திருச்செந்தூர் கடிதங்கள்

திரு ஜெயமோகன்,
திருச்செந்தூர் மற்றும் மற்ற படங்களை பார்த்தேன். இது போன்ற இயற்கையை, கிராமசுழலை ரசிக்க, அதில் ஆழ்ந்து கிடக்க ஒரு மன நிலை வேண்டும் அல்லவா? உங்களுக்கு நிறைய இருக்கிறது, கொடுத்து வைத்தும் இருக்கிறீர்கள்.
எதை பற்றியும் யோசிக்கத்தேவை இல்லாமல், just gazing into nothingness என்பதை சாத்தியமாக்கும் இடங்கள் பெரும்பாலும் இவை போன்ற இடங்கள் தான் (என்னைப் பொருத்தமட்டில்). இந்த மன நிலை இல்லாவிட்டால் கிராமங்களில் இருந்து நிறையவே அன்னியப்பட்டு போவோம் இல்லையா? There is a tendency to rate places with facilities and conveniences they offer. But an unkempt shrub looks more beautiful than a pruned plant.

Regards,
Mangai

அன்புள்ள‌ அண்ணா

நீங்க‌ள் சொல்வ‌து போல் தமிழகத்தில் இரு கவிஞர்களுக்கே கோயில் உள்ளது. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு சிறு சிறு கோவில்க‌ள் அங்காங்ஙே த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ன‌ என் நினைக்கிறேன். சின்ன‌ம‌னூரில் மாணிக்க‌வாச‌க‌ருக்கு ஒரு கோவில் உள்ள‌து. கிபி 14ஆம் நூற்றாண்டில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ கோவில். இங்கு மாணிக்க‌வாச‌க‌ரே மூலத்தெய்வமாக அமர்ந்து பூசையும் விழாவும் பெறுகிறார். நின்றகோலத்தில் தெற்கு நோக்கி இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் “”திருச்சாழல்” பதிகத்தை பாடி வேண்டுகின்றனர்.

இங்கு ச‌ண்டிகேஸ்வ‌ர‌ர் நின்ற‌ கோல‌த்தில் இருக்கிறார். சண்டிகேஸ்வரரின் நின்ற கோலத்தை காண்பது அபூர்வம் என்கின்ற‌ன‌ர். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் இருக்கிறார். அள‌வான‌ கோவில். சிறு கோபுர‌ம். வெளியில் இருந்து பார்ப்ப‌தை விட‌ உள்ளே கொஞ்ச‌ம் விசால‌மான‌தாய் தோன்றும். ஊரை விட்டுத் த‌ள்ளி ஜ‌ன‌ ச‌ந்த‌டி இன்றி, சுற்றிலும் வ‌ய‌லும், தென்னையும் கொண்டிருப்ப‌தால் பொதுவாக‌ தியான‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே இங்கு அதிக‌மாக‌ வ‌ந்து அம‌ர்கின்ற‌ன‌ர். மாணிக்க‌வாச‌க‌ருக்கு இங்கு ம‌ட்டும் தான் த‌னிக்கோவிலுண்டு என்பார்க‌ள் எங்க‌ளூரில். உண்மையா தெரிய‌வில்லை.

த‌ம்பி
அப‌ராஜித‌ன்

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் பயண விபரங்களையும் புகைப் படங்களையும் கண்டேன். மாமாவும் நீங்கள் வந்து சென்றது குறித்துச் சந்தோஷமாகச் சொன்னார். உங்கள் விவரிப்பும் படங்களும் ஊருக்கே ஒரு நடை சென்று வந்தது போல இருந்தது. மீண்டும் மீண்டும் படங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒரு சில சமயங்களில் எதை இழந்து எதைத் தேடுகிறோம் என்பது தெரியாமல் மனக் குழப்பமாக உள்ளது.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலை பசுமையானது. வயல்களும், வாய்க்கால்களும், குளங்களும், மரங்களும், பறவைகளும் நிரம்பிய பசுமையான பாதை அது. மதுரையில் இருந்து காய்ந்து போய் வருபவர்கள் பொறாமைப் படும் வகையிலான பச்சை நிரம்பிய பகுதி அது. நாகர்கோவில் பசுமை வேறு விதமானது. இந்த பசுமை தாமிரவருணியின் தயவினால் பெரும்பாலும் பசும் வயல்களினாலும், வாழைத் தோட்டங்களினாலும் உருவாகும் பசுமை. ஆதிச்சநல்லூர் பரம்பு தாண்டி இந்தப் பசுமை துவங்கி ஸ்ரீவை, ஆழ்வார், தென் திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர் என்று திருச்செந்தூருக்கு சற்று முன்பு வரை நீளும் தாமிரவருணி அளிக்கும் கொடை . ப்ளாஸ்டிக் குப்பைகளும், சீமக் கருவேல முற்புதர்களும், மணற் கொள்ளைகளும் இந்த நதிக்கு இன்று யமனாக வந்திருக்கின்றன. நதியின் வனப்பையும், தூய்மையையும் வளத்தையும் அடியோடு அழிக்கின்றன தமிழகத்தின் சாபக்கேடுகளான இத் தீமைகள். நதியை அணுக அருகில் செல்ல படித்துறை என்பதே மணற்பரப்பு என்பதே இல்லாமல் சீமக் கருவேலக் காடுகள் சூழ சேறும் சகதியுமாக பாலீத்தீன் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கின்றன. வயித்தெரிச்சலைக் கேட்காதீர்கள். நவ திருப்பதி என்பது ஏற்கனவே இருப்பது. புதிதாக அந்த ஒன்பது கோவில்களுக்கும் ஒவ்வொரு கிரகத்திற்கு விசேஷமானது என்ற ரகசியத்தை தினமலர், ஜோதிட மலர்கள் பரப்பியது  இது வரை வைணவ பக்தர்களை மட்டுமே கவர்ந்த இந்தக் கோவில்கள் இன்று மிகவும் பிரபலமாகி ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன. சென்ற வைகுண்ட ஏகாதசி அன்று ஊருக்குப் போயிருந்த பொழுது வீட்டு வாசலில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு வாகன நெரிசல்கள் கூட்டம். இந்த அளவுக்கு கூட்டத்தை இத்தனை வருடங்களில் கண்டதேயில்லை. இதே ஊர்களில் நவ கைலாசம் என்னும் ஒன்பது சிவன் கோவில்களும் உள்ளன. ஏனோ அவை ஜோதிடர்களினால் இன்னும் பிரபலப் படுத்தப் படாமல் உள்ளன. தென் திருப்பேரையிலேயே ஒரு அமைதியான சிவன் கோவிலும் உண்டு. நவ திருப்பதிக் கோவில்கள் பற்றிய எனது குறிப்புக்களைக் கீழே காணலாம். ஸ்ரீவைகுண்டம் கோவில் வசந்த மண்டபச் சிற்பங்களும் யாளிகளும் அற்புதமானவை. அந்தச் சிற்பங்கள் ஓவியர் சில்பியினால் கல்கி தீபாவளி மலர்களை அலங்கரித்தவை. சமீபத்தில் ஆர் வி யின் பதிவில் அது பற்றிய ஒரு பதிவு போட்டிருந்தார்

தென் திருப்பேரை ஃபோட்டோ ஆல்பம்: http://picasaweb.google.com/strajan123/Sriperai#

நவதிருப்பதி ஃபோட்டோக்கள் : http://picasaweb.google.com/strajan123/NAVATP#

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைவெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3
அடுத்த கட்டுரைபாலஸ்தீன ஆதரவுக்குழு