விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15

 

இனிய ஜெயம்,

இந்த வருட விழாவை அதன் முழுமை நிலையில் நிறுத்தியவை நான்கு.அலகுகள்.

முதல் அலகின் முதல்வர் பவா. பாரத நிலம் எங்கும், தங்கள் வாழ்நாளை வருவிருந்தோம்பி செல்விருந்துக்கு ஏங்கி நிற்கும் நிலைக்காக கரைத்துக் கொண்ட ஆளுமைகள் பலர். வள்ளலார் முதல் சோற்றுக் கணக்கு கெத்தேல் சாகிப் வரை. அப்பண்பாட்டின் ஒரு துளியாக மேடையில் வீற்றிருந்த பவா.

அடுத்தவர் மருத்துவர் சிவராமன்.

வழிதவறச் செய்யாது சற்றே விலகி இரு வெளிச்சமே;

என்னை என் வீட்டில் சேர்க்க என் கால்களுக்குத் தெரியும்;

என்னை என் குழிக்குள் தள்ள ,என் விழிகளுக்குத் தெரியும்.

எனும் குஞ்சுண்ணியின் கவிதை ஒன்றுண்டு. இன்றைய பேலியோக்கர்கள் பலர் இந்த நிலையில்தான் உள்ளனர். இரவு உரையாடலில் மருத்துவர் பேசிய அனைத்தும் முக்கியமானவை.

  1. பேலியோ அறிவியல் பூர்வமான முறை எனில்,அது அந்தத் தளத்தில் எழுந்த முக்கியமான அறிவியல் கேள்விகள் பலவற்றுக்கு மௌனம் சாதிக்கிறது. காரணம் மிக எளிது. மொபைலில் இயங்கும் சாதாரண அப்ளிகேஷன் கூட அதற்கான கேச்சீஸ் உடன் இணைத்தே பொருள் கொள்ளப்படுகிறது. நூறு டிகிரியில் நீர் ஆவியாகும் என்பதை போன்றதல்ல இது,இன்னும் செஞ்சு பாப்பம் எல்லையில்தான் இது நிற்கிறது. பேலியோ செயல்பாட்டால் எஞ்சப்போகும் எதிர் நிலை அம்சம் என்ன என்று இதுவரை தெரியாது. அப்படி எஞ்சும் ஒரு எதிர்மறை அம்சம் பேலியோவால்தான் விளைந்தது என அறிவியல் கண்டுணர,ஒரு பத்து வருடமும்,அதை அதுவே ஒப்புக்கொள்ள மேலும் பத்து வருடமும் பிடிக்கும்.
    1. அந்த எதிர் மறை அம்சத்துக்கான மருந்துகளின் விலை,அதன் வணிகம் இவை ஒரு பக்கம். இவை போக யதார்த்தத்தில் பேலியோக்கர்கள் அந்த முறையின் முதல் தலைமுறை பரிசோதனை ஆப்ஜட்டுக்கள் என்பதே மெய் . எல்லாம் சரியாக நடந்தால் நன்று. யாரேனும் ஆஸ்காரோ நோபெலோ வெல்லுவர் . பிழைத்தது எனில் யாரும் பொறுப்பெடுக்க இருக்கப் போவதில்லை.
    2. ஆக அறிவியல் பூர்வமானது என்பதை முற்றிலும் விலக்கிவிட்டு, ஒவ்வொரு பேலியோக்கரும் இதை தங்களது சொந்த ரிஸ்க்கின் பேரில் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் பொறுப்பு முற்றிலும் நம்மை சேர்ந்ததே.

  1. இயற்கை உணவு எனும் ஆவலில், ஜிம்னாஸ்டிக் தாடிவாலாக்கள் ”சேவையில்” கிடைக்கும் மலிவு விலை பண்டங்களை வாங்கித் துவைக்கும் ஆத்மாக்கள் நோக்கிய மட்டுறுத்தல் அடுத்தது. உண்மையில் இந்தியாவில் இயற்கையாக நிகழும் தேன் உற்பத்தி எவ்வளவு, அதை கொண்டு வரும் உழைப்பின் செலவீனம் என்ன, அதன் ஏற்றுமதி போக, உள்நாட்டின் புழக்கம் என்ன, பிற தேன் நிறுவனங்களின் சந்தை நிலவரம் என்ன? அனைத்துக்கும் மேல் இவற்றின் தரம் என்ன? இத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தே அவற்றை நுகர வேண்டும். விற்பவர் தாடி அழகாக இருக்கிறது என்பது போதுமான காரணம் அல்ல.

உண்மையில் மிக எளிய பனை தொழில், தொழிலாளிகள் இன்றி தமிழகம் எங்கும் அப்பொருட்களின் விலை நிர்ணயம் தாறுமாறாகவே காணக்கிடைக்கிறது.

இவை எல்லாம் சிவராமன் பேசுகையில் அவருடன் மானசீகமாக நான் உரையாடி, மானசீகமாக யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தவை.

உணவுக்கு அடுத்த நிலை உடல் ஆரோக்கியம் அந்தப் புள்ளியில் நின்றார் சிவராமன். [அமுல் பேபி போன்ற அவரது கன்னத்தை செல்லமாக கிள்ளத் தோன்றியது]

அடுத்தவர் ஷிவப் பிரகாஷ்.

சிவம் என்ற செயலாற்றலின் நெருப்பு. பெயர் கூட அவருக்கு அத்தனை பொருத்தம். சொல்முதல், தத்துவம், மடங்கள், மதங்கள் என, உயிர் கொண்டு இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மீக நெருப்பின் மீது கவியும், மூடக் கரும்புகை அனைத்தையும், தனது கருத்துக்கள் கொண்டு ஊதி அகற்றினார்.

போதம் என்றால் விழிப்புணர்வு. அங்கு செல்ல நீ பயன்படுத்தி விட்டு தூக்கி எரிய வேண்டிய கருவியே தத்துவங்கள். மாறாக புத்தர் என்ன சொல்றாருன்னா என்றபடி அந்த தத்துவங்களை உன் மீது சுமையாக எறிந்து உன் உள்ளே இலங்கும் சுயம்பிரகாசத்தை நீ அடைய மட்டுறுத்துனர்களாக இலங்கும் இந்த மடங்களுக்கும் மதங்களுக்கும் பயன்மதிப்பு ஏதும் இல்லை.

பாரதப் பண்பாட்டின் சிகரத்தில் இருப்பது வேதங்கள். அதன் பின் மெய்மைத் தேட்டம் கொண்டு பல ஞானிகள் பாரதம் வந்த வரலாறு இருக்கிறது. வேதத்தில் இருந்தோ, ஞானப் பரிமாற்றம் நடந்த இந்த உயிர் சூழலில் இருந்தோ எழுந்து வந்த சொல் அல்ல இந்து எனும் சொல்.

எந்த பாஸ்டர்டோ இங்கே வந்தான், இந்த ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்க கூட்டம் எல்லாம் இந்து அப்டின்னு பேர் போட்டான். ஆமாமா நாங்க எல்லாம் பாஸ்டட்டுங்கத்தான் என ஒப்புக் கொண்டு, அதிலிருந்து என்னென்ன குப்பைகளையோ உருவாக்கினோம்.

அவர் பேசப் பேச என்னுள் ஏதேதோ உடைந்து விழுந்தது, முற்றிலும் புதிதாக எதோ ஒன்றின் விதை விழுந்தது. என் மனம் இயல்பாக ரமணரை நினைத்துக் கொண்டது. மடங்களும், மதங்களும், அரசியலும் கல்லறைகள். உள்ளே பிணம் பத்திரமாக இருக்கும். பல்லாண்டு கெடாத பிணங்கள் பல இங்குண்டு. ஆனால் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் ராமணத்துவம் இவற்றுக்கு வெளியே த்ராணியுள்ளோர் மட்டுமே வந்தடையும் சிகரமுனை ஒன்றினில் எரிந்துகொண்டு இருக்கிறது. அந்த மலைமேல் நெருப்பே என்றும் பாரத்தின் ஆன்மா.

இனிய ஜெயம், என் ஆசிரியர்களில் ஜெயகாந்தனை சந்தித்து உரையாடியதில்லை, உங்களை உரையாடி உரையாடி மிக மிகப் பிந்தியே சந்தித்தேன். ஷிவப் பிரகாஷ் அவர்களை அவரது மேடையில் அப்போதே அறிந்தேன். திராவிடம் கண்ட மகத்தான ஆசிரியர்களில் ஒருவர் அவர்.

மானசீகமாக அவரது கால்களில் விழுந்தேன் . [கேட் லாஸ்ட் யூ பாஸ்டர் என எட்டி உதைத்தார்].

சலவை உடை சார்வாகன்.

சிகரத்தில் நடிப்பு, கவிதை, எழுத்து என கலைகளின் உச்ச ஆளுமைகள்.

அனைத்து எல்லைகளிலும் இணையற்ற மேடை.

 

இந்த விழாவின் சுவாரஸ்யம் இரண்டு, சார்வாகன் முன் எழுந்து நின்ற பெருச்சாளி. நல்லவேளை அதை உறித்து அவர் கோவணமாகத் தரிப்பதற்கு முன் அதை உயிர் பிழைக்க வைத்து விட்டர்கள்.

அடுத்தது இலக்கிய சாம்ராட், கோவை புகழ் கவிஞ்சர் பொன் சிங்கம். விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு அவரது நூலை வெளியிட விண்ணப்பம் வைத்தார். தலைப்பை கேட்டேன். கெவுக்கென விக்கியதில் விதைகள் உள்ளிழுத்துக் கொண்டு விட்டன. ”உண்மை உறங்காது” தலைப்பு . மெய்யாகவே அரங்கா அவரது கவிதைகளை வாசித்துக் கொண்டு இருக்கிறார். சமூகம் ஏதேனும் பார்த்து செய்யும் என நினைக்கிறேன்.

உண்மையில் சாகித்ய சங்கத்தில் பொன்சிங்கம் போன்ற அப்பாவிகள் மட்டுமே நிறைந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு இங்கே என்ன நிகழ்கிறது என்பதே பிடி கிடைக்கவில்லை. ஆகவே பெருமக்கள் சாகித்யத்தை சாடினாலும் அதுவும் அவர்களுக்கு புரியாது. எந்த சிந்தனையாளனும் எதிர் கொள்ள இயலா, உரையாடி மாற்ற இயலா நிலை. சிக்கல்தான்.

கடந்த முறை லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களுக்கு நூல் ஒன்று அளித்தேன், அவர் பதிலுக்கு எனக்கொரு நூல் அளித்தார். படிகம் எனும் நவீன கவிதைகளுக்கான இதழ்.

 

அது குறித்து நிசப்தம் தளத்தில் இருந்து

இதழ் நாகர்கோவிலிருந்து வருகிறது. ரோஸ் ஆன்றா ஆசிரியர்.

கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல், கவிதை விமர்சனங்கள் என்று முழுமையாக நவீன கவிதை பற்றி மட்டுமே பேசுகிறது. விரும்புபவர்கள் ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு இதழ்களை வாங்கிக் கொள்ளலாம். வாசிக்க ஆரம்பிக்கும் வரைக்கும்தான் கவிதை என்பது புதிர். வாசிக்கத் தொடங்கிவிட்டால் அதுவொரு தனியின்பம். நவீன கவிதைகளுக்கென இதழ் என்பது போன்ற முயற்சிகள் மிக அவசியமானவை. அரிதானவையும் கூட. பொருளாதார அல்லது புகழ் உள்ளிட்ட எந்தவிதமான லெளகீக பிரதிபலன்களும் எதிர்பாராத இத்தகைய முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோஸ் மன்றோவுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கண்டராதித்தனின் ஒரு கவிதை –

நீண்டகாலம் நண்பனாக இருந்து

விரோதியானவனை வெளியூர்

வீதியில் சந்திக்க நேர்ந்தது

பதற்றத்தில் வணக்கம் என்றேன்

அவன் நடந்து கொண்டே

கால் மேல் காலைப்

போட்டுக் கொண்டே போனான்

தொடர்புக்கு:
படிகம்- கவிதைக்கான இதழ்

4/184 தெற்குத் தெரு

மாடத்தட்டுவிளை

வில்லுக்குறி – 629 180

அலைபேசி: 98408 48681

மின்னஞ்சல்: [email protected] //

 

விஷ்ணுபுரம் இலக்கிய விருது எனும் பண்பாட்டு அலையில், இந்தத் துளியும் கலந்திருக்கிறது என்பதில் எனக்கு கரையற்ற மகிழ்ச்சி.

இம்முறையும் லக்ஷ்மி மணிவண்ணன் விரும்பும் நண்பர்களுக்கு படிகம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

ஜெயமோகன் அகத்தின் களித்தோழன் அரங்கசாமிக்கு என்றென்றும் என் அன்பு முத்தம்.

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். விழாவில் கலந்து கொண்டுவிட ஆசை. ஆனால் முடியாமல் போனது.

அதிகம் வாசிக்கவில்லை ரகத்தில் என்னை வண்ணதாசனில் சேர்க்க முடியாது. கொஞ்சம் வாசித்திருந்தாலும் அவர் என்னை முழுமையாக உள்ளிழுத்து கொண்டார். சென்ற புத்தக கண்காட்சியில்தான் அவருடைய இரண்டு புத்தகங்கள் வாங்கி வந்தேன். ஒளியிலே தெரிவது, மீன்களை போலொரு மீன். இப்படி வாழ்வை, இயற்கையை இடையறாது இரசித்துக்கொண்டேயிருப்பது சாத்தியமாயென முயன்று முயன்று தோற்றிருக்கிறேன். அவரும் முயன்று முயன்று தோற்றதின் விளைவே நாம் வியக்கும் அவர் எழுத்துக்களோ என்றும் எண்ணியதுண்டு.

 

3

 

நேற்றுதான் இணையத்தில் அவரது விழா உரையை கேட்டேன். அவர் குரல் கேட்டதுமே ஏனோ கண்ணீர் முட்டிக்கொண்டது. அவர் பேச பேச அது கொட்டித்தீர்க்க துடித்தது. அலுவலகத்தில் இருந்ததால் அழுதுதீர்க்க முடியவில்லை. அவரது குரல் அன்பின் குரல். அதனை எதிர்கொள்வது அத்தனை சுலபமல்ல. யாருடைய குரலை கேட்டும் இப்படி ஒரு நிலை எனக்கு நேர்ந்ததில்லை. அந்த குறளை கேட்டுக் கொண்டேயிருந்தால் என் அழுக்குகள் அனைத்தும் அடித்து செல்லப்படும் உணர்வு. அவர் சொன்ன அமைதியில் நான் அமர்கிறேன். அவர் ஆன்மாவிலிருந்து அழைத்த செல்வராஜோடு என்னையும் பொருத்திக்கொள்கிறேன்.

நன்றி
உமாரமணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது வழங்கும் விழாவில் முதன்முதலில் பங்கு பெற்ற மகிழ்வுச்சத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை. மீன்கொத்தியின் அரை வட்டம், பசலைப்பழம், மின்மினிப்பூச்சிகள் இன்னும் பலப்பல காட்சி பிம்பங்கள் மனதில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. முதல் நாள் அமர்வில் இருக்க முடியவில்லை என்ற வெறுப்போடு இரண்டாம் நாளின் முதல் அமர்வில் நுழைந்தபோது என் வெறுப்பு எல்லாம் நீங்கியிருந்தது. வண்ணதாசன் உள்ளே இருந்தார். கண்கள் நாஞ்சில் நாடனையும், தேவதேவனையும் கண்டு கொண்டது. ராம்குமார் இரா.முருகனை அறிமுகப்படுத்தினார்.

வண்ணதாசன் மிகவும் ஜாலி மூடில் இருந்தது போல இருந்தது. மழையின் கவிதையை தன் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பேன் என்ற ஒரு ஆசிரியையிடம் மழையில் நனைய சொல்லி கொடுங்கள் என்ற பதிலும், மீன்கொத்தியின் பறந்த காலம் எது, இறந்த காலம் எது என்ற கேட்ட ஒரு வாசகரிடம், கடைசியாக எப்பொழுது மீன்கொத்தியை பார்த்தீர்கள் என்று கேட்டு, புத்தகத்தில் கவிதையை படித்து விட்டு புரியவில்லை என்பது எவ்வளவு முட்டாள்தனம் என புரிய வைத்தார். தட்டடியில் குவிந்து கிடக்கும் காய்ந்த சருகும், காகிதப்பூக்களும் படைப்பாளிக்கு அவசியம், குப்பையும் அவனுக்கு தேவை என்று வண்ணதாசன் அழகுணர்வினை அமர்வில் நிரப்பிகொண்டிருந்தார்.

 

எச்.எஸ்.சிவப்பிரகாஷ் அவர்களின் இரண்டாவது அமர்வு முதல் அமர்வுக்கு நேர் எதிராக வரலாறும், இலக்கியமும், சமகால அரசியலும் என பல திசைகளும் சென்று வாசகர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இடையில் தாய்மொழிக்க்லவி ஆங்கிலக்கல்வி என கொஞ்சம் சுரம் குறைந்தாலும், சிவப்பிரகாசம் அவர்களின் பேச்சு அருமை. சைவம் சிவப்பு சிவமாகி, ருத்திரன், ரெட் என சைவ வரலாறு ஆகட்டும், சிலம்பில் பிருந்தாவனக்காட்சி முதல் முதல் வந்தது என தகவல் நிறைந்த அமர்வு. வெளியே வந்ததும் என் மனைவி மதுரைக்காண்டம் நாடகம் கிடைக்குமா என்று தேடிப்பார்க்கும் அளவுக்கு சிலம்பின் தாக்கம் இந்த அமர்வில் இருந்தது. அருமையான மதிய உணவு. ஒழுக்கமான ஒரு சைவ சாப்பாடு என்று நாஞ்சில் நாடன் மூன்றாவது அமர்விற்கு வரும்போது சொல்லிகொண்டு மகிழ்வோடு அமர்ந்தார். அவரிடம் கொஞ்ச நேரம் அமர்ந்து சாப்பாடு பற்றி பேசலாமா என்று மனம் துடித்தது.

மூன்றாவது அமர்வு வந்திருந்த முக்கிய படைப்பாளிகளிடம் உரையாடும் விதமாக அமைந்தது. இது போன்ற தலைப்பு இல்லாத அமர்வு முதல் கேள்வி எப்படி இருக்கிறதோ அதன் போக்கிலேயே செல்லும். ஏன் இலக்கியம் வீழ்ச்சியையையே பதிவு செய்கிறது என்ற கேள்வியில் ஆரம்பித்து அதன் போக்கிலேயே சென்றது. நாஞ்சில் நாடன் தனது நகைச்சுவை உணர்வு மூலம் அமர்வினை கலகலப்பாக வைத்திருந்தார். பாவண்ணன் எதிர்பாராமல் அன்பினை காட்டக்கூடிய மனிதர்களை தேடி பதிவு செய்ய வேண்டியது இலக்கியத்தின் அவசியம் என்றார். அம்மா சின்னம்மா பற்றி நாவல் எழுத யாருக்கும் தைரியம் இருக்கிறதா என்று நேரடியாகவே நாஞ்சில் கேட்டு விட்டார்.
மாலை விருது வழங்கும் விழா மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

DSC_1196-001

 

 

செல்வேந்திரனின் ஆவணப்படம் தாமிரபரணியின் நினைவுக்கு கூட்டிச்சென்றது. உங்களது பேச்சு ஒரு குறும்படம் போல இருந்தது. மின்மினிப்பூச்சியின் வெளிச்சம் ஒரு சுடாத நெருப்பு என்று காட்சியோடு முடித்தது எவ்வளவு அழகு? வண்ணதாசனை அறிமுகப்படுத்த மின்மினிப்பூச்சியின் ஒளிதானே உகந்ததாக இருக்கும். வண்ணதாசன் பேச ஆரம்பித்ததும் என்னை நெகிழ வைத்துவிட்டார். நதியின் மீது கைவிரித்து பறக்கும் அவரது கனவு காணாமல் போய்விட்டது படைப்பாளிக்கு கனவு எவ்வளவு அவசியம் என்று நெகிழ்ந்தது கண்ணில் நிற்கிறது. ஈரம் என்ற சொல் இவ்வளவு ஈரத்தை மனதில் கொண்டு வர முடியும் என உணர்ந்தேன். ஈரம் உலகின் ஆதாரம். மண்ணில், மரத்தில், மனதில் எங்கும் ஈரம் இருக்கும் வரை வண்ணதாசன் இருப்பார்.

இவ்வளவு நிகழ்விலும் விஷ்ணுபுரம் ஞானசபையில் எல்லாவற்றையும் மண்டப ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் சித்தர் போல தேவதேவன் அவர்கள் கவனித்து கொண்டிருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்தது மறக்க முடியாத அனுபவம். வீடு திரும்பிய பின் என் மனைவி கேட்டாள். இன்று ஜெயமோகன் அவர்களை முதன்முதல் சந்திதிருக்கிறாய். வாசிப்பு குறித்து எதுவுமே பேசவில்லை? அன்று முழுக்க பெரும் கடலின் ஒரு கரையில் இருக்கும் மௌனத்தோடு அலைந்தேனே எப்படி பேச..

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி

கேசவன், காரைக்கால் ..

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்