விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்

unnamed

அன்புள்ள ஜெ,

ஒரு வருடமாவது விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசை இம்முறை நிகழ்ந்தது. எங்கள் ஊர் சீனு அண்ணாவுடன் உங்களிடம் அறிமுகம் செய்துகொண்டபோது இதுபோன்ற ஒரு விழாவை கடலூரில் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

முதல் அமர்வில் நாஞ்சில் நாடனுடன் அமைந்த உரையாடலில் நுணா மரம் வந்தபோது எங்கள் நிலத்தை உழும் ஏரில் நுவத்தடி பயன்படுத்தியதை நினைவு கூர்ந்தேன். நுணா மரத்தின் பழச்சுவை என்னை ஒரு காலத்தில் அதற்கு அடிமை ஆக்கியது. சிறு வயதில் காலை வேளையில் வயலுக்கு சென்று முதல் ஆளாக நுணா பழத்தை பொறுக்கி தின்பது எனக்கு கிடைத்த வெற்றி என்ற நினைத்த காலம் உண்டு. நாஞ்சில் சொன்ன வடநாட்டு மக்களின் அறத்தை நானும் ஒடிசா, மே.வங்கம் மற்றும் ஜார்கண்டில் பலமுறை அனுபவித்துள்ளேன்.

பாரதி மணியின் நக்கலும் நையாண்டியுமான பேச்சு அருமை. அவரது மது குறித்த பேச்சு அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மணி சொல்வது போன்று குடிப்பதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் என நினைக்கிறேன். முருகனிடம் எனக்கு பிடித்தது அவரது வெளிப்படையான பேச்சுதான். பவா.செல்லதுரை சிறந்த கதை சொல்லி என்று சொன்னார்கள். அன்றுதான் முதல் முறை அனுபவித்தேன். என்னாமா கதை சொல்றார் அந்த மனுசன் என்ற எண்ணம் வந்தது.

மருத்துவர் கு.சிவராமன் சொல்லிய தகவல் கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது. அவரிடம் தனியாக ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடு சிகிச்சை குறித்து தெரிந்துகொண்டேன்.

அடுத்த நாள் காலை டீ கடை மற்றும் நடைபயணத்தின்போது நீங்கள், விஜயராகவன் மற்றும் சீனு அண்ணாவுடன் அமைந்த உரையாடல் மறக்க முடியாதவை. அறிவியல் பூர்வமான கொலை முதல் கர்னாடக எழுத்தாளர்கள் அறிமுகம் வரை அனைத்தும் அருமை. அரங்கநாதன் அண்ணா சொன்னதுபோல் முதல் நாள் வினாடி வினாவில் அதிக புத்தகங்கள் பரிசு பெற்ற மாணவன் எனது தூக்கத்தையும் கெடுத்து இருந்தான்.

சிவபிரகாஷ் உரையாடல் ஞானியுடன் இருந்தது போன்ற ஒரு தருணம். அவருக்கு எதிராக வந்த எதிர்வினையை கையாண்டது குறித்து அவர் சொன்னபோது காந்தியின் ஞாபகம் வந்தது. விழா முடிந்து ஊருக்கு திரும்பிய பயணம் முழுக்க YOUTUBE-இல் அவரது பேச்சுகளை கேட்டு வந்தேன். நிச்சயம் அவர் ஒரு மானுட அறிஞர்.

 

வண்ணதாசனுடனான உரையாடலில் அவரது நிலை என்ற சிறுகதையில் வரும் கோமதிக்கு நிகழும் அனுபவம் எனது உறவுக்கார பெண்ணுக்கு நிகழ்ந்ததை பகிர்ந்து கொண்டேன். கிராம குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள் அனைவரும் என்ன பாவம் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. எந்த திருவிழாவுக்கு சென்றாலும் பெண்கள்தான் வீட்டில் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி இன்னும் இருக்கிறது. உரையாடல் முடிந்து வண்ணதாசனை சந்தித்தபோது அவர் தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவத்தை பகிர்ந்தற்கு நன்றி சொன்னது மிகவும் நெகிழ்வான ஒரு தருணம். ஆசிர்வதிக்கபட்டவன் போன்று இருந்தது.

நண்பர் எழுதிய (விழா பதிவு-8) அந்த ஏழாம் உலகம் அனுபவம் ஏற்பட்டது எனக்குதான். பின்னாளில் அறம் படித்த பின்னர் அவள் உங்கள் சிறந்த வாசகியானாள்

அனைத்து ஏற்பாடுகளும் மனநிறைவை அளித்தது. முக்கியமாக உணவு நன்றாகவே அமைந்தது. விழா ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி.

-மா.பா.இராஜீவ்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14