கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு !

இப்போதெல்லாம் தினமும் உங்கள் இணைய தளத்துள் சென்று இடுகைகளை வாசித்து வருவதே என் முக்கிய பொழுது போக்காகி விட்டது. இரவு நேரங்களில் (கனடா ) உங்கள் புதிய இடுகைகளையும் மறு நாட்காலை கோப்பிலிருக்கும் பதிவுகளையும் வாசிக்கின்றேன். எல்லாமே பொக்கிஷங்கள் தான். வீண் அரட்டைகள், அவற்றுக்கு பின்னூட்டங்கள், கண்டனங்கள், வசைகள் என்று சப்புஞ் சவறும் நிறைந்து காணும் இணைய தளங்கள் மத்தியில் சிறப்பான, பயன்மிக்கதோர் வலைதளமாக jeyamohan .in மகுடம் சூடி நிற்கின்றது. உங்கள் நேர்மையும் , ஆத்மசுத்தியும் உங்கள் எழுத்துகளில் நிறைந்திருப்பதைக் காண்கிறேன். நல்லதோர் வாசிப்பனுபவத்தை நித்தம் நித்தம் நல்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் வலைதளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் . உங்களைப் பற்றிய உங்கள் எழுத்தைப் பற்றிய புகழ்ச்சி சற்று அதிகமோ? எல்லா புகழ்ச்சிகளுக்கும் தகுதியானவர் தாம் நீங்கள் . நான் நேசிக்கின்ற மதிக்கின்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருக்கு என் மனப்பிரதிபலிப்புகளை புரியவைக்கும் நோக்கிலேயே இவ்வளவும் எழுத நேர்ந்தது. i . வணிக இலக்கியங்களின் பிடியிலிருந்து இப்போது தான் சற்றே மீண்டு புதிய கலைச்சொற்கள், புதிய சொற் றொடர்கள், செறிவு மிக்க எழுத்தும் கருத்தும் கொண்ட புத்திலக்கியம் நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் புதிய வாசகன் நான். அதற்கேயுரிய மிரட்சியும் தயக்கங்களும் புரியாமைகளும் எனக்கு நிறையவே உண்டு. உங்கள் வலைதளத்தை திறக்கின்ற ஒவ்வொரு முறையும் சற்றே குற்றபோதம் கொள்கின்றேன். இணைய தொடர்புக்கான சிறு தொகையை செலுத்தி விட்டு நூல்களில் மட்டுமே வாசிக்கக் கூடிய -வரவேண்டிய அரும்பெரும் விஷயங்களை இலவசமாய் சில சொடுக்குகளின் உதவி கொண்டு வாசிக்க முடிகின்ற போது நான் உண்மையாக உணரும் உணர்ச்சியிது. உதாரணத்துக்கு உங்களின் ஒரேயொரு கட்டுரை; ராஜ ராஜ சோழன் ,அண்மைய பதிவு. கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் செல்வன் நாவல்கள் வழியாக மட்டுமே ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் மகேந்திர பல்லவன், நரசிம்மப்பல்லவன் இவர்களைப்பற்றிய ஒரு கோட்டோவியத்தை மனதில் உருவாக்க கூடியதாய் இருந்தது . அதற்கு மேல் அவர்களைப் பற்றிய வரலாறு தெரிய எந்த வாய்ப்பும் இருக்கவில்லை. மேலும் தேவையெனில் வலாற்று நூல்களைத்தேடி வாசிக்க வேண்டும் .ஆனால் உங்கள் கட்டுரை.? காரண காரியங்களோடு காய்தல் உவத்தல் இன்றி ராஜராஜன் பற்றி அவன் வாழ்ந்த காலத்தைப்பற்றி அவன் ஆட்சி பற்றி அருமையான கச்சிதமான ஒரு கட்டுரையை யாராலும் இப்படி எழுதிவிட முடியாது. இத்தகைய ஒரு நல்ல ஆக்கத்தை – நூல் வழி மட்டுமே வாசிக்கக்கூடிய ஒரு கட்டுரையை எந்த செலவுமின்றி உங்கள் வலைத்தளத்தில் வாசிக்க முடிவதென்பது எவ்வளவு பெரிய விஷயம். குற்றவுணர்வு கொள்ளாதிருக்க முடியுமா? அதற்கு மாற்று வழிகள் இல்லாமல் இல்லை. விரும்பி வாசித்த உங்கள் கட்டுரைகளை நெருங்கிய நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் ,ஏன் உங்கள் வலைத்தளத்தையே பரிந்துரைக்கலாம் . உங்கள் நூல்களை வாங்கும்படி பரிந்துரைக்கலாம். நானே கூட உங்கள் நூல்களை விலை கொடுத்து வாங்கலாம் ; பரிசாககொடுக்கலாம். . அந்த வகையில், ஜெர்மனியில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு உங்கள் வலைதளத்தை பரிந்துரைத்துள்ளேன் .

முத்துலிங்கம் நாகையா

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

தங்கள் மறுமொழிக்கு நன்றி.

கோதாவரி.. என்ன ஒரு அற்புதமான நதி. அந்த நதிகள் போல் தமிழகத்தில் விசாலமான நதிகள் இல்லை என்பதால் இங்கு பலருக்கு விவரிக்கவே முடியாது. அகண்ட காவிரி வேண்டுமானால் ஒப்பிடலாம். ஆனால் முழுவருடமும் நீரோடும் நதிகள் அவை. ராஜமுந்திரி நகரம் சென்ற பொது கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களை சுற்றி பார்த்தேன். ஏனனில் சத்திய சாய் நிறுவனம் இந்த இரு மாவட்டங்களுக்கும் குழாய்கள் அமைத்து அரசு திட்டம் போல் குடிநீர் வழங்குகிறது இலவசமாக. ஆனால் தமிழ் மன்னர்கள் காவேரிக்கு செய்ததுபோல் அந்த நதிக்கு கிளைகள் ஏற்படுத்தி delta பாசனத்திற்கு ஏனோ வழிசெய்யவில்லை. வயல்கள் நிறைந்த மாவட்டம் தான் ஆனால் காவேரி விவசாயிகள் போல் பொருளாதாரத்தில் செழிப்பானவர்கள் இல்லை.

சேகர் கம்முளா என்ற ஒரு அற்புதமான திரைப்பட இயக்குனர் ஆந்திராவில் இருக்கிறார். அற்புதமான உணர்வுபூர்வமான குடும்பப்படங்கள் மட்டும் எடுப்பார். சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வந்த ‘இனிது இனிது’ என்ற படம் அவர் 2000தில் எடுத்த ‘Happy Days’ என்ற படத்தின் remakeதான். அவர் கோதாவரி நதி பற்றி ராஜமுந்திரி நகரிலிருந்து பத்ராசலம் வரையிலான நதியின் மேல் படகில் செய்யும் பயணம் பற்றி அழகான படம் ஒன்று எடுத்திருக்கிறார். முடிந்தால் பாருங்கள். அதை பார்த்ததிலிருந்து அப்படி ஒரு பயணம் செய்ய வெகுநாள் ஆசை.

பத்ரிநாத் யாத்திரை மீதும் ஒரு தீவிர ஆசை உண்டு. சில இடங்களுக்கு மட்டும் தான் அப்படி செல்லவேண்டுமென ஆவல் ஏற்படுகிறது. அது ஏதோ ஒரு உள்ளார்ந்த எண்ணம். ஒரு பழக்கப்பட்ட தூண்டுதல். புரியவல்லை.

உங்கள் ‘ஆறு தரிசனங்கள்’ புத்தகம் படித்த பொது சில இடங்களை குறித்து வேய்திருக்கிறேன். அந்த இடங்களில் என் புரிதலுக்கு மாறுதலான என்னங்கள் வருகின்றன. விளக்கமாக எழுதுகிறேன். விவாதம் வேண்டும் பின்னொருநாளில்.

மீண்டும் தங்கள் மறுமொழிக்கு நன்றி.

அன்புடன்,
வே. விஜயகிருஷ்ணன்.

மரியாதைக்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். நான் தங்களை பற்றி ஏதும் அறிந்திராத நிலையில் ‘நான் கடவுள்’ படம் பார்த்தேன். படத்தின் வசனங்கள் மிகவும் யதார்த்தமாகவும், நையாண்டி வேண்டிய இடங்களில் நையாண்டியாகவும், அனல்போன்று இருக்கவேண்டிய இடங்களில் அனல்போலவும் அற்புதமாக எழுதப்பட்டிருந்தது
படத்தின் ஓட்டத்திற்கு துணையாக இருந்தது, பாராட்டத்தக்கது. அப்போது வசனகர்த்தா யாரென்று அறிந்து, அப்படம் அவருடைய ‘ஏழாம் உலகம்’ என்ற படைப்பை தழுவியது என்றறிந்தேன். கிட்டத்தட்ட
ஒன்றரை வருடங்களாக தேடி பல புத்தக கடைகளிலும் விசாரித்து வந்தேன். புத்தகம் கிடைத்த பாடில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடுமலைபேட்டையில் ஒரு கடையில் கிடைக்க பெற்றேன்.

தங்களுடைய ‘ஏழாம் உலகம்’ என்னை மிகவும் உலுக்கி விட்டது. இதுவரையில் நாம் சந்தித்த , கடனே என்று காசுபோட்டு விட்டு வந்த, கண்டும் காணாதது போல் வந்த, பரிதாபப்பட்டு உச்சு கொட்டிவிட்டு மட்டும் வந்த, மனிதர்களையும் , அவர்களுடைய வாழ்கையையும் மிகவும் அற்புதமாக சித்தரித்துள்ளீர்கள். இவர்களுக்கும்
ஒரு வாழ்கை உண்டு, இவர்களுக்கும் எல்லா ரசனைகளும் உண்டு , இவர்களுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு என்பதை செருப்பிலடித்தாற்போல் புரிய வைத்துள்ளீர்கள். அதிலும் வட்டார மொழியில் இவ்வளவு அருமையாக எழுதியது படிப்பவர்களை கதையோடு பயணிக்க செய்து அனுபவிக்க வைக்கிறது.

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. இப்புத்தகத்தை இன்னும் பல முறை படித்து தங்களுக்கு எழுதுவேன்.

தங்கள் எழுத்து பணி மென்மேலும் சிறந்து தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும். …

ராமன் உன்னி
கோயம்புத்தூர்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் ஈரோடு மோகனரங்கனின் கல்லூரித்தோழன். அவனால் 90களில் நீங்கள் ‘ரப்பர்’ மூலம் எனக்கு அறிமுகமானீர்கள். இன்று வரை உங்கள் எழுத்துக்கள் எனக்கு ஒரு மிக பரிச்சயமாக உள்ளது. அதுவும் மோகனரங்கன் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியபின் நான் அவனை உங்கள் சமீபத்திய படைப்புகளில் முந்தியுள்ளேன்! உங்கள் தஞ்சாவூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்!என் மனைவியின் பூர்வீகமும் தஞ்சையே! எங்கள் முதல் குழந்தை பிறக்கும் முன் நானும் என் மனைவியும் கருக்காவூர் சென்றது இன்னும் நினைவில் உள்ளது!

நான் இந்தியாவை விட்டு வெளியே சென்று 16 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒரு சிறு சந்தேகம்! தற்போதைய இளசுகள் நாத்திகவாதிகளாயென்ன? எனக்கு அறிந்தவகையில், ஆவலாயுள்ளபோதிலும், ஒரு நாத்திக இளையவனையும் இன்னாட்களில் காண இயலவில்லை!! நான் மற்றும் மோகனரங்கன் கல்லூரி நாட்கள் கழிந்து நாத்திகர்களே! வாத்தீயாரின் தற்போதைய நிலை நான் அறியேன்!!அவன் நாத்திகனால் ‘நான் அவனில்லை’!

இந்தியாவை விட்டு ஆரம்ப 90களில் சென்றபின் சிலை,மதம் தாண்டிய இந்து மதத்தை பற்றிய ஒரு பார்வை ஒவ்வொரு முறை எவ்வொரு கோவிலுக்கும் செல்லும்போதும் புதுப்புது கேள்விகளை எழுப்புகிறது. ஆன்மீகம் பறிறிய அ¡¢ச்சுவடியும் அறியேன்! உங்களின் வீச்சும் பார்வையும் எனக்கு முற் றிலுமாக புலப்படவில்லை!அடிப்படையில் என் முன்னோர்கள் என்னை விட அதிகம் கண்டவர்கள் என்பது மட்டுமே என்னை இன்று வரை நான் இந்து மதத்தினன் என்னும் பெருமையில் இருக்க வைக்கிறது. பல சமயங்களில் நான் ஒரு இந்தியன் என நினைக்கவைத்ததே இந்து மதத்தின் பலம் என நான் நம்புகிறேன்.

உங்களின் கோதாவாரிப் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்

– கோவர்தனன்

ஓக்டேல், கனேக்டிகட்

அன்புள்ள கோவர்தனன்

உங்கள் கடிதத்தை மோகனரங்கனுக்கு அனுப்பலாமென்றால் அவர் மின்னஞ்சல் பார்ப்பதில்லை. தொலைபேசி எண் அனுப்பியிருக்கிறேன்

நாத்திக நம்பிக்கை கொண்டவர் என்பதனால் ஒருவர் இந்தியாவின் நம்பிக்கைகள் வாழ்க்கைமுறைகள் சடங்குகளில் இருந்து விலகிச் செல்லவேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன். அவற்றை அழ்கியல் கூறுகளாக, குறியீடுகளாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அமைந்தாலே போதும்

ஜெ

இனிய ஜெ மொ..

ஆங்கிலத்தில், உங்கள் மனதுக்கு இசைந்த புத்தகங்களை படிப்பதாக சொல்லி இருந்தீர்கள் ( தமிழில் , ஒரு விமர்சகன் என்ற முறையில் எல்லா புத்தகங்களையும் படிப்பதாக சொல்லி இருந்தீர்கள் )

அந்த வகையில், ஜென் அண்ட் ஆர்ட் ஆஃப் மோட்டார் சைக்கிள் மெயிண்டனன்ஸ், என்ற நாவல் உங்கள் மனதிற்கு இசைந்ததா அல்லது அது முக்கியத்துவம் இல்லாத நாவலா என்பதை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்,
பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்

அந்த நூல் எண்பதுகளில் அதிகம் பேசப்பட்ட ஒன்று. ’அன்றாட ஆன்மீகம்’ என்ற கருத்து அன்று மிகப்பெரிய கவர்ச்சியாக இருந்தது. அப்போது அந்நூல் என்னை கவர்ந்திருக்கிறது. இப்போது பெரிதாக தோன்றவில்லை. அது நல்ல ஒரு அறிமுகநூல் என்று மட்டுமே நினைக்கிறேன்

யுவன் சந்திரசேகர் அதன் சில பகுதிகளை தமிழாக்கம் செய்திருக்கிறான்

ஜெ

அன்புள்ள ஜெ,

எல்லோரும் மார்க்ஸையும், அவரது மூலதனம், அதன் ஆதார சுருதியான உபரிமதிப்பு எனப் பேசுகையில் எனக்கு என்னவோ அந்த சமத்துவச் சிங்கத்தின் சாகாக் காதலே நெஞ்சில் என்றும் நிற்கிறது. இதுக்குப் பெயர்தான் நம் ஊர்ப்பக்கம் சொல்லும் வயதுக் கோளாறோ ?

அது குறித்த என் பதிவு

http://kanakkadalan.blogspot.com/2010/10/blog-post_29.html

என்றும் அன்புடன்,
பா. கார்த்திக்.

அன்புள்ள கார்த்திக்,

உங்கள் கட்டுரை வாசித்தேன். ஒரு பொதுப்புரிதலின் அடிப்படையில் அது எழுதப்பட்டிருந்ததாக உணர்ந்தேன். மார்க்ஸ்- ஜென்னி காதல் என்பது பின்னாளில் மார்க்ஸிய பிரச்சாரகர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் உள்விவகாரங்கள் எல்லாம் பல ஆய்வாளர்களால் விரிவாக எழுதப்பட்டுவிட்டன.

ஹெலன் டெமுத் என்ற பெண்மணி மார்க்ஸின் இல்லப் பணிப் பெண்ணாக இருந்தாள். அவளுடன் மார்க்ஸ் ஜென்னியின் விருப்பத்துக்கு மாறாக உறவு கொண்டு பலமுறை அவளை கருவுறச் செய்திருக்கிறார். கடைசியாகப் பிறந்த குழந்தைக்கு மார்க்ஸ் தன் பெயரை அளிப்பதை ஜென்னி கடுமையாக மறுத்தார். மார்க்ஸ் அதன் பொருட்டு ஜென்னிமேல் கடுமையான வன்முறையை செலுத்தியிருக்கிறார். ஆயினும் ஜென்னியின் பிடிவாதம் ஜெயித்தது. அந்தக் குழந்தைக்கு எங்கல்ஸ் தந்தை பதவியை ஏற்றுக்கொண்டார்.

மார்க்ஸ் எப்போதுமே கட்டற்றவராக, கனவுகாண்பவராக, அத்து மீறுபவராக, கட்டுக்கடங்காத கோபமும் வன்முறையும் கொண்டவராகவே இருந்திருக்கிறார். அவருடன் ஜென்னிக்கிருந்த உறவு கடுமையான மனவதை கொண்டதாகவே இருந்திருக்கிறது. இவற்றை நீங்கள் இன்று இணையத்திலேயே வாசிக்கலாம்.

உண்மைகள் கசப்பானவையாக இருக்கின்றன. ஆனால் அந்த உண்மைகளை கொண்டே நாம் நம்மை அறிய முடிகிறது என்னும்போது அவற்றை நாம் தவிர்க்க முடிவதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைநந்தலாலா,இளையராஜா, ஷாஜி
அடுத்த கட்டுரைஹிந்து பைபிள்