அன்புள்ள ஜெமோ
விஷ்ணுபுர விருது விழா , வெண்முரசு விவாதம் போன்ற உங்கள் வாசகர்கள் கூடுகின்ற கூட்டங்களில் உங்கள் உரை எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதே போன்ற சிறப்பான உரை ஒன்றை அராத்துவின் 6 நூல்கள் வெளியீட்டு விழாவில் வழங்கினீர்கள். நன்றி… சற்றே எதிர் கருத்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றுவதே ஒரு சவாலான பணி.. அதுவும் எதிர்கருத்து கூறுவது என்பது மிக மிக சவாலானது.. ஆயினும் மிக ஆழமான அற்புதமாக உரை வழங்கி கூட்டத்தை உங்கள் நாவன்மையால் கட்டிப்போட்டீர்கள்..
உங்கள் உரையில் சில கேள்விகள் எழுந்தன…
மீண்டும் மீண்டும் ஆண் பெண் உறவுச்சிக்கல்களே அராத்து கதைகளில் வருவதாக சொன்னீர்கள்..
ஆனால் அப்படி வருவதுதான் 2016 எனும் இக்கால கட்டத்தை சரியாக பிரதிபலிப்பதாக கொள்ளலாம் அல்லவா..
காதலர்கள் இணைவது என்பது முன்பு பிரச்சனையாக இருந்தது… ஆனால் இன்றைய பிரச்சனை என்பது முறியாத உறவுகள் என்பதே என நினைக்கிறேன்.. அந்த அளவுக்கு திருமண உறவு , காதலர்கள் பிரச்சனைகள் உள்ளன அல்லவா?
சுவாரஸ்யத்தன்மை கலைக்கு முக்கியமல்ல என சொன்னீர்கள்.. சுவாரஸ்யம் என்பது கலை ஆகாது என்றாலும் ஒருவர் சுவையாக எழுதினால் அதற்கான பாராட்டுக்கு அவர் தகுதியானவர்தானே..
நல்ல எழுத்து என்பதற்கு சில வரையறைகள் சொன்னீர்கள்.. வரைமுறைகளுக்குள் அடங்காத நல்ல எழுத்துகளும் இருக்கக்கூடும் என முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள்… இந்த அம்சத்தை இன்னும் கொஞ்சம் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..
கூட்டத்தில் இன்னொரு கேள்வி கேட்க நினைத்தேன்.. ஆனால் செல்ஃபி எடுப்பதில் வாச்கர்கள் உங்களை பிசியாக வைத்திருந்ததால் உங்களுடன் பேச முடியவில்லை…
அசோகவனம் நாவல் எந்த நிலையில் இருக்கிறது ?
என்றென்றும் அன்புடன்
பிச்சை
அன்புள்ள பிச்சைக்காரன்
நலமா?
நீங்கள் முகம் காட்டியிருக்கலாம்.
இங்கு வாசகர்கள் எண்ணுவதுபோல, அல்லத்ய் சமூக ஊடகங்களில் கட்சிகட்டப்படுவதுபோல முகாம்கள் ஏதும் இல்லை. நான் எல்லா படைப்பாளிகளுக்கும் அணுக்கமானவனாக இருக்கவே எப்போதும் முயன்றிருக்கிறேன். தனிப்பட்ட எதிரிகள் என எவரையும் எப்போதும் எண்ணிக்கொண்டதில்லை. அதை எனக்கு நானே உறுதிசெய்துகொள்ளவும் வேண்டியிருக்கிறது. அத்துடன் சாரு நிவேதிதா மீது எனக்கு எப்போதும் மதிப்பும் உண்டு
அழகியல்ரீதியான விமர்சனம், வாழ்க்கைநோக்கு சார்ந்த மாற்று அணுகுமுறை என்பது வேறு. என் எதிர்நிலைகள் முற்றிலும் அத்தளங்கள் சார்ந்தவையே. அதையும் நானே எனக்கு அடிக்கடி உறுதிசெய்துகொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான சந்தர்ப்பங்களை நான் விடுவதில்லை.
நான் அங்கே உரையில் சொன்னவற்றில் அடிக்கோடிடும் வரிகள் இவைதான். பொதுவாக அதிகம் என்னை வாசிக்காத வாசகர்கள் அவ்வகை எழுத்தை ஒழுக்க, அற நோக்கில் நான் எதிர்ப்பதாக நினைக்கிறார்கள். அப்படி அல்ல, இலக்கியத்திற்கு ஒழுக்கநோக்கோ அற அடிப்படையோ கட்டாயம் அல்ல. அது மனிதனை அறியும் முறை. மனிதனை எந்த எல்லைக்கும் கொண்டுசென்று அறியலாம். உச்சியோ பாதாளமோ எதுவும் நன்றே, மனிதன் எந்த அளவுக்கு வெளிப்பட்டுள்ளான் என்பதே முக்கியம்.
என் அளவுகோல் மரபு சார்ந்தது என நினைப்பவர்கள் சிலர் உண்டு. அவர்களை அங்கே நேரடியாக மேடைமுன் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அவர்களிடம் நான் சொன்னதும் இதுவே. மரபு எனக்கு முக்கியம், அனைவருக்கும் முக்கியம் என நான் நினைக்கவில்லை. வரலாறு அற்ற, அந்தந்த தருணங்களை மட்டுமே எழுதக்கூடிய, நிலைபாடுகள் அற்ற புனைவுகளின் இடத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். எந்த மரபையும் நான் நிபந்தனையாக வைக்கவில்லை. எல்லா வகையான எழுத்துக்களும் இலக்கியத்திற்கு முக்கியம்தான்
நான் முன்வைப்பது அந்த வகைமைக்குள் அது கலையாகியிருக்கிறதா என்றே. கலை என நான் சொல்வது மனித உண்மை வெளிப்படுகிறதா என்பதுதான். அதன் காலப்பெறுமானம் என்ன காலம்கடந்த மதிப்பு என்ன என்பது மட்டும்தான். அழகியல்நோக்கு என்பது அது மட்டுமே. அதையே அங்கும் முன்வைத்தேன்
என் வாசிப்பின் விளைவாக நான் அங்கே முன்வைத்த முழுமையான எதிர்நிலையை அராத்துவிடம் முன்னரே சொல்லியிருந்தேன். ‘நீங்கள் பாராட்டுவீர்கள் என நம்பிக்கூப்பிடவில்லை. உங்கள் கருத்து எனக்கு நன்றாகத்தெரியும். திட்டினால்கூட பரவாயில்லை’ என்றார். எதையும் ஒருவகை வேடிக்கையாகப்பார்க்கும் அடுத்ததலைமுறையின் உற்சாகமான மனநிலை அது. அந்தமனநிலை என்னைக் கவர்ந்தது. நான் சொன்ன இந்த மாறுபாட்டைத்தான் சாருவும் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
நான் நல்ல எழுத்துக்கான வரையறையைச் சொல்லவில்லை. நல்ல எழுத்தில் நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று மட்டுமே சொன்னேன். அதையொட்டித்தான் என் விமர்சனம். வரையறை செய்வதில் எனக்கு நாட்டமில்லை. வரையறை என்பது மாறாதது. நான் சொல்வது என் வாசிப்பின் தரப்பிலிருக்கும் குரலை மட்டுமே.
சுவாரசியம் என்பது இலக்கியத்துக்கான, கலைக்கான நிபந்தனை அல்ல என்று மட்டுமே சொன்னேன். சுவாரசியமான மாபெரும் படைப்பாளிகள் உள்ளனர், கி.ரா போல. ‘சுவாரசிய’மற்ற பெரும் படைப்பாளிகளும் உள்ளனர், பூமணி போல. இதை மட்டுமே சுட்டிக்காட்டினேன்.
ஒரு விமர்சனமாகவே அங்கே என் தரப்பை முன்வைத்தேன். எல்லா விமர்சனங்களும் விவாதத்துக்கான தொடக்கமே. விழா சிறப்பாக நிகழ்ந்தது. உற்சாகமான வாசகர்கள், சாருவின் ஆழ்ந்த குரலில் நூல்வாசிப்பு மற்றும் உரை அனைத்துமே மனநிறைவூட்டுவனவாக இருந்தன..
ஜெ