சுடர்தனை ஏற்றுக.. -கடலூர் சீனு

va

 

கொள்ளுவன கொள்ளுக

கொண்டபின்

கொடுப்பவர் ஆகுக ;

தள்ளுவன தள்ளுக

தள்ளியபின்

தவமொன்று இயற்றுக;

சொல்லொன்று சொல்லுக

சொல்லில்

சுடரொன்று ஏற்றுக. . .

 [ஜெயகாந்தன்]

என் தங்கை சிகிழ்ச்சையின் போது, மருத்துவர்களும் மருத்துவம் பயியலும் மாணவர்களும் அவள் மேல் காட்டிய அக்கறை அளப்பரியது. எட்டு மணிநேரம் பிடிக்கக்கூடிய சிக்கலான அறுவை என முடிவானதும். தங்கை ”ஒருக்கால் திரும்ப வர முடியாம போச்சுன்னா இந்த உடம்ப இந்த ஹாஸ்ப்பிட்டலுக்கே குடுத்திட்டு. வெச்சிக்கிட்டு இவங்க ஏதாவது படிக்கட்டும்” என்றாள். அன்றெல்லாம் ஏதேதோ சிந்தனைகள். இதோ முடிவு என உணரும்போதுதான் இந்த வாழ்வை நிறைவுள்ள பயனுள்ள ஒன்றாக மாற்ற அகம் விரும்புகிறதா. இந்த வாழ்வு ஒரு பரிசு என உணர மரணம் வந்து வாசலில் காத்திருக்கும் செய்தி நமக்கு உரைக்க வேண்டுமா? அன்று இயல்பாக வானுவுக்குத்தான் தொலைபேசினேன். பொதுவாக இத்தகைய முன்னறிவிப்புகள் எளிய மனங்களுக்குள் எரியும் சுடரை அணைக்கவே செய்யும். வானுவுக்குள் இத்தருணமே அவளது அகச்சுடரை தூண்டிவிட்டிருக்கவேண்டும்.

அன்று திருவண்ணாமலை கிரிவல முகங்களை பராக்கு பார்த்து நின்றிருந்தேன். கழுத்துக்கு கீழே செயல்பட இயலா மகள் ஒருவளை அவளது தாய், சக்கர நாற்காலியில் வைத்து நடை பயின்று வந்து கொண்டு இருந்தாள். மக்கள் வழிக் கடை ஒன்றினில் தென்பட்ட பண்டம் எதையோ காட்டி உண்ணக் கேட்டாள். சுகாதாரம் கருதியோ செரிக்காது என்றோ அம்மா அதை மறுத்தாள். அது மோட்டார் பொருத்திய நாற்காலி. மகள் சட்டென கோபித்து, பொத்தானை இயக்கி விறு விறுவென முன்னாள் சென்றாள். அம்மாவால் பின்தொடர்ந்து ஓட இயலவில்லை. என்னென்னவோ சமாதானம் [ நீ கேட்டதை வாங்கித் தாரேன் உட்பட] சொல்லியபடி பின்னால் ஓடி வந்த அம்மாவை மகள் திரும்பியே பார்க்கவில்லை. ”அம்மாவை விட்டுட்டு போகாதடி. . ” என்று ஊர் திரும்பி பார்க்க அழுதபடி அம்மா கத்திய பின்பே மகள் நின்றாள். திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்.

அன்றும் வானதிக்கு தொலைபேசினேன். ”சீனு இந்த இண்டிபெண்டண்ட் எப்படி இருக்கு தெரியுமா? சும்மா பறக்கற மாதிரி இருக்கு” என்றபடி அவள் இப்போது மோட்டார் நாற்காலியில் ஆரோகணித்து பயணிக்கும் அனுபவத்தை சொன்னாள். அவளுக்கும் எனக்குமான நட்பு. பிறிதொன்றில்லாதது. அவள் வழங்கிய நட்பின் கதகதப்பு கைரேகை போல தனித்துவமானது. முதலில் அவள் என் இலக்கியத் தோழி. வெண்முரசு குறித்து அவளுடன் பேசும்போதெல்லாம் கிருஷ்ணன் வரும் தருணங்களில் அவனை அய்யோக்கியப் பயல் என்றே விளிக்கச் சொல்வாள். [ஏன் எனில் நீலனை ஒரு கட்டுரையில் அய்யோக்கியப் பயல் என விளித்திருந்தேன்] அவளுக்கு அந்தப் பதம் மிகப் பிடிக்கும்.

ஆதவ் அதன் விதை முதல் இன்றைய விருட்சம் வரை வளர வானு அடைந்த மூன்று இடர்களும் அதை அவள் கடந்த லாவகமும் களப்பணி லட்சியவாதிகள் யாவர்க்கும் ஒரு பாடம் என்றே எண்ணுகிறேன்.

இருக்குற கொஞ்ச நாள், எதோ புஸ்தகம் படிச்சோமா, நண்பர்கள் கூட பேசுனோமா சந்தோஷமா இருந்தோமா அப்டின்னு இருக்குறத விட்டுட்டு எதுக்கு இந்த டிரஸ்ட் அது இதுன்னு வெட்டி டென்சன்? இதுவே அவள் எதிர்கொண்ட முதல் இடர். உரையாடுகையில் என்னிடம் சிரித்தபடி சொன்னாள் ”என் முன்னால ரெண்டு பாதை இருக்கு, ஒன்று பாதுகாப்பான சந்தோஷமான பாதை. மற்றொரு பாதையில் என்ன உண்டு என்ன கிடைக்கும் என்றே தெரியாது. நான் ரெண்டாவது பாதையைத்தான் தேர்ந்தெடுப்பேன். அந்த இரண்டாவது பாதையில் என்ன இருக்கிறது என கண்டு சொல்லும் முதல் ஆளாக நாந்தான் இருப்பேன்”. அவள் தேர்ந்தெடுத்த இரண்டாவது பாதைதான் ஆதவ்.

இரண்டாவது இடரும் சக மனிதர்களால் விளைந்ததே. அவளது சந்தேகமா, பயமா, அல்லது உண்மையேதானா நான் அறியேன் அவளது செயல்பட இயலா நிலையை பயன்படுத்தி அவளது சமூக பங்களிப்பில் தனது அதிகாரத்தை அவள் மேல் நிலை நாட்ட நெருங்கிய சிலர் முயல்வதாக ஒரு முறை பேச்சினிடையே சொன்னாள். ஆதவ் கட்டிட வேலையின் துவக்கத்தில் எந்த அறமும் இன்றி பணம் பறிக்க தொடர்ந்து படையெடுத்து முயன்ற மானுடக் கீழ்மைகளையும் சிரித்தபடி சொன்னாள்.

மூன்றாவது இடர் மிக முக்கியமானது. ”இதை முடிக்க முடியாதோ அப்டின்னு பயம்மா இருக்கு சீனு. ரெண்டு மாசமா ஒரு சின்ன துரும்பு கூட நகரல ” என்றாள். எந்த மாபெரும் செயலும் அது முழுமை பெரும் முன், அதை முன்னெடுப்பவர் முன் இப்படி ஒரு பெரும் இருட்டு எழுந்து நிற்கும். அதில் தொலைந்து போனவர்கள் பலர். அதை வானு கடந்து வந்த லாவகம் பேரழகு. எதிர்கால கனவுகளை மனம் துரத்துவதை முற்றிலும் தடை போட்டாள். ஒரு நாளுக்கு ஒரே ஒரு வேலை என வகுத்துக் கொண்டாள். அந்த வேலையே மிச்சமின்றி முற்ற முழுதாக முடித்தாள். ஆம் எந்த மாபெரும் பயணங்களும் காலடி காலடியாகத்தான் நிகழ்கிறது. இரண்டே மாதம் அனைத்தும் ஒருங்கிணைத்து பணிகள் துரிதம் கொண்டது.

இந்த இரண்டுக்கும் வெளியே எனக்கும் வானதிக்குமான உலகம் பிறர் அறியாத ஒன்று அழகான ஒன்று. அவளே சமைத்து அவளுக்கு பிடித்தவர்களுக்கு பரிமாறும் ஆவல் கொண்டிருந்தாள். எனது மெனுவான பருப்பு சாதம் [நெய் ஊற்றி] உருளை வறுவலை கேட்டு தெரிந்து கொண்டாள்.

அவள் உள்ளங்கைகளை என் கைகளுக்குள் பொத்திக்கொள்ளாமல் ஒரு சந்திப்பு கடந்து சென்றதில்லை. யாருமற்ற தனிமையில் மழை பெய்யும் கடற்கரையில் நின்றிருக்கவேண்டும் என்பது அவளது ஆசைகளில் ஒன்று. அவள் என்னுடன் இறுதியாக பேசிய சொற்கள் ”இன்னும் நீ ஆதவ் பாக்க வரவே இல்ல. இங்க வா ரெண்டு நாள் எங்க கூட இரு நிறைய பேசணும்” போகவில்லை. இனி என்றும் போகப்போவதில்லை.

ஒரு முறை விடை பெறுகையில் ”சீனு இரு இரு உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும் போல இருக்கு. . அம்மா சீனுக்கு எதுனா கொடும்மா” என்றாள் வானு. . அம்மா பதறி தேடி, கையில் இருந்த நூறு ரூபாயை தந்தார்கள். அறம் நூல் வெளியீட்டு விழா. மிஷ்கின் பேசிக் கொண்டிருந்தார். அறைக்குள் நுழைந்த பட்டாம்பூச்சி ஒன்று, வழி தேடி தவித்து, மின்விசிறியால் இழுக்கப்பட்டு…., தரையில் கிடந்த அதன் ஓற்றை இறகு நீநேரம் இழந்த வானைத் துழாவிக் கொண்டிருந்தது. வானதி வசம் விடைபெற கார் கண்ணாடி வழியே அவளை பார்த்தேன். ”பாவம்ல பட்டாம்பூச்சி” என்றாள்.

இறுதியாக அவளுக்கு தொலைபேசுகையில் வல்லபிதான் எடுத்தார். வானுவால் பேச முடியாது என்றார். பேச முடியலைன்னா என்ன கேக்க முடியும்ல ஏர் போன அவ காதுல செருகுங்க நான் அவ கூட பேசணும் என்று முதன் முறையாக வார்த்தைக்கு மூன்று நிமிட சிரிப்பை அளிக்கும் வானு வசம், ஒரு உம் கூட எழாமல் முக்கால் மணி நேரம் நான் மட்டுமே வெண் முரசு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். இயலா நிலையில் காலம் நமது தலையில் இறக்கும் பாரத்துக்கு நிகரான நரகு பிறிதொன்றில்லை. அன்று அந்த நிமிடங்களில் அங்கே அவளுடன் நானும் இருந்தேன்.

நண்பர் சந்திரசேகரின் மின்னஞ்சல்கள் தொலைபேசி எண் அனைத்தையும் அழித்து விட்டேன். வானுவின் தொலைபேசி எண்….

மரணம் எனும் மாறா விதி முன் துயர் கொண்டு நிற்பதை போல அபத்தம் வேறில்லை. ஆனாலும் அந்த அபத்ததில் நிற்கிறேன். காரணம் இது மரணம் மட்டுமல்ல அவள் எனக்குமட்டுமே அளித்த தனித்தன்மையான உலகம் ஒன்றின் இழப்பு இது. இனி ஒரு போதும் மீள இயலா இனிய உலகம்.

ஜெயகாந்தனின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன். அவள் ஏற்றிய சுடர் ஆதவ். காசி செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். கங்கையில் அவள் நினைவால் சுடரும் விளக்கு ஒன்றினை மிதக்கவிடுவேன்.

முந்தைய கட்டுரைவானதி- நினைவுகளினூடாக…
அடுத்த கட்டுரைவானதி -அஞ்சலிகள்