வாசிப்பு மலர்வது…

1

 

அன்புள்ள ஜெயமோகன்,

சிறுகதை வாசிக்கத் தொடங்கியது வண்ணதாசனிடமிருந்துதான் என்பதை தெளிவாக நினைவில் இருத்தி வைக்க முடிகிறது, அதற்கும் முன் சில பத்திரிக்கைகளில் அவ்வப்போது வாசித்த சிறுகதைகளை விடுத்துவிட்டுச் சொன்னால். அவ்வளவு நெருக்கமான எழுத்து, வெளிப்படுத்த இயலாத அன்பின் ஏக்கத்தை வார்த்தைகளில் உணர்ந்ததும் அப்படி ஆகிப்போனதோ என்னவோ. அந்த சிறுகதை தொகுப்பிற்கு இப்பொழுது சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. அவருக்கு முதல் சாகித்ய விருது, நான் வாசித்த முதல் சிறுகதை தொகுப்பிற்கும் விருது. “ஒரு சிறு இசை”

பின்னொரு நாள் புத்தகக்கடையின் அடுக்கத்திலிருந்து விலை மலிவாக இருக்கிறதே என்று வாங்கிவந்த ல.ச.ரா வின் “விளிம்பில்” இன்றுவரை முழுமையாக வாசிக்க முடியாமல் எனது மிகச்சிறிய நூலகத்தில் காத்திருக்கிறது.

அடுத்தது யாரை வாசிப்பது எனும் பொழுது எஸ்.ராமகிருஷ்ணனின் “அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது” கிடைத்தது. தொடர்ந்து புதுமைப்பித்தன் கதைகள், எழுத்தில் எள்ளலும் துள்ளலும் இருப்பினும் புராணங்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதைகள் புராணத்தை வாசித்துவிட்டு வா எனக்கூறுவது போல் தெரிகிறது. துன்பக்கேணியே இவரிடம் கொண்டு சேர்த்தது.

 

0

மீண்டும் வண்ணதாசனிடம் போனேன் “தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்”. அதே எழுத்து வேறு வேறு மனிதர்கள் உணர்வுப் பசையோடு உலாவரும் வார்த்தைகள். வேண்டாத வார்த்தைகள் என ஒன்றுகூட இல்லை என்றே எண்ணத்தோன்றியது.

விசும்பு சிறுகதை தொகுப்பு வாசித்த பின்னரே உங்களுக்கு முதல் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.

கடந்த புதன்கிழமை தமிழ் இந்து பத்திரிக்கையின் வாசகர் திருவிழா பக்கத்தில் நீங்கள் எழுதியிருந்த வாசிப்பு வழிகாட்டி குறிப்பில் அசோகமித்திரனை வாசிக்கும் பொழுது சாதாரணமாக தெரியும் என்பது அப்பட்டமான உண்மை, அப்படித்தானிருந்தது.

நாஞ்சில் நாடனின் கதைகள் எனக்குள் மும்பையின் வாசத்தை கிளறிவிட்டு ஆற்றுமணலின் ஆழத்தில் சொரியும் நீர்போல உள்ளிறங்கியது. வேறொரு மொழி நடை வழக்குச்சொல்கள். இந்த வருடம் சென்னை புத்தகவிழாவில் வாங்கியிருக்கும் “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” மற்றும் “பாகீரதியின் மதியம்” வாசிப்பை செழுமையாக்குமென எண்ணுகிறேன்.

அன்புடன்
ஜெ.பாண்டியராஜ்
குன்றத்தூர்

 

 

அன்புள்ள பாண்டியராஜ்

 

நீங்கள் வாசிக்கும் விதம் அழகாக உள்ளது. உங்கள் சொந்த ரசனையை அடிப்படையாகக் கொண்டு தன்னியல்பாக நூல்களைத் தெரிவுசெய்கிறீர்கள். இரண்டே விதிகள்தான் உள்ளன. ஒன்று, உங்களுக்குரிய நூலை தேடிக்கொண்டே இருங்கள். இரண்டு, எப்போதும் உங்கள் தரத்துக்குச் சற்றுமேலே உள்ள நூலையே தெரிவுசெய்து வாசியுங்கள்

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஅராத்து விழா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியச் சிந்தனையில்காலனியத் தாக்கங்கள் -2 -மிஷேல் டானினோ