அன்பின் ஜெ,
சில மாதங்களாக டாட்டா குழும நாடகங்கள் ஒரு சுபமான முடிவை எட்டியிருக்கின்றன. சந்திரா என்றழைக்கப்படும் சந்திரசேகரன் டாட்டா குழுமங்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
டாட்டா குழுமங்களை நடத்தும் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் மிக முக்கியமான பங்குதாரர் ஷாப்புர்ஜி பாலோஞ்சி மிஸ்திரி. பல ஆண்டுகளாகவே, அவர் டாட்டா குழுமங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்தார் என்றொரு மந்த மணம் ஓடிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட 100 வெவ்வேறு தொழில்களைக் கொண்ட டாட்டா குழுமத்தில் இன்று மிக அதிகமான லாபத்தை ஈட்டித் தருவது, டாட்டா கன்ஸல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் தான். அதன் தலைவர் சந்திரசேகரன்.
2009 ஆம் ஆண்டு, டிசிஎஸ் ஸின் முக்கிய மேலாண் அதிகாரியாகப் பங்கேற்ற போது, அவர் வயது 45. டாட்டா குழுமங்களின் மிக இளம் முகமே அவர்.
அவரின் தலைமையில் டிசிஎஸ்ஸின் வருவாய், 30000 கோடியில் இருந்து 1 லட்சம் கோடியாக (ஆறாண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி) உயர்ந்திருக்கிறது.
டாட்டா குழும சேர்மன் பதவி உலகின் மிக முக்கிய நிறுவனத் தலைமைப் பதவிகளுள் ஒன்று. அதன் பார்ஸிகளல்லாத முதல் சேர்மன் இவர்தான்.
இப்பதவியில் இவர் 17 ஆண்டுகள் இருக்க இயலும். இன்று அடிப்படைப் பொருள் உற்பத்தித் தொழில்களை விட, அதி உன்னதத் தொழில் நுட்பங்கள் மேலோங்கத் துவங்கியிருக்கும் காலம்.
எனவே, டாட்டா என்னும் பெரும் கலத்தைச் செலுத்த, சந்திரா என்றழைக்கப்படும் சந்திரசேகரன் எல்லா வகையிலும் பொருத்தமானவர்.
மோகனூர் என்னும் சிற்றூரில் பிறந்து, தமிழ்வழியில் படித்து, உழைப்பால் மட்டுமே முன்னேறிய தலைவர்.
இன்று உலகின் மிக முக்கிய நிறுவனங்களான மைக்ரோஸாஃப்ட், பெப்ஸி, கூகிள், டாட்டா என்னும் நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியர்களாக இருப்பது பெரும் மதிப்புக்குரிய விஷயம். அதில் மூவர் தமிழர் என்பது சக்கரைப் பொங்கலாக இனிக்கிறது.
வாழ்க!
பாலா