ஜெ,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் 99% இயந்திரங்கள் மூலமே துணிதுவைக்கிறார்கள்.. அதனால் அங்கு புழக்கத்தில் உள்ள டிடர்ஜெண்டுகளில் வீரியம் அதிகம் உள்ள, அரிக்கும் தன்மையுள்ள கெமிக்கல்கள் அதிகம். ஆனால் இந்தியாவில் இப்போது கூட இயந்திரங்களை விட கையால் துணி துவைப்பவர்களே அதிகம். அதனால் கையை அரிக்கும் தன்மையில்லாத மென் கெமிக்கல்களையே இங்கு காலம் காலமாக டிடர்ஜெண்ட் தயாரிப்பாளர் பயன்படுத்தி வந்துள்ளனர்.. இயந்திரத்தின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, வளரும் நாடுகளின் பிராண்டுகள் (உதாரணமாக, Tide) இங்கும் பிரபலமாகின்றன. இவை அதிக சூழலியல் கேடுகளை ஏற்படுத்தும்.
கையால் துணிதுவைக்கும் காந்திய வழிமுறை பெரிய அளவில் ஊக்குவிக்கப் படவேண்டும்.
ஜடாயு
அன்புள்ள ஜடாயு
ஆம். அது உண்மை. இந்தியச்சூழலில் கனமான துணிகள் அல்லாதவற்றுக்கு துவைஇயந்திரம் தேவையில்லை என்பதே என்னுடைய எண்ணம். என் ஆடைகளை நானே கையால்தான் துவைத்துக்கொள்கிறேன்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
“அழுக்குநீக்கிகள் இன்றியமையாதவை என்று எனக்குப்படவில்லை. சாதாரண காரசோப்புகளே போதுமானவை.” என்ற உங்களது முடிவு எனக்கு சரியாகப்படவில்லை. துவைக்கும் இயந்திரங்களில் கார சோப்பைப் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. பொதுவாகவே, பின்னோக்கி நகர்ந்து சூழலியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதைவிட, முன்னோக்கி நகர்ந்து தீர்வு காண்பது பரவலான வெற்றி பெறும் என்று கருதுகிறேன். வாகனப் புகை சூழலை மாசு செய்கிறது என்பதற்காக மாட்டு வண்டியை தீர்வாக முன்வைப்பதற்குப் பதிலாக, வாகன உபயோகத்தைக் குறைப்பது, எரி திறனை அதிகப்படுத்துவது, மாற்று எரிபொருட்ளைக் கண்டுபிடிப்பது முதலான தீர்வுகளே நடைமுறைச் சாத்தியங்கள் இல்லையா? அழுக்கு நீக்குவதில் என்சைம் தொழில் நுட்பம் இப்போது பெருமளவில் வளர்ந்து வருகிறது. என்சைம்களால் சூழலுக்கு பெரும் தீமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியாக, அழுக்கிநீக்கிகளில் சூழலைக் கெடுக்கும் வேதிப் பொருட்களுக்கு மாற்றுகள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்றே நம்பலாம். அதே சமயத்தில், இந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கும், நீங்கள் காட்டுவது போன்ற அதீத நிலைப்பாடும் தேவையிருக்கிறது. ‘க்ரீன் பீஸ்” போன்ற இயக்கங்கள் அதீத நிலைப்பாடுகளை எடுப்பதால்தான் அவர்கள் சொல்வது கவனிப்புக்குள்ளாகிறது. மாற்றங்களும் ஏற்படுகின்றன.
அன்புடன்,
விக்டர் சுரேஷ்
அன்புள்ள விக்டர்
நான் அப்படிச் சொன்னதற்கு ஒரு பின்னணி உண்டு. எண்பதுகளில் கேரளத்தில் சாஸ்திர சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு அழுக்குநீக்கிகளுக்கு எதிராக ஓரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. சில துண்டுபிரசுரங்களை அதற்காக நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன்
அவற்றில் இருந்து நான் உணர்ந்த கருத்துக்கள் இவை. அழுக்குநீக்கிகள் இயல்பான அன்றாட ரசாயனங்கள் அல்ல. அவை தொழிற்சாலைகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. சாதாரண அழுக்குகளை நீக்க அவற்றின் தேவையும் இல்லை. கடுமையான எண்ணைக்கறைகளை நீக்கவே அவை தேவை.பெருநிறுவனங்களால் அவற்றுக்கு வணிக நோக்குடன் ஒரு தேவை உருவாக்கப்பட்டது . அந்த தேவைக்கு ஏற்ப சந்தையும் உருவாக்கப்பட்டது.
இந்தச்சந்தைப்போட்டியால் அழுக்குநீக்கிகளுக்கு இடையே போட்டி உருவானது. மேலும் மேலும் தீவிரமான அழுக்குநீக்கிகள் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இது சூழலழிவை அதிகரித்தபடியே செல்கிறது. துணிகளின் நிறமும் பின்னலும் இவற்றால் கெடுகின்றன. உடனே அதைச்சரிசெய்யும் ரசாயனங்களை சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள். அவை இன்னும் சூழலழிவை உருவாக்குகின்றன
உண்மையில் நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் செயற்கை இழை ஆடைகள் அதிகமாக அழுக்கு படிபவையோ அழுக்கை விட மறுப்பவையோ அல்ல. இன்று அனைவருமே தினம் ஓர் ஆடைதான் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் விடாப்பிடியான அழுக்குகள் படிவதுமில்லை. மிக மென்மையான அலசலே போதுமானது
அதற்கு எண்ணை-காரக் கலவை சோப்பே போதுமானது. எண்ணைசோப்பு சூழலை பாதிப்பதில்லை. இயற்கை அதை எளிதில் செரித்துக்கொள்கிறது. எண்ணைசோப்பை தூளாக பயன்படுத்த முடியும் துணிகளை ஊறச்செய்து சலவை இயந்திரத்துக்கும் பயன்படுத்தலாம். அதை சாஸ்திர சாகித்ய பரிஷத் கேரளத்தில் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் செய்தது
ஆனால் உக்கிரமான ஊடகப்பிரச்சாரம் மூலம் அழுக்குநீக்கிகள் நம் நுகர்வின் முக்கியமான பொருட்களாக ஆக்கப்படுகின்றன . அவற்றை நாம் தவிர்க்க முடியாதென்ற பிரமையும் உருவாக்கப்படுகிறது. அழுக்குநீக்கிகள் அறிவியல் மூலம் நாம் பெற்ற இன்றியமையா தேவைகள் அல்ல. அவை நம் மீது வணிக நோக்குடன் சுமத்தப்படுபவை
பிளாஸ்டிக் சருமப் பைகளை தவிர்க்க முடியாதென்ற பிரச்சாரம் இதேபோல வலுவாக உருவாக்கப்பட்டது. ஆனால் குமரிமாவட்டத்தில் அவற்றுக்கு முழுமையான தடை அறிமுகமாகி எட்டு மாதமாகிறது. இந்த எட்டு மாதங்களுக்குள்ளேயே இங்கே குப்பைகள் பெருமளவுக்கு இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. கண்கூடாகவே மாற்றம் தெரிகிறது. மிகச்சிலநாட்களிலேயே மாற்று வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இலைப்பைகள், காகிதப்பைகள், மறுசுழற்சிப்பைகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. மக்கள் பைகளுடன் கடைகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வெளியூர்களுக்குச் சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் பைகள் கண்களை உறுத்துகின்றன என்றுகூட இங்கே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்
ஆகவே தடை சாத்தியமே. அதன் விளைவுகள் சிறப்பாகவே இருக்கும். குறைந்தது குமரி மாவட்டம் போல நீர்நிலைகள் நிறைந்த ஊர்களிலாவது தடை கொண்டுவரலாம். அதற்கான குரல் ஆரம்பத்தில் அசாத்தியமானதாகவே இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னை நிறுவிக்கொண்டுவிடும் என்பது சூழலியல் சார்ந்து நாம் கண்டுவரும் அனுபவம்
ஜெ