அன்புள்ள ஜெயமோகன்
என் புத்தக வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வதற்கு நான் என்னென்னமோ பிரயத்தனம் செய்ததாக பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நான் ஒரே ஒரு இரண்டு வரி மெயில் மூலம் அழைத்து உங்கள் வருகையை உறுதிப்படுத்திக்கொண்டேன் என்றால் யாருக்கும் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.என்ன செய்வது? எல்லாவற்றையும் கடினமாக்கியே பழக்கப் படுத்திக்கொண்டனர்.
நீங்கள் உறுதிப்படுத்திய பின்புதான் சாருவிடமே சொன்னேன்.
6 பிரபலங்களை அழைத்து என்னுடைய 6 புத்தகங்களைப் பற்றி பேச விட்டு அகமகிழ்வதை விட உங்கள் இருவரையும் ஒரே மேடையில் ஏற்றி, உங்களுக்குள் ஒரு சின்ன உரையாடலை நிகழ்த்திக் காட்டி, உங்கள் இருவரையும் கொண்டாடுவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் ஜாக்கி ஜட்டி போட்டதற்கே ஜெர்க் ஆன வாசகர் பரப்புக்கு உங்களுடைய ஜாலியான இன்னொரு முகத்தை காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. நீங்கள் அப்படியான ஆள்தான் என்பதை உங்கள் எழுத்துக்களின் இடைவெளியில் என்னால் சுலபமாக அறிய முடிந்தது.
நீங்கள் இருவரும் கலந்து கொண்டாலே அதற்கு மிக முக்கியத்துவம் கிடைத்து மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்படும் என்பது இயல்பானது. அதற்கெல்லாம் வருத்தப்படலாகாது. வெளியாகும் என்னுடைய புத்தகங்கள் உட்பட. எனக்கு என் புத்தகங்கள் வெளியாவதை விட, இந்தத் தருணத்தில் உங்கள் இருவரையும் மேடையில் சேர்த்து உலகுக்கு காட்டி ரசிக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமாக இருந்தது.
விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவில், நேரம் காரணமாக நீங்கள் சுருக்கமாக பேசி இருக்கலாம். மின்மினி பூச்சிகளை குறிப்பிட்டு, வண்ணதாசனை வாழ்த்தி உரையை முடித்த போது, அதுவரை இறுக்கமாக இருந்த வண்ணதாசன் உடல் மொழியில் ஒரு மாற்றம் வந்து புன்னகை சிந்தினார். அதுதான் அந்த மொத்த விழாவின் எசன்ஸ்.ஆனால் அந்த உரையை விட மிகச் சிறப்பான உரையை என் விழாவில் வழங்கினீர்கள்.
என் விழாவில் உங்களின் உரை வழக்கமான உங்களின் உரை அல்ல.மிக மிக தனித்துவமான உரை. அதனால்தான் பலரும் கொண்டாடுகிறார்கள். தெய்வமும் சாத்தானும் சந்தித்துக்கொண்ட தருணம் போன்ற உரை. எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால், இந்த உரையின் போது, 360 டிகிரி ஜெயமோகனை வாசகர்கள் தரிசிப்பார்கள். நீங்கள் பேசிக்கொண்டு இருந்த போதே, சாரு என்னிடம் சொன்னார். ஜெமோ செமையா பேசிட்டு இருக்காரு, நான் உங்க கதையை மட்டும் வாசிச்சிடறேன்.
சாரு, தற்கொலை குறுங்கதைகளின் வெளியீட்டின் போது, தனிப்புத்தகமாக போடும் அளவுக்கு முன்னுரை எழுதினார். அதனால் மேடையில் ஏதும் பேசவில்லை. இந்த முறை பிரேக் அப் குறுங்கதைகளின் போது, ஏதும் எழுதவில்லை.
மேடையில் பேச நிறைய வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். வேறு ஒரு உலகப் போக்கைச் சுட்டி என்னிடம் கோடி காட்டி இருந்தார், இப்படி பேசப்போவதாக.ஆனால் உங்கள் உரைக்குப் பிறகு, பிரேக் அப் குறுங்கதைகள் பற்றி சின்னதாக சொல்லி விட்டு, ஒரு கதையைப் படித்துக்காட்டி முடித்துக்கொண்டார். செம க்யூட்டாக இருந்தது எனக்கு.
ஹாட் சீட்டில், சாருவுக்கு பிறகு, உங்களை நான் சில கேள்விகள் கேட்பதாக இருந்தது. கேள்விகளை தேர்ந்தெடுத்து வைத்து இருந்தேன்.
ஜாலியாக செய்தாலும் சில விஷங்கள் மிக மிக சென்ஸிட்டிவாக மாறி விடுகிறது. அதனால் பயந்து கொண்டு, அதை ரத்து செய்து விட்டேன். நீங்கள் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் ஊதிப் பெரிதாக்க வாய்ப்புள்ளது என்ற பயமே காரணம்.நமது விருந்தினர் எந்த விதத்திலும் காயப்பட்டு விடக்கூடாது என்ற பதட்டம் இருந்து கொண்டே இருந்தது. என்னை விட சாருவுக்கு அதிகம்.
உங்க தொகுப்பில் அண்ணன் தங்கச்சி கதைதான் ஃபெண்டாஸ்டிக் (வேறு வார்த்தை கூட நீங்கள் பயன்படுத்தி இருக்கலாம், மறந்து விட்டேன்) அதை சொல்ல மறந்துட்டேன் என்று உரை முடித்த பின் என்னிடம் தனியாக சொன்னீர்கள். அதை மேடையில் உங்கள் பாணியில் விளக்கி சொல்லி இருந்தால் ரகளையாக இருந்து இருக்கும்.
கலர்ஃபுல்லான ஜெயமோகனை நாங்கள்தான் காட்டினோம் என்பதில் எங்களுக்கு சற்று பெருமை மற்றும் மகிழ்ச்சிதான்.
என்னுடைய கதைகளின் கண்டெண்ட் பற்றி பேசினீர்கள். அதே சமயம் ப்ரஸண்டேஷனைப் பற்றியும், ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வித்தியாசமான நடையில் எழுதப்பட்டதையும் (மட்டமோ ஒஸ்தியோ) பற்றி ஒரிரு வார்த்தைகள் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். எதிர் பார்ப்பு மட்டுமே, ஏமாற்றமோ, வருத்தமோ அல்ல.
இந்த விழாவுக்கு வந்திருந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருபவர்கள். விழா தொடங்குவதற்கு முன்னால் அவர்களிடம் பேசியதில் தெரிந்து கொண்டேன்.
இரண்டு எழுத்தாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு 3 மணி நேரம் விழாவை தொய்வில்லாமல் கொண்டு போவது பெரிய சவால்தான். கண்மணியின் ஒருங்கிணைப்பும் உங்கள் இருவரின் பங்களிப்புமே இதை சாத்தியமாக்கியது.
ஆரம்பத்தில் நான் பேசியது கொஞ்சம் பிளேட் போட்டது என நண்பர்கள் சொன்னார்கள். எனக்கும் வருத்தம்தான்.
தனி ஆளாக வேலை பார்த்ததால் நான்கு நாட்கள் தூக்கம் இல்லை.புத்தகம் வெளியாவதில் கடைசி நேர பதட்டம் என நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு வரை எக்கச்செக்க பிரஷர். மூளையே ஃப்ரீஸ் ஆகி விட்டது.பேச நினைத்திருந்த அனைத்தும் மறந்து போனது.
இந்த கரும்புள்ளியைத் தாண்டி நிகழ்வு பெரும் வெற்றிதான்.
நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்களைத் தாண்டி,
நிர்வாண நடனம் பார்த்தார் ஜெயமோகன் என்று மறுநாள் தலைப்புச் செய்தி வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் வரவில்லை. அதற்கு நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டும்!
நிகழ்ச்சியில் உங்களிடம் கேட்க இருந்த கேள்விளில் சில சாம்பிள்கள் (சாம்பிள்களுக்கு சாரு வைவார்)
1) உங்களுக்கு காதல் கடிதம் வருகிறதா? என்ன பதில் கொடுக்கிறீர்கள்?
2) உங்கள் மனைவியுடனான காதல் மலர்ந்த தருணத்தைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதற்குப் பிறகு, அந்த அளவுக்கு இம்ப்ரெஸ் செய்த பெண்ணை சந்தித்தது உண்டா?
3) உங்கள் படிப்பு, நீங்கள் எழுதும் பலதரப்பட்ட விஷயங்கள், உங்கள் அனுபவங்கள் எல்லாம் வாசகனை பிரம்மிக்கச்செய்து, பயமுறுத்தி விடுகிறது. இவ்வளவு உழைப்பைக் கொடுத்தால்தான் எழுத்தாளனாக ஆக முடியும் என்ற சவாலை முன் வைக்கிறது. இதனால் பலர் ஆரம்பிக்காமலேயே ஓடி விடும் அபாயம் உள்ளதே. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
4) சாரு நிவேதிதாவின் படைப்புகளில் உங்களுக்கு பிடித்தது ஏதாவது உண்டா? எது?
5) நேர்மையாக, நியாயமாக இருக்கிறீர்கள். டர்டியாக, மிஸ் சீஃபாக ஏதேனும் செய்யத் தோன்றுவதே இல்லையா? என்ன?
6) தற்கொலை குறுங்கதைகள் படித்து இருக்கிறீர்களா? யார் உங்களுக்கு கொடுத்தது?
உங்கள் வருகை விழாவை இனிதாக்கியது. நன்றி.
அன்புடன்
அராத்து
அன்புள்ள அராத்து,
உற்சாகமான நிகழ்ச்சி. நானும் உற்சாகமாக இருக்கவேண்டும் என நினைத்தே வந்தேன். வெண்முரசு வரிசையில் கிராதம் கொடூரமும் இருண்மையும் கொண்ட நாவல். அது ஒரு மெல்லிய இனிமையுடன் முடிந்தது. அந்த மனநிலையை நீட்டிக்க விரும்பினேன்
இன்னொன்று, என்னைப்பற்றிய பொதுவான சித்திரங்களைக் கடக்க விரும்பியது. நான் இறுக்கமான ஆள் என்னும் சித்திரம் என்னை முழுமையாக வாசிக்காத, நேரில் அறியாத நண்பர்களுக்கு உண்டு. நான் எக்காலத்திலும் அப்படி இருந்ததில்லை. சிரிக்காமல் இருக்கும் நேரம் வீண் என நினைப்பவன். சிரிப்புதான் என்னை அனைத்தையும் கடக்கவைத்தது. விழாவின் பதிவுகளைப்பார்க்கையில் சரிதான், இவர்கள் என்னை இப்போதுதான் சந்திக்கிறார்கள் என நினைக்கத்தோன்றியது
உங்கள் கேள்விகள்.
1). நான் எழுதவந்த ஆரம்பகாலத்திலேயே சுந்தர ராமசாமி சொன்னார், “ஜெயகாந்தனுக்குத்தான் தமிழிலக்கியவாதிகளில் அதிக காதல்கடிதங்கள் வந்தன. அதன்பின் உங்களுக்குத்தான் அதிகமாக அவை வரும். எழுத்து மட்டும் அல்ல, தோற்றம், மொழிநடை, தோரணை, மேடையில்பேசுவது என அதற்குப் பல துணைக்காரணங்களும் உண்டு” வாசகிகளை மாணவிகளாக மட்டுமே பார்க்கவேண்டும் என்றார். ஆகவே அருண்மொழியை திருமணம் செய்ததில் அவருக்கு பெரிய ஏமாற்றம். அவளிடம் பழகியபின் அது இல்லாமலாயிற்று. ஆனாலும் “பாத்து நடந்துக்குங்கோ” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்
உண்மையில் காதல்கடிதங்கள் எல்லா காலகட்டத்திலும் ஏராளமாக வந்துகொண்டிருந்தன, வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் என் வாசகிகள் அப்படி நேரடியாக எழுதுபவர்கள் அல்ல. சாதாரண வரிகளில் காதலைத் தொனிக்கவைக்க அவர்களால் முடியும். சாதாரணவரிகளில் பதில் எழுதி அதை உணர்த்த என்னாலும் முடியும். அது எப்போதும் ஒரு சொல்லப்படாத உரையாடலாகவே நின்றுவிடும். உண்மையில் அந்தக்காதல் எழுத்துக்குள் மேலும் ஆழமாக உட்புக, உள்ளே வாழும் எழுத்தாளனைக் கண்டுபிடிக்க உதவுகிறது
நானும் அக்காலத்தில் குர்ரதுலைன் ஹைதருக்கும் மாதவிக்குட்டிக்கும் [கமலாதாஸ்] ‘காதல்’கடிதங்கள் எழுதியிருக்கிறேன். என் ஒரு கடிதத்தை எடுத்து என் முன்னாலெயே வாசித்து அது எப்படி ஒரு காதல்கடிதம் என மாதவிக்குட்டி கட்டுடைத்து மானத்தை வாங்கினார் என நினைவுறுகிறேன். மாதவிக்குட்டி நித்யசைதன்ய யதிக்கு எழுதிய மகத்தான காதல்கடிதங்களை நான் பார்த்திருக்கிறேன்
காதல் என்பது மிக நெருங்கிவருவதற்கான ஒரு துடிப்புதானே? எனக்கு வரும் ஆண்களின் கடிதங்களிலும் காதல்தான் பலசமயம் இருக்கிறது. அதற்குக்காரணம் இலக்கியம் வழியாகவே ஒருமனிதரை மிக அருகே சென்றுபார்க்கமுடியும் என்பதுதான்
2). நிறையப்பெண்களை. பித்துப்பிடிக்கவைக்கும் அளவுக்கு. பெண் அழகு போல, பெண்களின் அசைவுகள் போல என்னை கிறுக்காக்குபவை இயற்கைக்காட்சிகள். இரண்டின் மேலும் இருக்கும் பித்து வாழ்க்கை இன்னும் கொஞ்சநாள்தானோ என தோன்ற ஆரம்பிக்கும் வயதில் மேலும் அதிகரிக்கிறது. உண்மையில் வீட்டில் இருக்கவே முடியவில்லை
அது தனிப்பட்ட உறவாக ஆகுமா என்றால் இதுவரை இல்லை. அவர்களை உருமாற்றி மேலும் உருமாற்றி மேலும் மேலும் உருமாற்றி எழுதிவிடுவதுதான் என்வழி. உயிர்த்துடிப்புடன் வெளிவந்துள்ள பெண்கதாபாத்திரங்கள் நான் காதலித்த பெண்கள்தான்
3). நீங்கள் ஓடவில்லையே அராத்து!
4).ஸீரோ டிகிரி. அது வெளிவந்ததும் முதன்முதலில் பாராட்டி எழுதியவன் நான். அந்தக்கடிதத்தை அதன் முதல் விமர்சனக்கூட்டத்தில் சாரு வாசித்தார். அப்படி வாசித்ததைத் திட்டி நான்கு கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டன.
5). உண்மையில் எழுத்தாளன் நேர்மையாக ஒழுங்காக இருப்பது மிகமிகக் கடினம். மூளைக்குள் குறுகுறுவென குடையும் அந்த அயோக்கியனை அவ்வப்போது சமாளிக்கமுடியாமலாகும். அப்படி மாதத்தில் ஒன்றாவது செய்துவிடுவேன். அதை மேடையில் சொன்னால் மறுபடி செய்யமுடியாதல்லவா?
சரி, ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் ஈரோட்டில் பேசியபோது கூட்டம் கலைந்துசென்றபடியே இருந்தது. கடுப்பாகி இந்தக்காக்காக்கும்பலிடம் இனிமேல் பேசமாட்டேன் என எழுதினேன். ஈரோட்டு நண்பர் ஒருவர், பெரிதாக எதையும் வாசிக்காதவர், எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். ஆங்கிலத்தில். அதில் ஈரோடு பெரியார் பிறந்த பெருமை உடையது என்றெல்லாம் ஆரம்பித்து ஒரு பெரிய ’அட்வைஸ்’. எழுத்தாளன் அடக்கமாக இருந்தாகவேண்டும் என்பது சாரம்
நான் அவருக்கு ஒரு நீஈஈஈஈண்ட பதில் எழுதினேன். ஆங்கிலத்தில். இணையத்திலிருந்து ஒரு கட்டுரையை எடுத்தேன். சார்பியல்கொள்கையின் மின்னணுவியல் தளம் பற்றிய கட்டுரை. அதில் relativity என வரும் இடத்தை முழுக்க ஈரோடு என ஆக்கினேன். conductor என வரும் இடங்களை எல்லாம் ஈ.வெ.ரா என மாற்றினேன். இப்படி நூறு சொற்களை தெரிந்த சொற்களாக மாற்றினேன். கட்டுரையை ‘இதைப்பற்றி மீண்டும் பேசுவோம்’ என முடித்து அனுப்பினேன்
சம்பந்தப்பட்ட நபர் அதை வாசித்துத் திகிலடைத்தார். ஆனால் அவரை மதித்து எழுதப்பட்ட ஒரு கடிதம் வேறு. ஒருவேளை வரலாற்று நிகழ்வாக இருக்கலாம் அல்லவா? நாலைந்து வக்கீல்களிடமும் ஒரு பேராசிரியரிடமும் வாசித்துப்பொருள்சொல்லக்கேட்டார். பேராசிரியர் என் நண்பர். அவரும் திகிலடைந்து பேசாமலிருந்துவிட்டார்
இப்படியே ஒர் ஆண்டு. நண்பர்களுக்கெல்லாம் அந்தக் கடிதம் என்னவென்று தெரியும். சென்றவருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கிருஷ்ணன் வெடித்துச்சிரித்தபடி ஓடிவந்தார். “சார், அந்தாள் வந்து நின்னுட்டிருக்கான். லெட்டருக்கு அர்த்தமென்னன்னு உங்ககிட்டயே பேசணுமாம்” நண்பர்கள் அவரை வேடிக்கைபார்க்க கூட்டமாக ஓடினார்கள். நான் ஒளிந்துகொண்டேன்
ஜெ