அன்பு ஜெ,
கொஞ்சம் ஜல்லிகட்டை ஒரு புறம் ஒதுக்கி விட்டு சிறிது நேரம் மிருகவதை என்பது தற்காலத்தில் உலகம் முழுதும் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகிறது எப்படி புரிந்து கொள்ளப் படுகிறது என்று பார்த்தால் சுவாரசியமாக இருக்கும்.
மிக முன்னேறிய நாடுகளில் ஒன்றான ஜப்பான், திமிங்கலங்களை வேட்டையாடும் விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தையுமே பகைத்துக்கொண்டுள்ளது. அருகிவரும் உயிரினமான திமிங்கலத்தை ஜப்பான் “அறிவியல் ஆராய்ச்சி” என்ற போர்வையில் நூற்றுக்கணக்காக கொன்று குவித்து வருகிறது. ஜப்பானியர்களுக்கு மீன் உணவில் மிக இன்றியமையாத விஷயம் என்று தெரியும் அவர்களின் per capita consumption உம் அதிகம். ஜப்பான் திமிங்கல வேட்டை தங்கள் பாரம்பரியம், திமிங்கல இறைச்சி எங்கள் உணவின் இன்றியமையாத பகுதி, அது எங்கள் உரிமை என்ற ரேஞ்சுக்கு பேசுகிறது.
சீனா சுறாதுடுப்பு (Shark fin) சூப்புக்கு பெயர் போனது, இந்த துடுப்புகளை அறுவடை செய்யும் முறை மிகக் கொடுமையானது, நடுக்கடலில் சுறாக்கள் பிடிக்கப்பட்டு கப்பலிலேயே அவற்றின் துடுப்புகளை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, வெட்டப்பட்ட சுறாக்களை அப்படியே கடலில் தள்ளிவிட்டுவிடுவார்கள். சுறா துடுப்புகளை சீன சந்தைகளில் கருவாட்டு போல குவியல் குவியலாக கொட்டி வைத்திருப்பார்கள், அவை ஒரு aphrodisiac என்று கருதப்படுவதால் அதற்கு நல்ல டிமாண்ட். கொரியாவிலும் வியட்நாமிலும் இறைச்சிக்காகவே நாய் பண்ணைகள் இருந்தாலும் தெரு நாய்கள் மிக குரூரமாக வேட்டையாடைப்படுவது இன்று வரை தொடர்கிறது. அப்படி ஒரு நாய்ப்பண்ணை வைத்திருக்கும் ஒரு பெண்மணி ஒரு பேட்டி ஒன்றில் தான் செல்ல நாய் பற்றி மிகப் பிரியமாக பேசுகிறாள், இந்த முரணை பேட்டி எடுத்த மேற்கத்தைய BBC பெண் நிருபரால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.
ஆசியாவின் அமெரிக்காவாக வலம் வரும் ஆஸ்திரேலியா ஜப்பான் திமிங்கலங்களை வேட்டையாடுவதை மிகக் கடுமையாக எதிர்க்கிறது, சர்வதேச நீதிமன்றம் எல்லாம் போய் சண்டை கூட போட்டு வந்தது ஆனால் ஆஸ்திரேலியாவில் Grey Hound racing எனும் வேட்டை நாய் பந்தயத்தில் நடக்கும் பல்வேறு குரூரங்களை கண்டும் காணாமல் இருந்து வந்து போன வருடம் தான் தடை செய்தது. வருடம் ஒன்றிற்கு 5000/6000 நாய்கள் பந்தயத்திற்கு உகந்தவை அல்ல என்றோ அல்லது காயம் பட்டவை என்ற காரணத்தினாலேயோ கொல்லப்பட்டு வந்தன. மேலும் அவற்றை பழக்கும் பொருட்டு live baiting என்ற “உயிருள்ள பொறிகளாக“ முயல் குட்டிகளையும் பயன்படுத்தி வந்தனர். இந்த தடை மூணு மாதமோ என்னவோ தான் நீடித்தது, லாபிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள், தன் அரசே ஆட்டம் காணலாம் என்ற நிலைக்கு வந்த நியூ சவ்த் வேல்ஸ் பிரிமியர் அபவுட் டர்ன் அடித்து தடையை திரும்ப வாங்கிக்கொண்டார்.
உலகிலேயே மிக அதிகமாக கால்நடைகளை (live cattle trade) ஏற்றுமதி செய்யும் நாடு ஆஸ்திரேலியா. செளதிக்கு மட்டும் வருடம் ஒன்றிற்கு 10 லட்சம் செம்மரி ஆடுகள் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன, அதே போல இந்தோனேஷியாவிற்கும். இதெல்லாம் 2012 ல் ஒரு முடிவுக்கு வந்தது – இவ்விதம் ஏற்றுமதிசெய்யப்படும் ஆடுமாடுகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்படும் ஒளிப்படங்கள் இணையத்தில் கசிந்தன. இது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியையும் சினத்தையும் உண்டாக்க அரசு உடனே மிருகங்களை உயிரோடு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. கால்நடை விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள், உயிரோடு ஏற்றுமதி செய்யப்படும் ஆடுகளுக்கு இருக்கும் வரவேற்பு குளிரூட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகையில் கிடைக்கவில்லை. இப்போது கால்நடை வளர்ப்போர் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும் இந்த தடையை நீக்கக் கோரி மீண்டும் வலுவான கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.
ஜரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒப்பு நோக்க செல்லப்பிராணிகளை மிக காருண்யத்துடனே நடத்தப்படுகின்றன ஆனால் இது வேறுவகை சிக்கல்களை கொண்டுவருகிறது. ஒரு ஆர்வத்தில் பிரியப்பட்டு செல்லப்பிராணிகளை விளையாட்டு சாதனங்களாக பாவித்து அவற்றை வாங்கி, பின் அவற்றிற்கு உணவு, பராமரிப்பு, மருத்துவச்செலவு என்று சமாளிக்க முடியாமல் அவற்றை பிராணிகள் காப்பகத்தில் மீண்டும் விடும் போக்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இப்படி திரும்ப விடப்படும் பிராணிகள் எண்ணிகை மட்டும் 50 லட்சம் இதில் கிட்டத்தை 60%-70% வேறு யாரும் தத்தெடுக்க முன்வராததாலோ கருணைக்கொலை செய்யப்படுபவை. அதாவது நல்ல உடல்நலத்துடன் இருந்தும் பர்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் கொல்லப்படுபவை. இதன் இன்னொரு முகமாக exotic pets மீதான மோகம் அதிகரித்துள்ளது, எல்லோரும் ஒரே வகையான நாய்களை வைத்திருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது. Designer dogs எனப்படும் இயற்கையில் இல்லாத இனஙகளை குறிப்பிட்ட தோற்றத்தை உருவாக்கும் பொருட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு உருவாகும் கலப்பினங்கள் ஏதாவது ஒரு மரபணு குறையுடனே வாழவேண்டியிருக்கும்.
இன்னும் நூதனமான செல்ல பிராணி வேண்டுமென்று சாதாரணமாக காட்டில் மட்டுமே இருக்கும், வீட்டில் வளர்க்க தடைசெய்யப்பட்ட மிருகங்களையும், அழியும் அபாயமுள்ள மிருகங்களையும் வளர்ப்பது ஒரு மோஸ்தராகி வருகிற்து. ஆப்பிரிக்காவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் இவ்வகை மிருகங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்கும் பெரும் மாஃபியாக்கள் செயல்பட்டு வருகின்றன. ஆமைகள், பல்வேறு குரங்குகள், பாம்புகள், தவளைகள் என்று இவற்றில் ஒரு பெரும் சதவிகிதம் இப்படி சட்டவிரோதமாக கடத்தப்படுகையில் அவை பாதிவழியியிலேயே இறப்பதும் சர்வசாதாரணம்.
கனவான்களின் கனவானாக பார்க்கபடும் இங்கிலாந்தில் கூட நரி வேட்டை 2005 வரை சட்டப்பூர்வமாகத்தான் இருந்தது. இப்போது தடை செய்யபட்டிருந்தாலும் அந்த வழக்கம் இன்னும் நின்று போகவில்லை இன்னும் 50000 மேலானோர் வருடா வருடம் இந்த வேட்டையில் கலந்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சரி பிரான்சில் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். “foie gras” (போய் க்ரா) எனப்படும் delicacy ஜரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சில் ரொம்ப பிரபலம். அது தயாரிக்கப்படும் முறை இதுதான், வாத்துக்களில் வாயில் நம் ரேஷன் கடையில் மண்ணென்னைய் ஊற்றும் புனல் போன்ற ஒன்றை பொருத்தி அதன்மூலம் அவற்றிற்கு கட்டாய உணவூட்டுவது. இப்படி கட்டாயமாக, தேவைக்கு மிக அதிகமாக ஊட்டப்படும் உணவு அவற்றின் ஈரலை இயற்கையாக இருப்பதை விட 10 மடங்கு வரை பெரிதாக்கும் இப்படி குரூரமாக கொழுப்பேற்றப்பட்ட வாத்தின் ஈரல் தான் foie gras – மிகவும் சுவையானது. பிரான்சின் உள்நாட்டு அறுவடை மட்டுமே வருடம் ஒன்றிற்கு 20000 டன் அளவை தாண்டும் அப்படியானால் எவ்வளவு வாத்து ஈரல்கள் என்று ஒரு சின்ன சிகரெட் அட்டை கணக்குப் போட்டுக்கொள்ள்லாம் அது தவிர மேலும் 4000 டன் அளவு பல்கேரிய செக் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி வேறு செய்கிறது.
இந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலே கூட இதில் ஒவ்வொரு தரப்பின் நிலைபாட்டையும் கவனிப்பது சுவாரசியமாக இருக்கும். பிரான்ஸ் இது – நம் பழனி பஞ்சாமிர்தம் போல – ஒரு டெலிகசி தனது உணவின் பண்பாட்டின் ஒரு பகுதி, இதை தடை செய்வது தனது ஆதார பண்பாட்டு, அடையாளத்தின் ஒரு பகுதியையே வெட்டுவதற்கு நிகரானது என்கிறது. பெல்ஜியம், இதற்கு இருக்கும் சந்தையை தெரிந்து கொண்டு பிரான்சிற்கு அடுத்து உலக அளவில் அதிகம் வாத்து ஈரல் உற்பத்தி செய்யும் நாடாக ஆகிவிட்டது ஆனால் அவர்கள் இதை பெரும்பாலும் உண்பதில்லை எல்லாமே பிரான்சிற்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள். ஏனைய ஜரோப்பிய நாடுகள் foie gras உள்நாட்டில் அறுவடை செய்வதை தடை செய்துவிட்டன ஆனால் இறக்குமதிக்கு ஆட்சேபணை இல்லை. ஆஸ்திரேலியா foie gras உள்நாட்டு உற்பத்தியை முன்னமே தடை செய்துவிட்டது, இங்கு அதை சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் உலகப் போருக்குபின் இங்கு குடியேறிய ஜரோப்பியர்களிடையே மட்டுமே இருந்து வந்தது அவர்களுக்கு அடுத்த தலைமுறை பலர் இதை ஒறுத்தும் அதன் சுவையே அறியாமலும் வளைந்தவர்கள் எனவே இயல்பாகவே இறக்குமதி செய்து உண்பது வெகுவாக குறைந்து விட்டது. நாளை அரசு தடாலடியாக foie gras வை முற்றிலும் தடை செய்துவிட்டால் கூட பெரும் சலப்பு ஏதும் எழாது.
இதில் உள்ள மிருகவதை என்பது எளிய உண்மைதான் என்றாலும் அவரவர் தேவையும் சூழ்நிலையும் பொறுத்து அவர்களின் கோணம் ஒரு நிலைபாட்டுத் தரப்பின் (Spectrum) அவரவருக்கு வசதியான, இயன்ற இடங்களில் நிலைகொள்வதை பார்க்கலாம். இன்னும் ஒருபடி மேலே போய் இதை இன்னும் சுவாரசியமாக்க வேண்டுமானால் பிரான்சில் உள்ள NGO க்கள் யாருக்காவது நம் டாட்டா பிர்லா அம்பானிகளின் டிரஸ்ட் மூலமாக நிதியளித்து மிருகவதையை தடுக்க கோரி பிரெஞ்சு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பார்க்கலாம் :)
உணவுக்காகவும், உடலுழைப்பிறகாகவும், கேளிக்கைக்காவும், செல்ல பிராணிகளாகவும், பண்பாட்டு செயல்பாட்டின் பகுதியாகவும் மிருகங்ளுடனான நம் தொடர்பு அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. உடலுழைப்பு, வேட்டையாடுவதல் போன்றவை இயல்பாக அருகிவந்தாலும் மற்ற காரணிகள் அதிகரித்தபடியே தான் இருக்கும். உலகெங்கிலும் மிக வேகமாக வளர்ந்துவரும் மத்தியவர்க்கம் உணவிற்கு மற்றும் செல்லப்பிராணியாக வளர்க்கவும் மேலும் மேலும் மிருகங்களை இன்றியமையாதாகவே ஆக்கும். வளரும் முதலாளித்துவ நடுத்தரவர்க்கத்தின் கூட்டு விளைவான தேசிய பெருமிதங்களும், cultural revival & patrimony உம் அது அளிக்கும் பண்பாட்டு அடையாளங்களும் இவ்வகை தடைகளின் பின் உள்ள wisdom என்ன என்று கேள்வி எழுப்பிக்கொண்டே தான் இருக்கும்.
மேற்சொன்ன உதாரணங்களை நான் முன்வைத்தது அங்கெல்லாம் மிருக வதை நடக்கிறது அதனால் நாம் செய்வதில் பிழை ஒன்றும் இல்லை என்று வாதிட அல்ல. உலகெங்கிலும் மிருகங்களுக்கும் மனிதர்களுக்குமான காலங்காலமான உறவும், அந்த உறவின் தன்மையில் உருவாகிவந்த தவிர்க்கவியலா அங்கமான குரூரங்களும் அளிக்கும் பின்புலத்தின், அந்த spectrum ல் ஜல்லிக்கட்டு எங்கு பெருந்துகிறது என்று நாம் உணர்ந்துகொள்ளும் பொருட்டே. இந்த context இங்கு மிக முக்கியமாகிறது.
ஜல்லிக்கட்டிற்கு நிகரான விஷயங்கள் உலகெங்கும் நடக்கின்றன – அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நடக்கும் rodeo க்களோ அல்லது போட்டி இறுதியில் காளைகளை குத்திக் கொல்லும் ஸ்பானிஷ் bull fight போன்றவையோ ஜல்லிக்கட்டை விட மூர்க்கமான விளையாட்டுகள் அங்கும் இது போன்றே பிராணி நல ஆர்வலர்கள் வெகு நாட்களாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் பல கட்டுப்பாடுகளூடனும் பாதுகாப்பு வழமுறைகளை பின்பற்றியும் அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, குறிப்பாக ரோடியோக்கள். இவற்றோடு ஒப்பிட்டால் ஜல்லிக்கட்டு ஒரு low impact sports தான். இதையும் இதன் கலாச்சார பின்புலத்தையும் முக்கியத்துவத்தையும் வைத்து பார்க்கும் போது இதை தடைசெய்ய வலுவான காரணங்கள் இல்லை என்று தான் தோன்றுகிறது.
ஜல்லிக்கட்டை நெறிப்படுத்தும் விதமாக நாமும் நம் சூழ்நிலைகளுக்கு தேவையான, ஒத்துவரும் கட்டுபாடுகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலேயே தேவையான மருத்துவ வசதிகள், பாதுகாப்பான தடுப்பு சுவர்கள், அணிந்துகொள்ள பாதுகாப்பு கவசங்கள், பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்புகள், காளைகளுக்கு சரியான மருத்துவ பரிசோதனைகள்/வசதிகள். public liablity insurance போன்று யோசிக்கலாம். நம் எடுத்த தலைமுறை நம்மிலும் விழிப்புணர்வுடன் தான் வருவார்கள், ஜல்லிக்கட்டும் காலத்திற்கேற்ப தன்னை இயல்பாக உருமாற்றிக்கொண்டு இருக்க முடியும் என்றே சொல்வேன்.
சமீபத்தில் சீனா யானை தந்தங்களை விற்க தடை விதித்துள்ளது, இது போன்ற விஷயங்களில் தடை செய்வது என்னும் அணுகுமுறை சரியாக இருக்கும் ஆனால் ஜல்லிக்கட்டு போன்றவற்றிற்கு அல்ல.
நீங்கள் சொன்னது போல இந்திய நீதி அமைப்பு சட்டங்கள் இயற்றுவதிலும் தீர்ப்புகள் வழங்குவதிலும் மிகவும் முற்போக்கானவை ஆனால் அவற்றை செயல்படுத்த வேண்டுகையில் நாம் மந்தமானவர்கள். மனிதக் கழிவுகளை மனிதர்கள் கொண்டே எடுப்பதை தடை செய்யும் சட்டம் வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் பக்கம் ஆகிவிட்டது ஆனால் இன்னும் சாக்கடை தூர்வாருகையில் இறப்போர் எண்ணிக்கையில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. அப்படி இறந்தவர்களுக்கும் அவர்களுக்கு முறையாக சட்டப்படி கிடைக்க வேண்டிய தொகை கூட முழுதும் கிடைப்பதில்லை. ஜல்லிக்கட்டை தடைசெய்ய அயராது பாடுபடுபவர்கள் இந்த வழக்கத்தையும் நிதர்சனத்தில் தடை செய்ய போராடினால் புண்ணியமாகப் போகும்
அன்புடன்
கார்த்திக்
சிட்னி
https://img. rt. com/files/2016. 07/original/577e84d1c46188c2478b45c1. jpg