விவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்

1

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

சரவணக்குமாரின் விவேக் ஷன்பேக் தமிழாக்க நூல் பற்றிய கடிதத்திற்கு உங்கள் பதிலைப் படித்தேன். என் இரு கன்னங்களிலும் அறை வாங்கியதாக உணர்ந்தேன். சில நாட்கள் கழிந்தும் கடக்கமுடியாததால் எழுதுகிறேன்.

 

 

நானும் அந்த நூலை விஷ்ணுபுரம் விருது விழாவின்போது வாங்கினேன். வாங்கும்போது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களில் முதல் பக்கத்திற்கும் முன் அட்டைக்கும் இருந்த முரணை கவனித்தேன். அது ஒரு மோசமான வியாபாரத் தந்திரம், ஏமாற்று வேலை என்று எனக்குள்ளும்தான் ஒரு மெல்லிய கசப்பு எழுந்தது. சரவணகுமாரும் அவர் நண்பர் சொன்னது சரி எனப் பட்டதால்தானே உங்களுக்கு எழுதினார்? அப்போது நாங்கள் இருவரும் எங்களைப்போல நினைத்திருக்கக்கூடிய மற்றவர்களும் மிகமிக ஆபத்தானவர்கள், 500 ரூ மேல் நம்பவோ தனிப்பட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவோ தகுதியற்றவர்களா? உங்கள் சொற்கள் பலித்துவிடுமோ என்று அறம் ஆச்சி போல பயந்துபோயுள்ளேன்.

 

 

 

நீங்கள் முன்னுரை மட்டுமே எழுதியிருந்து, “ஜெயமோகன் முன்னுரையுடன்” என வெளியிட்டிருந்தாலும் எனக்கு மறுப்பு இல்லை. (கதைகளுக்கு முன் பதிப்புரை தவிர முன்னுரை எதுவும் இல்லை. நீங்கள் எழுதிய முன்னுரை பின் அட்டையிலிருப்பதுதானா?) அத்தகைய வியாபார தந்திரங்கள் தவறு எனக் கருதவும் இல்லை. கசப்பு மற்ற மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்கள் அட்டையில் விடுபட்டதனால்தான். உங்கள் பெயரைவிட சிறிய எழுத்துக்களிலாவது அவர்கள் பெயர் அட்டையில் இடம் பெறவில்லை என்பதால்தான். மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு கவனிக்கப்படாதது குறித்து நீங்களும் எழுதியதாக நினைவு.

 

 

எச்செயலுக்கும் அவரவர் நியாயங்கள் உண்டு. உங்கள் விளக்கத்தை நூல் வாங்குபவன் எவ்வாறு அறியமுடியும் என்பது மட்டுமல்ல விளக்கம் முழு நிறைவைத் தரவில்லை. அட்டையில் குறிப்பிட்ட விலை ரூ 60. உள்ளே குறிப்பிட்ட விலை ரூ 100. ரூ 100 க்குத்தான் விற்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ரூ 40 விலை உயர்ந்தபோது, மொழிபெயர்ப்பாளர்கள் பலராகியபோது, குறைந்தது மாறிய மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்களையும் விலையையும் ஸ்டிக்கராக அட்டையில் ஒட்டி இருக்கலாம்.

 

 

சரவணக்குமாரின் கடிதத்தில் ‘மோசமான வியாபாரத் தந்திரம்’, ‘ஏமாற்று வேலை’ என்று இருந்தது. ‘ஊழல்’, ‘வணிக மோசடி’, ‘வணிகச்சதி’ என்றெல்லாம் அதில் காணும் நுண்வாசிப்பு எனக்கு அமையவில்லை.

 

 

அச்சடித்த 300 பிரதிகள்கூட 5 ஆண்டுகள் ஆகியும் விற்றுத்தீரவில்லை. இதற்கு இத்தனை கூச்சல் குழப்பமா என்று இக்கணம் எனக்குத் தோன்றுகிறது. மிச்சமிருக்கும் பிரதிகளில் மேற்கூறியவாறு ஸ்டிக்கரை ஒட்ட ஆலோசனை கூறி வம்சி ஷைலஜாவிற்கும் இக்கடிதத்தின் நகல் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

 

 

அப்பாடா! எழுதி முடித்து வெளியே வந்துவிட்டேன். நிம்மதி.

 

பா. ராஜேந்திரன்

 

 

திரு ராஜேந்திரன்

இப்போது இன்னும் உறுதியாகத் தெரிகிறது. உங்கள் மனநிலை உள்ள ஒருவரை 250 ரூபாய்க்குமேல் நம்பமுடியாது

ஜெ

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20