’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73

[ 20 ]

பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் வந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான்   வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன்  மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று  இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை முழுதும் மலைக்குடிகளின் விழவுக்காலம்.

பீதவணிகர்  உலோகப்பொருட்களையும் ஆடைகளையும் அணிகலன்களையும் விற்று நறுமணப்பொருட்களையும் கவரிமான்மயிரையும் மலைக்காளைத்தோலையும் அருமணிக்கற்களையும் மாற்றாக வாங்கிக்கொண்டு மீண்டனர். அப்பொருட்களை காமரூபர்களுக்கும் நாகர்களுக்கும் விற்று பொன்னாக ஆக்கிக்கொண்டு கடலோரங்களில் அமைந்த தங்கள் வணிகச்சிற்றூர்களுக்கு மீண்டனர்.  கின்னரர்களிடமிருந்து மலைமக்கள் பெற்று வணிகர்களுக்கு விற்கும் அருமணிகளுக்கு பன்னிரண்டாயிரம் மடங்கு விலை அளித்தனர் யவனர். “தெய்வங்களின் கண்கள்” என அவற்றை யவன மணிநோக்கிகள் சொன்னார்கள். அச்செல்வத்தால் பீதர்களின் கடற்கரைச்சிற்றூர்கள் செழித்துக்கொண்டிருந்தன.

“மழையெனப் பெய்வது விண்ணில் பரந்த நீர்.  மழையுடன் வெயிலெழ விண்வில் வளையும் பொழுதுகளில் வான்நிறையும் தேவர்கள் அப்பல்லாயிரம்கோடித் துளிகளில் சிலவற்றை மட்டும் கைகளால் தொட்டு எடுக்கிறார்கள். உருவிலிகளாகிய அவர்கள் மண்ணின் களியாட்டை நோக்கி மகிழும்பொருட்டு அவற்றை விழிகளென்றாக்கி சூடிக்கொள்கிறார்கள். வெண்பற்களென்று அணிந்து சிரிக்கிறார்கள். மணிகளென அள்ளி வீசி விளையாடுகிறார்கள். அவை ஆலங்கட்டிகளாக மண்ணில் விழுகின்றன” என்றான் பீதர்களுடன் சென்ற காமரூபத்துப் பாணன்.   அவர்களுடன் பொதிக்காவலனாக வில்லேந்தி அர்ஜுனன் சென்றான். செல்லும் வழியெங்கும் வெண்சுடர் கின்னரர்களைப்பற்றிய பேச்சே வணிகர்களிடம் தொடர்ந்தது.

“அவற்றில் சில தேவர்களின் ஆடைகளில் தங்கிவிடுகின்றன. அவர்கள் ஏழாம் வானை அடையும்போது அங்கிருக்கும் ஒளியை தாம் சூடிக்கொண்டு அவை சுடர்கொள்கின்றன. விண்ணவர்நாட்டுக்குள் நுழைவதற்குமுன் தேவர்கள் அவற்றை உதறிவிடுகிறார்கள். அவை அருமணிகளாக  ஒளியுடன் உதிர்ந்து பனியிலும் பாறையிடுக்கிலும் மின்னிக்கிடக்கின்றன. அவற்றையே கின்னரர்கள் தொட்டு எடுத்து சேர்க்கிறார்கள். மலையிறங்கி வந்து இம்மலைமக்களுக்கு அளிக்கிறார்கள்” என்றான் பாணன்.  “மலையுச்சியில் வாழும் மானுடர் அறியவொண்ணா கின்னரர்களின் வழித்தோன்றல்கள் என இம்மலைமக்கள் தங்களை எண்ணுகின்றனர். கின்னரஜன்யர் என்பதே பதினெட்டு பெருங்குலங்களும் நூற்றெட்டு குடிகளுமாகப் பிரிந்து உச்சிமலைச்சரிவுகளில் வாழும் இவர்களுக்குரிய பொதுவான பெயர்.”

கின்னரர் அன்றி பிறருக்கு அம்மக்கள் வரியோ கப்பமோ கொடுப்பதில்லை. அவர்களின் சிற்றூர்மன்றுகளில் கின்னரமூத்தார்கள் வெண்புகைச் சிறகுகளுடன் பனிநுரைக் குஞ்சியுடன் முப்பிரிவேல் ஏந்தி வெள்ளெருதுமேல் ஏறி அருள்புரிந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களின் காலடியில் எட்டு கால்கைகளுடன் பெருவயிறழுந்த ஊர்ணநாபன் என்னும் அரக்கன் மல்லாந்து நோக்கி தொழுது கிடந்தான்.  முழுநிலவுநாட்களில் கின்னரர்கள் நிலவொளியில் பறக்கும் வெண்பஞ்சுத்துகள்கள்போல வந்திறங்கி அவர்களின் கன்னியரை கனவுக்குள் புகுந்து உளம் மயக்கி புணர்ந்து மீண்டனர் என்றனர் குலப்பாடகர்.

கின்னரஜன்யரில் குழவி  பிறக்கையில் முதல்வினா விழிநிறமென்ன என்பதாகவே இருந்தது. பச்சைமணிவிழி என வயற்றாட்டி சொன்னால் அக்கணமே அதன் தந்தை கைகளை விரித்து வடக்குமலையுச்சிகளை நோக்கி “தேவர்களே, கின்னரரே” என்று கூவி அழுவான். பிறர் அவனைச் சூழ்ந்து கூச்சலிட்டு வாழ்த்தி கொண்டாடுவார்கள். அன்று அவன் ஒரு கொழுத்த கன்றை அறுத்தாகவேண்டும்.   பச்சைமணிவிழிகள் அமைந்தவர்கள் மட்டுமே அக்குலங்களில் உயர்ந்தோர் என்று கொள்ளப்பட்டனர். அவர்களுக்கே மன்றமைத்து சொல்லுசாவும் தகுதி இருந்தது. தாங்கள் கின்னரகுருதிகொண்டவர்கள் என்பதை காட்டும்பொருட்டு அவர்கள் அனைவரும் தங்கள் தலையணிக்குமேல் வெண்ணிற நாரையிறகொன்றை சூடியிருப்பார்கள். குடித்தலைவர்கள் கவரிமான்மயிர் குச்சத்தை அணிந்திருப்பார்கள்.

அவர்கள் அனைவரும் கடலோரத்தின் பறக்கும் மலைகளில்தான் முன்பு வாழ்ந்துவந்தனர் என்று அவர்களின் குலக்கதைகள் கூறின. ஊர்ணநாபன் என்னும் அரக்கனின் வழிவந்தவர்கள் அவர்கள்.  பெருவயிற்றிலிருந்து எழுந்த எட்டு கைகள் கொண்ட சிலந்தி வடிவன் அவன். வயிற்றில் விழிகொண்டவன்.  பறக்கும் மலைகளின் அரசியான மகாசிகையின் நடுவே இருந்த உக்ரஸ்தூபம் என்னும் குன்றின்மேல் அவன் வாழ்ந்தான். பறக்கும் மலைகளில் எங்கிருந்தாலும் அவனை காணமுடிந்தது. பறக்கும் மலைகளையும் அவற்றுக்குக் கீழே அலையடித்த கடலையும் அவன் தன் திசையறியும் பெருவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான்.   தன் உடலில் இருந்து பல்லாயிரம் வெள்ளிச் சரடுகளை நீட்டி மலைகள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக்கொண்டிருந்தான்.

அடங்காப்பெரும்பசி கொண்டிருந்த அவன் தன்னை ஊட்டிப்புரக்கும் குடியொன்றை அமைக்கும்பொருட்டு  மலைப்பாறைகளில் ஒட்டியிருந்த சிப்பிகளின் வாயைத்திறந்து அதற்குள் தன் விரல்நுனியில் எழுந்த எச்சில்பசையை துளித்தான். அவை கருவுற்றுப் பிறந்த மைந்தர்கள் பெருகி அவன் குடியென்றாயினர். அவர்களுக்கு சூக்தர் என்று பெயர் அமைந்தது. அவர்கள் அனைவரையும் அவன் தன் நுண்வலையால் பிணைத்திருந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் எவருடனிருந்தாலும் அவனுடைய வலைநுனியில்தான் இருந்தனர். அவர்களின் அசைவுகளை அவன் அறிந்தான். அவர்களின் எண்ணங்களையும் அச்சரடினூடாக அவன் உணர்ந்துகொண்டிருந்தான். வலைச்சரடு அவர்களுக்கு ஆணையிட்டது, கண்காணித்தது, எல்லையமைத்தது.

சூக்தர் கடற்பாறைகளில் தொற்றிச் சென்று மீனும் சிப்பியும் பொறுக்கியும் மலையுச்சிகளில் தேனும் ஊனும் திரட்டியும் உணவு கொண்டுவந்து தங்கள் குடிமூதாதையான ஊர்ணநாபனுக்கு படைத்தனர். அவன் உண்டதுபோக மிச்சிலை தாங்கள் உண்டனர். எட்டு கைகளில் இரண்டு கைகளால் இடைவெளியில்லாமல் அவன் உண்டான். உணவு போதாமலானால் அவன் அவர்களையே பிடித்து உண்டான். அவனை தெய்வமென்றும் மூதாதை என்றும் கொடியபகை என்றும் அக்குடி எண்ணியது. அவர்களின் குடிமன்றுகளில் அவன் உருவை பாறையில் பொறித்து வழிபட்டனர். மைந்தர் பிறந்ததும் கொண்டுசென்று அவன் காலடியில் வைத்து வணங்கி மீண்டனர். கனவுகளில் அவன் பசைச்சரடை இழுத்து அவர்களை அருகணையச்செய்து தூக்கி உண்பதைக் கண்டு அலறி விழித்து உடல்நடுங்கினர்.

ஒருமுறை விண்ணில் ஒளிவடிவாகச் சென்ற தேர் ஒன்றை ஊர்ணநாபன் கண்டான். பசிகொண்டிருந்த அவனுக்கு  ஏழு வெண்குதிரைகள் இழுக்க உருண்டு சென்ற அது ஒரு பெரும் பூச்சி என்று தோன்றியது. அவன் தன் வெள்ளிச்சரடை வீசி அத்தேரைப்பற்றி இழுத்தான். அதிலிருந்தவன் அனல்வடிவ உடல்கொண்டிருந்தான். தேர்ச்சகடங்கள் அசைவிழக்க அவன் திரும்பி நோக்கி “யாரது?” என்றான். “நான் ஊர்ணநாபன். எனக்கு நீ இன்று இரை.” அவன் புன்னகைத்து “அரக்கனே, நான் விண்ணாளும் தேவன். இடிமின்னல்களை ஆள்பவன். நீ சிறியவன், என்னை விடு” என்றான்.

“பசியே எனக்கு விழி” என்றபடி ஊர்ணநாபன் அவனைப் பிடித்து இழுக்க அவன் சினந்து தன் வாளை உருவினான். மலைகள் அதிரும்படி இடி முழங்கியது. எட்டுநாக்குகளுடன் மின்னல் சுழன்றெழுந்தது. மின்வாளால் விண்ணரசன் ஊர்ணநாபனின் எட்டு கைகளையும் வெட்டினான். நீலக்குருதி பீரிட்டு வழிய அவன் மகாசிகையின் உச்சிப்பீடத்தில் விழுந்தான். தன் வலைச்சரடுகளை வீசி  மலைமேல் தொற்றிக்கொண்டான். சினம் பெருக பெருங்குரலில் கூவியபடி அவன் பறக்கும் மலையை சிறகடித்தெழச்செய்து விண்ணரசன்மேல் போர்கொண்டு சென்றான்.  அவன் சரடால் பிணைக்கப்பட்ட அனைத்து மலைகளும் சிறகுவீசி அவனுக்குப் பின்னால் நிரைகொண்டு சென்றன.

“எதிரியை தாக்குங்கள்” என ஊர்ணநாபன் ஆணையிட்டான். அவன் வலைச்சரடுகளினூடாக அவ்வாணை அத்தனை சூக்தர்களையும் சென்றடைந்தது. அவர்கள் சிப்பிநஞ்சு பூசிய வாளிகளை எய்து விண்ணவனுடன் போரிட்டனர். ஊர்ணநாபன் தன் வயிற்றில் ஆறாப்பசியாகக் கொதித்த நஞ்சை விண்ணவன் மேல் உமிழ்ந்தான். விண்ணரசனின் ஏழு புரவிகளில் ஒன்று கருகி புகைந்து அலறிவிழுந்தது. அவன் தேர்ப்பாகனின் இடக்கரம் கரியாகியது. அதுவரை விளையாட்டு எண்ணம் கொண்டிருந்த விண்கோ இடியோசை எழுந்து முகில்கணங்கள் அதிர ஊர்ணநாபன் அமர்ந்திருந்த மலைகளின் சிறகுகளை வெட்டினான்.   அவை அதிர்வோசையுடன் கடலில் விழுந்தன. நீர்சிதற அலைவிரிய மூழ்கி மறைந்தன.

மலைகளிலிருந்த ஊர்ணநாபனை வானரசன் எட்டு துண்டுகளாக வெட்டினான். எட்டுதிசைகளிலாக அவன் உடல் சிதறி கடலில் விழுந்தது. ஊர்ணநாபனின் உடலுடன் தங்களைப் பிணைத்திருந்த சரடுகள் அறுந்து சூக்தர்கள் கடலில் விழுந்தனர். வாழ்நாளெல்லாம் அறுபடாச் சரடால் ஆட்டுவிக்கப்பட்ட அவர்களால் அதன் தொடர்பில்லாமல் தனித்துச்செயல்பட இயலவில்லை.  நீச்சலறிந்தவர்கள்கூட அலைகளில் மூழ்கித் தவித்தனர். அலைகளால் அள்ளி கரைகளில் ஒதுக்கப்பட்ட சூக்தர் ஒருவரை ஒருவர் நோக்கி  கதறினர். ஒரு முதுசூக்தர் தன் மைந்தனின் உடலில் அறுபட்டு நீண்டிருந்த சரடுடன் தன் சரடை பிணைத்தார். அதைக்கண்ட பிற சூக்தர்கள் தங்கள் உடலில் எஞ்சியிருந்த சரடுகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து மீண்டும் ஒரு வலையென்றாயினர். அவ்வலை அவர்களில் எவரும் தனியாக மூழ்காது செய்தது. கரையணைந்தவர்கள் பிறரை இழுத்து கரைசேர்த்தனர்.

தவளைமுட்டையென வெள்ளிச்சரடால் இணைக்கப்பட்ட சூக்தர்களின் திரள் எங்கு செல்வதென்றறியாமல் கரையில் நின்று ஒருவரோடொருவர் முட்டி தன்னுள் தானே ததும்பி அலைக்கழிந்தது.  வான் நோக்கி கைகளை விரித்து “எந்தையே! எங்கள் அரசே!” என ஊர்ணநாபனை எண்ணி அலறி அழுதது. “எண்கரத்தோய், வயிற்றுவிழியுடையோய்! எழுக, எங்கள் தேவனே! உங்கள் குடிகாக்க எழுக, வேந்தே!” என்று கூவி மன்றாடியது. அலைநக்கிய கரையிலும் பாறைகளிலும் நீலநிறப்பெருக்காக ஊர்ணநாபனின் நஞ்சு வழிந்துகிடப்பதைக் கண்டனர்.  மரங்களின் இலைகளில்இருந்து கொழுத்த துளிகளாக அது சொட்டியது. அவர்கள் அதை அள்ளி தங்கள் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதனர். “எளியோருக்கு இனி எவர்? எங்கள் குடிகாக்கும் கோல் இனி எது?” என நெஞ்சிலறைந்து முறைகூட்டினர்.

அவர்கள் மேல் வானிறைவனின் சினம் இடியோசையாக இறங்கியது. மின்பட்டு பிளந்த பாறைகள் உருண்டுவந்து அவர்களை கொன்றன. இறந்தவர்களின் உடலில் இருந்து சரடுகளை அறுத்தெடுக்கையில் அவர்கள் துயர்மீதூற தலையில் அறைந்துகொண்டு விண்நோக்கி பழிகூவி அழுதனர். அறுபட்ட சரடின் நுனியை தங்கள் கைகளில் ஏந்தி அதை நோக்கி நோக்கி ஏங்கி கண்ணீர்விட்டபடி விலகிச்சென்றனர்.  பின்னர் அந்த அறுநுனிகளை பிற அறுநுனிகளுடன் பிணைத்துக்கொண்டு ஆறுதலடைந்தனர். அறுபடும்தோறும் பிணைக்கவே அவர்களின் சரடுகளின் முடிச்சுகள் மேலும் மேலும் பெருகின. ஆயிரம் கால்கள் கொண்ட ஒற்றைவிலங்கென அவர்கள் நடந்தனர்.

இந்திரனின் வஞ்சத்தை மீறி எஞ்சியவர்கள் வடக்கே சென்று புறக்குடிகள் வாழும் சிற்றூர்களை அடைந்தனர்.  சென்ற இடங்களில் எல்லாம் அவர்களின் உடலில் இருந்து சொட்டிய நஞ்சு ஊறி மக்களும் கால்நடைகளும் உயிர்துறந்தனர். அவர்களின் காலடிபட்ட செடிகள் கருகின. ஒற்றைத்திரளென வந்த அம்மக்களை கைகளும் கால்களும் தலைகளும் பெருகியிருக்க ஊர்ந்து வரும் கடல்வாழ்பெருவிலங்கு என்றே தொல்குடிகள் எண்ணின.  நாகர்களும் காடவரும் அவர்களை தங்கள் நிலங்களுக்குள் புகாமல் அம்புகளாலும் வேல்களாலும் கற்களாலும் துரத்தி அடித்தனர். அவர்கள் கடக்காதபடி ஆறுகளின் மேல் அமைந்த பாலங்களை அழித்தனர். அவர்கள் சென்ற காடுகளைச் சூழ்ந்து நெருப்பிட்டனர். அவர்கள் துயில்கையில் சூழ்ந்து வந்து அம்புகளால் வேட்டையாடினர்.

இறந்தவர்களை அறுத்திட்டுக்கொண்டு மேலும் முடிச்சிட்டு இறுகியவர்களாக சூக்தர்கள் தொடர்ந்து வடக்குமலை ஏறிச்சென்றனர். குளிரில் அவர்களின் முதியோரும் இளையோரும் இறந்தனர். மலைப்பாறை உருண்டும் காலிடறி ஆழத்தில் உதிர்ந்தும் ஒவ்வொருநாளும் இறப்பு நிகழ்ந்தது. ஆனால் வேறெங்கும் செல்ல திசை திறந்திருக்கவில்லை. சிப்பிகளையும் நத்தைகளையும் உண்ணும் வழக்கமிருந்தமையால் அவர்களுக்கு எப்போதும் உணவு கிடைத்தது. அவர்கள் மறைந்தும் மூழ்கியும் செல்ல சதுப்புநிலங்களும் மலைப்புதர்ச்சரிவுகளும் உதவின.

சூக்தர் ஒவ்வொருவரும் விழிகளை மூடி தங்கள் சரடின் மறுமுனையில் ஊர்ணநாபனே இருப்பதாக எண்ணிக்கொண்டனர். அவ்வெண்ணம் அவர்களின் அச்சத்தை அகற்றி ஊக்கமளித்தது. பின்னர் விழிதிறந்து அம்முனையில் தங்கள் குடித்தொகை இருப்பதைக் கண்டு ஏமாற்றம் கொண்டனர். நாளடைவில் அக்குடித்தொகையே ஊர்ணநாபன் எனத் தோன்றலாயிற்று. அச்சரடினூடாக அவர்கள் தங்கள் குடித்தொகையின் எண்ணங்களையும் உணர்வுகளையும் சொல்லின்றி அறிந்துகொண்டனர். எண்ணியிருக்கையில் எவரோ ஒருவர் “எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி விழிநீர் சொட்டி அழுதபோது அக்குடியே விம்மலோசைத் தொகை எழ சேர்ந்து கலுழ்ந்தது.

பதினெட்டு மாதங்களுக்குப்பின்  மலைநாகர்களால் துரத்தப்பட்டு  தப்பிச்சென்று எஞ்சிய நாற்பத்தெட்டு ஆண்களும் முப்பத்தேழு பெண்களும் எழுபத்தொரு குழந்தைகளும் ஒரு பனிக்குகைக்குள் உடலோடு உடல் ஒட்டி ஒற்றைச்சரடால் பின்னப்பட்டு கூட்டுக்குள் பட்டுப்புழு என ஒண்டி படுத்திருந்தபோது கின்னரரை கண்டனர். அவர்கள் பலநாள் உணவுண்டிருக்கவில்லை. குளிரில் அவர்களின் உடல் நடுங்கி பின் அடங்கி அனல்போல் எரியலாயிற்று. உலர்ந்த உதடுகளும் ஒளிவறண்ட விழிகளுமாக  வெட்டிக்குவித்திட்டு மட்கும் வாழைத்தண்டுகள்போல ஒற்றைத்தசைக்குவியலாக அவர்கள் கிடந்தனர். அப்போது ஒரு சிறுவன் அக்குகைவாயிலை சுட்டிக்காட்டினான். இன்னொருவன் திரும்பிநோக்கினான். வெண்ணிற ஒளியாக ஏழு கின்னரர்கள் மெல்ல அவர்களை நோக்கி வந்தனர்.

உடல் விதிர்க்க அவர்கள் அசைந்து விலக முயன்றனர். பின்னர் அறியாது கைகூப்பி கண்மூடினர். “எந்தையே எந்தையே” என ஊர்ணநாபனை எண்ணி உளம் கரைந்தனர். அந்த அச்சத்தின் விசை தாளமுடியாமல் அவர்களின் எஞ்சிய உயிர்விசையும் அழிந்தது. பின்னர் அவர்கள் விழிதிறந்தபோது கின்னர உலகில் இருந்தனர். வெண்ணிற ஒளியாலான சிறகுகளுடன் அவர்களைச் சூழ்ந்து பறந்த கின்னரர்கள் அன்னைமுலைப்பாலென இனித்த அமுதை அளித்தனர். கருக்குழி என வெம்மைகொண்ட ஆடைகளை போர்த்தினர். நீர்த்துளி நீரிலுதிரும் இசையில் இன்சொல் கூறினர். அவர்களின் கனிந்த விழிகள் விண்மீன்கள்போல அவர்களுக்குமேல் மின்னின. புன்னகைகள் மூழ்கிச்செல்லும் கடலாழத்தில் வளைந்து ஒளிகாட்டிச் செல்லும் மீன்களைப்போல எழுந்தமைந்தன.

அங்கே பன்னிருநாட்கள் வாழ்ந்தபின்னர் அவர்கள் மலைச்சரிவில் இருந்த இனியசோலை ஒன்றில் விழித்தெழுந்தனர். அங்கே வெம்மை ஊறும் ஏழு ஊற்றுகள் இருந்தன. அதைச் சூழ்ந்திருந்த மரங்களில் கனிகள் செறிந்திருந்தன. விழித்தெழுந்ததும் அவர்கள் தங்களிடம் என்ன நிகழ்ந்திருக்கிறதென எண்ணி வியந்தனர். சற்று கழித்தே தங்கள் உடலைப் பின்னிய சரடு முற்றிலும் அறுபட்டிருப்பதை உணர்ந்தனர். கனவில் கின்னரர்கள் தங்கள் சரடுகளை வெள்ளிக்கத்திகளால் வெட்டுவதைக் கண்டதை நினைவுகூர்ந்தனர். அஞ்சி நடுங்கி ஒருவரை ஒருவர் கைகளாலும் கால்களாலும் தழுவிக்கொண்டனர். அழுது அரற்றியபடி ஒற்றை உடற்திரளாக அங்கே கிடந்தனர்.

ஆனால் நெடுநேரம் அப்படி இருக்கமுடியவில்லை. பசிக்கையில் கைகளை விடுத்து அவர்கள் பிரிந்தாக வேண்டியிருந்தது.  உணவுண்டபோது முதல்முறையாக ஓர் இளைஞன் அவ்வுணவும் தானும் மட்டுமே தனித்திருக்கும் உணர்வை அடைந்தான். அது அச்சமா திகைப்பா இன்பமா என்று அறியாமல் தவித்தான். அத்துடன் அந்த உணர்வையும் தான் மட்டுமே அடைவதை அறிந்தான். திரும்பி ஆங்காங்கே கனிகளைப் பறித்து உண்டுகொண்டிருந்த தன் குடியினரைக் கண்டபோது அவர்கள் எவருக்கும் அவ்வுணர்வுகள் தெரியவில்லை என்று அறிந்து ஒரு துடிப்பை அடைந்தான். இனி அந்த இன்பத்தை ஒருபோதும் தன்னால் விடமுடியாதென்று அப்போது உணர்ந்தான்.

அவர்கள் செய்யவேண்டியவை அனைத்தும் அவர்களின் குலமூத்தாரின் கனவில் சொல்லப்பட்டிருந்தன.  அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உற்றாருடன் தனித்தனியாக தங்கவும் தங்கள் உணவை தாங்களே தேடி உண்ணவும் விழைந்தனர். எனவே மென்பாறைகளைக் குடைந்து தனித்தனியாக சிறு இல்லங்களை அமைத்தனர். இல்லங்கள் இணைந்து அச்சுனைக்கரையில் சிற்றூர் ஒன்று எழுந்தது. அதுவே அவர்களின் முதற்குடி.   அச்சிற்றூர் சூடகம் என அழைக்கப்பட்டது. அக்குடியிலிருந்து மேலும் மேலுமெனப்பெருகி ஆயிரத்தெட்டு ஊர்களாயின.

அவர்களின் உள்ளிருந்து சுனையாழத்து தலைப்பிரட்டைகள் என சொற்கள் வால்துடிக்க விழிதெறிக்க எழுந்து வந்தபடியே இருந்தன. முன்பு சொல்லாமல் உணர்ந்தவை அனைத்தையும் சொல்லி தெரிவிக்கவேண்டியிருந்தது. ஒரு சொல்லின் போதாமை பிறிதொரு சொல்லை உருவாக்கியது. சொல்பெருகி அவர்களின் மொழி செறிந்தது. சொல்லிச்சொல்லி நிறையாதபோது சொல்லலில் திறம்கொண்ட பாணர்கள் பிறந்துவந்தனர். சொல்கடந்து சொல்லும் பூசகர்கள் உருவாயினர்.

அவர்களின் கருவில் கின்னரர்களின் பச்சைவிழிகளும் பளிங்குநிறமும் கொண்ட குழவிகள் பிறந்தன. அவர்கள் தங்களை கின்னரஜன்யர் என்று சொல்லிக்கொண்டனர்.  அவர்களைத் தேடி ஒவ்வொரு கோடையிலும் கின்னரர்கள் மலையிறங்கி வந்தனர். கின்னரர்களுக்கும் மானுடர்களுக்கும் நடுவே தொடர்பாளர்கள் அவர்களே. கின்னரர்களிடம் பேசும் மொழி அவர்களிடம் மட்டுமே இருந்தது. தங்களை பிறர் பார்ப்பதை கின்னரர் விரும்பியதுமில்லை. கின்னரர் என எவருமில்லை என்றும் அது அக்குடிகளின் பாணர்களின் கதைகளில் வாழும் தேவர்களே என்றும் பீதவணிகர்களில் சிலர் எண்ணினர். அருமணிகள் கிடைக்கும் நிலத்தை பிறர் அறியாது காப்பதற்கு உருவாக்கப்பட்ட கதைகள் அவை என்றனர்.

[ 21 ]

கின்னரஜன்யரின் மலைச்சிற்றூர்கள் அனைத்தும் உச்சிப்பாறைமேல் கழுகுகள் கட்டிய கூடுகள்போல முகில்சூழ அமைந்திருந்தன. மலைப்பாறைகளை உருட்டி தங்கள் ஊர்களைச் சுற்றி காவலமைத்திருந்தனர். விரும்பாதவர்கள் மலையேறி வரக்கண்டால் அவர்களில் பத்துவயதான சிறுவர்களேகூட அந்தப் பாறைகளை உருட்டி கீழே செலுத்திவிடமுடியும். பன்னிருநாட்கள் பெருமழை என நில்லாது பொழியுமளவுக்கு அவர்களிடம் பாறைகள் இருந்தன. கோடைகாலத்தில் மலையாறுகளை வழிதிருப்பி படையென்றாக்கி செலுத்தவும் குளிர்காலத்தில் பனிப்பாளங்களைப் பிளந்து இறக்கவும் அவர்களால் இயன்றது.

ஆகவே அங்கே தொல்பழங்காலத்திற்குப்பின் எதிரிகள் என எவரும் அணுகியதே இல்லை. ஆயினும் அவர்கள் தெய்வச்சடங்குபோல ஒவ்வொரு ஆண்டும் காவல்பாறைகளை அமைத்து பூசனை செய்துவந்தனர். கோடைமுடிவில் பாறைகளை அரணமைக்கும் நாளில் உயிர்ப்பலி கொடுத்து இறுதிப்பாறையாக அமைவதற்கு  குருதியாட்டு நிகழ்த்தி எடுத்துவைப்பார்கள். அப்போது குலப்பெண்டிர் குரவையிட வீரர்கள் தங்கள் வேல்களை வானுக்குத்தூக்கி போர்க்குரலெழுப்புவர். அதன்பின்னர் அடுத்தகோடைகாலம் வரை அவ்வரணுக்கு அப்பால் எவரும் செல்ல அவர்கள் ஒப்புவதில்லை. கோடையின் முதல் இரு நிலவுகள்வரை கின்னரர்கள் வந்திறங்கி மீளும் பொழுது. அப்போது அம்மலைச்சரிவை அணுகும் எவரையும் நோக்கியதுமே கொல்ல அவர்கள் சித்தமாக இருப்பார்கள்.

கோடையின் மூன்றாவது நிலவுப்பொழுது தொடங்கும் அன்று மீண்டும் குருதியாட்டு நிகழ்த்தி அந்த இறுதிப்பாறையை முதலில் பெயர்த்தெடுப்பார்கள். குரவையும் போர்க்குரல்களும் ஒலிக்க வழிதிறந்து வாயிலில் உயரமான மரத்தின்மேல் மூங்கில் கட்டப்பட்டு இளஞ்செந்நிறக் கொடி ஏற்றப்படும். அங்கே கொடி ஏறுவதை நோக்கிச் சொல்ல கீழே பாறைகளின் மேல் பீதவணிகர்கள் ஏவலரை நிறுத்தியிருப்பார்கள். கொடி ஏறிய செய்தி முழவுகள் வழியாக அடிநிலத்துச் சிற்றூர்களில் பரவும். அங்கே பலநாட்களுக்கு முன்னரே வந்து அத்திரிகளை அவிழ்த்துக்கட்டிவிட்டு மூங்கில்தட்டி கூட்டியமைத்த பொதிக்குடில்களில் பொருட்களை சேர்த்துவைத்து சிறுகுடில்களில் தங்கி உண்டும் குடித்தும் பாட்டுகேட்டும் காத்திருக்கும் வணிகர்கள் வாழ்த்துக்கூச்சல்களும் சிரிப்புகளுமாக கிளம்புவார்கள்.

அத்திரிகள் பொதிகளின் எடை திரண்டமைந்த குளம்புகள் ஓசையுடன் உருண்டு இறங்கும் உருளைக்கற்கள் பரவிய மலைப்பாதையில் மிதிபட்டு ஒலியெழுப்ப எறும்புநிரை என வளைந்து மேலேறிச்சென்று  அங்காடிகளை அடைந்தன. ஒவ்வொரு அங்காடிக்கும் வெவ்வேறு நிரைகள் சென்றன. கீழே சிற்றூர்களில் சிறுவர்கள் தங்கள் இல்லக்கூரைகளின் மேல் ஏறிநின்று அந்த நிரைகளை நோக்கி கூவி கைவீசினர். மலையேறுபவர்களுடன் சென்று கின்னரஜன்யரின் கதையைப் பாடிய சூதர்களின் முழவொலி அவ்வப்போது சரிவிறங்கிச் சுழலும் காற்றில் சிதர்களாக வந்து செவிதொட்டுச் சென்றது.

கின்னரஜன்யர்களின் ஏழு சிற்றூர்களின் நடுவே அமைந்திருந்தது தவளம் என்னும் சந்தை. அது குறும்பாறைகள் அமைந்த  மலைச்சரிவு. அங்கே வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டி அகற்றியிருந்தனர். ஈரப்புதுமண்ணில் மண்புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன. அவர்கள் செல்லும்போதுகூட ஓர் எல்லையில் புதர்களை வெட்டி அகற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தைமுற்றத்தின் வடபுலத்தில் வட்டமாக அமைந்திருந்த சோலைக்குள் மரங்களில் கட்டி இழுத்து அறையப்பட்ட தோல்கூடாரங்களில் சந்தைக்கென வந்த கின்னரகுடியின் வணிகர்கள் வந்து தங்கியிருந்தனர். தென்வளைவில் பீதவணிகர்களுக்கான இடம் ஒருக்கப்பட்டிருந்தது.

முதல்பீதர்குழு உள்ளே நுழைந்தபோது கின்னரஜன்யர்களின் பெண்களும் குழந்தைகளும் வெண்பனித்துருவல் போன்ற ஆடைகளையும் தலையணிகளையும் அணிந்து கழிகளில் செந்நிற மலர்க்கொத்துகளைக் கட்டியபடி கூடிநின்று கைவீசி இன்குரலெழுப்பி வரவேற்றனர். பூசகர்கள் மூங்கில்குழாய்களையும் காட்டுமாட்டுக் கொம்புகளையும் ஊதி முழவுகளை முழக்கி இசையெழுப்பினர்.  பீதவணிகர்கள் குழந்தைகளுக்காக இனிப்புகளையும் பெண்களுக்காக அணிப்பொருட்களையும் கொண்டுவந்திருந்தனர். முதியபீதர்கள் அவற்றை நீட்டியபடி சிலந்திவலையென முகம் சுருங்க சிரித்துக்கொண்டு அணுகினர்.

மூத்தகுடித்தலைவர் கையசைப்பதுவரை காத்து நின்ற குழந்தைகள் பாய்ந்துவந்து அவற்றை வாங்கிக்கொண்டு கூச்சலிட்டனர். பெண்கள் சிறுமிகளை உந்தி முன்னால் அனுப்பி பனையோலையால்  செய்யப்பட்ட தலைமலர்களையும் சிப்பிகளாலான காதணிகளையும் சங்குவளையல்களையும் பெற்றுக்கொண்டனர். கிளர்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு ஓடி சூழ்ந்து நின்று வியப்பொலி எழுப்பி நோக்கி நோக்கி வியந்தனர். சிறுபூசல்களும் சிரிப்பொலிகளும் எழுந்தன. பனிக்காளையின் வெண்மயிரை முடியெனச் சூடிய  முதுகுடித்தலைவர் வந்து தன் கைக்கோலைத் தூக்கி அவர்களை வாழ்த்தி வணிக ஒப்புதல் அளித்ததும் அவர்களின் முதல் அத்திரி எல்லைகடந்து அங்காடிமுற்றத்திற்குள் நுழைந்தது.

அத்திரிகளை தறியறைந்து நிறுத்தி பொதியவிழ்த்து அடுக்கி கோல்நாட்டி கூடாரங்களை எழுப்பினர் வணிகர். அர்ஜுனன் தன் வில்லை அருகே வைத்துவிட்டு பணியாட்களுடன் இணைந்து கூடாரங்களைக் கட்டினான். கோடையென்றாலும் நிலமாந்தருக்கு அங்கே  கூதிர் காரென குளிர்ந்தது. விழிகூச வழிந்துகிடந்த வெயிலும்கூட குளிர்ந்து விரைத்திருந்தது. பாறைகள் குளிரில் உடல்சிலிர்ப்பவை போலிருந்தன. அருகே ஓடிய ஓடையிலிருந்து மரக்குடைவுக் கலத்தில் நீரள்ளிக் கொண்டுவந்து தொட்டியை நிறைத்தான். வணிகர்கள் நீர் அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தனர். ஏவலர் அத்திரிகளை நீர் அருந்த கொண்டுசென்றனர்.

அர்ஜுனன் அக்குடில்களில் ஒன்றை அணுகி அடுப்புமூட்ட அனல் கேட்டான். புதிய தலையணி அணிந்த இளம்பெண் ஒருத்தி உள்ளிருந்து சிறுகலத்தில் அனல்கொண்டுவந்து அவனிடம் தந்தாள். அவள் விழிகள் பச்சைமணிக்கல் போலிருந்தன. வெண்பனிபோன்ற நிறம். குருதிச்செம்மைகொண்ட இதழ்கள். அவனைக் கண்டதும் விழிகள் சுருங்க “உங்கள் உடலெங்கும் ஏன் இத்தனை வடுக்கள்?” என்றாள். “அவை போரிலடைந்த புண்கள். நான் ஒரு வில்லவன்” என்றான்.

“ஆம், கதைகளில் கீழ்நிலத்தின் போர்வில்லவர்களைப்பற்றி கேட்டிருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். பின்னர் வாய்பொத்திச் சிரித்தாள். அவன் “என்ன?” என்றான். இல்லை என தலையசைத்தாள். “சொல்” என்றான் அர்ஜுனன். “இங்கே செல்குறி பதித்துச் செல்லும் சிலமரங்களுண்டு. அவைதான் இப்படி உடலெங்கும் வடுக்களுடன் இருக்கும்” என்றாள். “இவை செல்குறிகளே” என்றான் அர்ஜுனன் அனலுடன் திரும்பியபடி. “யார் பதித்த குறிகள்?” என்றாள். “பலர்…” என்றபின் அவன் புன்னகைத்து திரும்பி நடந்தான்.

அவன் கூடாரத்திற்குச் சென்று அடுமனைப் பீதனிடம் அனலை கொடுத்தான். அவனுக்குப் பின்னால் வந்த மூத்தபீதர் “வில்லவரே, பெண்களின் உள்ளம் எல்லைமீற விழைவது. ஏனென்றால் அது உயிரின் முதல்விழைவு. நீர்ப்பரப்பின் விளிம்பு போன்றது அவர்களின் காமம். விரிந்துபரவுவதே அதன் வழி. ஆனால் இம்மக்கள் நிலத்தோரை விரும்புவதில்லை. கின்னரர் அன்றி பிறர்குருதி இவர்களுக்குள் கலக்கலாகாதென்னும் நெறி கொண்டவர்கள்” என்றார்.

“நான் எல்லை மீறவில்லையே!” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதற்கான வாய்ப்பு உண்டு என அவர்களில் எவருக்குத் தோன்றினாலும் நாம் எவரும் மலையிறங்க முடியாது” என்றார் பீதர். அர்ஜுனன் “நான் எதையும் பிழையாகக் காணவில்லை. அவள் கேட்டது ஆர்வம்கொள்ளும் சிறுமியின் வினாக்களையே” என்றான். “ஆம், ஆர்வமாகவே அது தொடங்கும். ஒரு பெண் எதன்பொருட்டு ஆணின் உடலை நோக்கினாலும் அது ஒன்றின்பொருட்டென்றே ஆகும். அவளிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள். இது என் ஆணை!” என்றார் பீதர்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 உரைகள்
அடுத்த கட்டுரையோகி சந்திப்பு -கடிதங்கள்