வானதி -கடிதங்கள்

va

பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

வானவன் மாதேவி அவர்களின் மறைவு குறித்த தங்கள் அஞ்சலியை படித்தேன்.அவர்களின் இல்லத்திறப்பு விழாவின் போது இப்படி எழுதியிருந்தீர்கள்…

 

வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களில் நாம் நம்முள் இருக்கும் மாறா அவநம்பிக்கையை மீறி நம்பிக்கையின் ஒளியை கண்டடைகிறோம், அத்தருணங்களைத்தான் பேணிப்பேணி வளர்த்து மேலே கொண்டுசெல்கிறோம். அதன் வழிகாட்டலில் அனைத்தையும் கடந்துசெல்ல முயல்கிறோம்.

 

உண்மையிலேயே இவர்கள் போன்றவர்கள் தான் நமக்கு ஆதர்சமாக இருந்து நம்முடைய இந்த அவல வாழ்வுக்கிடையே ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களின் இழப்பு ஒரு பேரிழப்புதான். அவர் ஆத்மா சாந்தி அடைவதாக.

 

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி

 

*

அன்புள்ள ஜெ

 

வானவன் மாதேவியின் இறப்பைப்பற்றிய செய்திகளை வாசித்தேன். ஏதோ ஒருவகையில் அவர் இறப்பை எண்ணிக்கொண்டுதான் இருந்தோம். எப்போதுமே பேச்சில் அவரது உடல்நிலை வந்துகொண்டுதான் இருந்தது

 

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தார் வானதி. முழுமைப்படுத்திவிட்டார்

 

அஞ்சலி

 

ஜெயராமன்

 

*

டியர் ஜெமோ,

நான் கோவையிலிருந்து ஜெகதீஷ், ஜனவரி 11, 2017 இரவு 11.26 மணிக்கு இக்கடிதத்தை நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்… இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம்… இதயம் மிகவும் கனமாக இருக்கிறது…

 

நேற்று இரவு ஜெயக்குமார் அண்ணா கிக்காணி ஆடோட்டிரியத்தில் இருந்து எடுத்து அனுப்பிய செல்ஃபியால்தான் குறளினிது நிகழ்வைப்பற்றி அறிந்துகொண்டேன். இரண்டாம் நாள் நானும் கலந்துகொள்கிறேன் என உறுதியளித்துவிட்டு பணிகளில் ஆழ்ந்து போனேன்… “இரவு” நாவலை பற்றி உங்களிடம் நிறைய பேச எண்ணியிருந்தேன்… உங்களோடு உரையாடும் படமெடுத்து என் நட்பு வட்டத்தாரிடம் காட்டி கொக்காணி காட்டி குதூகலிக்க யூகித்திருந்தேன்…

 

சில வருடங்கள் முன்பு திருப்பூரைச் சேர்ந்த “UNITED HEARTS”  அறக்கட்டளையின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன், அன்றுதான் ஆதவ் ட்ரஸ்ட் வானவன் மாதவி அக்கா அறிமுகம் கிடைத்தது. அன்றைய தினம் அக்கா எனக்கு கொடுத்த அறிவுரைகளை இன்றும் பின்பற்றுகிறேன். அதைத்தொடர்ந்து வாட்சப்பிலும், முகநூலிலும் நிறைய பகிர்தல்கள் நிகழ்ந்தன… சில மாதங்கள் முன்பு அக்காவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் தான் கொஞ்சம் அப்டேட் செய்துகொள்ள தவறிவிட்டேன்…

 

இன்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு செய்தி தெரியும்… என்னென்ன ஆசைகளோடு உங்களை சந்தித்து பேசி, கைகுலுக்கி, போட்டோ எடுத்துக்கொண்டேனோ அவற்றையெல்லாம் அந்த ஒரு நொடி அடித்துடைத்து நொறுக்கிவிட்டது.

 

இன்றைய உங்களது பேச்சு முழுவதும் மாதவி அக்காவின் இருப்பை உணர்ந்தேன்… டார்ஜிலிங் கதையில் விருந்தோம்பல் செய்த பெண், சோவியத் ரஷ்ய கதையில் வரும் பெண், பணமற நிழல் தண்டனை பெற்ற பெண் என இன்றைய உங்கள் பேச்சு முழுவதும் மாதவி அக்காவாகவே இருந்தது…

விசும்பின் ஒரு துளி தான் இவ்வுலகமும் என நீங்கள் முடித்த பொழுது விம்மி அழுதுவிட்டேன்..!

 

 

ஜெகதீஷ்

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா ,

 

 

மிகவும் ஆழ்ந்த மனவருத்தத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் .வானவன் மாதேவி அக்காவின் இறப்பினால்.எனக்கு இலக்கிய வாசிப்பை  அறிமுகம் செய்து வைத்தவரே அவர் தான் . உங்களையும் கூட

 

கடைசியாக நான் அவர்களிடம் பேசியது உங்கள் காந்திய கருத்துக்கள் பற்றி தான் , அது வரை எனக்கும் காந்தியை பிடிகாமல் தான் இருந்தது .உங்கள் பதிவுகளை படித்த பின்பு என் எண்ணங்கள் அனைத்தும் மாறி போயின .அதைப்பற்றி  நான் அவர்களிடம் கூறியதர்க்கு  இதைப்பற்றி என் தேர்வுகள் முடிந்த பின்னர் விவாதிப்போம் என்று சொன்னார்கள்

இனி அது நடக்காது ..நான் இது வரை சில இறபிற்கு சென்று இருக்கிறேன் ஆனால் எங்கும் நான் கண்ணீர் சிந்நியது கிடையாது

 

 

அங்கு என்னால் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை , முதல் முறையாக ஒரு இறப்பு என்னை இவ்வளவு பாதித்திருக்கிறது .

நாங்கள் இருவரும்  ஒரு அணி வல்லபி  அக்கா மற்றும் சில நண்பர்கள் ஒரு அணி .அங்கு சென்ற உடன்  வல்லபி அக்கா கேட்டார்கள் “உன் அணியில நீ மட்டும் தான் இருக போல “”” அப்படியே சரிந்துவிட்டேன் ஆதவ் அறக்கட்டளையில் ஒரு கயிறு முறிந்தது …….

உங்களை எதிர் பார்த்தேன் அங்கு.

 

என்னுடைய கேள்வி இது தான் .ஒரு இறப்பை எப்படி அனுக வேண்டும் ? அதற்கான வழி முறைகள் யாது?

 

நன்றி

 

சுகதேவ் .

 

ஏற்காடு சந்திப்பு வானவன் மாதேவி குறிப்பு

ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்

 

முந்தைய கட்டுரைபுதிய வாசகருக்கு…
அடுத்த கட்டுரைசெ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!