ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் இன்குலாப்
சேரியில் ஒதுக்கப்பட்ட மக்களின் தோழன் இன்குலாப்.
***
ஆமாம் செயமோகா….
உனக்கும் அவருக்கும் என்ன பகை?
உனது “விசுணுபுர”த்து மக்களுக்காக
எங்கள் பாவலன் பாடவேண்டுமா?
அல்லது
நீ “வெண்கொற்றம்” புடிக்கும்
காவிக் கூட்டத்திற்கும்
சாதிவெறிபிடித்த சனாதனிகளுக்கும்
மேட்டிமை நிறைந்த உனது
தொண்டரடிப் பொடியாகளுக்கும்
வெண்சாமரம் வீசவேண்டுமா?
எங்கள் கவிஞரிடம் என்ன எதிர்பார்ப்பு
உனக்கு?
ஆமாம் செயமோகா
எழுதுபவர்கள் உன்னிடம்
நற்சான்றிதழ் பெற வேண்டுமா?
அல்லது உன் அடிவருடித்தான் எழுத வேண்டுமா?
என்வென்று புரியவில்லையே செயமோகா?
உனது எழுத்தை சொறிபவர்களுக்குத்தான் நீ ஆசான்.
தமிழ் எழுத்துக்கோ அல்லது
தமிழ் இலக்கியத்திற்கோ
நீ கொம்பனல்ல புரிந்து கொள்!
***
எங்கள் பூட்டன் வள்ளுவன் சொல்வான்
“அரம்போலும் கூர்மைய ரோனும் மரம்போல்வர்
மக்கட் பண் பில்லா தவர்”
என்று.
அடிப்படை பண்பில்லாத
உம்மைப் போன்றவர்களை நினைத்துத்தான்
எழுதினார் போலும்.
***
“அறக்கதைகளை” புனைவெழுத்தில் எழுதும்
மரத்துப் போன மனம் படைத்தவன் நீ!
மனவியலிலும் மனஇறுத்கத்திலும்
வளர்ந்தவன் தானே நீ
உனக்கெப்படித் தெரியும் “மனித நேயம்”
எங்கள் பாவலன் இன்குலாப்
விருதுகளை தூக்கி எறிந்தவன்!
மிரட்டிய அதிகாரங்களை எட்டி உதைத்தவன்!
இன்னொன்று கேள்.
அவரது சிறுகதைத் தொகுப்புக்குப் பெயரென்ன தெரியுமா?
“செடிகளுக்கும் கொஞ்சம் பூக்கள் வேண்டும்” என்று
பூப்பூத்த செடிகளும் வாடிவிடுமே என்று
ஏங்கியவன் எங்கள் பாவலன்.
***
செயமோகா நிறுத்து உன் ஏகடியத்தை
வசைபாடுதலுக்கும் ஒரு
வரையறை வேண்டும்
என்றும் எங்கள் இதயங்களில் வாழும்
மக்கள் கவிஞன் இன்குலாப் அவர்களை
வசைபாடுதலை நிறுத்து.
இல்லையென்றால்
உன்னைப் “பின்தொடரும் நிழலாய்”
தமிழ்ப் பகை நிச்சயம் எழும்.
வேனில் கிருஷ்ணமூர்த்தி
கோவை
10.01.2017