கல் வாழை – கட்டுரைக்கு மிக்க நன்றி.
தமிழ் நாத்திகத்தின் மிக முக்கியக் கொடை, ஜனநாயகத்தை எல்லோரிடமும் கொண்டு சென்றதுதான்.
உதாரணம் – எங்கள் குல நாவிதர் – சின்னக் காளி எங்கள் அப்பிச்சி (தாத்தா) வீட்டுக்கு வந்து சவரம் செய்வார். ஒரு சின்ன அப்பிச்சிக்கு, சர்வாங்க சவரம் வைக்கோல் புதர் மறைவில் நடந்ததை ஏதேச்சையாகக் கண்டு சிறு வயதில் அதிர்ந்தது இன்றும் நினைவில்.
ஆனால் அவர் மகன் எங்கள் வீடு வர மறுத்து விட்டார். “என்ன பண்றதுங் சாமீ.. இந்த நாயி சொன்ன பேச்சுக் கேக்க மாட்டீங்குதுங்களே” என்று அவர் அழுதார்.. அவர் மகன் மசியவில்லை.
நாங்கள் அனைவரும் அவர் மகனின் கடைக்குச் செல்லத் துவங்கினோம். மின் விசிறியும், நாளிதழும், பெரியார் அண்ணா புகைப் படங்களும், முடி திருத்தும் கடைகளுக்கே உரிய இயற்கை ஓவியங்களுமாய் எங்கள் முடிதிருத்தும் அனுபவம் மிகச் சந்தோஷமான ஒன்றாய் மாறிப் போனது… அதுவரை வேப்ப மரத்துக்குக் கீழே குத்த வச்சு, தந்தையின் மேற்பார்வையில் மொட்டை அடிக்கும் வேலைதான் முடிதிருத்தல் என்று அழைக்கப் பட்டது.
சர்வாங்க சவரமும் அக்குளோடு நின்று விட்டது
அவர் மகன் யாரையும் சாமி என்றழைக்க வில்லை. என்னடா நல்லாப் படிக்கிறியா என்றுதான் கேட்பார். சாமீ என்னும் சொல் வழக்கு அவர் தந்தையோடு மரித்து விட்டிருந்தது. தேவையும் இல்லை. எங்களுக்குத் தான் அவர் தேவைப் பட்டாரே ஒழிய, அவருக்கு எங்கள் தேவை குறைந்து விட்டிருந்தது. இந்தச் சமூக நிகழ்வை, வன்முறையின்றி மிக எளிதாக கொணர்ந்தது அண்ணாவின் நாக்கு. ஆனால், அது தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அவ்வளவாகப் பயன்படவில்லை என்பதை இன்னும் இருக்கும் தீண்டாமை வழக்கம் உணர்த்துகிறது.
அண்ணா ஒரு இலக்கியவாதி அல்ல. நாடகம், சினிமா போன்ற கலைகளை வெகுஜன அளவில் தன் குறிக்கோளுக்குப் பயன்படுத்தி வெற்றி கண்ட ஒரு திறமையான மக்கள் தலைவன்.
அவர் பேரறிஞர்.. இலக்கியவாதி.. என்று ஒரு கடவுள் அளவுக்குக் கொண்டு செல்பவர்களின் நோக்கம், அவருக்கு ஒரு புகைப் படம் மாட்டி, கோவில் கட்டி, உண்டியல் வைத்துத் துட்டுப் பார்ப்பதுதான். திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமை அதைத் திறம்படச் செய்து வருகிறது. இப்ப நம்ப நித்யானந்தா ஒரு பெரும் பணக்காரர் ஆகவில்லையா அது போல.. இது அருவருக்கத் தக்க தொழில். உலகின் மூன்றாவது பழைய தொழில்.
அதே சமயம், அவர்களை உலக நாஸ்திக, ஆஸ்திக, சார்வாக, ஆசீவக இன்னும் பல கோட்பாட்டுக் கண்ணாடிகளை அணிந்து பார்த்தாலும் வேடிக்கையாக இருக்கும். ஏனெனில் அவர்கள் கோட்பாடுகளைப் படித்துணர்ந்து, விவாதித்து ஒரு வழி கண்டவர்களல்ல.. ஆனால் அவர்கள் செய்த சமூக மாற்றம் மிகப் பெரியது. தமிழகத்தின் பிற்படுத்த மக்களின் சமூக எழுச்சி அவர்களின் பங்களிப்பு. தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அவர்கள் ஒன்றுமே செய்ய வில்லை என்று வாதிடலாம். உண்மை. அது மிக முக்கியமான நோக்கு. பிற்படுத்த மக்களுக்காவது ஏதேனும் செய்தார்களே என்று பார்க்கலாம். அது அரை கிளாஸ் பால் என்னும் நோக்கு.
உங்கள் கட்டுரை ஒரு நடு நிலையில் அவர்கள் பங்களிப்பைச் சொல்கிறது. நன்றி.
அன்புடன்
பாலா
அன்புள்ள ஜெமோ வணக்கம்.கொஞ்சநாளுக்கு முன்பு அருமனையில் DYFI அமைப்பினரின் பேரணிக்கான சுவர்த்தாள்களில் பகத்சிங்குடன் விவேகானந்தரின் படத்தையும் பிரதானமாக பார்த்தேன். எதிர் அமைப்பினரின் ஆட்களை ஈர்க்கும் ஒரு யுத்தி மட்டும்தானா அது என்று குழம்பிக் கொண்டிருந்தபோது டாக்டர் ருத்ரன் அவர்கள் விவேகானந்தர் பற்றி எழுதிய ஒரு பதிவையும் காண நேர்ந்தது. அதில் அவர் விவேகானந்தரை முற்றிலும் ஒரு புரட்சியாளராக மட்டுமே கண்டுகொண்டிருந்தார். காவிஅமைப்புகளிடம் கேட்டபோது விவேகானந்தரை இடதுசாரியினர் தத்து எடுத்துக் கொண்டு குறைந்தது பத்துவருடங்களாவது ஆகிறது என்று சொல்லி சிரித்தனர்.
ஆனால் விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சரை இதே தயக்கமின்மையுடன் அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாது என்று தோன்றியது.இந்த சூழலில் உங்கள் கல்வாழை இது எவ்விதம் சாத்தியம் என்ற தர்க்கத்தை எனக்கு தந்தது.விவேகானந்தரை எப்படி இவர்களால் ஒப்புக் கொள்ளள முடிகிறது என்பதை முடிந்தால் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.சமீப காலமாக சுவாமி அக்னிவேஷ் எனக்கு விவேகானந்தரை நினைவுபடுத்துகிறார்.சரியான ஒப்புமைதானா என்று தெரியவில்லை.நன்றி.
BOGAN [GOMATHI SANKAR]
அன்புள்ள ஜெயமோகன்,
கல்வாழை நாத்திகம் அருமை என்றால் சிறிதும் மிகையாகது ,எனினும் தங்கள் தமிழ் ஒரு மேல் தளத்தில் இருப்பதாக எனக்குப் படுகிறது, அது சிறப்பு என்றாலும் ஒரு சாமான்யன் படிப்பதற்கு [ ஒரு வார பத்திரிக்கை அல்லது ஒரு தினப் பத்திரிக்கை படிப்பவருக்கு சற்று கடுமையாக இருக்கும் எனப் படுகிறது. எனவே அது அவனுக்கும் சென்று சேரும் வகை செய்தால் நன்று என நினைக்கிறேன். இதைச் சொல்லுவது எனக்கே வெட்கமாக இருந்தாலும் [ நல்ல தமிழில் எழுதுபவரை சற்று குறைத்து கொள்ளுங்கள் என்பது சற்று பாவம் என்று நினைக்கிறேன்.]
சிந்தனைகள் வைக்கபட்டிருப்பது நல்ல தெளிவாகவும் , நேர்த்தியாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்த கோணம் புதுமை என்பதை விட மிகவும் தேவை தமிழன் முன்னேற்றத்துக்கு என முழுமையாக நம்புகிறேன்.
இங்கே மேடைத்தமிழ் என்ற கூச்சலில் சிந்தனைகள் அழிக்கபட்டிருக்கின்றன; எதிர்ப்பவர்களாக, தமிழனுக்கு விரோதியாக சித்தரிக்க படுகிறார்கள் அல்லது அவர்கள் ஜாதியை இழுக்கிறார்கள் , ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே இதை திறமை என்று நினைத்துக்கொண்டு செய்கிறார்கள்.தமிழனை சிந்தனாவாதியாக ஆகாமல் பார்துகொள்வதில் மிகவும் அக்கறையாக இருக்கிறார்கள்.
சிந்தனை வாதிகள் தமிழில் எழுதவே பயப்படுகிறார்கள்.ஆங்கிலத்தில் எழுதினால் தமிழன் படிக்ககூடாது என்பதில் தீவரம் காட்டுகிறார்கள்.ஆங்கிலமே தமிழுக்கு எதிரிபோன்ற ஒரு நாடகம் உருவாக்கபட்டிருக்கிறது. தமிழ்த் தாத்தா உ.வே.சா வை யாரும் தமிழ் மகாநாட்டில் ஊறுகாய் போலக் கூட தொடவில்லை.அந்த அளவுக்கு மழுங்க அடிக்கப் பட்டிருக்கிறது வேதனை.
நன்றி மீண்டும் வருகிறேன்.
உத்தம நாராயணன்.
கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…