஞான சூனியத்தை வெளிச்சமிட்டுக் காட்ட இதை விடச் சிறந்த உதாரணம் இருக்க இயலாது.

 

நோபல் பரிசு பெற்றருஷ்ய நாவலாசிரியரும், வரலாற்றாய்வாளரும், விமர்சகருமானஅலெக்சாண்டர்சோல்ஜெனிட்ஸின் ஒருமுறை கூறியது போன்று, “மேற்குலகம் செய்யும் தவறே அவர்கள் பிற நாகரீகங்கள் தம்முடையதற்கு எவ்வளவு அருகில் வருகிறது என்பதை வைத்து அவற்றை மதிப்பிடுவதே. அவ்வாறு அருகில் வராதவை உருப்படாத, மடத்தனமான, பிற்போக்குத்தனமானவை.[1]

 

இந்தியர்கள் தாங்கள் ‘உருப்படாத, மடத்தனமான, பிற்போக்குத்தனமான’வர்கள் என கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டனர். தாம் அவ்வாறாக ஆகாமலிருப்பதற்கான மீட்பு ஐரோப்பாவில் இருந்தேவர இயலும் என்று எண்ணினர். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை ஐரோப்பாவின்மக்களாட்சியிலும், மதச் சார்பின்மையில் வைத்தனர். கூடவே அந்த ஐரோப்பிய கருத்துக்கள் இயந்திரத்தனமாகஇந்தியாவிற்கு கொண்டுவரப்படுவது ஏற்படுத்தும் சேதாரங்களைப் பற்றிய எச்சரிக்கைகளைபுறக்கணித்தனர். இவற்றையெல்லாம் விட மோசம், தம்மைத் தாமே இழிவு செய்து கொள்வதில்ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டனர். இன்றும் கூட ஏதேனும் ஒரு மேற்கத்திய பத்திரிக்கையாளர் அல்லதுபேராசிரியர்“சாதி”, “சதி” அல்லது“ஹிந்துஅடிப்படைவாதம்” (ஹிந்து மதத்தின் அடிப்படை என்ன என அவர்களிடம் கேட்க வேண்டும்?!) பற்றி ஏதேனும் குறிப்பிட்டால், எத்தனைஇந்திய அறிவுஜீவிகள் மார்தட்டி எழுகிறார்கள் எனக் காணலாம். இவர்கள் அனைவருமே அதே மேற்குலகின் அபாயகரமான முரண்களைக் குறித்து வாயே திறக்கமாட்டார்கள். சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ அரவிந்தர் பின்வருமாறு அவதானித்திருந்தார்:

“அவர்கள் ஐரோப்பியகொள்கைகளுக்குமுரணானவைஎதையுமே ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவையெல்லாம்மூடநம்பிக்கையானவை, காட்டுமிராண்டித்தனமானவை, அபாயமானவை, அறியாமை மிக்கவை. அவர்கள் ஐரோப்பாவில் மதிக்கப்படும், வழக்கில் இருக்கும் எதைப் பற்றியும் தவறாக எண்ணமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவையெல்லாம் அறிவார்ந்தவை, பகுத்தறிவின்பாற்பட்டவை…[2]

 

இதன் விளைவாக பல நவீனஇந்தியர்கள் (எனக்கே இவர்களில் சிலரிடம் பேசிய அனுபவம் இருக்கிறது) மற்றும் சில சுவாமிகள் குறிப்பாக மேற்குலத்தோரால் பின்பற்றப்படுபவர்கள், தங்களைபெருமையாக‘ஹிந்து இல்லை’ என அழைத்துக் கொள்கிறார்கள். (இந்த பாணி கடந்த நூற்றாண்டில் கேஷப் சந்திர சென்னால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம்.) அதாவது‘தாங்கள் மிகவும் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் எனவே ஹிந்துக்கள் என்றழைக்கப்படுபவர்களை விடபரந்த மனப்பான்மை உடையவர்கள்’என்பதே இவர்கள் சொல்ல வருவது. ஆனால் அவர்கள் மறப்பது ஒன்று உண்டு.‘ஹிந்து’ மதத்தின் தூய வடிவமான சனாதன தர்மம் இப்புடவி அளவுக்கே விசாலமானது. அதுமெய்மையை நோக்கிய எந்த மார்க்கத்தையும் ஏற்றுக் கொள்ளவும், உள்ளடக்கவும், வல்லது. ஒரேநிபந்தனை – அந்த மார்க்கங்கள், செமிடிக் மதங்களைப் போலல்லாமல் பிற மார்க்கங்களை மதிப்பதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அதற்கு அதுவும் கூட பூரணத்தின் ஒரு சிறு பகுதியே என்பது தெரியும்.

 

நம் அறிவுலகத்தாலும், ஊடகங்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட,சுயத்தை மறுதலிக்கின்ற இந்த நீரோட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்நீச்சலிடும்சிந்தனையாளரான ராம்ஸ்வருப்:

‘ஹிந்து, ஹிந்துயிசம் போன்ற பதங்களின் மீது ஒருவித நிரந்தரமான களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. பல மில்லியன் ஹிந்துக்களின் ரத்ததாலும், வியர்வையாலும், கண்ணீராலும்அதிகாரத்தையும், செல்வாக்கையும்அடைந்தஇந்தியஉயர்குடியினர்மத்தியில் இவ்வார்த்தைகள் அசிங்கத்தைக் குறிப்பவையாக மாறிவிட்டிருக்கின்றன.[3]

 

இது தான் இரு நூற்றாண்டு காலனியாக்கத்தின் வேதனையான ஆனால் யதார்த்தமான விளைவு.

 

இனிஎன்ன:

 

இந்த கடந்துசென்ற இருண்ட காலத்தின் உண்மையான பொருளை ஸ்ரீ அரவிந்தர், ‘இந்தியாவின் வருங்காலத்தை ஏந்தி நிற்கும், அதன் தரிசனங்களும், ஆன்மாவுமான வராகம், அழகாயிருந்தாலும், மெலிந்தும், ஒடுங்கியும் இருக்கிறது. அதனால்இப்பாரத்தைத் தாங்க இயலாது. அதை அழித்து மீளுருவாக்க வேண்டும். அச்செயலில் நம் தரிசனங்கள் தொலைந்து போகக் கூடும், அது கூட அவற்றைக் கட்டியிருந்த தளைகள் மற்றும் போதாமைகளில் இருந்து அவைகளை விடுவித்து மறுஆக்கம் செய்யத்தான்.[4]’ என்கிறார்.

 

அந்த பழைய ‘வராகம்’ அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. இப்போதைய கேள்வி, எது அதன் இடத்தை எடுத்துக் கொள்ளப்போகிறது என்பது தான். இந்த அறிவுப்புலம் மற்றும் காலாச்சாரம் சார்ந்த சீரழிவுகளில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான, மீண்டெழுவதற்கான நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் அதிகமாகி வருகின்றன. ஆனால் இந்த அவா முழுமையாக நிறைவேற வேண்டுமாயின், நாம் அறிவுப்புலத்தையும் தாண்டி ஆழமாகச் செல்ல வேண்டும். இந்தியாவைஇத்தனை ஆண்டுகளாக தாங்கிப் பிடித்த அந்த வற்றாத ஆற்றலின் ஊற்றிலிருந்து மீண்டும் புதிதாய் பெற்றுக் கொள்ளவேண்டும். இதன் ஆன்மாவை நாம் கவனித்துக் கொண்டால், மற்றவைகள் தானாகவே வழிக்கு வந்துவிடும். சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று,

‘அப்போது மட்டுமே நாம் நமது இயல்பான நெகிழ்வையும், நம் சிந்தனைகளின் விடுதலையையும் மீட்க முடியும். மேற்கையும், இந்தியாவையும், இறந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒரே போல் கேள்விகுட்படுத்த இயலும். அப்போது மட்டுமே நாம் நமது நியாயங்களையும், விவேகத்தையும், இந்தபெருகிக்கொண்டிருக்கும் மனச்சோர்வின் இருளில் நமக்கான நம்பிக்கை தீபத்தையும் கண்டடைய முடியும்.[5]’.

 

மீண்டும் ஸ்ரீ அரவிந்தரின் கூற்றேநினைவுக்குவருகிறது:

‘நாம்நம்மிடம் வந்து சேரும் எதையும் அப்படியே நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வதை விடுத்து, அனைத்தையும், அவை எங்கிருந்து வந்ததவையாக இருப்பினும், கேள்விக்குட்படுத்தி, நம்முடைய முடிவுகளை, அறிதல்களை நாமே கண்டடைவதில்இருந்து துவங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் நம் இந்தியத்தன்மையில் இருந்தோ, ‘ஹிந்துத்துவத்தில்’ இருந்தோ விலகிவிடுவோம் என அஞ்சத்தேவையில்லை. நாம் நமக்காக ஐரோப்பாவைச் சிந்திக்கச் சொல்லாமல், நாமே சுயமாக சிந்திக்கும் வரையில் அவ்வாறு விலகிச் செல்ல வாய்ப்பேயில்லை. அல்லாதுசிந்தனையைக் கடன் வாங்கினோம் என்றால், ஐரோப்பாவின் மிக மோசமாக உருவாக்கப்பட்ட, மட்டமானநகலாகஇந்தியா உருவாகும் பேரபாயம் உள்ளது.[6]

 

நம் பாரத மாதாவை அவளறிந்த மெய்மையுடன், அறிவுஉச்சங்களுடன் மீண்டும் புதிதாக உயிர்ப்பிப்பதேநவீன இந்தியாவின் முன் இருக்கும் பெரும்பணி. நம் மானுட மனதின் விசித்திரங்களை, அவற்றின் ஆழங்களை, அதன் பொருளை மிகத் தீவிரமாகத் தேடும் ஒருசிலதெளிவானசிந்தனையாளர்களைத்தவிர, மேற்கின் அறிவுலகமே அதன் வெறுமைக்குள் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவளின் மீள்வரவின்அத்தியாவசியம் அவள் மைந்தர்களுக்கு மட்டுமன்று, அந்தமேற்கிற்கும் சேர்த்து தான். ‘ஐரோப்பாசுயத்தையும், பிறரையும்அழிக்கும்தன்மையுடையது[7]’என பிரெஞ்சு நாவலாசிரியரும், கலைக்கோட்பாட்டாளருமான ஆந்த்ரேமால்ரௌ 1936 ல் நேருவிடம் தெரிவிக்கிறார். இன்றைய உலகில் இந்திய ஆன்மீகத்தின் அவசியத்தை, அதன் தேவையைக் குறித்த 1960கள் வரையிலானஅவரின் நேருவுடனான சந்திப்புகள் வீணாயின. மால்ரௌ மேலும்,

‘…மேற்கைப் பொறுத்தவரை, கிருத்தவமோ, நாத்திக வாதமோ, ஆதார தரிசனம் என்பது மரணம் மட்டுமே. அதற்குப் பிறகு ஒன்றுமே இல்லை, அது எப்பொருளை அளித்தாலும். ஆனால் இந்திய மெய்மையின் ஆதார தரிசனம் முடிவிலி காலத்தில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் முடிவில்லா வாழ்க்கை. இறப்பில்லாததை எங்ஙனம் கொல்லமுடியும்?[8]’ என்று பதிவுசெய்கிறார்.

 

உயிருக்கும் ஆன்மாவுக்கும்இடையேயானபெரும்பாழை நிரப்பும், இப்புடவியைக் குறித்த, அதன்ஒருங்கிணைந்த பகுதியாக உயிர்களைக் காணும் பாரததரிசனமே இவ்வுலகின் இன்றைய தேவை. இது வெறும் தத்துவ விவாதமல்ல, இது நடைமுறை சார்ந்த தேவை. உலகியல்மற்றும் ஆன்மீகம் இரண்டின் ஒத்திசைந்த வளர்ச்சியே, ஒன்றை மற்றது நிரப்பும் வாழ்வியலே இச்சமூகம் நீடித்திருக்க அவசியமானது என்பதைசிந்து சமவெளி நாகரீகக் காலத்திலிருந்து, மௌரிய காலம் மற்றும் அதற்குப் பிறகும் பல காலங்களுக்கு நிறுவிய பாரதமே, இவ்வுலகின் இன்றைய,இத்தேவையைத்தீர்க்க இயலும். ஏனெனில் மரணத்தையே இறுதியாகக் கொண்ட மேற்கு இயல்பாகவே மானுடத்தையும், இவ்வுலகையும் சேர்த்தே அழிக்கும். ஏனெனில் வாழ்வின் ரகசியத்தை இப்புடவியோடு இணைத்துப் புரிந்து கொள்ளும் இந்தியா மானுடம் உள்ளிட்ட அனைத்து உயிர்களின், இப்பூவுலகின்தெய்வீகத் தன்மையை மீண்டும் நிலைநாட்டும். கடந்தநூற்றாண்டிலேயே பிரெஞ்சு வரலாற்றாய்வாளரான ஜூல்ஸ் மிச்லே, ‘நம்வறண்ட, உயிரற்ற மேற்கு மனங்களெல்லாம் பேரியற்கையின் முன் வீண் பெருமை பேசி நிற்கையில், தாங்கள்மேம்பட்டவர்கள் என்றோ சிறுமயடைந்தவர்கள் என்றோ மயங்காதமேன்மையான இந்திய மேதைகள், ஒவ்வொரு ஆன்மாவின் தனித்தன்மையுடன் கூடிய ஓர் பரந்து விரிந்த பிரபஞ்சமளாவிய சகோதரத்துவத்தில் இணைந்திருந்தனர்[9]’ என வியக்கிறார்.

 

புதியஅணுகுமுறைகளை, ஆழமான சிந்தனைகளை கற்றணைத்தூறும் வகையில் இந்திய ஞானம் மேற்குலகில் தொட்டணைத்தூறத் துவங்கியிருக்கிறது. ஒருவேளைகாலனியாக்க அலை திசை மாறியிருக்கக் கூடும், ரத்தமின்றி.

 

ஒருவேளை1941] ல், இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதானரவீந்திரநாத் தாகூரின் நம்பிக்கை நிறைவேறக் கூடும் :

‘மேற்குலகின்ஆழ்மனதில்உறங்கிக்கொண்டிருந்த வன்முறை உறையும் பாதாள தெய்வங்கள், விழிகள் மிளிர மேலெழும்பி வருகின்றன. அவை மானுட ஆன்மாவை களங்கப்படுத்தத் துடிக்கின்றன…

ஒருகாலத்தில் நாகரீகங்களின் வசந்தம் ஐரோப்பாவின் இதயத்திலிருந்தே வீசத்துவங்கும் என நம்பியிருந்தேன். இன்று உலகைத் துறக்கத் தயாராக இருக்கும் இவ்வேளையில் அந்த நம்பிக்கை முற்றிலுமாக பொய்த்துவிட்டது.

இன்று நான் ஒரு மீட்பன் வருவான் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கிறேன். அவன் வறுமையால் சிறுமை கொண்ட இந்த இந்தியக் குடிசையிலேயே அவதரிப்பான். அவன்அளிக்கப்போகும்குடிமைச் சமூகத்துக்கான தெய்வ செய்தியைக் கேட்க காத்திருப்பேன். அந்த விடியல் சூரியன் உதிக்கும் இக்கீழ்த்திசை வானிலேயே நிகழும்….[10]

 

 [மொழியாக்கம் : அருணாச்சலம் மகராஜன்]

பிற்குறிப்புகள்:

 

* Dr. Meenakshi Jain, a respected sociologist, wrote:

 

“It is not generally known that the India of rigid social stratification and hierarchical ranking was largely a British creation…. [The British] destroyed the flexibility that was so vital for the proper functioning of the system. The census operations raised caste consciousness to a feverish pitch, incited caste animosities and led to an all-round hardening of the system…. Britishers of all pursuits, missionaries, administrators and orientalists, were quick to grasp the pivotal role [of the Brahmins] in the Indian social arrangement [, in which] Brahmins were the principal integrating force. This made them the natural target of those seeking to fragment, indeed atomise, Indian society. This was as true of the British conquerors as it was of Muslim rulers in the preceding centuries…. Clearly it is time to sit up and see reality as it is before we complete the task the British began — the atomisation of Indian society and the annihilation of Indian civilisation.” (Indian Express, 18 & 26 September 1990).

 

[1] Aleksandr Solzhenitsyn, interviewed in Time of 24 July 1989.

 

[2] Sri Aurobindo, India’s Rebirth, p. 90.

 

[3] Ram Swarup, quoted in Hinduism Today, October 1998, p. 16.

 

[4] Sri Aurobindo, India’s Rebirth, p. 61.

 

[5] Adapted from Swami Vivekananda, in Ram Swarup, “His Vision and Mission,” The Observer, 28 August 1993.

 

[6] Sri Aurobindo, India’s Rebirth, p. 88.

 

[7] In Malraux & India (New Delhi : Embassy of France in India, 1996), p. 46

 

[8] André Malraux, Antimémoires, (Paris : Gallimard, 1967), p. 339.

 

[9] Michelet, La Bible de l’Humanité in Œuvres (Paris : Larousse, 1930), vol. 5, p. 119.

 

[10] Tagore, Crisis in Civilization (Calcutta : Visva-Bharati, 1988), p. 22-23.

 

 

 

முந்தைய கட்டுரைவாசிப்பு மலர்வது…
அடுத்த கட்டுரைஅறியாமைப்பெருக்கு..