அன்புள்ள ஜெயமோகன்,
விவேக் ஷன்பேக் மொழியாக்கம் பற்றி
என் எழுத்து ஏதோ ஒரு வடிவத்தில் உங்கள் வலைத்தளத்தில், 50000+ வாசகர்களின் பார்வை பட! நள்ளிரவில் இவ்வூரின் மெல்லிய குளிரில் அதை பார்த்து படித்தபோது எழுந்த பரவசமும் புல்லரிப்பும் இன்னும் நீங்கவில்லை. வேறொருவர் எழுதியது போல முற்றும் வாசித்தேன். மீண்டும் வாசித்தேன்.
இந்த சில வரிகளாவது எழுதும் அளவிற்கான ஊக்கம் பெருமளவிற்கு 2 1/2 ஆண்டுகளாக உங்கள் வலைத்தளம், நூல்கள், ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’ சுட்டிய நூல்கள் இவற்றை வாசித்ததால் வந்தது.
நன்றி ஐயா, நன்றி!
பா ராஜேந்திரன்
அன்புள்ள பா ராஜேந்திரன்
மீண்டும் நான் சொல்வதைக் கவனியுங்கள். உங்களுக்கு கூர்மையாக தைக்கவேண்டுமென்றே அதைச் சொன்னேன். மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கையை அளியுங்கள், சந்தேகத்தை அல்ல. சந்தேகத்தை மனிதர்கள்மேல் நீட்டும்போது மொத்த மானுடகுலத்தை அவமதிக்கிறீர்கள். உங்களுடைய இருண்ட பக்கம் ஒன்றைக்கொண்டு உலகையே அறிகிறீர்கள்.
ஆயிரம் வணிக, தொழில் விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நம்சூழலில் ஒரு கன்னட நூலை உட்கார்ந்து மொழியாக்கம் செய்பவர்கள், அதை சொந்தப்பணம் போட்டு நம்பி வெளியிடுபவர்கள், வெறும் லாபநோக்குடன் அதைச்செய்யமாட்டார்கள், அதற்காக மோசடியாக ஒன்றை முன்வைக்கமாட்டார்கள் என்றுதான் இயல்பாக ஒருவர் எண்ணுவார். அந்த நம்பிக்கை உங்களுக்கிருந்திருந்தால் அதன் அடிப்படையில் அந்நூலை அணுகியிருந்தால் இந்த கோபமோ எரிச்சலோ வந்திருக்காது.
அப்படியென்றால் என்ன பிரச்சினை? உங்கள் பிரச்சினை நீங்கள் நல்லவர் என நம்ப பிறரை அயோக்கியர் என நிறுவ விரும்புகிறீர்கள் என்பதுதான். ஆகவே உண்மையாகவே அர்ப்பணிப்பு கொண்ட, நல்லவிஷயங்கள் உலகில் நிகழும் என்பதை உங்களால் நம்பமுடியவில்லை. உலகை வேவுபார்க்காதீர்கள். உலகிடமிருந்து அன்னியப்படுவீர்கள்.
இதை நான் பலமுறை எழுதியிருக்கிறேன். ஒரு சேவையாளர், பொதுநல ஊழியர் பற்றி எந்த அவதூறை எவர் சொன்னாலும் உடனே அதை நம்ப பொதுமக்களில் ஒரு சாரார் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் இருண்ட பக்கத்தால் அனைத்தையும் பார்க்கிறார்கள். இயல்பாகவே நல்லியல்பு கொண்டவர்கள் பிறருக்கும் அந்நல்லியல்பையே திறந்து காட்டுவார்கள். இந்தவேறுபாட்டை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
ஜெ