மொழிங்கடித்தல் -கடிதங்கள்

index

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் பகடியாக சொன்னது போல கிட்டதட்ட அதே மாதிரியான உத்தியை கூகிள் தனது சமீபத்திய Artificial Intelligence ஆராய்ச்சியின் முடிவினை “கூகிள் மொழியாக்க” மென்பொருளில் பயன்படுத்தியுள்ளது.

தற்பொழுது உள்ள கூகிள் மொழியாக்கம் 30 வருட பழைமையான தொழில்நுட்பம். மாற்றாக அவர்கள் மொழி இயந்திரத்தை உருவாக்குவதன் பொருட்டு சரியான மொழியாக்கத்தை இயந்திரத்திற்கு பழக்குவதற்காக இரு மொழிகளுக்கிடையேயான மனித மொழியாக்க ஆக்கங்களை உள்ளீடாக கொடுத்து இயந்திரத்தை கற்பிக்கிறார்கள். தேர்ந்தெடுத்த மனித மொழியாக்கங்களை இயந்திரத்திற்கு கற்பிப்பதின் மூலம் அதே தரத்தில் கூகிள் மொழியாக்க இயந்திரம் நமக்கு சிறந்த மொழியாக்கங்ளை அளிக்கும்.

தற்பொழுது ஆங்கில – ஜப்பானிய மற்றும் சில ஐரோப்பி மொழிகளுக்கு மட்டுமே A.I தொழில்நுட்பத்தைக்கொண்டு மொழியாக்கம் செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் இதர மொழிகளுக்கும் செயல்படுத்த உள்ளனர்.

இயந்திரத்தை கூகிள் ஆய்வகத்தில் கற்பிக்க இரு மொழிகளுக்கிடையேயான அதிகஅளவிலான “நல்ல” மனித மொழியாக்க ஆக்கங்களை உள்ளீடாக கொடுப்பது மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது.

மிக விரிவாகவும் முழுமையாகவும் நியுயார்க் டைம்ஸ் கட்டுரையில் இதனை விளக்கியுள்ளார் கட்டுரையாளர் கிதியோன்.

http://mobile.nytimes.com/2016/12/14/magazine/the-great-ai-awakening.html

நன்றி

கார்த்திகேயன்​

*

அன்புள்ள ஜெமோ

மொழியாக்கம் பற்றிய உங்கள் பகடி வாசித்தேன். புத்தகக் கண்காட்சிகளில் எனக்கிருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே மொழியாக்கங்கள்தான். பெரும்பாலான மொழியாக்கங்களை ஆர்வத்தில் காசுகொடுத்து வாங்கிவிட்டு அய்யோ என்று தலையில் அடித்துக்கொள்வேன். சரியாக மொழியாக்கம் செய்யப்படாவிட்டாலும் பரவாயில்லை வாசித்து புரிந்துகொள்ள முடிந்தாலே பரவாயில்லை. போப்பு என்பவர் மொழியாக்கம் செய்த நுகர்வெனும் பெரும்பசி என்ற நூல் இதைவிட மோசம். ஒரு வரிகூட புரியாதபடி ஒரு மொழியாக்கம். காலச்சுவடு போடும் மொழிபெயர்ப்புகளில் சுகுமாரன் மொழிபெயர்த்த கர்சியா மர்க்யூஸின் நாவல் மட்டும்தான் நல்ல மொழியாக்கம். எம்.எஸ். மொழியாக்கம் செய்தவையும் அழகான வாசிப்புகள். மற்றதெல்லாம் தண்டம் என்றுதான் சொல்லவேண்டும்

மணி பிரபாகரன்

 

முந்தைய கட்டுரைமழை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைராணுவத்தின்மீதான ஊழல்குற்றச்சாட்டு